“கடல் பார்ப்போம் வா “ என்றழைக்கும் ஒரு குழந்தையின் மனநிலையைப் போல தீபிகா நடராஜனின் இத் தொகுப்பிற்குள் நானும் ஒரு குழந்தையாகி நுழைந்ததும் என்னை கொஞ்சம் புருவம் உயர்த்தி விழிகளை வியப்படையச் செய்துள்ளார் தீபிகா.

தொகுப்பு கிடைத்தவுடன் விரைவாக வாசித்து விடும் போக்கு எனக்கு அவ்வளவாக கிடையாது. சில நேரங்களில் மேலோட்டமாக ஒரு வாசிப்பை நிகழ்த்திவிட்டு அடடா என்று ஒரு சபாஷை எனக்குள் முணுமுணுத்துவிட்டு பிறகு வேறு வேலைகள் வந்ததும் மறந்துவிடும் என் புத்தியை மீண்டும் தூசி தட்டி எழுப்பிக்கொண்டு வருவது வெகு பிரயத்தனம். சில நேரங்களில் புத்தக அடுக்கில் என் கைப் பற்றிக்கொண்டு என்னையும் எழுதேன் என்று கொஞ்சும் பார்வையில் அலமாரியில் இருந்து தலை நீட்டிக் கொண்டே புத்தகங்கள் இருக்கும்போது தீபிகா என்னைப் பார்ப்பதுபோல்தான் இருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசுவோம் என்றுதான் அவரது கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

நீயா எழுதின “ என

விழிவிரியும் நட்பிற்கும்

வரிகளில் வந்துபோகும்

“ அவன்களையும் அவள்களையும்”

பூதக்கண்ணாடியில் தேடும்

உறவுகளுக்கும்

“அழகுமா” எனச் சிலாகிக்கும்

முகமறியா நபருக்கும்

தெரிந்திருக்க வாய்ப்பில்லை

இன்னும் எழுதப்படாத

கவிதையில்தான்

நானிருக்கிறேன் என்று…”

கவிதையை முன்னிறுத்தி தன்னை அடையாளம் காண்பிக்கும் முதல் தொகுப்பிலேயே தன் அடையாளம் எழுதப்பட்டதைவிட எழுதப்படாத இன்னும் வெவ்வேறு எழுத்துகளில்தான் இருக்கிறது என்பதை நமக்கு அறிவுறுத்தும் இந்த வரிகளிலிருந்து அவரின் வேறொரு பரிமாணங்களை இதே தொகுப்பில் வேறொரு கவிதையிலும் கண்டடையலாம்.

 “குடும்பமாய்

கோவிலுக்குப் போனோம்

அவர்கள் வரம் வாங்க

நான் பலூன் வாங்க

 

வன்மையாய் அது

மறுக்கப்பட்ட நாளில்

சபதமெடுத்தது

என் மனக்குழந்தை

இனி சொந்தக்காசில்தான்

பலூன் வாங்குவதாய்….

 

இதோ

பத்து பலூன் வாங்கிவிட்டேன் இன்று

பால்யத்தை தொலைத்துவிட்டு…”

பால்யத்தை தொலைக்கும் சிறுமிகள் எல்லாக் காலங்களிலும் இருக்கிறார்கள்.

வயதுகள் ஏறிக் கொண்டே போனாலும் பால்யத்தின் நினைவுகளால் நாம் நம்மையும் வாழ்வையும் புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறோம். கடந்த காலத்தின் வழியே சென்றுதான் நிகழ்காலத்தின் கதவுகளையும் திறந்து பார்க்கிறோம். அதுபோலவேதான் இந்தக் கவிதையும் தன் நிகழ் காலக் கதவு திறந்து கடந்த காலத்தை எட்டிப் பார்க்கிறது. காலத்தின் உணர்வுகளை கவிதையில் ஏற்றிக்கொண்டு வரும் போது அந்தக் கவிதை கொள்ளும் உணர்வுகள் எத்தகையது என்பது இக் கவிதையும் உணர்த்தி விடுகிறது.

 “ஒவ்வொரு முறை தும்மும் போதும்

நூறு ஆயுசு என

நெகிழ்ந்து கொள்கிறாள் அம்மா

அனிச்சையாய் தடவிக் கொள்கிறேன்

ஆயிரமாவது முறையாய்

வெட்டுண்ட சிறகுகளை!”

நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வில் நாம் வாழ்வதாக நம்பி நாம் தொலைத்த வானத்தை நாம் நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவில் நமது முதுகின்மேல் ஏற்றப் பட்ட சுமைகளையே நாம் சிறகுகளாக நம்பி சிறைக்குள் இருக்கும் பரிதாபம் இந்த பூமியில் வேறு எந்த ஜீவராசிகளுக்கும் இல்லை என்பதுதானே உண்மை.

நமது வானத்தையும் சிறகுகளையும் பறித்துக்கொண்டு போனது யார்? நமக்கு அருகிலேயே இருந்து கொண்டு நமது சிறகுகளைக் கத்தரித்துப் போட்டது யார்? என்ற கேள்விகளுக்கு இன்னமும்கூட நாம் பதில் தெரியாமல் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம். நமது இயலாமைகள் நம்மையே கேலி செய்து கொண்டிருக்கும் போது அனிச்சையாகவே திரும்பிப் பார்க்கிறோம் யாரோ ஒருவர் நமக்கு முன்னே சென்ற பாதையையும் அங்கே வெட்டுண்ட சிறகுகளையும்……

” வானத்தையே அளக்கும்

சிறகாம் எனக்கு

ஆருடம் சொல்கிறது

கூண்டுக்கிளி ” – பக் 77

 

“ வார்த்தையின்றி

வர்ணனையின்றி

அனாயாசமாய் எழுதுகிறாள்

முழுநீளக் கவிதையை

பூக்காரி…. ” – பக் 78

இதுபோன்று நறுக்குத் தெறித்த கவிதைகளில் வார்த்தைகள் எளிமையைக் கொண்டிருந்தாலும் கவிதையின் கூர்மைக்கு வெட்டுப்படும் நகங்களாய் உலகியல் காட்சிகள் உதிர்ந்து கிடக்கின்றன. நமக்குள் வெட்டுப்பட்டுக் கிடக்கும் காட்சித்துண்டிலும் கவிதைகள் கொட்டிக் கிடப்பதை அறிய முடிகிறது.

கடல் என்பது தூரமாக இருந்தாலும் கைக்கு எட்டிய கடலாய் கவிதையை விரித்துக் கொண்ட தீபிகா நடராஜன் இத் தொகுப்பின் வழியாகத் தனது முதல் முயற்சியிலேயே தனது வானத்தையும் கடலையும் தனது சிறகுகளால் அளந்து பார்த்திருக்கிறார்.

தொகுப்பைச் சிறப்பான முறையில் வடிவமைத்திருக்கும் கடல் பதிப்பகத்தாருக்கும் கவிதையின் பக்கங்களில் எப்போதும் தன் தனிமையை நிரப்பிக் கொண்டு காதலோடு கவிதை எழுதும் சிறிய பறவைக்கும் என் அன்பான வாழ்த்துகள் !


நூலாசிரியர் குறித்து

தீபிகா நடராஜன், நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முதுகலை உயிர்த்தொழில் நுட்பவியல் பட்டதாரி. தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருக்கிறார். தமிழ்மேல் கொண்ட ஈடுபாடு காரணமாகக் கவிதைகள் எழுத தொடங்கி, படைப்புக் குழுமம், வாசகசாலையின் ‘புரவி’ இதழ், நுட்பம் – கவிதை இணைய இதழ் உள்ளிட்ட இதழ்களில்  தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது கவிதையைத் தொடர்ந்து கதைசொல்லியாகவும் பயணத்தைத் தொடங்கியுள்ளார். பணி அமைப்பின் ‘பணி தாய் மொழி’ விருதையும், படைப்பு குழுமத்தின் ‘சிறந்த படைப்பாளி’ விருதையும் கவிதைக்காகப் பெற்றுள்ளார்.
 

நூல் தகவல்:

நூல் :   என் கடலுக்கு யார் சாயல்

ஆசிரியர் : தீபிகா நடராஜன்

வகை :   கவிதைகள்

வெளியீடு : கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  முதல் பதிப்பு ;  2022

பக்கங்கள் :  86

விலை : ₹  120

விமர்சனம் இணையதளத்தில் நூலை வாங்க :

என் கடலுக்கு யார் சாயல்

எழுதியவர்:

1 thought on “என் கடலுக்கு யார் சாயல் – ஒரு பார்வை

  1. என் கடலுக்கு யார் சாயல் – ஒரு பார்வை – அருமையான புத்தக மதிப்புரை. நன்றி கவிஞர் மஞ்சுளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *