ஹரிஷ் குணசேகரனின் ‘காக்டெயில் இரவு’ சிறுகதைத் தொகுப்பைப் படித்ததும், ஒரு பழைய கிழவரும், புதிய உலகமும் என்ற ஆதவனின் ஒரு கதைத் தலைப்பு தான் நினைவிற்கு வந்தது.

ஏற்கனவே அவருடைய ‘நான் அவள் கேபுச்சினோ’ படித்திருக்கிறேன். ஒரு புதிய, ஃபிரஷ்ஷான எழுத்து என்று சந்தோஷப்பட்டிருக்கிறேன். எனவே இந்தத் தொகுப்பைப் படிக்க இயல்பாகவே ஒரு ஆசை இருந்தது.

பொதுவாக எனக்கு பெரும்பாலான வாசகர்கள் அறியாத ஒரு உலகத்தைக் காட்டும் படைப்பாளியை, படைப்பைப் பிடிக்கும். அதே போல தான் சார்ந்துள்ள துறையை வைத்து கதை எழுதுபவர்களையும் மிகவும் பிடிக்கும். துரதிருஷ்டவசமாக தமிழில் இந்த இரண்டு வகைமை எழுத்துகளும் குறைவு. இப்போதுதான் தனது துறை சார்ந்த விஷயங்களை எழுதும் படைப்பாளிகள் ஓரிருவர் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இளைஞர்கள் நிறைய எழுத வந்திருந்தாலும் கூட, சாஃப்ட்வேர் துறை பற்றிய எழுத்துகள் மிக மிகக் குறைவு. பல வருடங்களுக்கு முன் எனது அருமை நண்பர் இரா.முருகன் எழுதிய மூன்று விரலுக்குப் பிறகு எதுவுமே வரவில்லை என்று கூடச் சொல்லலாம்.  இந்தத் துறை தொடர்பான சிறுகதைகளும் நிறைந்ததாய் இத்தொகுப்பு வந்துள்ளது.

ஒருபுறம் பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா, பொதுத்துறை  தொலை மற்றும் கைபேசித் துறையின் அவலநிலை என்று கேலியும், கிண்டலுமாக இன்றைய யதார்த்தத்தை அப்படியே தோலுரித்துக் காட்டும் கதைகள்…(ஜி.எஸ்.டி போண்டா என்றொரு கதை! ஒரு தேசத்துரோகி படம் பார்க்கிறான் என்றொரு கதை!)

மற்றொரு புறம் சாஃப்ட்வேர் துறையின் பணி நெருக்கடிகள், சுரண்டல், பெண் ஊழியர்களின் நிலை, அந்த நவீனத் தொழிலாளர்களின் காதல், காமம் என்று சில கதைகள்..

நடுவே மரணத்தை முன்வைத்து இரண்டு அற்புதமான கதைகள்…

இதில் சாஃப்ட்வேர் தொழிலாளர்கள் கதைகள் தான் எனக்கு நான் அறியாத உலகைக் காட்டுகின்றன. நான் பணிசெய்யும் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தில் 1996ற்குப் பிறகு பணி நியமனம் இல்லை. இன்று எங்கள் நிறுவனத்தில் ஊழியரின் சராசரி வயது 52.5 என்பதால் பணியிடங்களில் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களது உடை, உணவுப் பழக்கம், பேச்சு, ஸ்டைல் எதுவும் தெரியாது. எங்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்களின் அதிகபட்ச நவநாகரீக உடை சுடிதார். அவர்களுக்குத் தெரிந்த அதிகபட்ச ஸ்டைல் என்பது புருவத்தைத் திருத்திக் கொள்ளுதல்.  ஓரிருவர் தவிர அனைவரும் ஒற்றைப் பின்னலுடன் வருபவர்கள். அதில் சற்று அலட்டுபவர்கள் நம்மோடு பேசும்போது பின்னலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டு ‘ஸ்டைல்‘ காட்டுபவர்கள்.  இன்று நம் குடும்பத்திலும், நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்திலும் குழந்தைகள் சாஃப்வேர் துறைக்குப் பணிக்குச் செல்லும் சூழலில் அத்துறையின் சம்பளம், நேரம் காலமின்றி வேலை செய்ய வேண்டிய பணிச்சுமை பற்றி மேலோட்டமாகத் தெரியுமேயன்றி, பெரிய அளவில் எதுவும் தெரியாது. மேஜை விவாதம், ஜீவநதி என்ற இரு கதைகளும்  இந்த விஷயங்கள் குறித்த  முக்கியமான சிறுகதைகள்.

இந்தத் தொகுப்பு அந்தக் குறையைப் போக்குகிறது. தலைப்புச் சிறுகதையான காக்டெயில் இரவினில் என்பதே அப்படிப் பட்ட ஒரு கதைதான். முடிவுதான் ஏதோ முடிக்கவேண்டுமே என்று எழுதப்பட்டதாகத் தோன்றினாலும் கூட, கதை மிக அற்புதமானது. இப்படியான ஒரு சூழல் எந்த அலுவலகத்திலும் உருவாகாது. அங்கெல்லாம் அதிகபட்சமாக சுஜாதா சொல்வது போல் ‘ஓடை மலர்க் குளிர்ப்பார்வை மட்டும்தான்‘  கிடைக்கும். எங்கள் அலுவலகத்தில் பேரன் பேத்தி எடுத்தவர்கள் மட்டும் போனால் போகிறது என்று புத்தாண்டு, தீபாவளிக்கு சக ஆண் நண்பருடன் கைகுலுக்குவார்கள். அதுவும் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாமல் இருந்தால்.  காக்டெயில் இரவு ஒரு சாஃப்ட்வேர் பணிச்சூழலில் மட்டுமே நடக்க வாய்ப்புள்ள ஒரு கதையை அவ்வளவு அழகாகச் சொல்கிறது. சூழல் மட்டுமே சராசரி வாசகன் அறியாதது. ஆனால் அதில் வரும் ஜனனி, நிர்மல், நவீன் ஆகியோர் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இங்கு மனைவி எங்கு வேலை பார்த்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் எவ்வளவு பெரிய சம்பளம் வாங்கினாலும், அவளது கிரெடிட்கார்டு ஸ்டேட்மெண்ட் கணவன் மெயிலுக்குத் தானே  போகிறது!

நானறியாத ஒரு உலகின் கதைகளை ஆஹா … இப்படில்லாம் நடக்குதா…. என்று ஒரு புதிய ஆர்வத்துடனும் படித்தேன்.

சமகாலப் பிரச்சனைகளைப் பேசும் கதைகளை சமகாலப் பிரச்சனைகளை ஓரளவு ஃபாலோ செய்துவருபவன் என்ற வகையிலும், நானறியாத ஒரு உலகின் கதைகளை ஆஹா … இப்படில்லாம் நடக்குதா…. என்று ஒரு புதிய ஆர்வத்துடனும் படித்தேன்.  ஆனால் சில கதைகள் வெறும் விவரணைகளாக மட்டுமே இருக்கின்றனவோ, அவற்றில் ஒரு ஸ்டோரி எலிமெண்ட் சற்று குறைகிறதோ என்ற யோசனையும் நடுநடுவில் வந்து போகிறது. எவ்வாறாயினும், 10 – 12 கதைகள் ஒரு தொகுப்பில் 5 – 6 தேறினால் போதும், அது நல்ல தொகுப்புதான் என்பார் எனது அன்புத் தோழர் ச.தமிழ்ச்செல்வன். அந்த அளவுகோலின்படி இந்தத் தொகுப்பு ஓகே தான்.

ஹரீஷ் குணசேகரன் காட்டும் உலகம் புத்தம் புதியது. ஒரு பழைய கிழவனுக்கு ரொம்பவுமே ரசிக்கும்படியாக இருக்கிறது…

  • ச.சுப்பாராவ்

நூல் தகவல்:

நூல் : காக்டெயில் இரவு

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : ஹரிஷ் குணசேகரன்

வெளியீடு : கலக்கல் ட்ரீம்ஸ்

வெளியான ஆண்டு : ஜனவரி 2019.

விலை: ₹ 145