கா.நா.சு வின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான பொய்த்தேவு எனக்கு வாசிக்கக் கிடைத்த தருணமிது. இந்த நூலைப் பற்றி நான் கேள்விப்படும் போதெல்லாம் இதை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அந்த ஆவலே இதற்கான ஒரு விமர்சனத்தையும் எழுதத் தூண்டியது. 

க.நா.சு தன் வாழ்க்கை முழுவதும் பல நூல்களை எழுதிக் கொண்டிருந்தவர்தான். ஆனால், இந்த நூலைப் பற்றி சொல்லும்போது, நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்கொண்டு எழுதிய நாவல்  பொய்த்தேவு “ என்று அவரே கூறுகிறார்.

  நாவல் என்பதே விரிவாக  எழுதிவிடக் கூடியதுதான். அந்த விரிவில் நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய எதுவாயினும், நாவலுக்கு வலு சேர்த்து மேலும்மேலும்  விஷயங்களை கிரகித்துக்கொள்ள அதன் விரிவுகளைத் தேடியே மனம் அலைகிறது. பொய்த்தேவு நாவலும் அத்தகையதுதான். நாவலை அவர் முன்னுரையில் கூறியுள்ளது போல்  எவ்வளவு குறுக்க முயன்றாலும் படைப்பாளியின் மனம் கொள்ளும் தீவிரத்துக்கேற்ப  தன்னை விரித்துக் கொள்ளவே செய்கிறது. 

  காவேரி நதியின் தீரத்திலே செழிப்பாக இருக்கும் சாத்தனூர் வாசியான சோமுவின் பிறப்பிலிருந்து விரியும் இந்த நாவல் அவர் வளர்ந்து செல்லும் போக்கில் அவர் இலட்சியமென தேடிக்கண்டடையும் விசயங்களை க.நா.சு பல அத்தியாயங்களில் விவரித்துக் கொண்டே போகிறார்.

நாமும் சோமு என்ற கதா பாத்திரத்தின் வாயிலாக அநேக விசயங்களை கண்டடையக்கூடிய ஆவலாதிகளைப் பெற்று விடுகிறோம்.

  சோமுவுக்கு எட்டு,ஒன்பது வயசு ஆவதற்கு முன்னமே அவன் மனசில் எட்டாயிரம்,ஒன்பதாயிரம்,ஒன்பது லட்சம் என்கிற கணக்கில் ஆசைகள் தோன்றி மறைகின்றன. கணத்திற்கு ஒரு ஆசை, விநாடிக்கு ஒரு கனவு . அவன் ஆசைகளின் தன்மையே அலாதியானது. அவற்றின் தரமே அற்புதமானது. அவனின் ஆசையே நாவலாகவும் விரிகிறது. 

 சாத்தனூர் மேட்டுத்தெரு வாசியான சோமுவின்  கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், இனி வரப்போகும் காலங்களையும் தெய்வங்களே ஆட்சி செய்யப் போகின்றன.

அவை எப்படிப்பட்ட தெய்வங்கள்? மனிதனின்  ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு தெய்வம் இருப்பது அவன் எதன் மேல் தன் ஆசையை வைக்கிறான் என்பதை பொருத்ததல்லவா? தெய்வங்களின் ஆட்சியும் மனிதனின் வீழ்ச்சியும் அவன் தன் வாழ்வின் மீது வைக்கக் கூடிய ஆசைகளால் அல்லது இலட்சியங்களால் உண்டாகக் கூடியதல்லவா? சோமுவின் இலட்சியம் பணம் என்கிற லட்சியத்தை நோக்கி நகர ஆரம்பித்தபோது அவனது பதினோராவது வயதிலிருந்து நாற்பத்தோராவது வயது வரையில் முப்பது வருஷங்கள் கழிந்து விடுகின்றன.  

  ஐந்து ரூபாய் பணம் சேர்த்துக் கும்பகோணம் கடைவீதியை வாங்கிவிட வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அவனால் எடுத்துக்கொண்ட தீர்மானம் பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக்கிக் கொண்டது.  

  சோமு என்கிற சிறுவன் சோமசுந்தர முதலியாராக தன் வாழ்க்கைப் பயணத்தில் தொடரும்போது சாத்தனூரில் ஒரு சிறிய மளிகைக் கடையில் தொடங்கி , எல்லையற்ற இலட்சியம் போல் கும்பகோணம் மடத் தெருவிலே இன்னொரு பெரிய கடையும் மேலும் இன்சூரன்ஸ் ஏஜென்ட், ஜில்லா ஆர்கனைசர் என தன்னை விரிவுபடுத்திக் கொண்டு சாத்தனூர் வாசிகளிலேயே முதன்மையான பணக்காரராக மாறிக் கொண்டிருக்கிறார்.

   பணத்தைத் தேடி சோமசுந்தர முதலியார் போய்க்கொண்டிருந்தாரா அல்லது பணம் அவரைத் தேடி வந்து கொண்டிருந்ததா என்ற கேளிவிக்கு பதில் சொல்வது சிரமமான காரியம் போல் அவர் காரியம் நடந்தேறிக் கொண்டிருந்தது. 

 ஆனால் இவ்வளவு முன்னேறியும் அவரது ஒரே மகன் நடராஜன் எதற்கும் உதவாத சோம்பேறியாகக் கிடப்பதை எண்ணி அவர் மனம் சஞ்சலம் அடைந்து கொண்டுதானிருந்தது.

    சோமு முதலியார் தன் நண்பர் ஒருவரிடம் விவாதிக்கையில் இப்படிக் கூறுகிறார்: – பணம் என்கிற ஒன்றுதான் தெய்வம்; கண்ணாலே காண்ற தெய்வம் .உலகத்திலே வேறு தெய்வம் உண்டென்று சொல்கிறவர்கள் பொய் சொல்கிறார்கள். அசடர்கள், பைத்தியக்காரர்கள்என்று கூறுகிறார். 

 புத்தர், இயேசு மாதிரி ஒரு புதுமதம் பணமே தெய்வம் என்கிற ஒரு மூலாதாரக் கொள்கையுடன் அவர் ஒன்றிக் கிடந்ததை நாவலாசிரியர் விளக்கும்போது, மனித மனத்தின் உள்ளார்ந்த ஆசைகளை வெளித்தெரியாதது போல் காட்டிக் கொண்டாலும் மேற்கூறிய இவ்வரிகளின் மூலம் பட்டவர்த்தனமாக தெரிவித்து விடுவதை காண முடிகிறது.

   சோமசுந்தர முதலியார் கும்பகோணம் புது நகரிலே புது பங்களா கட்டி புதியவைகளிலே நாட்டம்கொண்டு உல்லாசமான வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருந்த்தார் . ஆனாலும் அவர் மனதின் ஒரு மூலையில் எதோ ஒன்று கோயில் மணியோசை போல் அவர் லட்சியத்துக்கு எதிர் திசையில் ஒலித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதற்கு வலுச்சேர்க்கும் படியான ஒரு செய்தியும் அவர் காதிலே விழுகிறது.

  அவரது செல்வத்திற்கு ஆரம்ப காலத்தில் கடை வைத்து உதவிய சாம்பமூர்த்தி ராயர் ஆன்மிகச் செல்வத்திலே உழன்று கொண்டிருந்தபோது இவருக்கு அவரது ஆன்மிக பலத்தைக் கண்டு வியப்பும் ஏற்பட்டிருகிறது..

 அதைவிட அவர் பண்டரிபுரம் போய் சாமிதரிசனம் செய்கையில் பண்டரிநாதர் காலடியிலேயே உயிர் துறந்த சம்பவத்தை சாமாவின் வழியாக கேட்டு மனம் கலங்கிய நிலையில் அவர் மனதில் கோயில் மணி அடிக்கத் தொடங்கி விட்டது. ஏறக்குறைய அது அவர் இளம் வயதில் கேட்ட சாத்தனூர் கோயில் மணியோசைதான் .

அது அவருள் ஏற்பட்ட சிந்தனை மறுமலர்ச்சிக்கு அடையாளமோ என்னவோ! 

   பணமே தெய்வமாக எண்ணிய அவர் உள்ளத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் அவரை புரட்டிப் போட்டுக்கொண்டுதான் இருந்தன. 

  வியாபாரம் விஷயமாக அவர் மீது ஏற்பட்ட வழக்கில் அவர் சிறைவாசமும் அனுபவிக்க நேர்கிறது. அவரது சொத்துக்கள் அனைத்தையும் சாத்தனூர்க் கோயிலுக்கே எழுதி வைத்துவிட்டு தன்னிலிருந்து தான் பிரிந்து போகவும் தயாராகிறார்.

 நிலையான தெய்வம் எது? மனிதர்களின் வீழ்சிக்கு பின்னே அவரவர் உள்ளத்திலே நிலைநிருத்திக் கொண்டதெய்வங்களுக்கும் வாழ்வு ஏது?

  சிறைவாசம் முடிந்து சோமுப் பண்டாரமாக மாறிய அவர் இறுதியில் தன் தோளில் போட்ட துண்டையும் உதறிவிட்டு இடுப்புத் துணியுடன் கிழக்கு நோக்கி நடக்கும் அவரது இறுதிப் பயணத்துடன் நாவல் நிறைவடைந்து விடுகிறது. பொய்த்தேவு என்றால் பொய்யான தெய்வங்கள் என்று அர்த்தம்.

  நாவலாசிரியர் தனது முன்னுரையில் கூறியுள்ளபடி  ‘மனிதன் ஏற்றுக் கொள்கிற எல்லா லட்சியங்களுமே இப்படிப் புறக்கணிக்கவும் முடியும் என்பதுதான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை’ என்று கூறுகிறார்.

   இதில் நூற்றுக்கு நூறு சதவீதம் உலகில் பல்வேறுபட்ட வாழ்க்கை கூறுகளை உடைய மனித வர்க்கங்கள் அத்தனையும் அடங்கி விடுமா? என்ற சந்தேகம் இருந்தாலும் , மனிதனின் இறுதிப் பயணங்கள் அவனின் வாழ்வை புறக்கணித்தபடியேதான் நகர்ந்து கொண்டிருகிறது  என்பதும் சந்தேகத்திற்கிடமில்லாத உண்மைதான்.

  பொய்த்தேவு என்ற இந்த நாவல் மனித வாழ்க்கை, அவனது இலட்சியங்கள், கொள்கைகள். அதன்மீது அவன் கொண்டிருக்கும் கருத்துகள், சித்தாந்தங்கள் எதுவாயினும் அவற்றிற்கு  அர்த்தம் கொடுக்க கூடியதாகவே அமைந்துள்ளது.


நூல் தகவல்:

நூல் :  பொய்த்தேவு

ஆசிரியர் : க.நா.சுப்ரமண்யம்.

வகை :   நாவல்

வெளியீடு : முதல்பதிப்பு – வெளியிட்ட பதிப்பகம் தகவல் இல்லை. 

வெளியான ஆண்டு :    முதல் பதிப்பு : 1946

மறு பதிப்புகள் :

2007 by அகரம்

2013 by புதுப்புனல்

2015 by நற்றிணை பதிப்பகம்

March 1st 2018 by டிஸ்கவரி புக் பேலஸ்

November 2004, December 2005, 2012 by காலச்சுவடு

2017 by அடையாளம்

பக்கங்கள் :   296 (காலச்சுவடு பதிப்பு)

விலை : ₹  350 ( As on காலச்சுவடு பதிப்பு)

கிண்டில் பதிப்பு :

க.நா.சு குறித்து அறிய

  மற்றொரு விமர்சனம் By ஜெயாநவி க.நா.சு-வின் “பொய்த்தேவு” -நாவல் விமர்சனம்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *