நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

தோட்டியின் மகன்


யிரினங்கள் அனைத்திற்கும் வாழ்வில் ஒரு முனைப்பு இருக்கிறது.‌ அந்த முனைப்பு அவைகளை வாழச் செய்கிறது. அதற்காகப் பிரயத்தனப்படச் செய்கிறது.
ஒரு தோட்டியின் முனைப்பு என்னவாக இருக்கும்?. அன்றைய நாளின் வயிற்றுப்பாட்டைத் தவிர்த்து வேறு என்ன அவன் சிந்திக்க முடியும்? அவனது இருப்பையே அங்கீகரிக்காத சமூகத்திற்கு, அவன் முனைப்பு குறித்து என்ன கவலை இருந்துவிடப் போகிறது?

மலையாள மொழிபெயர்ப்பு நாவலான தோட்டியின் மகன் திரு. சுந்தர ராமசாமி அவர்களின் தமிழாக்கத்தின் மூலம் கேரளத்தின் ஆலுவா நகரில் வாழ்ந்த தோட்டிகளின் வாழ்வை நம் கண் முன்னே நிறுத்துகிறது. இது மொழிபெயர்க்கப்பட்ட நாவல் என்ற நினைவே எழாத வண்ணம் நம்மைக் கதையில் ஆழ்த்துகிறார் சுந்தர ராமசாமி.

தகழி சிவசங்கரப்பிள்ளை இரண்டு அப்பாக்களை நமக்கு இந்த கதையில் காட்டுகிறார். முதல் அப்பா தான் பார்க்கும் இந்த தோட்டி வேலை எப்படியாவது தன் மகனுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று அல்லாடுகிறார். அதுவே அவரின் கடைசி ஆசையாகவும் இருக்கிறது. இரண்டாவது அப்பா எக்காரணத்தைக் கொண்டும் தன் மகன் தோட்டியாகி விடக்கூடாது என்று நினைக்கிறார். அதற்காகப் பிரயத்தனப்படுகிறார். இரண்டு அப்பாக்களிடத்தும் மகனுக்கான பாசம் இருக்கிறது, அவன் எதிர்காலம் குறித்த கவலை இருக்கிறது, ஆனால் ஒன்று சமூகம் ஏற்கும் வகையிலும், இன்னொன்று சமூகத்தை எதிர்க்கும் வகையிலும் இருக்கிறது.

இரண்டாவது அப்பா சுடலைமுத்து. கழிவறை நாற்றமெடுக்காத வரையிலும் தன் இருப்பு குறித்த பிரக்ஞை சமூகத்திற்கு வராது என்பது தெரிந்த தோட்டியாக தன் வாழ்வைத் தொடங்குகிறான். தன் மகனின் சிறப்பான வருங்காலம் மட்டுமே லட்சியம் என்று எண்ணி உழைக்கிறான். நகரத் தலைவரிடம் கொடுத்து காசு சேமிக்கிறான். சக தோட்டிகள் சங்கம் அமைக்கையில் ஓவர்சீயரின் லாபத்திற்காகக் கலைக்கும் பணியை ஏற்கிறான். தன் கூட்டத்தை விட்டு ஒதுங்குகிறான். தன் மகனுக்குத் தோட்டிகள் யாரும் வைத்திடாத பெயரைச் சூட்டுகிறான். ஒரு நாள் தோட்டி தொழிலைக் கைவிட்டு மயான காவலன் ஆகிறான். தான் கண்ட கனவுகள் ஈடேறாது என்ற சுடும் நிஜத்தைச் சுமந்து தன் மகனும் தோட்டியாகத்தான் போகிறான் என்ற பாரத்தோடு செத்து மண்ணுக்குள் போகிறான்.

எந்த கற்பனையும் இல்லாத, திருப்பங்கள் இல்லாத ஒரு கதை உண்மையில் எவ்வளவு கனம் மிகுந்ததாக இருக்கிறது என்பதை வரிக்கு வரி உணர்த்துகிறது இக்கதை. மலத்தில் உழல்பவர்களாக,தனி வழியில் நுழைபவர்களாக, இரந்து உண்பவர்களாக, உரிமை மறுக்கப்பட்டவர்களாக ஒரு இனக்குழு வாழ்ந்து சாகிறது. அவர்களின் விருப்பு வெறுப்பு குறித்த கவலைகள் யாருக்கும் இல்லை. மலம் அள்ளும் வாளிகளும், வாரியல்களும் அவர்களின் கைகளுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தரப்படுகின்றன. இதில் அவர்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என்ற கேள்வி யாருக்கும் எப்போதும் எழுவதில்லை.. சொல்லப்போனால் அவர்களுக்கே எழுவது கிடையாது. இன்று வரை இந்த நிலை மாறவில்லை என்று தான் தோன்றுகிறது.

பிளேக், காலரா என எல்லா கொள்ளை நோய்களிலும் முதலில் மடியும் கூட்டமாய் அவர்கள் இருக்கிறார்கள்‌. அவர்களின் இடங்களை நிரப்ப நெல்லையிலிருந்து தோட்டிகள் வரவழைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களும் ஏதோவொரு நோயில் இறந்து போய் விடுகிறார்கள். யோசித்துப் பார்த்தால் இந்த கொரோனா காலத்தில் கூட அதில் மாற்றமொன்றுமில்லை. இந்த கொள்ளை நோயிலும் முதலில் இறந்தவர்கள் முன் களப்பணியாளர்கள் என நாம் அழைக்கும் சுகாதாரத் தொழிலாளர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களுக்காக கைதட்டியும், மலர்த்தூவியும் நம் குற்றவுணர்ச்சியையும், அவமானங்களையும் நாம் கைகழுவிக் கொண்டோம்.

இந்த புத்தகம் உங்களுக்குத் தரும் குற்றவுணர்ச்சிக்குப் பதிலென்பதே கிடையாது. எழுதப்பட்டுப் பல வருடங்கள் ஆகியிருக்கலாம், நம் கழிவறைகள் பல புதுமைகளைக் கண்டிருக்கலாம், அவர்களின் பெயர்களைக் கூட நாம் தூய்மைப் பணியாளர்கள் என மாற்றியிருக்கிறோம். ஆனாலும் தன் மகன் தோட்டியாகிவிடக்கூடாது என்று எண்ணும் ஒரு தந்தை இருக்கும்வரை, அவனுக்கு வேறு தொழில் செய்ய நாம் இடம் தராத வரை, இந்நூற்றாண்டிலும் அவனை கைகளால் மலம் அள்ள நாம் விட்டிருக்கும் வரை, வரப்போகும் அவன் மகனின் கைகளில் மலம் அள்ளும் வாளியை நாம் தரும் வரை, தோட்டியின் மகன் தோட்டியாவதை நம்மால் தடுக்க முடியாது. இந்த குற்றவுணர்ச்சியும் நம்மைக் கொல்லாமல் விடாது.

 

ஶ்ரீ தேவி அரியநாச்சி.

நூல் தகவல்:

நூல் :தோட்டியின் மகன்

பிரிவு:  நாவல்

மூலம் :  மலையாளம்

ஆசிரியர் :  தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுந்தர ராமசாமி

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு :   2010

விலை: ₹ 195

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “தோட்டியின் மகன்

  • அருமை

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *