மது தேசம் சுதந்திர தேசம்.நாமும் சுதந்திர பிரஜைகள். ஆனால் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருங்குற்றத்தை ஒரு வெளிப்படையான கொள்ளையை நமது மறதி எனும் சௌகரியத்தினால் மறந்து விட்டோம்.நாம் நமது உரிமையைப் பற்றி பேசும் போது அடிமைத்தனத்திற்கான பெரும் இழப்பீட்டைக் கேட்டுப் பெற மறந்து விட்டோம். இந்த மறதிக்குப் பின்னால் இருப்பது அரசியல் சமரசம்.

அடிமையாக இருந்த போது இழந்தது அநேகம். அவையெல்லாம் திரும்பப் பெற்று விடக் கூடிய இழப்புகள் இல்லை. இருப்பினும் ஆண்டான் நாடும் அதன் தலைமுறைகளும் அநாசயமாக அதைக் கடந்து சென்று விட்டது . நம்மோடு தற்போது கை குலுக்கியும் உறவாடுகிறது.

ஆனால் நமது வரலாறு இதையெல்லாம் கற்பித்துள்ளதா..?

ஆராய்ந்தறியும் நிகழ் படிப்பினை கல்வி முறையிலான நமது வரலாற்றுப் படிப்புகள் சொல்லித்தரவில்லை. அவை எல்லாமே மறைவில் முனகும் மூடுமந்திரங்கள். ஆனால் அந்த மந்திரங்களை பல்கலைகழக்கத்திற்கு வெளியே உள்ள ஒரு சில வரலாற்று நூல்களே வெளிப்படையாகத் திறத்துக்காட்டி உள்ளன.

நமது நாட்டில் மசாலா கொள்முதல் செய்ய வந்த ஒரு கம்பெனி நம் தலையில் மசாலா அரைத்து நம்மை சிறுக சிறுக கொள்ளை அடித்து நம்மைத் தனதாக்கிக் கொண்ட கதை தான் இப்புத்தகம்.

கிழக்கிந்திய கம்பெனி பற்றி இன்றைய பிரிட்டிஷ் தலைமுறையும் பேசவே தயங்குகிறது. இந்தியத் தலைமுறை அதைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லை என நழுவுகிறது. இங்கிலாந்து செல்வ வளத்தின் மூலதன திர(ரு)ட்டுக்கு காரணமான அந்தக் கம்பெனியின் ஆவணப்படுத்தப்பட்ட காட்சியகத்தைக் கூட அது வைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இந்த புத்தகத்தின் ஆசிரியர் நிக் ராபின்ஸ் கொஞ்சம் கூட பட்சாதாபம் பார்க்காமல் கிழக்கிந்திய கம்பெனி எனும் உடலை மீண்டும் தோண்டி மறு உடற்கூறு செய்துள்ளார். அதுவும் அதன் உடலில் அழுகாமல் ஒட்டியிருக்கும் உண்மையான ஆதாரங்களின் சாட்சியத்துடன்..!

31 டிசம்பர் 1600-ல் அந்த கம்பெனி உருவாகிறது. அதுவொரு மிருகத்தனமான திருடன் என்று தெரியாமல் 1618 -ல் முகலாய பேரரசு பல் இளித்து அதனுடன் ஒப்பந்தம் போடுகிறது. ஆனால் இந்தவொரு துவக்கம் தான் பாரத மக்களின் நீண்ட துயரத்திற்கான முதல் அடி என்பதை 1765 -ல் ராபர்ட் கிளைவ் எனும் கூலிப்படைத் தலைவன் அதை நமக்குப் புரிய வைக்கிறான்.ஆனால் ..அது புரியும் போது கூலிப்படைத் தலைவன் வியாபார தலைவனாக மாறி விடுகிறான். காலம் கடந்து விட்டது. அதன் விஸ்வரூப கொண்டாட்டத்தின் விளைவு 1770-இல் நடுநடுங்க வைத்த வங்காள பஞ்சம். வங்கப் பஞ்சத்தில் மக்கள் பட்டினி சாவு பத்து லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை. பஞ்சம் வருவதற்கு முன் ஒரு ரூபாய்க்கு 120 சேர் கிடைத்த அரிசி பஞ்சத்தின் போது ஒரு ரூபாய்க்கு வெறும் மூன்று சேர் மட்டும் தான்.

இச்சமயம் ஒரு கம்பெனி குமஸ்தாவிற்கு மட்டும் கிடைத்த உபரி வருமானம் (லஞ்சம்) 60,000 பவுண்டு.
இந்த பிரிட்டிஷ் காரர்கள் வருவதற்கு முன் பதிவான பஞ்சங்கள் இரண்டாயிர வருடங்களில் 17.ஆனால் அவர்கள் பாரதத்தில் நுழைந்தவுடன் 120 வருடங்களில் 34 பஞ்சங்கள் நம்மை பாழ்படுத்தின.. எல்லாமே உருவானவை அல்ல அவை உருவாக்கப்பட்டவை என்பது தான் வலி.

