நூல் விமர்சனம்புனைவு

ஊர் என்று ஒன்று அன்று இருந்தது – ஒரு பார்வை


கன் அய்யா அவர்களின் “ஊர் என்று ஒன்று அன்று இருந்தது” கவிதை நூல் படித்து முடிக்கையில் உள்ளிருந்து படபடத்த றெக்கையை நான் வெளியாய் விட்டு விட்ட பரிதவிப்பை உணர்ந்தேன். ஒரு சிறு மனது பறவையாகி வானாகி வெளியாகி மறு கணமெல்லாம் நூலின் அடுத்த பக்கத்தில் படபடத்த தருணங்களை இங்கே பகிர்கிறேன்.

எதுவெல்லாம் இருந்ததோ அதுவெல்லாம் இல்லை. எதுவெல்லாம் வாழவில்லையோ அதுவெல்லாம் வாழ்வதில் இல்லையோ.

மனம் பதைக்கும் பெரும்போக்கு குமுறல்களோடுதான் இப்புத்தகதில் இருக்கும் அத்தனை கவிதைகளையும் படிக்க முடியும். ஊர் என்று ஒன்று இருந்த ஊர் விட்டொழிந்து விட்ட தொடுவானம் துயர தேசமாய் எங்கோ நின்று விட்டதை தெரு முக்கில் நின்று மிக நுட்பமாக ஆழ்ந்த அமைதி கொண்டு அசை போடுகிறேன். அசைக்கும் ஆசையின் ஆரம்பத்தை குடில் கொண்டு நெடில் நிறைக்கும் கவித்துவம் நிற்க வைத்துக் கேள்வி கேட்கிறது. நடக்க விட்டு சிந்தனை செய் என்கிறது. தவிப்புகளின் மீது கட்டப்பட்ட பாலத்தில் இக்கவிதைகள் எறும்பின் பேரார்வம் மேலோங்க நடக்கின்றன. சென்று சேரும் இடத்தில் ஓர் ஊர் இருக்கிறது. மாயத்தின் வளைவில் மானுடம் செய்த பிழைகளின் தூண்டா விளக்கை இப்படித்தான் எப்படியாவது நமக்கு நாமே ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அவரவர்க்கு ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் தான் அவரவர் வேர் இருந்தது.

அங்கே வாசலும் முற்றமும் திண்ணையும் பொதுவில் இருந்தன. பூனையும் நாயும் கோழியும் சிறு பூச்சிகளின் சிரிப்பு சத்தத்தில் புறாக்களின், குருவிகளின் குதூகலித்தலில் வாடைக்காற்றின் வசந்த காலத்தின் நெக்குருகும் நயம் படுதலில் உறவும் அன்பும் நட்பும் சொந்தமுமாக அது ஒரு பழுப்ப வண்ண வாழ்வு. அந்த வாழ்வில் இருந்து வெகு தூரம் போகும் இடம் அறியாத போக்கிடமற்ற மானுட இயந்திரத்தனம் எங்கெங்கோ அழைத்து வந்து விட்டதைத்தான் அகன் ஐயா மீண்டும் கவிதைகளில் அங்காலாய்க்கிறார். ஆதாரமற்ற மனிதனுக்கு அங்கலாய்ப்பு தான் மிச்சம். அவசியம் உள்ள மனிதன் அதைத்தாண்டியும் அதை கவிதை ஆக்கி விடுகிறான். கவிதைகள் கால கேமராக்கள்.

சமூகத்துக்கான கவிதை முயற்சிகள் ஒரு போதும் வீண் போவதில்லை. முதல் கவிதையிலேயே.. திண்ணை பற்றிய காட்சியை உருவகப்படுத்தும் போது, சிறு வயதில் என் ஊரில் எதிர் வீட்டுத்த்திணையில் அமர்ந்து தினமும் படித்த நினைவு என்னுள் கொப்பளிக்க ஆரம்பித்தது. வீதி விளக்கின் மகத்துவம் அறிந்தவன் நான். இருளின் தூரங்களை தெருக்களில் அண்டவிடாமல் பார்த்துக் கொண்ட கிராமத்தின் கதவுகளுக்கு ஒருபோதும் கொண்டியில்லை. ஜன்னல் கண்களால் வீதி நிறைந்திருக்கும். காற்று வாக்கில் பாதங்களின் நிற்பதம் எவர் வீடு முன்பும் எதன் பொருட்டின் பின்பும் அன்பென்ற உரிமை சொல்லெடுக்கும்.

கிணற்றையும் ஆற்றங்கரையையும் மார்கழி மாத கோலமுமாக பார்த்து பார்த்து சேர்த்து வைத்த நினைவுகளை பரிதவிப்போடு சொல்லிக் கொண்டே போகிறார் ஆசிரியர். சொல்லாமல் விட்டவையெல்லாமும் சொல்லோடு சேர்ந்து கொள்வது தான் கவிதை மாயம். காண்பவர் வாழ்க.

“இராப்பாடிகள்” என்ற சொல்லில் எல்லாம் மிகுந்து முகிழ்ந்த மகிழ்வு.

“கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் வார்த்திட எல்லாரிடம் ஈரம் இருந்தது” என்று சொல்கையில் இன்றைய வீதிகளில் ரோபாக்களால் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ என்ற ஐயம் வருவதை தடுக்க முடியவில்லை. அதே நேரம் ஆழத்தில் வெகு தூரத்தில் கிராமத்து பெண் ஒருத்தியின் ஈரக் கூந்தல் சொட்டும் காலத்தை பிடித்துக் கொள்ள மடியேந்த செய்யும் கவிதையை, “பழைய நினைவுகளோடு எதையோ நுகர்ந்தவாறு அமர ஒரு பூ இன்றி ஒரு பட்டாம் பூச்சி” என்று முடிக்கிறார். காடு அதிரும் சப்தம் பட்டாம் பூச்சியின் சிறகில் இருப்பது எனக்கு கேட்கிறது. நூல் திருப்பி வார்த்தையில் கலக்கையில் உங்களுக்கும் கேட்கும். கேட்பதற்காகத் தான் இங்கே எல்லாமும். கேள்வியின் மிச்சத்தில் தான் வாழ்வின் அற்புதம் மலர்கிறது. வாழ்வின் அற்புதங்களை சொல்லில் மலர செய்யும் ஆசிரியரின் பறந்து விரிந்த அனுபவமே இந்த நூல் முழுக்க கிராமத்து தெரு சுற்றுகிறது. முற்றுமற்ற தெருக்கள் தான் கிராமத்து அத்தியாயங்கள்.

மிக நேர்த்தியாக பொருளடக்கம் செய்யப் பட்ட 24 கவிதைகள். தலைப்புக்குள் இருந்து எட்டி பார்க்கும் தமிழ் சொற்களில் அடங்காதவை.

“விதை நெல்லும் நீட் தேர்வும்” என்று ஒரு கவிதை.

தலைப்பே ஒரு கவிதை சொல்கிறது. ஊர் அறிந்த கதையை ஒவ்வொருவரும் ரகசியமாய் அழுது பார்க்கும் தவிப்பை தர்க்க ரீதியில் கவிதையாக்கி இருக்கிறார் அகன் ஐயா. விதை நெல் அற்ற அப்பாவின் கையில்… நடுங்கிக் கொண்டே ரேகை அழிக்கிறது மகளின் நீட் தேர்வு.

சம காலத்தின் தகிப்புகளை கவிதையாக்கி பொதுவெளியில் விவாதத்தை வைக்கிறார். கவிஞன் கால கணிதன். அவன் சதாகாலமும் தன்னை நிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அவனால் சும்மா ஒருபோதும் இருக்க முடியாது. மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை கணக்கு தான் அது. அற்புதங்களின் வழி நின்று சொற்களில் எல்லாம் பக்குவத்தையும்  பகுத்தறிவையும் பொறுப்பையும் கொண்டு பாதை செய்திருக்கும் இந்த நூலின் தவிப்புகள் நேராக சென்று சேரும் இடம் அவரவருக்கான ஊர்தான். பக்கத்துக்கு பக்கம் அடங்காத முன்னொரு காலத்து ஆலாபனைகள் படிக்க படிக்க முடியாதவை. படித்து முடித்த பின்னும் தன் அதிர்வுகளை நிறுத்தாதவை.

“பர்தாக்களின் மிச்சங்களோடே” என்ற கவிதை அவர் வாழ்வில் நடந்த விபத்து பற்றி பேசுகிறது. “அப்துல்லாவும் முகமது இஸாரும்” மானுட மாதிரிகளாக கடவுளின் ஒளிக்கீற்றுகளாக வந்து ஆசிரியர் குடும்பத்தை காப்பாற்றிய நிஜத்தின் நீட்சியை கவிதையாக்கி அவர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறார். முடிவில்… அவரின் பேரனுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று உண்மைகளை சொல்லி அடுத்த தலைமுறைக்கு சாதி வேண்டவே வேண்டாம் என்று மனதார பயிற்றுவிக்கிறார். கவிதைக்கே உண்டான கிளாஸிக் அந்த, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று முடித்த விதம்.

பாசிச அரசு எத்தனை கூறு கட்டி கும்மி அடித்தாலும் இங்கிருக்கும் எந்த மதத்துக்குள்ளும் ஒரு போதும் பிரிவினை வராது என்பதற்கு இதை விட சான்று என்ன வேண்டும். அன்பில் மிக சிறந்த முகங்களை பர்தாவுக்குள் காணலாம் என்பது தான் நிதர்சன பொருள். பொருள்பட்ட வாழ்வில் பேருண்மை எதுவெனில் பலன் எதிர் பார்க்காத உதவி.

உயிர் கொண்டு சுற்றும் பூமிக்கு அன்பே ஆணிவேர்.

“எது வாழ்வு” என்றொரு கவிதையில்  எதுவெல்லாம் வாழ்வென்று அடுக்குகிறார். விடுதலையோடு இருத்தல் என்பதுதான் வாழ்வு என்று முடிக்கையில் விடுதலை என்ற சொல்தான் எத்தனை அடர்த்தியைக் கொண்டிருக்கிறது. ஆகச் சிறந்த அற்புதங்களை ஒரு சொல் பூண்டிருக்குமெனில் அது விடுதலைதான். சிறகின் காற்றசைவில் இழை இழையாய் செதுக்கி தன்னை உருமாற்றிக் கொண்ட சிறகடிப்பில் தான் இந்த வாழ்வின் விடுதலை ஒரு ஆவலென.. ஒரு ஆதியென ஒரு ஆசுவாசமென இருப்பதாய் ஆசிரியரின் கவிதைக்குள் பறந்து கொண்டே உணர்கையில் புதுக்கவிதையின் புதிர்கள் இப்படியும் அவிழும் என்று நம்பலாம்.

“தப்புத்தாளங்கள்” என்றொரு கவிதையில் இவ்வுடலின் உயிர் அசைவுகளை நடனத்தின் வாயிலாக கால்களின் விரல்களுக்குள் நடக்கும் யுத்தமென ஒரு வித ஆரோகணம், வேறு வித அவரோகணம் என்ற இந்த கவிதை அவரவர்க்கு ஆயிரம் புரிபட செய்யும். எனக்குள் அந்தி பூக்கும் ஆகாய நிறத்தின் துளி ஒன்றை உயிருக்குள் சொட்ட கண்டேன். சொட்டு சொட்டாய் சேகரித்த நற்பதங்களைக் கொண்டு வடிவமைத்த அற்புத வேளைப்பாடு இந்த நூல்.

எனக்கு மிகவும் பிடித்த “மானுட முகிழ்ப்பு” கவிதையை சில பத்திகள் இங்கே படித்துக் காட்டுகிறேன்… பாடங்கள் சில போது கவிதையாக நடத்தப்பட வேண்டும். தேவையான படிப்பினைகள் நுட்பமாக மாறும் தருணங்கள் அவை.

குகையின் இடுக்கு நம்பிக்கைகள்…
சுவாசமாய்…
எப்போதும் ஊழல்
மட்டை மைதானங்களா….?

வாசிப்பாய்,
வாலிப நடிகைகளின்
வனப்பு பிதேசங்களா….?

யோசிப்பாய்,
பொழுதோரும்
தொலைக்காட்சி தொடர்களா…?

இப்படி நிறைய கேள்விக்குறிகளோடு வளைந்து இருக்கும் இச்சமூக கோணல்மாணல் இப்படி கவிதையை முடித்துக் கொள்கிறது.

ஒருவேளை குகையில் இடுக்குகளில்
புதிய மானுடம் முகிழ்ந்தால் வா
கை குலுக்கிக் கொள்வோம்
அன்றியும் புதிய இலக்கணங்களோடு….!

இங்கு தேவை புதிய இலக்கணங்கள் தான். பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வழி நின்று தோன்றல்களின் நிலை கடந்து மானுட பரிணாமம் கொண்ட சுவை. அது நிரம்பிக் கிடக்கும் கவிதையில் ஆற்றாமை மனம் ஆதி குகையின் இடுக்குகளில் அவசரமாய் அலைகிறது. அங்கே சிந்திக்கும் தோழன் ஒருவனின் வேர் தேடுகிறது. தேடலின் உச்சத்தில் தான் கவிதை பிறக்கிறது என்றால் நம்புங்கள். “குகையில் இடுக்கு” என்ற சொற்பதமே சுற்றி நின்று நம்மை சிந்திக்க செய்யும் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாக இந்த நூல் முழுக்க தேடல் நிரம்பி இருக்கும் தகிப்புங்களை உணர்வீர்கள்.

“வரலாறாய் போய் வாருங்கள் என்ர மக்கா” கவிதையில் ஊன் உருக உயிர் உருக வரிகளும் உருகக் கண்டேன்.
சொல்வளம் பயிற்சி. சிந்தனை வளம் உயர்ச்சி. இரண்டும் கொண்ட ஐயாவின் தேடல் மறுமலர்ச்சி.

“ஒற்றை மரணம் பற்றி ஒற்றை வரி எழுதும் நீ கவிஞன்” என்று ஒரு கவிதை முடிகையில் அங்கிருந்து இன்னொரு கவிதை ஆரம்பிக்கிறது. நல்ல கவிதைகள் ஒருபோதும் முடிவதில்லை. நல்ல மானுடக் கவிதைகள் மறுபோதும் முடிவதில்லை.

கடைசிக் கவிதை, “எங்கே எங்கள் வீடு….”

ஆம்……. எங்கே எங்கள் வீடு. வீதியற்ற வீட்டில் நாங்கள் இல்லையே. தெருவற்ற வீட்டில் நாங்கள் இல்லையே. ஊரற்ற வீட்டில் நாங்கள் எப்படி இருக்க முடியும்.

ஒரு துளிர் தீ பற்றி எரியும் பேரிருள் சூழ்ந்த பெருங்காற்று படையின் முகில்வொன்றில் நின்று கத்தி இக் கவிதையை படிக்கிறேன். என் காதில் அதிரும் நிஜத்தின் சுவடுகளை நான் மனம் வந்து செவி கிழிய கேட்கிறேன். அப்போதாவது என் வீடு எங்கே என்ற மானுட தத்துவ தட்டல்களை நான் கடக்க முடியும்.

இந்த நூலின் அட்டைப்படமே கூட ஒரு கருப்பு வெள்ளை கவிதை தான். அது ஆதி கவிதை. அங்கே நிலவும் ஒரு வகை இன்னொசென்ஸ் அது தான் இன்றைய தேவை. அது இல்லாது போனதன் விளைவு தான் இங்கே அரங்கேறும் மானுட நவீன நாடகம் பற்றிய கூற்றும் வீடற்ற கூக்குரலின் ஆழ்மன போக்கும்.

மரம் கூடி இருந்த வாழ்வு என்று கவிதைக்கு கவிதை கிராமத்தை நினைவூட்டுகிறது. வெற்று நினைவில்லை கவிதைகளாவது என்று பொருள்பட வரி நட்டுருக்கும் ஆசிரியர் கவிதையின் இடைவெளியில் எல்லாம் நமக்கான சிந்தனையை விட்டு செல்கிறார். கிட்டத்தட்ட எல்லா கவிதைகளிலுமே சமூகமும் அதன் ஆக்கமும் சமூகமும் அதன் தாக்கமும் என்று சமூக அக்கறையை பேனாவில் மாட்டிக் கொண்டு அலைந்திருக்கிறார். கவிஞன் அலைகிறான். கவிதைகள் நிற்கின்றன.

சமூகமற்ற புள்ளியில் நான் யார்….. நீ யார்… அவர்கள் தான் யார்…… என்ற பெரும் கேள்வியை முக்கோண பரிதவிப்பின் தாக்கத்தை எழுத்தாக்கி இங்கே நூல் செய்திருக்கும் அகன் ஐயா அவர்களின் ஆக்கத்தில் இது சிறந்தவை என்றால் அது தகும். மிகை என்று நம்பினாலும் தகும்.

அகம் நிறைந்த ஆற்றலோடு அத்தனை கவிதைகளிலும் உங்கள் ஊர் ஒருமுறை கண்முன்னே வந்து போகும். உங்கள் ஊரில் ஒருமுறை நீங்களும் வந்து போவீர்கள்.

காணக்கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.

– கவிஜி

நூல் தகவல்:
நூல் : ஊர் என்று ஒன்று அன்று இருந்தது
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர் தி.அமிர்தகணேசன்
வெளியீடு: ஒரு துளிக்கவிதை
வெளியான ஆண்டு : மார்ச் 2020
பக்கங்கள் 80
விலை : ₹ 100
தொடர்புக்கு: +91 9443360007

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *