”ஏ… கக்கூஸ் வாளி எப்படியிருக்கா?” என்றான்.

கோபம் தலைக்கேற துமிந்த அவனை‌ முறைத்துப் பார்த்தான். பளார் என்று ஒரு அறைவிட வேண்டும் போல இருந்தது அவனுக்கு… பற்களை இறுக்கிக் கடித்துக் கொண்டான்.  முகம் சிவந்திருந்தது.

”என்னடா முறைக்கிறா….
எளிய‌ சக்கிலி நாயே உனக்கென்ன விசரா” என்றான், எதிரே நின்றவன்.

இவன் அறைய முயற்சித்த அக்கணத்திலே அரச முத்திரை ‌பதிக்கப்பட்ட அக்கடிதத்தை இவனிடம் கொடுத்துவிட ஒருவர் இடைமறித்தார்.

எதிரே நின்றவன்‌ விடுவதாக இல்லை. நீ கக்கூஸ் வாளி துமிந்த தானே… என்றபடி அக்கடிதத்திலுள்ள பெயரை வலுக்கட்டாயமாக பார்க்க எத்தனித்தான்.

அரச வேலைக்கான கடிதத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையின் நடுவிரலை அவனது முகத்துக்கு முன்னால் நீட்டினான் துமிந்த…. 

‘பிரச்சாரத்தொனி அதிகமாக இருக்கிறது. கதை எழுதும் விதம் நன்று எனினும் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உங்களது கதை நிராகரிக்கப்பட்டது’ என்றெல்லாம் நிராகரிக்கப்பட்ட எனது ”கக்கூஸ் வாளி” சிறுகதையின் ஒரு பகுதியே இது. ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் பற்றி வாசிக்க வந்த எங்களுக்கு புதுக்கதை விடாதே… என்று வாசகர்கள் நினைப்பதில் தவறொன்றுமில்லை. ஆயினும், இதிலிருந்து தொடங்குவதற்கான காரணமுள்ளது.

அதற்கு வாசகர்களாகிய நீங்கள் இன்னும் இரண்டு உப கதைகளை அறிந்தே தீரவேண்டும்.

உப கதை – 1

கொரோணாக் காலத்தின் இணைய வழியான கல்வி நடவடிக்கைகளின் போது zoom வழியிலான எனது கற்கை முகநூலினுடாக (Facebook) தொடுக்கப்பட்டிருந்ததால் பா. மிதுர்ஷன் என்று பெயர் வர வேண்டிய இடத்தில் முகநூல் பெயரான நீலாவணை இந்திரா எனும் என்னுடைய புனை பெயரே காட்சித்திரையில் தோன்றியது. வழக்கமாக சிங்கள விரிவுரையாளர்கள் அதைக்குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக வருகைதரு விரிவுரையாளராக ( visiting lecturer) வந்த தமிழர் ஒருவர் ஏன்‌ இப்படியொரு பெயர் என்ற வினாவை எதிர்பாராத விதமாகத் தொடுக்க, அது எனது புனைபெயர். கதைகள்,கவிதைகள் எழுதுவேன். முகநூலினுடாக தொடர்பு ஏற்படுத்தியதால் அவ்வாறே வந்தது எனக் கூறினேன்…‌ உடனே அப்படியா…‌ உங்களது சிறுகதைகளை அனுப்புங்கள் எனக்கூறிய‌வருக்கு அண்மையில் நான் எழுதிய றெதிநெந்தா ( சிலர் குறித்த கதையும் பிரசுரத்திற்கு தகுதியற்றது என்றார்கள்) மற்றும் கக்கூஸ் வாளி ஆகிய சிறுகதைகளை அனுப்பியிருந்தேன்.

கதைகளை வாசித்து விட்டு அழைத்த விரிவுரையாளரோ… இன்னும் சாதியும், போரும் தான் ஈழத்தமிழர்களின் கதைக்குள் கிடக்கின்றது என்று கூறினார்.

உப கதை – 2

ஆரம்ப நாட்களிலே அதிகளவான ஷோபாசக்தியின் கதைகளையும் படைப்புக்களையும் வாசித்திருந்த நான். அவரது கதை சொல்லும் பாணியில் வெகுவாகவே ஈரக்கப்பட்டிருந்தேன். அதனால் அவரோடு‌ தொலைபேசியில் உரையாடும் எனது முதல் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய பின்னர் அது ஒரு வழக்கமான பொன்னாங்கண்ணிக் சுண்டலுக்கு சூடை மீனைப் போடும் மட்டக்களப்புப் பெண்களின் குசினி நடைமுறையாக இல்லாமல், இருக்க வேண்டும் என்ற நோக்கில் அதனை ஒரு குரல் வழி நேர்காணலாகவே ஆரம்பித்திருந்தேன். அதில் நான் கேட்ட கேள்விகளுள் குறிப்பிட்டுச் சொல்லும் படியான‌ ஒரு கேள்வியும் இருந்தது.

‘ஈழத்தின் போரிலக்கியங்களுக்கு இந்தியாவின் தமிழ் நாட்டுச் சந்தையில் ஒரு விலை உள்ளது. அதனால் தானா… எல்லாப் புலம் பெயர் எழுத்தாளர்களும் தங்களது கதைகளிலும், நாவலிலும் போர், போர்‌ என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன்.

இதற்கு ஷோபாவின் பதில் மிகச் சுருக்கமாக இருந்தது. ‘புலப் பெயர்வின் பின் நான் கதைகளை எழுதவந்தததற்கான ஒரு காரணம் உள்ளது.‌ அதையே நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் ‘.

ஆம் ! எல்லா எழுத்தாளர்களும் எழுத வந்ததற்கு ஒரு காரணம் இருக்கும். ஈழத்தின் கடற்கரையோரத்தில் நீண்டு வளைந்திருக்கும் தென்னைமரமொன்று உதறி விட்ட தேங்காய் வங்கக்கடலிலுள் அங்குமிங்கும் அலைவதாய், மழைக்குக் கொடுகிக் கொண்டு கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை படக்கென்று சிறகடித்ததில் வீழும் ஒரு இறகு காற்றில் அலைந்தபடி இருப்பதாய் ஒரு படைப்பை எழுதிக் கொண்டிருந்த எனக்குள் ஒரு காரியம்; காரணத்தை தேட‌ வைத்தது. இந்த உரையாடலே மறுதலிக்கப்பட்ட‌ எனது தலித்தியக் கதைகளின் பின்னணி என்று கூடச் சொல்லலாம்.‌ எனது கதைகளின் காரணத்தை தேட‌ வைத்தமைக்காக ஷோபாவிற்கு முதல் நன்றிகள்.

இப்போது எனது விரிவுரையாளர் சொன்ன வகையறாவில் போர் எனும் புள்ளியில் தொடங்கி வழக்கமான போரிலக்கியம், புலம்பெயர் இலக்கியமாக விரிவதே ஸலாம் அலைக் எனச் சுருக்கமாக சொல்லிவிடலாம்.

இந்த நாவலில் இலக்கியத்தரிசனம், மொழியின் உன்மத்தம், உள்ளொளி, மொழிச்சுழல்,அகப்பார்வை என்று எதுவுமேயில்லை, எனது முந்தைய நாவல்களில் இருக்காதது போலவே, இந்த நாவலிலும் அவையெல்லாம் இருக்காது. எதிர்காலத்திலும் இருக்காது.

என்று இந்நூல் குறித்தான வெளியீட்டுரையில் ஷோபா மேற்கூறியது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம் இந்த நாவல்.‌‌ ஆனால் ஷோபவின் முந்தைய படைப்புக்களில் அவை அதிகமாகவே இருந்தன‌ என்பது எனது‌ பார்வை. இந்த நூலில் இலேசாக அவையெல்லாம் நழுவி விட்டது என்பதும் எனது பார்வையே.

52 வயதான ஜெபானந்தன் இளைய தம்பி எனும் ‘ ப்ரவுன் கனவான், தனது தாய் நிலத்தின் போர்ச்சூழலுக்குள் நடாத்தும் இளம்பராய வாழ்வையும், அதன் பின்னரான புலப்பெயர்வு வாழ்தலையும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நீட்டி முழக்கி நிமிர்த்தி எழுதியிருக்கும் நாவலாக ஸலாம் அலைக் நாவலை அடையாளம் காட்டலாம்.

தமிழ் சினிமாவின் பெயர் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களது படம் வெளிவருகையில் படம் தொடர்பான சில கண்ணோட்டங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே வந்துவிடும். அதே போல இந்த நாவல் வெளிவரும் போதும் ஷோபாசக்தியின்  எழுத்தில் மூன்று வருட இடைவெளியின் பின்னர் வரும் நாவல் என்பதற்கான எதிர்பார்ப்பு இருந்தேயிருந்தது. அதிலும் நீலம், சிவப்பு மட்டை என்ற விளம்பரங்கள் இருபகுதியாக நாவல்கள் வெளிவருகின்றன எனும் பேசு பொருளை உள்ளுக்குள் ஏற்படுத்தியதோடு, அதன் பின்னர் ஒரே புத்தகத்திலே இரண்டு விதமான கதைகள் என்பது இந்திய வெளியீட்டின் பின்னர் நிச்சயமானது. ஆகவே அடுத்து எழுந்த எதிர்ப்பார்ப்பு நாவலின் தலைப்பு.ஸலாம் அலைக் என்பதே!

அலைக்கும் ஸலாம் என்பதோ ஸலாம் அலைக் என்பதோ அரபு‌ மொழிச்சாயலில் இருந்ததால் அதிலே தான் கதையோட்டம் இருக்கும் என்பதாக இருந்தது. உதாரணமாக பெரும்பாலான உலக மொழிகள் தமிழ், ஆங்கிலம் என இடமிருந்து வலமாகவே எழுதப்படும், வாசிக்கப்படும். ஆனால் அரபு மொழியின் தன்மை வலமிருந்து இடமாக நகருதலை கொண்டது. எனவே கதையும் தலைப்போடு ஒன்றி vise versa ( தலைகீழ்) உத்திக்குள் நிகழ வாய்ப்பிருக்கிறது. எனும் ஆவலுடன் நாவலைப்புரட்டினோம்.

புத்தகத்தை ஏற்கனவே வாசித்ததாலோ என்னவோ சிவப்பு மட்டையில் இருந்து 162 பக்கங்கள் நீளும் முதற்கதையினை முன்மொழிந்து வைத்திருந்தனர். நானோ நீலப்பகுதியில் இருந்து 142 பக்கங்கள் நீளும் கதையின், ஒரு பகுதியை வாசிக்கும் போது அது நடுத்தரமான அதிர்வெண்ணில் வழக்கமான காலத்தைக் குழப்பிப் போடுதல் எனும் பின்நவீனத்துவ உத்தியுடன் நவீன நாவல்களின் வகைக்குள் அடங்கியே பயணித்துக் கொண்டிருந்தது. ஷோபா சக்தியின் முன்னாரான படைப்புலகத்தில் அவ்வாறான கதைகளை, நிகழ்வுகளை அதிகம் தரிசித்திருந்த எமக்கு மீளும் பழைய கதையொன்றை நீட்டித்திருக்கிறார்‌ ஷோபா என்ற எண்ணப்பாடே எழுந்தது. அத்தோடு அவரும் இவ்வாறான கேள்விகளை வாசகர்கள் எழுப்பிவிடுவார்கள் என்ற அச்சத்திலோ அல்லது குற்றவுணர்விலோ கூட ‘ இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உள்ளது என்பதையே கூறியிருக்கிறார்.

உங்களுக்கு நான் ஷோபாவின் முந்தைய படைப்புக்களையே ஆதாரம் காட்டமுடியும்.
தேசத்துரோகியின் (பக் 184) சூக்குமம் கதையில் வரும் யூலியஸ் அன்ரன் மனோரஞ்சனின் கதைச்சுருக்கத்திற்கும் ஜெபானந்தன் இளையதம்பிக்கும் அப்படியென்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. அகதி அந்தஸ்து கோரும் அதே வழக்கு, அதே மறுதலிப்பு, அதே புலம்பெயர் இலக்கியம் வேறு என்ன?! முடிவு மட்டுமே வேறாக இருக்கிறது. ஆக உலகமெங்கும் ஒரே கதை தான் உள்ளது.

அப்படியே எம்ஜிஆர் கொலைவழக்கில் (பக் 34) குண்டு டயானாவின் கதைக்குள் நுழைவோம்‌. பிரஞ்சு நீதிபதியின் முன்னரான அதே அகதி விசாரணையில் கதை ஆரம்பிக்கிறது. தே.பிரதீபன் என்ற இக்கதையின் பாத்திரத்திற்கும் ஜெபானந்தனுக்கும் என்னதான் வித்தியாசம். ஒன்றுமில்லை ஏனெனில் ஷோபாவிடம் இப்படியானவர்களின் ஒரே கதை அநேகமாக உள்ளது.

ஷோபாவின் 4ம் நாவலில் வருகின்ற ( இச்சா) ஆலாவின் வாழ்க்கையும் இதே புலம்பெயர்விலே தானே , போரிலக்கியம் + புலம்பெயர் இலக்கியமாக உருவெடுக்கிறது. மண்டைத்தீவும், மட்டக்களப்பு – அம்பாறை சார் சூழலோ தான் நாவலில் மாற்றம் ( சிலர் ஆலா வாமனுடன் பயணிப்பது அவளது எண்ண ஓட்டமே தவிர அவ்வாறொன்றில்லை என்கின்றனர் – குறித்த வாதத்திற்கு நான் வரவில்லை என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்)

இப்படி ஷோபாவிடம் உள்ளது போலவே சயந்தனிடம் அஷேராவிலும், ஜேகயிடமும், ஆஸி கந்தராஜா போன்றோரிடமும் இன்னும் நான் வாசிக்காத பல புலம் பெயர்ந்த பல எழுத்தாளர்களிடமும் பல கதைகள் உள்ளன. அவை யாவும் வேறு வேறு வடிவம் கொண்டாலும் ஷோபா சொல்வது போல ஒரே ஒரு கதைதான் உள்ளது வகையறாவே.

ஸலாம் அலைக் சிவப்பு மட்டையில் இருந்து ஆரம்பிக்கும் போது interloop ( ஊடுபுகும் தடம்) அல்லது முதற்பாதிக் கதையை இன்னுமொரு விதத்தில்/ கோணத்தில் கையாளும் தன்மை இருக்கலாம் என்று கருதியே ஆரம்பித்தேன். அவ்வாறு அமைந்திருக்க நாவல் வேறு தளத்தில் பயணித்திருக்கும்.

எளிதாக சொல்வதானால் விருமாண்டிப் படத்தில் பசுபதி மற்றும் கமல்ஹாசன் எனும் இருவரின் பார்வைக்கோணத்தில் திரைக்கதை நிகழ்வது மாதிரி ஜெபானந்தன் பார்வையிலோ இல்லை அவரது மனைவி உமையாளின் பார்வையிலோ அடுத்த கதை இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது அல்லது interconnection ( இடைஇணைப்பு) கொண்ட க்ரைம் சினிமா வகையறா என்ற எண்ணம் எழுந்தது. ஏனெனில் ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கும் கதை , அடுத்த பாதியிலும் ரயில் நிலையத்திலே இரண்டு சான்றிதழ்களோடும் தொடங்க, கதை நம்மை சூறையாடப்போகிறது என எண்ணும் கணத்தில் முழுவதுமாக பிரான்ஸை தவிர்த்து மண்டைத்தீவில் இருந்த நான் என்று கதை flash back ( முன்கதை கூறல்) எனும் உத்தியை எடுக்கிறது.

இப்போது வாசகனாக வெறுப்பின் பள்ளத்தாக்கில் விழுந்த எனக்கு மீண்டும் அதே போல் நடுத்தர அதிர்வெண்ணில் நகரும் போரிலக்கியம். இதே கதைகளை ஷோபாவே அதிகம் எழுதிவிட்டார். கொரில்லா, box , ம் போன்ற நாவல்களும் இச்சாவின் முதற்பகுதியும் இதையே கூறுகின்றது. ஆகவே 21 வயதில் நாட்டை விட்டு வெளியேறிய ஷோபாவிடம் மண்டைத்தீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி பிரதேசத்தின் இளம்பராயக் கதைகள் குவிந்துகிடக்கின்றன.‌ அவை வேறு வேறு வடிவம் கொண்டாலும் ஒரே கதை தான் உள்ளது எனலாம்.

நாயகன், மண்கும்பானில் தாயையும், மூத்த சகோதரியையும் இந்திய அமைதிப்படையினரால் இழக்கின்றார். IPKF – Indian peace keeping force எங்களது மக்கள் பார்வையில் எப்போதும் Innocent people killing force ஆகவே இருந்து வந்துள்ளனர். அதன் அடாவடித்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்களும் இதே இந்தியப் படையின் அட்டூழியங்களை எழுதாமலில்லை. தனது இளைய சகோதரியை விமானப் படையின் குண்டுத்தாக்குதலில் இழக்கும் நாயகன், போரால் அல்லல் படும் இளைஞன் பாங்கொக் ஊடாக பிரான்ஸ் பயணிக்க முனையும் எத்தனங்கள், சிறைவாசம், ஐ.நா அலுவலகத்திற்கு முன் நடாத்தும் போராட்டம் என்பவை மீண்டும் சிவப்பு மட்டையினுடாகத் தொடங்கும் கதையில் விரிகிறது.

இதிலும் தேசத்துரோகி தொகுப்பின் தேவதை சொன்ன கதை பாங்கொக் வீதிகளையும்,தனது மற்றது நான்காம் பிரசை எனும் கதைகளோடும், ஷோபாவின் முன்னைய படைப்புக்களோடும் நிறையவே தொடர்பு படுத்த முடிகிறது.

ஷோபாவிடம் ஒரு கேள்வி – flash back சொல்வது என்றால் நீல மட்டையிலேயே தொடங்கியிருக்கலாம். நேரான ஒரு கதையை சொல்வதென்றால் சிவப்பு மட்டைப்பக்கமாவே தொடங்கியிருக்கலாம். தலைகீழ்த் தலைப்பு, தலைகீழ் அச்சினால் பயன்தான் என்ன?

தன்னடையாளம் அழித்து நிற்கும் அருவுருவங்கள் பற்றி நூலின் இருமுனைகளிலிருந்தும் தொடங்கிச் சொல்லப்படும் கதை வளையம் என்று முன்னட்டையில் உள்ளதை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவனின் கதை அவனது பால்யத்தின் ஆரம்பத்திலிருந்தும், புலம்பெயர்வின் கதையிலிருந்தும் தொடங்கி 52 வயதில் அகதி விண்ணப்பத்திற்கான எத்தனத்தில் முடிகிறது என்பது மட்டுமே. இதை விடுத்து இரண்டு பகுதிக் கதைகளுமாக ஒரு hyperlink ( அதீத இணைப்பு) கொண்ட நாவல் என்று வாசிக்க எத்தனிப்பீர்களாயின் அது hypolink ( குறை இணைப்பு ) என்பதாகவே இருக்கும்.

நாவலில் எல்லாப்பாத்திரங்களும் யாதார்த்தமாகத் தோன்றினாலும் வாசகரை கவருவதற்காக வைக்கப்பட்ட மொட்டச்சி அய்யன் எனும் பெண் பாத்திரம் புனைவின் புனைவே என்பது தெட்டத்தெளிவாகிறது.

உப்புக் கொட்டி குழியில் இறக்குதல், உமையாளை மனைவியாகவும், சக ஹோட்டலில் வாசிக்கும் பெண்ணாகவும் காண்பது போன்ற அரிதான இணைப்புக்களையே பாகம் 1,2 இற்கு இடையில் காணக்கிடைக்கிறது.

குறித்த நாவல் தொடர்பில் பலர் கருத்து தெரிவித்திருந்தாலும், ஷோபாவின் தீவிர ரசிகனாக இலங்கையில் இருந்து இதுவே முதல் விமர்சனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒட்டுமொத்தமாக ஸலாம் அலைக் வாசிக்கலாமா என்று கேட்டவரிடம் நான் சொன்ன எளிய பதில். இது ஷோபாவின் Universe இல் ஒரு சுமாரான போரிலக்கியம் + புலம்பெயர் இலக்கியம் அவ்வளவே.

சினிமாவின் பக்கமாக தலைகாட்டிய ஷோபா ஏதோ ஒரு படைப்பை எழுதிவிட வேண்டும் என்பதற்காக எழுதியது போன்றான ஒரு படைப்பு அவரது முன்னைய படைப்புக்களாகிய கொரில்லா, ம் , box போன்ற நாவல்களிலிருந்து விகாரமாகி வெளியே நிற்கிறது என்பதே எனது பார்வைக்கோணம். உலகம் எங்கும் ஒரே கதைதான் உள்ளது என்பதற்கு பதில் உங்களிடம் அவசரத்திற்கு ஒரே ஒரு பழைய கதை இருந்தது என்பதே இதில் தெரிகிறதாக எனக்குப்படுகிறது.

அடுத்த படைப்பை நோக்கிக் காத்திருக்கிறேன். திரு. ஷோபாசக்தி எனும் அன்ரனிதாசன் அவர்களே!!!!


அன்புடன்

நீலாவணை இந்திரா.

நூல் தகவல்:

நூல் : ஸலாம் அலைக்

ஆசிரியர் : ஷோபா சக்தி

வெளியீடு : கருப்புப் பிரதிகள்

ஆண்டு :  ஜூன் 2022

பக்கங்கள் :

விலை : ₹350

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *