நண்பர் மணி அமரன் அவர்களின் கவிதைகளில் நான் சிக்குண்டு தவித்ததுண்டு. அது வெறுமையின் சொப்பனங்களை ஆகாயம் வரைந்து அருகில் செல்ல துடிக்கும் ஆன்மாவின் அழுகை. அவரின் பெரும்பாலான கவிதைகளில் மயிலிறகால் வருடும் கோபங்களை கண்டிருக்கிறேன். அது இந்த வாழ்வின் மீதான பெரும் பதற்றம் என உணரும் வேளையில்
பொங்கலிட்ட சாதம் வைத்து
உனக்கு தெரியாதடி மயில்களின் ஏக்கம்"
இதை படித்து விட்டு ஒரு மாலை நேரம் முழுவதும் நான் உள்ளுக்குள் தானாக புலம்பிக் கொண்டே திரிந்தேன். நல்ல கவிதைக்கு பின் வரும் புலம்பல்கள் எல்லாம் அற்புதமான புலம்பல்கள் என்றே நம்புகிறேன்.
கவிஞனின் ஏக்கம் மிக மிக ரகசியமானது. ரகசியங்களால் கட்டமைக்கப்படுகிறது கவிதைகளின் சிறகுகள். ஆம்! காகத்துக்கு தெரியாது மயில்களின் ஏக்கம். சில போது கவிதைக்கே தெரியாது கவிஞனின் ஏக்கம்.
"சவம் என்னா கனம் கனக்கு
தூக்குபவர்கள் சொல்வார்கள் கண்டிப்பாக
நாளை நான் செத்தப் பிறகு
ஆமாம்
ஜென்மத்துக்கும் சேர்த்து வைத்த
உன் நினைவின் கனமும் என்னோடல்லவா"
-இப்படி முடிகிறது இன்னொரு கவிதை
இக்கவிதை பெரும் சுமை எனக்கு. திரும்ப திரும்ப படிக்கும் சுகமான சுமை. இவ்வாழ்வின் சுமை…..வாழ்வின் இப்பெரும் சாவின் சுமை. இரண்டுக்கும் இடையே அவளின் நினைவும் பெருஞ்சுமையென இருப்பது வரமா சாபமா.. எழுதிய மணி அமரின் எழுத்துக்களில் தனிமையின் நிறம் படர்ந்து கிடப்பதை காண்கிறேன். அது கவிதைகளின் பெரும்பசியை பூசியே இந்த ஜென்மமாகிறது.
அமரின் வெளி பார்க்கத்தான் மிக சிறியதாக இருக்கும். அமரிடம் பேசிப் பார்த்தால்.. அமரின் கவிதைகளை வாசித்துப் பார்த்தால்… பிரபஞ்சம் விரியும் தலைக்கு மேலானது… தலைகீழ் பூமியும்.
கிட்டதட்ட 4 வருட இணையதள நண்பன். அன்பும் அன்பால் ஆன மணித்துளிகளும் அமரிடம் அபரிதமாக தளும்புவதை நான் மனதார ரசிக்கிறேன். ஆழமாக, ஆழமான நட்பின் வாசத்தை எப்போதும் அமரிடம் உணர்கிறேன்.
நெல்லை ஸ்லாங்கில் அமரின் பேச்சு ஆசுவாசமிக்கது. அதே உருவத்தில் உருவாவது தான் அவரின் கவிதைகளும். எப்போதேனும் நான் மனம் கசந்து தடுமாறும் இரவுகளில் அமரின் ஆறுதல் குறுஞ்செய்தி என்னை சமன் படுத்தி இருக்கிறது. நேரிலும் அதே கரிசனத்தோடு, “ஆமா ஆமா ஜி. அதை பண்ணிடுங்க… இதை நீங்க தான் செய்ய முடியும். உங்களால் முடியும்….” என்று துளி கூட குறையாத அந்த எனர்ஜி அத்தனை ஆதுர்யமானது… அவரது கவிதைகளைப் போலவே.
நாஸ்டால்ஜியா வடிவத்தில் இருக்கும் பெரும்பாலன கவிதைகளில் நாம் நம்மையே பார்த்துக் கொள்ள முடியும். சினிமா தியேட்டர் பற்றிய கவிதையெல்லாம்…. மனதுக்குள் படம் ஓட்டும் நினைவுகள். நினைவுகளின் வழியே தான் மனிதன் மிச்ச வாழ்வை வாழ்கிறான். அதற்கு சாட்சி தான் இந்த கவிதை நூல்.
கம்பன்
பாரதி
காளிதாசன்
கண்ணதாசன்
வைரமுத்து
உமர் கய்யாம்
ஷேக்ஸ்பியர்
பாப்லோ நெரூடா
கலீல் ஜிப்ரான்
ஜான் கீட்ஸ்
அப்துல் ரஹ்மான்
அப்புறம் உன் கண்கள்
படிக்க நிறையவே இருக்கிறது
மணிப்பயலுக்கு
கவிதைக்காரன் இப்படித்தான். கிறுக்குத்தனங்களில் காதலைக் கொண்டிருப்பான். அக்காதலில் எல்லாம் கவிதைகளையே கொண்டிருப்பான். கிறுக்குத்தங்களே கவிதைக்காரனுக்கு முதலீடு. அமர்க்கு கம்பன் பாரதி காளிதாசன் கண்ணதாசன் வைரமுத்து உமர் கய்யாம் ஷேக்ஸ்பியர் பாப்லோ நெரூடா கலீல் ஜிப்ரான் ஜான் கீட்ஸ் அப்துல் ரஹ்மான் அப்புறம் அவ கண்ணும் தான்… எனும் போது காதலினால் மேன்மையுறும் சிந்தனை என்பதை உள்ளிருந்து புறமும் புறத்திருந்து உள்ளும் புரிய முடிகிறது.
சில போது தான்……. சிலரைத் தேடி தான்…… இந்த வாழ்வு நம்மை வேகமாய்….. உண்மையாய்….. நம்பிக்கையாய் உந்தித் தள்ளும். அதன் பிடியில் தான் மிச்ச வாழ்வு எப்போதும் காத்து கொண்டிருக்கிறது.
என்னை உந்திக் தள்ளியது அமர் எனும் நண்பனின் கவிதைகளும்…அவரின் அளவில்லாத அன்பும்…. நம்பிக்கையும். அமரை ஒரு சிறகைப் போல தேடி செல்லலாம். அமர் அருகே ஒரு மரத்தைப் போல மடமடவென ஓங்கி வளரலாம்.
அமரின் கவிதைகள் பதற்றம் நிறைந்தவை. அதில் ஒரு பால்ய வாசம் இருந்து கொண்டே இருக்கும். அதில் ஒரு சதுர ஜன்னலின் குறியீட்டைக் காணலாம். ஒரு தனித்த வாழ்வின் எப்புறமும் அமரின் விழிகளில் சதா உருண்டு கொண்டேயிருப்பதை அவரின் கவிதைகள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
வைரமுத்து விக்கித்து போனான்
முத்துக்குமார் மூச்சடைத்து போனான்
கார்க்கி காணாமல் போனான்
விவேகா வியர்த்து போனான்
பழனிபாரதி பரிதவித்து போனான்
யுகபாரதி எங்கோ போனான்
மணிப்பயலை
மணி அமரன் தான் எழுதினான்
ஹாஹ்…. ஒரு எள்ளல் தன்மை நிறைந்த தொணியோடு முடியும் இந்தக் கவிதையை மீண்டும் படித்துப் பாருங்கள். ஒரு தனித்த ஞானம் மேலோங்கி இருக்கும். ஒரு நிஜத்தின் புறம் இருக்கும். தனித்து பறக்கும் பறவைக்குத்தான் வானம் வசப்படும். வசப்பட்ட வானத்தில் அமர் என்ற பறவைக்குள் கவிதைகள் தான் அற்புதம். கவிதைகள் தான் சொப்பனம். கவிதைகளோடு வாழ பழகிய மனிதனுக்கு இப்புத்தகம் ஒரு இளைப்பாறல். ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அனுபவம் கிடைக்கிறது. ஒவ்வொரு அனுபவமும் தான் அமரின் கவிதையாகி இருக்கிறது.
மணி அமரன் இன்னும் நிறைய எழுத வேண்டும். அதற்கு எழுத்துக்களில் சிறகடிக்கும் நண்பன் நீண்ட நாள் வாழ வேண்டும்.
– கவிஜி
நூல் : மணிப்பயல் கவிதைகள்
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : மணி அமரன்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2020
விலை: ₹ 100
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.