தீநுண்மித் தினங்களின் பின்னாட்களில் பெருவாரியான மாநிலங்கள் மது விற்பனையைத் தொடங்குவதாய் அறிவிக்க, சற்றே கர்நாடகா முந்திக் கொண்டது! மது விற்பனை மையங்களுக்கு முன் பெருங்கூட்டம் நீண்ட வரிசை! குடிகாரர்கள் எனக் காலங்காlலமாய்த் தூற்றப்பட்டவர்கள் கேவலமாக சித்தரிக்கப்பட்டவர்கள் திடீரென ‘மதுப்பிரியர்கள்’ என நாமகரணம் சூட்டப்பட்டனர். மது வாங்க நிற்க வரிசையில் பெண்களும் நின்றது ஊடகங்களுக்கு தீனியானது!‘வீட்டுக்குள் குடித்தால் தப்பில்ல… வீதிக்கும் வந்து வாங்குவாயா?’ என ஆச்சர்யமூக்கீன் மீது ஊடக விரல்கள்!

“பெண்ணை நீராய், நிலமாய், நிலவாய், அகண்ட பெருவெளியின் சக்தியாய் உருவகப்படுத்திக் காட்டும் இவ்வுலகு பெண் என்றால் யார் என அடையாளப்படுத்தி இருக்கின்றதா? பெண்ணை – மகளாய், மனைவியாய், தாயாய், மருமகளாய், மாமியாராய்ப் பல உறவுப்பெயர்களுக்குச் சொந்தக்காரியாய் அடையாளப்படுத்தும் உலகு பெண்ணைப் பெண்ணாய் அடையாளப்படுத்தி இருக்கின்றதா? பெண் தன்னைப் பெண்ணாக மட்டுமே பார்க்க இடமளித்து இருக்கின்றதா? ஆழ்ந்து சிந்திப்பின் பெண் என்பதற்கான தனித்த அடையாளம் என்ன?” 1

இதுபோன்ற பல்வேறு வினாக்களுக்குப் பதிலாய், புனித விழுமியங்களை போலிப் புனிதங்களை தகர்ப்பதாய் , காற்றாய்ப் பறக்கும் காட்டுக்குதிரையொன்றின் பயணவழிக் குறிப்புகளாய்  பா.கண்மணியின் ‘இடபம்’.

 காலம்:

நாவில் ஓரிடத்தில் பண மதிப்பிழப்புக் குறித்து உவமிப்பதால் நிச்சயமாய இதை சமகால நாவலாய்க் (2018-2019) கருதலாம் (நூல் முதல் பதிப்பு ஜனவரி 2020)

 இடம் :

பனிக்குளிர் வீசும் பங்களூரின் பின்னணியில் எழுதப்பட்டிருப்பது நூலுக்கு மற்றுமொரு பரிமாணம் கொடுப்பதை மறுக்கவியலாது! ஏனெனில் பங்களூரு என்பது பன்மொழி, பன்பண்பாடு  எனக் கலவைகளாயான ‘காஸ்மோபாலிட்டன்’ பெருநகரம்!

பாத்திரங்கள்:

நாவலில் ’கதைநாயகி’ தவிர ,பெரும்பாலானப் பாத்திரங்கள் பெரிய இயக்கமின்றி இடம் நிரப்புவையாகவே இருக்கின்றன! உதாரணத்துக்கு ‘லக்கிடேய்ஸ்’க்கு வருகிற ‘கஜலட்சுமி’யின் வந்து போகும் இருப்பு புதினத்துக்கு எந்த வகையில் பங்களிப்பு செய்கிறது எனினும் மூலப்பாத்திரமான ‘கதைநாயகி’ பெரும்பாலான பாத்திரங்களை ஒரளவு தொடர்பி  இணைக்கிறது! பலவும் ‘வந்து போகிற’ பாத்திரங்களாதலால் கனம் சேர்க்கவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

 புதினத்தின் பேசுபொருள்:

புதினத்தின் மையம் பங்கு வர்த்தகம் எனினும் ஊடாக பேசும் பொருள் மரபுக்களுக்கு எதிரான தன் உழைப்பில் ,தான் விரும்பிய வாழ்வை – அது எவ்வளவு விமர்சனங்களுக்கு உட்பட்டிருப்பினும் – தேர்ந்தெடுத்து வாழும் ஒரு பெண்ணின்குரல்

ஏனென்றால் இக்கதையின் நாயகி மூன்றாம் அத்தியாத்திலேயே யாரோ ஒரு ஆடவனுடன் அவசரமவசரமாக மேசையின் மீதே தன்னைப் பகிர்ந்து தாகம் தணித்து தணிகிறாள்.நுரைப்பூக்கள் மலரும் பியர் அருந்தி நூதன சங்கீதம்  இசைக்கிறாள் இசைகிறாள்!

கணினி கைபேசி போன்ற ‘ஸ்தூலப் பொருட்கள்’ இன்றைய அதிநாகரீக வாழ்வில் நுழைந்து நம் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன,தனி மனித வாழ்வை வேறு வேறு திசைவழியில் செலுத்துகின்றன என்பதும் புதினத்தின் மைய நாடி!

பங்கு வர்த்தகத்தில் காளை கரடி எனும் இரண்டு குறியீடுகளை உண்டு ’.காளை ’என்பது பங்குகளின் விலையேற்றத்தையும் ‘கரடி’ என்பது பங்குகளின் விலைகள் அதல பாதாளத்துக்கு செல்வதையும் குறிப்பன.

‘இடபம்’ – எனும் தலைப்பும் கூட இங்கே BULL அதாவது காளை எனும் பொருளில் இடம் பெறுகிறது.

 மொழி:

வாசகனை புதினத்துக்குள் பயணப்பட வைக்கும் மிக எளிமையான மொழி ,ஊடாக மெல்லிய எள்ளல், விழுமியங்களின் மீதான தீராக்கோபம், காமத்தை மொழிபெயர்க்கும் ஆபாசமில்லா வர்ணனைகள் இவையெல்லாம் ஒருபுறம் .மற்றொருபுறம் எளிய வாசகர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிகத்திறமையான விளக்கங்களால் ஆன பங்கு வணிக சங்கதிகள் நாவலின்.. பா.கண்மணியின் பலமெனலாம்

உதாரண உவமைகளும் கூட பங்கு வர்த்தக சொல்லாடங்களில் எனும் போது பங்கு வணிகம் புரிந்தவர்களுக்கு அதிலுள்ள சூட்சுமம் புரிந்து குறுநகைக்கு வழிவகுக்கிறது.

சிபியோடு நிகழும் உடல் சுகத்தை சொல்ல வருகையில் “லிஸ்டிங் நாளின் பங்கு விலை போல்” எல்லாம் இனிதே முடிந்ததாம் (பக் 20)

’பண மதிப்பிழப்பு தினச் சந்தையைப்போய் என் ரத்தமெல்லாம் நிமிடத்திலிறங்கியது’ (பக்.146)

’மீள இருக்கையில் அமர்ந்த நான் “ஹிந்துஸ்தான் யூனிலீவர்”  பங்கு யோவ முன்பின் நகராது கைபேசியை  வதைத்துக் கொண்டிருக்கிறேன்’ (பக்  193)

  பாத்திரப்படைப்பு :

“பெண்- நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நீர்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு இவற்றைத் தன் அடையாளமாகக் கொள்ளவேண்டும். இத்தகைய அடையாளங்களை உடையவளே பெண் என்னும் சிந்தனையை மானுடத்தின் சிந்தனையாய் மாற்றியமைக்க வேண்டும். எந்தவொரு மாற்றுச்சிந்தனையையும் அன்றும் இன்றும் என்றும் அடுத்துவரும் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பவளாய் இருப்பவள் பெண். குடும்ப அமைப்பும் சமூகத்தின் உறுப்பு எனவே, பெண் என்பவள் சமூகத்தின் பொறுப்பாளி. இதுவே அவளது உண்மையான அடையாளம்.”என்பார் முனைவர் தேவி. 2

முதலில் இது போன்ற அதிர்வலைகளை ஏற்படுத்தி, புதினத்தை தன்மை ஒருமையில் சொல்லிடவே    தைரியம் வேண்டும். புதினத்துக்குள் இயங்குவது பாத்திரமா அன்றி படைப்பாளியா வாசகனுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி வெற்றி கண்டுள்ள பா. கண்மணி தைர்யலட்சுமி தான்!

சர்வ சாதாரணமாக “மயிராண்”  பாண்டக் கம்னாட்டி” என வசைகளைப் பொழியும் தரை டிக்கட்டா…. அன்றி தேர்ந்தெடுந்த “காக்டெய்ல்” பருகும் உயர்வகுப்பா…. எது அவள்?

எந்தச் சூழலிலும் அதிகாரத்தை வெறுக்கும் இப்பாத்திரம்-            அலுவலக முதலாளி கிஷோர்…. முதல் நேசன் நவீன்,  அப்பா, அண்ணன், அம்மா,  அண்ணி-யின் எனக் குடும்ப உறவுகளின் அறிவுரைகளென்ற பெயரிலான அதிகாரக் காட்டும் எந்தக் குரலையும் வெறுக்கும் எதிர்க்கும்  சுதந்திரக் காற்றாக நாயகி. சிபி… கண்ணன் என சட்டென விரும்பிய ஆடவனோடு கூடி முயங்க முடிகிறது. அதே நேரம். மனமொப்பாத எவனையும் (ராவ், கிஷோர்)  விலக்கி விட முடிகிறது. ஆக இயல்பான பாலுணர்வும் கூட இவள்  சுதந்திரம் தான்.

காட்டமான சிகரெட்டும், தனியே பப்பு (BUP) க்கு செல்லும் பயமின்மையும், விதவிதமான மதுவகைகளின் நுகர்வும் அறிந்தவள்.

ஜின்-அளவு அதிகமாகி வாந்தியெடுக்க.. அறைக்கு அழைத்து வந்த உமர், நாற்றம் பிடித்த சேலைகளை அகற்றி சுத்தப்படுத்தியதற்கு கைமாறாக அவளையே எடுத்து கொண்டதற்கு எவ்வித ஆட்சேபணை சொல்லாதவள். என்ற வகையில் கதை நாயகி  பாலுறவு சுதந்திரம் என்கிற முதலாளித்துவ சிந்தனையில் தன்னைச் சிறைப்படித்திக்கொண்டவளோ என எண்ணத் தோன்றுகிறது

”பயணப்பட முடியாதவர்கள், பயணப்பட பயப்படுவர்களால், வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவே முடியாது. எல்லா நேரமும் துணை வேண்டி நின்று கொண்டிருக்கும் பயணங்கள், பயணத்திற்கான முழுமையைக் கொடுப்பதில்லை..   எல்லாக் காலத்திலும் பெண்களை முடக்கும் மிகப் பெரிய காரணியாக இருப்பது. அவர்களால் தனித்து பயணம் செய்ய முடியாது என்பதே.       தனித்த பயணங்கள் நமக்குள் உண்டாகும் சுதந்திர உணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியாது.”3-என்றுக் குறிப்பிடும் கவிஞர் அ.வெண்ணிலா வின் சிந்தனைக்கீற்றுடன் மிகச்சரியாக ஒத்துப்போகிரது கதைநாயகியின்  வாழ்வியல்

சமூகம் உருவாக்கிய கலாச்சாரம், பண்பாடு, மரபு போன்ற சட்டங்கள் பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டவை என்பதையும் அவை மேலும் பெண்ணை அவளின் வெளியை சுருக்கும் வேலையையே செய்கிறது என்ற கருத்தையும் இதுவரை கண்ட படைப்புளின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. பெண்ணுக்குத் தெரியாமலே அவளின் மனதையும் உடலையும் இத்தகைய சட்டகங்களால் ஒடுக்கும் பணியை ஆண் சமூகம் தந்திரமாகச்  செய்ததை அறியமுடிகிறது. எனினும் பெண்ணை ஒடுக்க ஆண் சமூகம் உருவாக்கிய சட்டகங்களைப் பெண்கள் உணர தலைப்பட்டு விட்டனர்.

இரண்டாம் அலைப் பெண்ணியம்  (SECOND WAVE FEMINISM) : பெண்ணிய இயக்கத்தில் மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகரப்பதற்காக, போராட்டங்கள் நடந்தன. பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் இதில் ஒரு முக்கிய கூறு ஆகும். இந்தக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட் கருத்து வேறுபாடுகளுடன் முடிவுக்கு வந்தாகப் பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.”4-என்கிற கருத்தோடு உடன் படுகிறாள் கதை நாயகி

கதை நாயகி கொண்டாடும் காமம்:

“பெண்கள் பெண்ணியம் பேச “பெண் மொழி” “பெண் உடல் மொழி”  என இருமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழி எதுவாயினும் முன்மொழியப்படுவது பெண்ணியமே”-5 எனும் கருத்துக்கேற்ப தன் பாலினச் சுதந்திரம் மற்றும் பாலுணர்வுச் சுதந்திரம் பேணுபவளாக கதை நாயகி

பழையப் பேப்பர்கள் சரசரக்க அலுவலக மேசை மேல் சிபியுடன், தூசு படிந்த தரையில் கண்ணனுடன் எனக் கூடுபவளுக்கு ‘உமர்’ அவளறியாமலே அவனிடம் உறவு கொண்டதையும் ‘பெரியமனசோடு’ ஏற்றுக் கொள்வது நெருடல்!

கச்சடா லாட்ஜ் என்பதால் ராவ் எனும் புலியை நிராகரிப்பவள் மசாஜ் பையனுக்கு அறிவுரைக் கூறுபவள் – ஒரே இரவில் அறிமுகமாகும் கண்ணனோடு உறவாட முடிகிறது… யாவுமே பெண்மனப்பறவையொன்றின் வலசைப் பயணங்கள்!

நேற்றையக் குறித்த கேள்விகளின்றி நாளைல் குறித்த அச்சங்களின்றி நாயகி இன்றில் வாழ்பவளின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

எனினும் கதையின் நாயகி ஓடுவது பணம் ,நவீன வாழ்வின் குறியீடுகளான இரு சக்கர வாகனம்,அடுக்ககம்,கைபேசி மற்றும் இதர செல்வங்களின் பின்னால் என்பது ஒரு நெருடல், பன்முகத்தரிசனம் காட்டும் பெருநகரில் பணப்பயிர் விளைச்சல் ஒன்றே வாழ் வாகுமா என்பதொரு பெருங்கேள்வி.

நாற்பது இலட்சம்! அலுவலகப் பணத்தை எவருமாறியாமல் கையாண்டு ஊடக வணிகத்தில் பயன்படுத்துவது எந்த வகை நியாயம்! ஆனால் ‘காளை’ யின் சீறலில் களவு, பணம் – துட்டு, மணி யென உனத்தில் வாங்கியப்பங்கு ஒங்கி உலகளக்க… கதை நாயகி தப்பிக்க ஏலுகிறது! எனிலும் பணம் எடுத்ததற்கான விளக்கம், கதை நாயகியை எதிர் நாயகியாக்க புது வீடு ..புது வாகனம் என விளைவுகள் வெற்றியை தீர்மானிக்கின்றன!அவளின் ஆழ்மனம் பங்கு விலையேற்றத்தை விரும்புகிற  அதாவது ”[BULL[] -களை, தனிப்பட்ட, வாழ்விலும் இவள்  காளை விரும்பியாகாகவே காணப்படுகிறாள்

 

“இடபம்” ஆணரசியலின் குறியீடா! – :

“கர்நாடக்தில் காளைமாடு ஒரு படிமமாக இருக்கிறது. மாநிலத்தின் சின்னமே நந்தி தானே”

“கொம்புகள் மோதப் புழுதி கிளப்பி சண்டை போடும், குன்று போல் திமில் பெருத்த காளைகள்.

உழும், வண்டியிருக்கும் வாளிப்பான காளைகள்.

அமர்ந்து அசையோடும், நின்று யோசிக்கும் காளைகள் என அவை வீரத்தின் உழைப்பின், ஆண்மையின், கட்டறுத்தலின் குறியீடுகளாக வரையப்பட்டிருந்தன.(பக். 143)

காளை- என்பது ஆணரசியலின் குறியீடு! பொருளாதார மேம்பாட்டுக்காக உழுகுடிகளின் உறுதுணையான காளை, பொலிகாளையாக உருவகிக்க, பாலியல் குறியீடாக மாறி விடுகிறது.

பெண் எனும் பெருஞ்சக்தியின் திமிறலை “கங்கை எங்கே போகிறாள்” தொடரில் ஜெயகாந்தனும், மரப்பசு-வில் தி.ஜா-வும், விரிவாய் வெளிப்படுத்த “பொன்னரகத்தில்” புதுமைப்பித்தனும், “திரை” -யில் கு.ப.ராவும் கோடிட்டும் காட்டியிருக்கிறார்கள்.

பங்கு வர்த்கத்தின் இரண்டு குறியீடுகளாக காளை மற்றும் கரடி, ஊடக வணிகம் சீறும் போதெல்லாம் “காளை”[BULL] யின் பாய்ச்சலாகவும் பங்குகளின் விலைகள் பாதாளத்துக்கு பாயும் போது ”கரடி”[BEAR ]யில் பதுங்கலாகவும் குறிப்பிடுவது வணிக விழமை! ஆனால் புதினத்தின் பல பகுதிகளில் பங்குகளின் விலையேற்றத்துடன் இறங்கு முகமும் குறிப்பிடப்பட்டிருப்பினும் “கரடி” எனும் சொல் ஒரே ஒரு இடத்தில் தான் பதிவாகிறது.

“பெண்ணியம் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஒரு பிரச்சனை. இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமைப் பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே பெண்ணியம் முதன்மைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதமாய் ஒவ்வொரு யுத்தியுடன் எழுதியிருந்தாலும் பெண் விடுதலையே இலக்கு. பெண் சுதந்திரமே நோக்கம். பெண் உரிமையே கோரிக்கை. பெண்  சமத்துவமே தேவை”.பெண்ணியச் சிந்தனையுடன் எழுதப்பட்ட  “இடபம்” பிரச்சனைகளை சிக்கல்களை, அவஸ்தைகளை முன் வைத்திருப்பிணும் தீர்வையே கோருகிறது. ஆணாதிக்க சமுதாயத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை. எதிர்க்கவும் அஞ்சவில்லை.

 

புதினப் பொங்கலில் முந்திரிகளும் மிளகுகளும்:

 • “இடபம்” –நாவலின் பின்புலம் பங்கு வர்த்தகம்,தமிழில் இது புதியது. தமிழுக்குஇதுபுதுசு!
 • பங்கு வர்த்தகம் குறித்த அடிக்குறிப்புகள் எளியவர்க்கும் புரியும் வகையில் விளக்கியிருப்பது சிறப்பு; இந்த அடிக்குறிப்புகள் தொடர்வாசிப்பைப் பாதிப்பதில்லை மாறாக சுவாரஸ்யங்கூட்டுகின்றன.
 • எடுத்துக்காட்டும் உவமைகள் கூட பங்கு வர்த்தகம் சார்ந்தவை யாகவே இருப்பதும் சுவை சேர்ப்பது!
 • கதியின் நாயகியின் பெயர் எங்குமே குறிப்பிடப்படாமல் எழுதியிருப்பது சிறப்பு மறும் புதிய உத்தியெனவும் கூறலாம்.
 • கதையின் இடையிடையே வந்து தலைகாட்டும் கஜெலட்சுமி (வங்கி ஊழியை) பக் 27 ல் ‘வரலட்சுமி’யாக மாறிப்போவது எப்படி?
 • பெங்களுரிலிருந்து சென்னை செல்லும் பாதை கிருஷ்ணகிரியிலிலேயே இடது புறம் திரும்பி வாணியம்பாடி வேலூர் வழியாக செல்வது ‘ஹோசூர் தாண்டியாயிற்றாம்…’ இப்படியே தர்மபுரி சேலம் என்று விசாரிப்புகளும் பதில்களும் தொடர்ந்தன (பக் 88) கிருஷ்ணகிரியிலிருந்து வலது புறம் செல்வதே தர்மபுரி, சேலம் பாதை…முக்கியமான தகவல்களில் தவறுகள் நிகழலாமா?
 • புதினத்தின் மிக முக்கிய திருப்புமுனைப் பகுதியான ‘இன்ஃபிடெக்’ பங்குகளின் வீழ்ச்சியும், அந்த பங்கு மீண்டு எழுவதும் ஆனால் பக் 176/177, ‘இன்ஃபிடெக்’ எனும் பங்குப் பெயர் ‘இன்ஃபிபீம்’ எனக் குறிப்பிட்டிருப்பது வாசகனுக்கு குழப்பத்தையே தரும்.

 

இடபம் எதிர் புதினம் ?:

எதிர்கவிதை என்ற  புதியதொரு கவிதை வடிவத்துக்கெனஒருஇலக்கணம்கொடுத்திருக்கிறார்… கவிஞர் இந்திரன். 6

 • நகைச்சுவை, கிண்டல், கேலி, நக்கல், நூலாசிரியர் தன்னைத்தானே மட்டுமல்லாமல் மொத்த மனித குலத்தையும் நக்கலடித்துக் கொள்வது என்று நடைபெறுகிற போது நூலாசிரியர் பாடுவதற்கு பதிலாக கதை சொல்லத் தொடங்குகிறார் என்று அர்த்தம்- இது தான் எதிர் கவிதை.
 • காலங்காலமாகக் கவிதைக்கென ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கல்யாணக் குணங்களைப் புறக்கணித்து சுதந்திரமான ஒரு வெளியில் இயங்குவதே எதிர் கவிதை.
 • சோகமான நிகழ்வுகளை வேடிக்கையாக எழுதுவது. எல்லாவற்றிலும் கிண்டல், கேலி, ஒரே நேரத்தில் சோகம், விளையாட்டு ஆகியவற்றை இணைப்பது.
 • இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கையைப் பரிகசிப்பது வயதாகிப்போவது குறித்த வலி, மரணம், காதலின் பொய்மை, அழகை, இயற்கையை இழந்துவிட்ட பிறகு அது குறித்த புலம்பல் என்று எதிர் கவிதை 21ம் நூற்றாண்டுக்கான புதிய அழகியலைக் கட்டமைக்கிறது.
 • மேற்சொன்னக் குணங்கள் இப்புதினத்திலும் “இடபம்” நூலை எதிர் புதினம் என அழைக்காலமோ!

 

உலகமயமும் பெண் சுதந்திர வெளியும்:

“உலகமயம் எனும் சொல் பெண்ணின் தன்னிலையை மட்டுமல்ல, ஆணின் தன்னிலையையும் பொதுச் சமூகத்தின் மதிப்பீடுகளையும் பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ள இவ்வேளையில் பெண் தனக்கான சுதந்திர வெளியை அடைந்துவிட்டாளா எனும் கேள்வி அல்லது ஆண் பெண் சமத்துவம் இருக்கிறதா எனும் கேள்வி பல புதிய விடைகளைக் கொண்டதாய் மாறுவதை நாம் அறிகிறோம். எவ்வாறெனில், பெண் கல்வி சுற்றுவிட்டாள், பணிக்குச் செல்கிறாள். ஆணைப் போலவே பொருளாதாரத்தேவையில் தன்னிறைவு பெறுகிறாள், பல உயர் பதவிகளில் இருக்கிறாள் எனச் சொல்ல முடியும் வேளையில் அதே பெண் பொதுவெளியில் பாதுகாப்பற்றவளாக, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாபவளாக, உடைமைகளை இழந்து உயிரை இழப்பவளாக, மறுக்கப்படும் காதலுக்காக அல்லது சாதி மறுப்புக் காதலுக்காகக் கொல்லப்படுபவளாக, திராவக வீச்சுக்கு ஆளாகுபவளாக இருக்கிறாள். நவீன உலகிலும் சாதியும் சமயமும் அவளது வெளியைத் தீர்மானிக்கும் கருத்தியல் தளங்களாக இருந்து கொண்டிருக்கின்றன. பெண் ஆணின் உடைமைப் பொருள் என்ற எண்ணம் இச்சமூக மனங்களில் ஆழப் பதிந்துகிடக்கிறது. பெண் உடல் சார்ந்த உரிமை ஆணுக்கே உரியதென்றெ மனோபாவம் மாறிவிடாத நிலையில் ஆண் பெண் சமத்துவத்துக்கான வெளி உருவாக இயலாது. அதற்கு நம் கல்வி முறையிலும் கற்பித்தல் முறையிலும் பெரும் மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும்.”5

 1. தனிமை
 2. பொருளாதாரச் சார்புநிலை
 3. எதிலும் பயம், பதற்றம்
 4. பாலியல் பிரச்சனைகள்
 5. பழமைவாதச் சமூகம் மிச்சம் வைத்த மிருகத்தனம்
 6. ஒற்றைப் பெற்றோரின் இரட்டைச்சுமை

போன்ற பல்வேறுத் தடைகளைத் தாண்டி      பெண் தன்னை நவீன அடிமைத்தளங்களில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ளும் சுய விழிப்பைப் பெற்றவளாகத் திகழ்ந்திட வேண்டும். நமது தனித்துவங்கள் நமது ஞானத்தில் இருந்துதான் கிடைக்கப் பெற வேண்டும். அது செயற்கையாகப் பூசப்படும் வண்ணங்களில் சாயங்களில் இல்லை எனும் தெளிவு பிறக்கையில் பெண் தனக்கான விடுதலை வானில் உயரச் சிறகசைப்பாள்.

”இடபம்”-கதை நாயகி  அந்த முயற்சியில் முதலடியை எடுத்து வைத்திருக்கிறாள்; அதற்காகவேனும் பாராட்டத்தானே வேண்டும், தமிழில் புதியதொரு திறப்பை, உடைப்பை உருவாக்கியிருக்கும் பா.கண்மணியின் துணிச்சலுக்கு பாராட்டி வாழ்த்துவோம்.

 • அன்பாதவன்

விமர்சன மேற்கோள்களுக்கு உதவிய நூல்கள்:

 • ‘சமத்துவத்தை நோக்கி’-தொகுப்பாசிரியர்:முனைவர் அரங்கமல்லிகா
 1. முனைவர் ந. தேவி(பக் .16)
 2. முனைவர் ந. தேவி(பக் .20)
 3. கவிஞர் அ.வெண்ணிலா(பக்.26)
 4. கெளரி ஷைலேந்திரா (பக் 48)
 5. ந.கவிதா (பக் 85)
 6. “மேசைமேல் செத்த பூனை”-எதிர் கவிதைகள் -இந்திரன்

நூல் தகவல்:

நூல் : இடபம்

பிரிவு:  நாவல்

ஆசிரியர்:  பா.கண்மணி

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2020

விலை: ₹ 220

அமெசானில் பெற: 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *