புத்தக வாசிப்பு என்பது சில நேரங்களில் பனிக்கட்டி போல் நிமிடத்துக்குள் கரைந்து விடுகிறது.
சில புத்தகங்களோ மலையை குடைவது போன்ற உணர்வுகளை தந்து செல்லும்.
இரவு முழுவதும் வாசித்து விட்டு அடுத்த நாள் காலை காஃபி பருக யோசிக்க வைத்த நூல் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இயற்கைக்கு எதிராகச் செய்யப்படும் எந்த முன்னேற்றமும் மனிதக்குலத்திற்கு உதவப்போவதில்லை.
நம்மில் வெகு சிலரே கேள்விப் பட்டிருக்கும் ஒரு தமிழ்ச்சொல் மறைநீர். ஆனால் எல்லோரும் வெகு சீக்கிரம் தெரிந்து கொள்ள வேண்டிய பொருள் பொதிந்தச் சொல்லும் ஆழம் நிறைந்த அறிவியலுமே மறைநீர்.
நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கக் கூடிய நீரின் அளவை புள்ளி விவரங்களோடு பேசும் நூல்.
நிலவில் வாழ ஆசைப்படும் மனிதன் நீரைப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கத் தவறுகிறான்.
இந்த உலகம் நிலைத்து நிற்க நீரே ஆதாரமாக இருக்கப் போகிறது, “நீரின்றி அமையாது உலகு” நாம் தவற விடுகின்ற ஒவ்வொரு சொட்டும் பூகம்பமாய் மாறிக்கொண்டிருக்கும் பூகோள பிரச்சனை.
70% நீரினால் ஆனது பூமி என்றாலும் அதில் ஒரு சதவிகிதம் மட்டுமே நன்னீராக உள்ளது. நீரின் தன்மையின் வகைகள் , நீருக்குச் சுவை உண்டு என்று அதை விலவாரியாகவும் நிலத்தைக் கட்டமைப்பதில் நீரின் பங்கு என்ன என்றும் விளக்கும் நூல்.
பாண்டியனும் சோழனும் கட்டிய அணைகள் அவற்றின் பயன்பாடு இன்று நாம் கட்டத் தவறிய அணைகள் அவற்றின் முக்கியத்துவம் என்று எல்லாவற்றையும் தனித்தனியாக ஆராய்ந்து சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்.
பழந்தமிழரின் பாசன மற்றும் வெள்ள மேலாண்மை அதற்கு முன்னோர்கள் எத்தனை பெயரிட்டு அழைத்தார்கள் என்று பக்கம் 67 ல் பட்டியலிடுகிறார்.
தமிழில் மழைக்கான பெயர்களை அவர் விளக்குவது அப்பப்பா ஆச்சரியம். ஏற்றுமதி இறக்குமதி என உலக பொருளாதாரத்தில் மறைந்து இருக்கக்கூடிய மறைநீர்
புத்திசாலி நாடுகள் நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆராய்ந்து அதற்கேற்ப உற்பத்தி , ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களால் அன்னியச் செலாவணியைப் பெறுகிறோம் மனித சக்தி இங்குக் குறைந்த செலவில் கிடைக்கின்றது என்பது மட்டுமா நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது..? அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் மறைநீர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாமா?
நாம் காலையில் சாப்பிடும் ஒரு காபி 140 லிட்டர் தண்ணீரை மறைத்து வைத்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா? விபரங்களை வாசிக்கும்போது கொஞ்சம் நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது இருக்கிறது.
இயற்கை தந்த தண்ணீர் மனிதனுக்கு மட்டுமா சொந்தம் அது மற்ற உயிரினங்களுக்கும் அல்லவா தரப்பட்டது?
வனம் உருவாகுவதற்கு யானைகள் எவ்வாறு காரணமாக இருக்கின்றன என்று அவர் சொல்லும் ஆதாரங்கள், அயல்மகரந்தச் சேர்க்கை நாம் அவசியம் அறியப்பட வேண்டிய செய்திகள்.
பச்சை பசேலென்று இருக்கும் பச்சை நிற மரங்களெல்லாம் நீரைத் தந்து விடுவதில்லை, பண்ணை காட்டை மனிதனால் உருவாக்க முடியும். ஆனால் வனம்? மலைக்காடுகளை மனிதனால் உருவாக்கவே முடியாது என்கிறார் ஆசிரியர். வேண்டுமானால், இருப்பதைக் காத்துக் கொள்ளலாம்.
இந்த பூமி தொடர் நிகழ்வு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது, எங்கோ ஓரிடத்தில் இணைப்பில் ஏற்படும் சிறு பிளவும் ஆணிவேரை ஆட்டிப் பார்க்கத்தான் செய்யும். எல்லா காலத்திலும் இந்த மழைக்காடுகள் சூரிய ஒளி புகாமல் குளு குளுவென்று தான் இருக்கும். அப்படி இருப்பது தான் அதன் சுழற்சிக்கு உகந்தது. இதுதான் மழைக்கான அதிகபட்ச ஆதாரம். மலையில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும் அது தான் நாட்டின் வளத்திற்கு அறிகுறி என்கிறார் ஆசிரியர்.
மரங்களே மிகப்பெரிய பம்ப் அவை வெகு சாதாரணமாக ஒரு மணி நேரத்தில் 2000 லிட்டர் தண்ணீரை இழுத்து விடும் நிலத்தடி நீரை உறிஞ்சி மரங்கள் அவற்றை மழை நீராக தருகின்றன.
இரண்டு மரங்கள் இருபெரும் தொழிற்சாலைகளுக்குச் சமம். ஒன்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இன்னொன்று கார்பன்டை ஆக்ஸைடை உறிந்து கொள்ளும். இங்கு நமது வாகனம் வெளியிடும் புகை இமயமலைவரைச் செல்லும் என்ற பேரதர்ச்சியின் மத்தியில் தான் இந்த புத்தகத்தை நாம் கடக்க வேண்டி இருக்கிறது.
புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளும் படிக்கப் படிக்க அடிவயிற்றில் சந்தேகமேயில்லாமல் நெருப்பைக் கொட்டுகிறது.
பொலிவியாவின் நிலைமை தான் நமக்கும் என்றால்? நம்மில் எத்தனை வேகம் வேண்டும் நின்று நிதானமாக முடிவு எடுக்கும் நேரமா இது? வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதற வேண்டிய நேரம் இது.
உயிரினங்களின் வாழ்விடங்களும் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து உயிரை பலிவாங்கி விடுகிறது இன்றைய முன்னேற்றம். இதனால் யாருக்கு என்ன பயன்?
உலகின் மிகப் பெரிய பம்புகள் மரங்கள்தான் அவை அத்தனை வேகத்தில் நீரை வேரின் மூலமாக உரிந்து தனக்கு போக மிச்சத்தை ஆவியாக்கி விடும் என்கிறார். மரங்களில் இதயம் வரைந்தது போதும். இளைய சமுதாயமே! மரத்தை இதயத்தில் வரைவோம், மரத்தை மண்ணில் விதைப்போம் என்பதே நூலின் நோக்கம்.
“அந்தப் பியானோவை வாசிக்காதீர்கள் அதில் இருவாச்சியின் கதறல் கேட்கிறது”
என்ற கவிஞனின் வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆக, நமது கட்டிட அமைப்பு முறை. நமது நீர் உபயோகிக்கும் முறை, நமது நீர் மேலாண்மை, எல்லாம் சேர்ந்து நிலத்தடி நீரைப் பூஜ்யத்துக்குக் கொண்டு சென்று விட்டது. அப்பட்டமாகத் தெரிகிறது. இது அழிவின் முதல் நிலை.
மழை நீர் மண்ணில் விழுகையில், அது மண்ணுக்குள் போகாமல், அதை ஆறாக்கிக் கடத்திக் கொண்டு போவது எது என்று ஒரு கேள்வி எழுகிறது. இலைகள் விழுந்து விழுந்து அதுவே மருவி குறுநிலமாகி அது நீரை மண்ணுக்குள் புக விடாமல் தன்னையே நிலமாக்கி தன் மீதே கடத்க் கடல் வரைக்கும் சேர்க்கிறது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இயற்கையின் தொழில்நுட்பம்.
நீர் எந்த திசையில் எந்த வேகத்தில் செல்லுமோ அதற்கு தகுந்தாற் போல தான் அதிலிருந்து பாசனத்துக்கு நீர் எடுக்கும் முறை
பின்பற்றப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு உபயோகம் ஆன பின் மிஞ்சும் நீரை மீண்டும் அதே ஆற்றில் இணைக்கும்படியான நுட்பத்தை நம் முன்னோர்கள் முன்னமே செய்து வைத்திருக்கிறார்கள். முன்னோர்களின் நீர் மேலாண்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது மன்னனின் தலையாய கடமை என்பதைப் பறைசாற்றும் புறநானூற்றுப் பாடல்களும் வைகை ஆற்றில் நீராடும் சிலம்பின் வரிகளும் ஒட்டக்கூத்தரும் புகழேந்திப் புலவருக்கும் இடையேயான பாட்டுப் போட்டியில் மாட்டிக்கொண்ட வைகை நதியின் பெருமை கூறும் வரிகளும் நம்மை ஈர்ப்புடன் இலக்கியச் சுவையுடன் ஒரு வரலாற்று ஆய்வுக்குள் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
ஒரு மனிதனின் நுரையீரல் அழிந்தால் என்ன ஆகும் பூமியின் காடுகளும் நுரையீரல் போன்றதுதான். இயற்கை தன்னை புதுப்பித்துக் கொண்டு பயணிக்கும் ஆனால் மனிதன் தான் மாண்டு போவான்.
சமூக விழிப்புணர்வுக்காக மட்டுமே பேசப்பட்ட ஒரு மிகச்சிறந்த படைப்பு வாசிப்பவனுக்கு எங்கும் சுவை குறைந்து விடக்கூடாது அதேநேரம் பசுமரத்தாணி போல் பதிய வேண்டும் என்பதற்காக அவர் நகைச்சுவையாக திரைப்பட நடிகர்களையும் உள்ளிழுத்து நம்மையும் சிந்திக்க வைத்து தமிழையும் தமிழ் மன்னர்களையும் பாராட்டி நாம் மறந்த கடமைகளையும் நினைவூட்டி நமக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி கண்டிப்பாக தண்ணீரைப் பாதுகாக்க தனி மனிதன் களத்தில் இறங்க வேண்டும் என்று நூலைப் படிக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் வைரவரிகள் நிறைந்த சிறிய புத்தகம். தயவுசெய்து அனைவரும் வாங்கிப் படியுங்கள் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு துளியேனும் அறிந்து கொள்ளுங்கள்.
நூலாசிரியரின் எழுத்துக்குத் தலை வணங்குகிறேன்!
- அர்ஷா மனோகரன்.
நூல் : மறை நீர்
பிரிவு: கட்டுரைகள் | சூழலியல்
ஆசிரியர் : கோ.லீலா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
விலை: ₹ 150
இந்நூல் குறித்த மேலும் சில பதிவுகள்: