தினாறாம் நூற்றாண்டில் துவங்கி, எதிர்ப்பார்ப்பின் கரையில் நின்று ஒரு மரபின் நீண்ட வாழ்க்கையை வெகு கவனமாக அருகில் இருந்து நிதானித்து  பார்த்த உணர்வை தந்தது 390 பக்கங்களை கொண்ட ‘மன்னார் பொழுதுகள்’.

முத்துக்குளித்தல் என்ற தொழில் மெல்ல மங்கத்துவங்கி, ஸ்டெர்லைட்டின் படிமங்களில் முழுதாக தொலைந்து போகும் தூத்துக்குடியின் நூற்றாண்டு கால வரலாற்றை பேச ஆரம்பிக்கிறது நூல்.

ஊழ்வினை உறுத்து வரும் என்பதாக, மங்கம்மாளின் சாபத்தில் தன் வாழ்வைத் தொடங்கும் இசக்கியும், ஐஎன்ஏ வீழ்ந்தபின் இந்தியாவிற்கு வந்த கங்காணியார் குடும்பங்களின் எஞ்சிய வாரிசான நஞ்சுண்டானும் தான் இரு பெரும் கதாபாத்திரங்களாக இருந்து கதையில் பலரை இணைக்கின்றனர்.

இருவரின் வாழ்வுமே துரோகங்களின் நிழலில் ஆரம்பிக்கிறது.வன்மங்களும்,துரத்தும் துயரங்களும், ஒப்புயர்வற்ற தியாகமும், நட்பும்,செய்நன்றியுமாக இருவரின் வாழ்க்கை சுழன்றிட்டாலும் இருவரின் பாத்திரப் படைப்புகளும் புனைவென்பதை தாண்டி,ஆளுமைகளாக நிறைந்திருக்கின்றன.

நிலத்தில் இருந்து நெய்தல் நோக்கி நகர்ந்து எதிர்பாராத நேரத்தில் தவிர்க்க முடியாத படி அடைக்கலம் தந்தவரின்  குடும்பத்திற்கு தலைமை ஏற்கும் இசக்கியும், நெய்தலின் வலிமையான சக்தியான, புலி ஆதரவாளராய் தம்பிச்சரக்கை கரைசேர்க்கும் நஞ்சுண்டானும் சேரும் இடத்திலிருந்து விரிகிறது பிரம்மாண்டம்.

பயந்த சுபாவம் கொண்ட இருதயராஜ் இவர்களிருவரால் மெல்ல மெல்ல உருமாற்றம் அடைந்து ‘அடுத்தாரை காத்தாரால்’ காக்கப்பட்ட தன் குடும்பத்தின் நன்றிக்கடனுக்காக அவனே அடுத்தாரை காத்தாராக மாறி நிற்பது வரை கீழே வைக்க முடியாத வகையில் கதை சொல்லல் தத்ரூபமாக நிகழ்ந்திருக்கிறது,

மங்கம்மாள், மரியா, ஜோஸ்லின், மெர்லின், ராணி, அனிதா என பெண் பிம்பங்களை காட்சிப்படுத்திய விதமும், மங்கம்மாளையும், மரியாவையும் இணைத்த அந்த துயரமும், அவர்களுக்காக பழி வாங்கிய பின் இருதயராஜை விட்டு வெளியேறும் வழிவந்த சாபமும், யட்சிகளும், அதற்கிடையேயான ஒரு அதிர்ச்சியும் என அடுத்தடுத்த பிரமிப்புகளின் பிடியில்  இருந்து விலக முடியாதிருந்தது.

கடலோடிகளின் வழி கடலைப் பற்றிய விவரிப்புகளும், மழையும், வெயிலும் மாறி மாறி கரைந்தோடும் மன்னார் கடலும், அதையொட்டிய செம்மண் தீவுகளும், தாமிரபரணி நதிக்கரையும், தூத்துக்குடி, நெல்லை, அறந்தாங்கி என வட்டார வழக்குகளும் காட்சிப்படுத்திய விதமும், எங்குமே எந்த காலத்தையும் உரைக்காமல் அந்தந்த காலக்கட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், இலங்கை வானொலி, காமராஜர், ஐஎன்ஏ, இலங்கை போராட்டம் என குறிப்பிடப்பட்டிருந்த குறிப்புகளாலும் காலத்தை நம்மால் எளிதாக புரிந்துக் கொள்ள முடிந்தது.

காலங்களை முன்பின் நகர்த்தி அதன் மூலம் கதைக்குள் நம்மை மூழ்கடிக்க செய்வதென்பது இவரின் முதல் நாவலான ஊடறுப்பிலேயே நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இதில் இன்னும் ஒரு பெருங்கடலுக்குள், இத்தனை கதாபாத்திரங்களை இணைத்த பிரமிப்பை, ஒரு கதாபாத்திரத்தின் பெயரை கூட மறக்க முடியாத விதத்தில் விவரித்திருக்கும் விவரணைகளும், வார்த்தைகள் கைவரப்பெற்ற வரமும், வாசிப்பின் வழி இவர் பெற்ற அனுபவங்களும் புத்தகம் முழுவதிலும் ஒரு சமரசமற்ற, சுவாரசியமான பிரயாணத்தை தந்திருக்கிறது.

படித்து முடித்த ஒரு நாளின் பெரும்பொழுதில் நினைவிலும், இரவுப்பொழுதின் கனவுப் பிம்பங்களிலும் கதையில் வந்த அத்தனை பேரின் வாழ்வும், நூற்றாண்டு கால பயணமாக உள்ளுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.

இயல்பான  உப்புக்காற்றில் சிறிதும்  அசைவற்று மென் அலைகளை உருவாக்கும் பெண் கடலைப்போன்ற  எழுத்து நடை.

இந்த புத்தகத்தைப் படிக்க பரிந்துரைக்கிறேன்‌.

 

நூல் தகவல்:
நூல் : மன்னார் பொழுதுகள்
பிரிவு : நாவல்
ஆசிரியர் : வேல்முருகன் இளங்கோ
வெளியீடு: ஜீவா படைப்பகம்
வெளியான ஆண்டு : 2020
பக்கங்கள் :  –
விலை :

₹ 300