ஒட்டு மொத்த பிரிட்டனின் உலக உற்பத்தி பங்கு 1750-ல் வெறும் 1.9%. ஆனால் அப்போது உலகின் தொழில் பட்டறையாகத் திகழ்ந்த இந்தியா உலக மொத்த உற்பத்தியில் 4-ல் 1 பங்கு கொண்டிருந்தது.

பிரிட்டனின் தொழிற்புரட்சிக்கு இங்கிருந்து மூலப் பொருட்கள் சென்றிருக்காவிட்டால், விசைத்தறி, நீராவி இன்ஜின் போன்ற அறிவியல் கருவிகள் எல்லாம் துருப் பிடித்துப் போயிருக்கும் .முதலில் முழுமையான உற்பத்தி பொருட்கள் கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு ஏற்றப்பட்டன. தொழிற்புரட்சிக்குப் பின் வெறும் மூலப்பொருட்கள் மட்டும் கொள்ளை அடித்து அதை உற்பத்தி பொருட்களாகத் திரும்ப இந்தியாவின் தலையிலே கப்பல் கப்பலாகக் குவிக்கப்பட்டன. அதனால் தான் கிழக்கிந்திய கம்பெனி என்பது கார்ப்பரேட் மார்கெட்டிங் யுகத்தின் ஆதிக் கர்த்தா.

தனது நாட்டுப் பிரஜைகள் தேநீர் அருந்தச் சீனாவிற்கு அபின் தந்து பழக்கிப் பாழாக்கியக் கம்பெனி, இரண்டு அபினிப்போர்கள் மூலம் போதை மருந்து கள்ளச் சந்தையைச் சீனாவில் சட்டப் பூர்வமாக்கியது. எப்போதும் எங்கும் தான பேத தண்டம் தான் கம்பெனியின் நியதி.

நம் நாட்டிலிருந்து அப்போது ஏற்றுமதியான துணி. வகைகளின் பட்டியல் மட்டும் நான்கு பக்கத்திற்கு நீளும் . “புட்டி” என்ற குட்டை இழையிலான உலகின் சிறந்த பருத்தியிலான மஸ்லீன் துணிகள் தேவைப்பட்ட போதும் இந்திய நெசவாளிகளின் விரல்கள் உழைப்பால் நசுங்கின. அதிகப்படியான போதும் உழைக்காமல் விரல்கள் அறுக்கப்பட்டன. பொருளாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கருனை என்பது தேவையற்ற பதம்.

மெக்காலே கல்வி முறையின் தோல்விகளின் பட்டியலும் ஆய்வறிக்கையும் இன்று குவிகிறது.அன்று அந்த மேதாவி மெக்காலே எழுதியுள்ள திமிர் பதிவு.

” எங்கள் ஐரோப்பிய நூலகத்தின் ஒரு அலமாரியில் உள்ள புத்தகத்தின் ஈடுக்கு இந்திய / அரேபிய இலக்கியத்தை மொத்தமாகச் சேர்த்தாலும் ஈடாகாது..,”

1857-ல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கம்பெனி இந்தியாவை மகாராணியாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டு குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்துக் கொண்டு1874-ல் ஜூன் 1 அன்று இறந்து போகிறது.அது இறந்தாலும் அதனால் ஏற்பட்ட வடுவின் உள்ளுறுத்தும் வலியும் சித்தாந்தங்களும் அழியவில்லை.

இந்தியாவைக் கொள்ளையடித்துக் கொள்ளையடிப்பதை சட்டப்பூர்வமாக்கியதும் இப்போதிருக்கும் கார்ப்ரேட் கம்பெனிகளின் முதல் முன்னோடியுமாகத் திகழ்ந்தது இந்த கிழக்கிந்திய கம்பெனி தான் என்பதை இந்நூல் உரக்கச் சொல்கிறது.

லண்டன் நகரில் உள்ள ஏகாதிபத்தியத்தின் ஏவல்களான கிளைவ் , ஹோஸ்டிங்சு போன்றவர்களின் சிலைகளைக் கண்டு பிரிட்டிஷ் காரர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள முடியாது.., இவர்கள் மீது காரித் துப்பும் பல வழக்குகள் அக்காலத்தில் லண்டன் நீதி மன்றங்களில் சந்தி சிரித்தன.அவர்களின் இறுதி வாழ்வு கேவலமாகக் கழிந்தது.

வரலாற்றை ஒரு காலாவதியான தகவல் என்று கடப்பதே நமது விழிப்புணர்வுக்குத் தடை. வரலாறு முக்கியம் வாசகர்களே..!

– மஞ்சுநாத்

 

நூல் தகவல்:
நூல் :

​கிழக்கிந்திய கம்பெனி – ஒரு வரலாறு

பிரிவு : கட்டுரை | வரலாறு
ஆசிரியர்: நிக் ராபின்ஸ்
 தமிழில் : ராமன் ராஜா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 392
விலை : 400
அமெசானில் நூலைப் பெற:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *