மூகத்தளங்கள் ஆன பேஸ்புக், டிவிட்டர் போன்றவை மக்களிடையே பெரும்பாலும் இளைஞர்கள் இடையே பிரபலமான பின், தனது கருத்துக்களை ,எதிர்ப்புகளைப் பதிவு செய்ய இத்தகைய இணையதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் இலக்கிய சூழலில் இலக்கிய ஆளுமைகள். திரையுலக ஆளுமைகள், பத்திரிகையாளர்கள் பலரும் தாங்கள் படித்த புத்தகங்கள், பார்த்த உலக சினிமாக்கள், சமகால அரசியல் பற்றி தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகின்றனர்.

இப்படி எழுதும் கருத்துக்களுக்கு எதிர்க் கருத்துக்கள் உள்ளவர்கள் அதையும் எழுதி விவாதிப்பதற்கான சூழலும் முகநூலில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சில சமயம் இந்த விவாதங்கள் அத்துமீறித் தனிப்பட்ட சண்டையாக மாறி விடும் அபாயமும் இருக்கிறது. இதையெல்லாம் மீறித் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், கட்டுரைகள், பத்திகள் தீராத படைப்பு சக்தியுடன் இயங்கும் பல ஆளுமைகள் முகநூலில் இயங்கி வருகிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து படைப்புத் திறனுடன் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர் தான் ப்ரியாதம்பி. இவரது சில பத்திகளை முகநூலில் படித்தபோது யாரும் எழுதத்துணியாத சில விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். நவீனப் பள்ளிகள் குழந்தைகளை பொதுப்புத்தியில் வளர்த்தெடுக்க முயல்கின்றன என்பதில் தொடங்கிப் பெற்றோர்களும் குழந்தைகளுடன் சென்று பாடம் படிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் எனவும் அந்த பத்தியை எழுதியிருந்தார். மாதவிடாய் பற்றிய ஆவணப்படம் ஒன்றின் பதிவில் பெண்களுக்கு ஏற்படும் சாதாரண இயற்கைப் பிரச்சினையைக் கூட வெளியே சொல்ல இச்சமூகம் தடை விதித்திருக்கிறது. கடையில் சென்று நாப்கின் வாங்கக்கூட அவள் நாலைந்து முறை யோசித்துச் சுற்றும் முற்றும் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த நேரத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை விவரித்து எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையில் சில நண்பர்கள் இதைப்போல அவர் முகநூலில் எழுதும் குறிப்புகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வரலாமே எனக் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்கள். அதற்கு ப்ரியாதம்பி ”இவை புத்தகமாகக் கொண்டு வரும் அளவுக்குத் தரம் உள்ளவையா தெரியவில்லை? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இறுதியாக கயல் கவின் புக்ஸ் முகநூலில் ப்ரியாதம்பி எழுதியுள்ள முக்கியமான பத்திகளைத் தொகுத்து ”மின்னுவும் அம்மாவும்” என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி.

ப்ரியா தான் சந்தித்த, கடந்து வந்த மனிதர்கள்,அன்றாடம் பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள்,படித்த நல்ல புத்தகங்கள், பார்த்த நல்ல படங்கள், சந்திக்கும் அபூர்வ மனிதர்கள் மீதான நேசம் எல்லாவற்றையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மெல்லிய அங்கதத்துடன் பதிவு செய்கிறார். லேசான ரொமாண்டிசம் இவர் எழுத்துக்களில் தென்பட்டாலும் அது இந்தப் பத்திகளை அழகாகத்தான் காட்டுகிறது.

சிறந்த மலையாள படங்களின் டிவிடிகள் வாங்க ஒருமுறை கடைக்குச் செல்கிறார். மலையாளப் படம் என்றதும் கடைக்காரர் கேலியாகச் சிரிக்கிறார். பெண்கள் டிவிடிகள் சுதந்திரமாக வாங்கக் கூடிய நிலைமை கூடவா இங்கில்லை என்கிறார். மேலும் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி பில் போடும் போது, ”அவள் பறையும் கதா” என்ற படம் கண்ணுக்குப் படுகிறது. அதையும் வாங்கிவிடுகிறார்.. கடைக்காரர் ”இதுவும் வேணுமா மேடம்”என்கிறார். இருக்கட்டும் ஏதோ பெண்ணியப்படம் என வாங்கி வந்துவிடுகிறார். வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் பார்க்க அந்த படத்தைப் போடும் போது தான் தெரிகிறது அது ”அந்த” மாதிரியான படம் என்கிற விஷயம். உடனே அதை நிறுத்திவிட்டுப் பதிவில் எழுதுகிறார்., “இந்த மாதிரியான மட்டரக படங்களில் என்ன கிலேசம் கிடைக்கிறது என்று பார்க்கிறார்களோ ”பாவம் ஆண்கள்! அவ்வளவு காய்ந்து போய் கிடக்கிறார்கள்” என அங்கதத்துடன் வெளிப்படையாக சில விஷயங்களை முன்வைக்கும் எழுத்துக்களாக இவரது பத்தி எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன .

தான் சந்தித்த பெரிய பேருந்து விபத்து குறித்த பத்தி, மிகவும் முக்கியமானதாகப் புத்தகத்தில் இருக்கிறது. தனியார் பேருந்து ஓட்டுநர் தவறால் வண்டி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகிறது. விபத்து காட்சிகளை நேரடியாக நாமே பார்ப்பது மாதிரி விவரித்து இருக்கிறார்.

ப்ரியாவின் பக்கத்து இருக்கை பெண் இறந்து போகிறாள் .திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு இளைஞனின் கை துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறது. ப்ரியாவுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்துவிடுகிறது. நிறைய உயிரிழப்புகள் அந்த விபத்தில் ஏற்படுகிறது. விபத்திலிருந்து மீண்டு எழவே இரண்டு மாதம் பிடிக்கிறது. கை துண்டிக்கப்பட்ட இளைஞரின் கையை மீண்டும் பொருத்த முடிவதில்லை. ப்ரியா தலையில் ஏற்பட்ட அடியால் நுகர்வுத் திறனை இழக்கிறார். அந்த விபத்து ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறையாத தழும்புகளை ஏற்படுத்தி விட்டுப் போய் விடுகிறது. கையை இழந்த இளைஞனும், ப்ரியாவும் இணைந்து நிறுவனத்தின் மீது வழக்குகளைத் தொடுக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. பேருந்து நிறுவனத்தார் பணத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகிறார்கள். விபத்தால் கை போன இளைஞனின் குடும்பத்தாரின் நட்பு கிடைத்தது மட்டுமே விபத்தால் ஏற்பட்ட ஒரே நற்பலன் என்று எழுதியிருக்கிறார்.

சக மனிதர்கள் மீதான நேசம் தொனிக்கும் பத்திகள் இப்புத்தகத்தில் நிறைய இடங்களில் இருக்கிறது. முதல் காதல் அனுபவம் குறித்து எழுதியிருக்கும் ஒரு பத்தி மிகுந்த கவித்துவம் நிரம்பியதாக அமைந்திருக்கிறது. அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள், அம்மா மகள் பேசிக்கொள்வது மாதிரி இல்லாமல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது மாதிரி உள்ளது. இது பெற்றோர்கள் இடையே ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளாக இருக்கிறது.

பெண்ணியம் பற்றி இவர் கூறியிருக்கும் கருத்துக்களும் சலசலப்பை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக ”பெண்களை விலக்கிய கூட்டங்களும், இயக்கங்களும் எவ்வளவு அபத்தமானதோ, அதே அளவு அபத்தமானது ஆண்களை விலக்கி வைத்து பெண்ணியம் பேசுவதும்” என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். புத்தகம் முழுவதும் பெரிதும் சிறிதுமான பத்திகள் ஆகவும், குறிப்புகளாகவும் இருப்பதால் தடையின்றி வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் ப்ரியாவின் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய ‘ரிப்போர்டிங்’ நடை வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது. பின்னால் புத்தகமாக வரப்போகிறது என அறியாமல் தான் விரும்பியதையெல்லாம் எழுதியிருப்பதால் சில முக்கிய விஷயங்களை விரிவாக எழுதாமல் குறிப்புகளாக நிறுத்தியிருப்பது மட்டும் இப்புத்தகத்தில் குறையாகத் தெரிகிறது. மற்றபடி ப்ரியாவின் முகநூல் குறிப்புகள் அடங்கிய இப்புத்தகம் பெண்கள் மட்டுமல்ல அனைவரும் வாசிக்க வேண்டிய பன்முகப் பிரதியே ஆகும்.


விஜய் மகேந்திரன்

நூலாசிரியர் குறித்து

ப்ரியா தம்பி எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா. குமரி மாவட்டம் திருவட்டாரைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். 1984இல் பிறந்தவர். பெற்றோர்: ஸ்ரீகுமாரன் தம்பி – லீலாவதி. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தகவல் தொடர்பியல் படித்த இவர் சிறிது காலம் தமிழ் மற்றும் மலையாள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் வேலை செய்கிறார்.

நூல் தகவல்:
நூல் : மின்னுவும் அம்மாவும்  (முகநூல் குறிப்புகள்)
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர் : ப்ரியா தம்பி
வெளியீடு: கயல் கவின் புக்ஸ்
வெளியான ஆண்டு :  2013
பக்கங்கள் : 140
விலை :

₹ 120

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *