அபுனைவுநூல் விமர்சனம்மொழிபெயர்ப்பு

மூன்றாம் பிறை: வாழ்வியல் அனுபவங்கள்


காழ்ச்சப்பாடு” என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்பு நூல். இது மொழிபெயர்ப்பு நூல் தானா என்று கேட்க வைத்தது. சில வரிகளைப் படிக்கும் போது அத்தகைய உணர்வைத் தரும் அளவிற்கு வந்திருப்பது ஆசிரியர் கே.வி.ஷைலஜா அவர்களின் திறமைக்குச் சான்று. மொத்தம் 23 நிகழ்வுகளை உள்ளடக்கி இந்த நூல் வெளிவந்துள்ளது.

இந்த புத்தகம் திரைப்பட நடிகர் மம்முட்டி அவர்கள் தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்த்து இருக்கிறார். இத்தனை உயரத்தை அடைந்த பிறகு இந்த புத்தகத்தை ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியே புத்தகம் படிப்பதற்கு முன்பு கேள்வி எழுந்தது. பணம், புகழ் என்று நிறைந்த நடிகர், நானும் மனிதன் தான் என்பதை உணர்ந்து எழுதியுள்ள நேர்மையான மீள் நினைவுகளின் தொகுப்பு. படித்து முடித்த பிறகு மம்முட்டி என்ற மனிதம் நிறைந்த மனிதனைக் கண் முன்னே காட்டிச் சென்றது. இத்தனை விருதுகள், பாராட்டுகள் தாண்டி உணர்வுகளைத் தாங்கிக் கொண்டு மிதந்து கொண்டிருக்கும்.

தன் வாழ்வில் சந்தித்த பேரன்பு கொண்ட மனிதர்களை, தனக்கு வழிகாட்டிய மனிதர்களை, வாழ்வில் தனக்குத் திருப்பத்தை ஏற்படுத்திய மனிதர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றியைத் தெரிவித்து உள்ளார். எங்கு எல்லாம் மனிதம் தாண்டி நடந்தேன் என்பதை மனம் திறந்த சொன்னதைக் கேட்ட பிறகு அவரின் மீது உள்ள மதிப்பு இன்னும் நிமிர்ந்து நிற்கிறது.

இந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நம் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் புத்தகத்தோடு வந்து போகிறார்கள். நமக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும், நன்றி கூற வேண்டும் என்ற உந்துதலை தந்து செல்கிறது. இந்த புத்தகத்தில் நெகிழ்ந்த ஒரு சில நிகழ்வுகளைப் பகிர ஆசைப்படுகிறேன்.

முகம்மதுகுட்டி என்ற பெயரை மம்முட்டி என்று சசிதரன் அழைத்த போது அதுவே பெயராக மாறுகிறது. அதை சினிமாவில் மாற்ற முயன்ற போதும் மாறாது நிலைத்த போவதையும், தன் பெற்றோர் “மம்மது குஞ்ஞே” என்ற அழைத்தலில் இருக்கும் மகிழ்ச்சி இதில் இல்லை என்கிற போது முகம்மதுகுட்டியே எனக்கும் பிடித்து இருக்கிறது.

ரதீஷின் இறப்பு செய்தி வருகிறது. அந்த நண்பனை நடிகனாகவும், தொழிலதிபராகவும் பார்த்து இருந்து அவன் இறந்த கோலம் மனதில் இருக்கக் கூடாது என்று இறுதி நிகழ்வுக்குப் போகாது, தொலைக்காட்சி முதல் செய்தித்தாள்கள் வரை பார்க்காது இருந்தது எத்தகைய வலி. அதை தாங்கிய நேரத்தின் கொடுமையை உணர முடிந்தது இதைப் படிக்கையில் .

வக்கீலாக பணியாற்றிய போது, கணவனுக்கும், மனைவிக்கும் விவாகரத்து வழக்கு. அந்த வழக்கில் உறவுக்காரர்களால் பிரிய வேண்டிய சூழலில் அந்த மனைவி தலை சுற்றி கீழே விழுந்திட அந்த கணவன், மனைவியைத் தட்டி எழுப்பி அரவணைத்துச் சென்ற போது அந்த கேஸ் தானாக முடிந்து விடுகிறது. அந்த பேரன்பை ரசிக்கிறார்.

வக்கீலாக இருந்த நேரத்தில் தன்னை பார்த்து சினிமாவில் சேர்ந்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என்று சொன்ன பஷீர். அந்த பஷீர் பல வருடங்கள் கழித்து ஒரு ஷூட்டிங்கில் பார்த்த போது, கூட்ட நெரிசலில் தலையில் அடிபட்டதோடு தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்ட வரிகள் இன்னும் மம்முட்டிக்குள் கூசலாடுகிறது. முதல் முதலில் நடிகன் என்ற அங்கீகாரம் தந்தவனை எப்படி மறக்க முடியும்.

ஒரு கிராமத்தில் அங்கு வசிக்கும் உண்மை கதாபாத்திரங்களைக் கொண்டு படம் எடுக்கப்பட்டது. அதில் ஆக்‌ஷன் பாபு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மம்முட்டி சண்டை போடுகிறார். அந்த வில்லன் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என சுற்றிக் கொண்டிருப்பவன். அப்படிப் பட்ட சூழலில் படப்பிடிப்பு முடிந்து அவர் அறைக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் வம்பு செய்கிறான். பிறகு தான் தெரிகிறது அந்த பெண்ணுக்கு அந்த ஆண் உதவி தான் செய்து இருக்கிறார் என்று. அந்த ஆண் யாரென்று பார்த்தால் அது தான் ஆக்சன் பாபு. அந்த ஈரமுள்ள மனிதனை நினைத்து உருகுகிறார்

ஒரு வயதான பெண்மணி ஒரு படப்பிடிப்பில் இருக்கும் பொழுது வலுக்கட்டாயமாக வந்து பேசுகிறார் அவர் பேசுவது அத்தனை சௌகரியமாக இல்லை அவருக்கு இருப்பினும் அவர் பேசும்போது மறுக்கவும் முடியவில்லை. என்னை மிகவும் தெரிந்தவர் போலவே பேசுகிறார். பேசிக்கொண்டிருந்துவிட்டு அடுத்த நாள் வரும் பொழுது ஒரு செம்பு பாலைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறார் அதன் பிறகு அடுத்த நாள் வேறு ஒரு கிண்ணத்தில் வந்து தருகிறார் தின்பண்டத்தை எடுத்துவந்து தருகிறார் அதன் பிறகுதான் புரிந்தது அவர்கள் பிள்ளைகளில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்துக் கொண்டு தான் அவர் பேசுகிறார் என்பது. அந்த அம்மா குடும்ப கதை எல்லாம் சொல்லி விட்டு நீ வந்தா தான் முடிவெடுக்க முடியும் என்று சொல்லிச் செல்கிறார். அதே நேரத்தில் தன் அம்மா, அப்பாவையும் சந்திக்காமலே சுற்றுவதைப் புரிந்து கொள்ளும் வேளையில் அந்த முதிய பெண்மணி கண்ணுக்குள் வந்து நிற்க, மம்முட்டி அந்த நினைவுகளை மிடறு மிடறாய் பருகுகிறார்.

இப்படிப் பயணிக்கும் அந்த புத்தகம் என்னையும் அப்படி எழுது என்று தூண்டியது. இது தானே எழுத்து. இதை மொழியாக்கம் செய்த வம்சி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

கே.வி.ஷைலஜா அம்மாவின் மொழிபெயர்ப்பு உணர்வுகளை உலுக்கி எடுத்ததைச் சொல்லாமல் எப்படிச் செல்ல முடியும். வாழ்த்துகள் அம்மா.!

  – சிவமணி  – வத்தலக்குண்டு 

 

நூல் தகவல்:

நூல் : மூன்றாம் பிறை: வாழ்வனுபவங்கள்

பிரிவு :  தன்வரலாறு, மொழிபெயர்ப்பு

ஆசிரியர்: மம்முட்டி

தமிழில்: கே.வி.ஷைலஜா

பதிப்பகம் : வம்சி புக்ஸ்

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு 2010

விலை :  ₹100

Kindle Edition :  

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “மூன்றாம் பிறை: வாழ்வியல் அனுபவங்கள்

  • வாழ்த்துகள் தோழர்..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *