ந்நூலின் பெயரைப் படித்தால் என்ன உணர்கிறீர்களோ அதே உணர்வை நூலின் இறுதி பக்கம் வரை உணரக் கொடுத்திருக்கிறார் பேரன்பிற்குச் சொந்தக்காரரான கோ.லீலா அவர்கள்.

பொதுவாக ஹைக்கூ, ஒவ்வொருவரின் பார்வைக்கேற்ப பல பரிமாணங்களில் பிரதிபலிக்கும். திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகப் படைப்பாளி திரு.பிருந்தா சாரதி அவர்களின் “மீன்கள் உறங்கும் குளம்” என்னும் ஹைக்கூ கவிதை நூலை முன்வைத்து தன் இரசனையாலும், மொழியாலும் நம்மை வேறொரு உலகிற்கு இட்டுச் செல்கிறார் ‘ஹைக்கூ தூண்டிலில் ஜென்’ நூலின் ஆசிரியர்.

ஹைக்கூவின் வாசலை அடையப் பொடி நடையாக நடந்து, போகிற போக்கில் ஜப்பானிய இலக்கியத்தின் பரிணாமத்தையும், தமிழகத்தில் ஹைக்கூவின் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டே எட்டுவைக்கிறார்‌.

தமிழ் இலக்கியத்தில் உள்ள திணை பகுப்புகளைப் போல் ஜப்பானிய ஹைக்கூவில் உள்ள பருவநிலை (கிகோ) பகுப்புகளை விரிவாக விளக்குவதுடன் ஜப்பானிய மொழியிலேயே சில வார்த்தைகளைக் கொடுத்திருப்பது சிறப்பு.

ஒவ்வொரு பருவநிலைக்கான பகுப்புகளும் கூடுதல் குதூகலமாக்குகிறது. உதாரணமாகக் குளிர்காலத்தைக் குறிக்க, தேரையின் அடங்கிய குரல், இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு, மங்கிய நிலவொளி, உதிர்ந்த செவ்வந்தி, பனிப்புயல் போன்ற வார்த்தை வர்ணனைகள் காட்சியாய் கண்முன் விரியச் செய்கின்றன.

16 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளில், தொடக்கத்திலேயே ஜென் என்பது தத்துவமல்ல அது ஒரு நிலை எனத் தெளிவுபடுத்துகிறார்.

அதே நிலையில் இயற்கை, அமைதி, அறிவியல், சூழலியல், தண்ணீர், உயிர்க்காற்று, களவொழுக்கம், தூக்கணாங்குருவிகள் எனப் பலவண்ணங்களை மனதில் பூசிச் சிரிக்கின்றது இந்நூல்.

அந்நிலையை நீங்கள் உணர தூண்டிலில் தக்கையாய் மிதக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் சுவாரசிய செய்தி, ஓஷோவின் கதை, தாவோவின் பார்வை, அறிவியல் துணுக்குகள், சூஃபி கதை, செகாவ் கதை, ஜென் கதை, இலக்கிய பார்வை, புவியியல் பார்வை எனக் கூடுதல் செய்திகள் மகிழ்விக்கின்றன.

இதைச் சொல்லாமல் எப்படி முடிப்பது!
மரத்தைத் தேடி வந்த வண்ணத்துப் பூச்சியிடம் பலகையாய் உறைந்த மரம் தன் நினைவுகளைக் குமுறல்களாய் பகிர்வதே ‘வனப்பார்வை’. அந்த ஏக்கத்தை நாம் படிக்கப் படிக்க நிச்சயமாக ஏதோ ஓர் உறவிடமும் ஒப்பிட்டுக் கொள்வோம். வனப்பார்வையின் விதத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

“சொல்லை உய்த்துணரும் ஒருவனுக்கே அனைத்தும் இனிதாக முடிகிறது” என்ற கபீரின் வாக்கியத்திற்கு, தேர்ந்த புத்தகமெனில் அது மிகையல்ல.


ந.கஸ்தூரி.

 

நூல் தகவல்:

நூல் : ஹைக்கூ தூண்டிலில் ஜென்

பிரிவு:  கட்டுரைகள்,  ஆய்வு நூல்

ஆசிரியர் : கோ.லீலா

வெளியீடு : படைப்பு  பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2020

விலை: ₹ 150