பெண் எழுத்தாளர்களில் நான் அறிந்த வரையில் வட்டாரச் சொற்களை தங்கள் எழுத்துக்களில் பயன் படுத்துபவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளனர் என்று எண்ணுகிறேன். சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது பெற்ற தூப்புக்காரி நாவலின் மூலமாக வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்ற எழுத்தாளர் மலர்வதியும் அதில் ஒருவர் ஆவார். அவரின் கருப்பட்டி என்ற சிறுகதை தொகுப்பை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். இது இவரது முதல் சிறுகதை தொகுப்பு. இத் தொகுப்பில் மொத்தம் பதினொரு சிறுகதைகள் உள்ளன.
முதல் கதை கருப்பட்டி—மண்ணை நம்பி வாழ்ந்த ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படும் துயரத்தை இந்த கதை விவரிக்கிறது. நாஞ்சில் நாட்டு நிலத்தில் அவர்கள் பாரம்பரியமாக வளர்த்துள்ள விவசாயத்தை நம்பித்தான் அவர்களின் பிழைப்பு இருக்கிறது. காணம், துவரம்பருப்பு வகைகளும். நெல் வயல்களும், தென்னை, பலா மரங்களுமாக தோற்றமளித்த நிலம் இன்று அதன் முகத்தை இழந்துள்ளது. அதற்கு காரணம் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் வந்திறங்கிய ரப்பர் மரங்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவன்தான் முத்தையன். வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிப்பவன். அவனது குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது. நாலு ஒழக்கு அரிசியைக் கூட கடன் வாங்க வேண்டிய நிலைமை. அன்றைய தினத்தில் ஒரு வெள்ளம் காய்ச்சி குடிக்க சீனியும் இல்லாத நிலையை எண்ணி அவன் மனைவியோ அழுது கொண்டேயிருக்கிறாள். அவன் பிள்ளைகளும் அந்த வறுமைக்குச் சுருண்டு படுத்து உறங்கி கொண்டிருக்கிறார்கள். கொட்டும் மழையில் அன்றைய தினத்தை ஒப்பேத்த போகும்போது அவனது கூட்டுக்காரன் பழைய தோழன் குமரேசனை வழியில் சந்திக்கிறான். அவன் படித்து வளமையில் இருக்கிறான். அவனின் பழைய நினைவாக அவனது நினைவுகளை எண்ணிப் பார்த்து கடன் பெற்ற கருப்பட்டியை வாங்கிகொண்டு அவன் வீடு தேடி அதை அவன் அன்பின் குறியீடாக அவனிடம் வழங்கும்போது அவனது நண்பன், ஈ மொய்க்கும் அதைத் தன் பிள்ளைகள் தொட்டுவிடக் கூடாது என்பதற்காக புறக்கணிக்கிறான்.
காலம் மாறிப்போனதை நீ இன்னும் புரியலியா முத்தையா? என்று அவன் கூறியபோது ,அவனது பொய்யான முகத்தைக் கண்டு வெந்துபோன முத்தையன் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகிறான்.
ஒரு பொருளின் மதிப்பீடுகள் மனிதர்களின் மனதில் காலப்போக்கில் எப்படி மாறுகிறது என்பதை மலர்வதி இக்கதையின் மூலமாக அழகாக விளக்கியிருகிர்றார். ஒரு காலத்தில் கருப்பட்டிக்கு இருந்த மதிப்பு காலப்போக்கில் ஈ மொய்க்கும் பண்டமாக பார்க்கப் படுகிறது. கருப்பட்டி என்பது இனிப்பு மட்டுமல்ல . அது நமது பண்பாட்டின் ஒரு குறியீடு. புதிய தொழில்கள் வருகையில் நமது பண்பாட்டின் வேர்களும் நமது வாழ்க்கை மதிப்பீடுகளும் முற்றிலும் வேறாக மாறிவிடுவதை இக்கதை நமக்கு அறிவுறுத்துகிறது.
‘ சிலுவை முத்துவும் செல்விக்குட்டியும்’ கதையில் வரும் ஏழைப் பிள்ளைகள் தங்கள் ஊர் மையத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்கு வந்து கையில் காசில்லாமல் ஏங்கியபடியே சுற்றித் திரிகிறார்கள்.கோயில் முகப்பில் இருந்த தேர் அறையில் இரவு பவனிக்கு எடுத்துச் செல்லப் படும் மாதாவின் அலங்கார சொரூபத்தை ஆச்சரியத்தோடு பார்த்து தன் கிழிந்த பெற்றிக்கோடு உடுப்பையும், மூளியான கைகளையும், கம்மல் இல்லாத காதுகளையும் ,தனது வெறுமையான கழுத்தையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே தன் தமையனிடம் இவ்வாறு கூறுகிறாள், “க….ட…வுளு என்ன பெரிய பணக்காரரு இல்லியாண்ணா….” என்று வியப்புடன் கூறும் காட்சியில் ஒரு ஏழைச் சிறுமியின் மனதில் உள்ள ஏக்கத்தை தெளிவாக கூறும் அதே வேளையில் கடவுளுக்கு காணிக்கையாக செல்லக்கூடிய எதுவும் ஏழையின் பசியை தீர்க்க முடியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஏழைகளுக்கு ஒருவேளையாவது கஞ்சி கிடைத்தால் அதுவே அவர்களுக்கு திருநாள்தான். கோயிலுக்கு தானம் தர்றவங்க ,இடிஞ்சி போய் கிடக்குற நம்மளப் போல் உள்ளவங்கள கடைக்கண்ணு கொண்டு பாக்குமோ? என்று மனமுருகும் காட்சிகள் நம்மை மனம் கசிந்து சிந்திக்க வைக்கின்றன.
தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் இந்த சமூகத்தால் கைவிடப் பட்ட பெண்களின் ஆழ்மன உணர்வுகளாகவும் ஏக்கங்களாகவும் இருப்பதைக் காண முடிகிறது. கிலுக்கியக்கா, பெட்டச்சி, மூர்க்கன், ஒரே ஒருக்கா கேசு கொடுக்கணும் போன்ற கதைகளில் பல்வேறு வடிவங்களில் இதுபோன்ற உணர்வுகள் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளன. தொகுப்பிலுள்ள அனைத்து கதைகளுமே நாஞ்சில் நாட்டு மொழியில்தான் அமைந்துள்ளது.பல நேரங்களில் தமிழ் நிலப் பரப்பில் ஒரு பகுதியான நாஞ்சில் நாட்டு மொழியை அந்த நிலத்தின் வட்டார மொழிச் சொற்களை வேறொரு நிலப் பரப்பில் வாழ்பவர்கள் புரிந்து கொள்வது மிகவும் சிரமம் என்பதால் வட்டாரச் சொற்களின் அகராதியை பின் இணைப்பாக கொடுத்துள்ளார். மிகவும் எளிய மாந்தர்கள் நிறைந்த இந்த தொகுப்பில் எளியவர்களின் உணர்வுகளை தனது வலிமையான உரையாடல்களால் கதையின் மாந்தர்களை பேச வைத்துள்ளார்.மலர்வதி. கூடை கூடையாக நாஞ்சில் நாட்டு வட்டார மொழி நம்மீதும் அப்பிக் கொள்கிறது. கதைகளின் வழியாக பல நுட்பமான கேள்விகள் நாம் வாழும் சமூகத்தை நோக்கி எழுப்பபட்டுள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதுவே இக்கதைகளின் நோக்கமும் ஆகும்.
மலர்வதி இயற்பெயர் மேரி புளோரா. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த வெள்ளிகோடு பகுதியில் வசித்து வருகிறார். ஒன்பதாம் வகுப்பின் பாதியில் படிப்பு பறிபோனது. அதன்பின் தொடர்ந்த வாசிப்புகளும், பல்வேறு வாழ்க்கை அனுபவங்களுமே இலக்கியத்துக்கான காரணங்களாகின. தொடக்ககால எழுத்துகள் நாடகங்களாக வெளிவந்தன. அதன்பின் சமயம்சார்ந்த கட்டுரைகள், தவக்கால வழிபாட்டு நூல்கள் ஆகியன மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழியாக பி.லிட் தமிழ் கற்றார். 2008ஆம் ஆண்டு வெளிவந்த 'காத்திருந்த கருப்பாயி' நாவல் முதல் படைப்பு, அதன்பின் 2012ஆம் ஆண்டு வெளியான 'தூப்புக்காரி' நாவல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதைப் பெற்றது. 'காட்டுக்குட்டி' நாவல் 2015இல் வெளிவந்தது.) 2015ஆம் ஆண்டு முதல், குமுதம் தீராநதியில் சூழல் சார்ந்த கட்டுரைகள், எழுத்து ஆளுமைகளின் நேர்காணல்கள் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். இத்தொகுப்பு முதல் சிறுகதைத் தொகுப்பு. அம்மா: எம். ரோணிக்கம், அப்பா: ஜி. எலியாஸ். அண்ணன்: E. ஸ்டிபன், அக்கா : E. மேரி லதா. தொடர்பு எண்: 9443514463 மின்னஞ்சல்: [email protected]
நூல் : கருப்பட்டி ஆசிரியர் : மலர்வதி வகை : ; சிறுகதைகள் வெளியீடு :காலச்சுவடு வெளியான ஆண்டு : முதல் பதிப்பு ; டிசம்பர் 2019 பக்கங்கள் : 144 விலை : ₹ 175 கிண்டில் பதிப்பு :
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
கருப்பட்டி – சிறுகதைத் தொகுப்பு – அற்புதமான மதிப்புரை. இவரது முந்தைய நாவல் தூப்புக்காரிக்கு நான் எழுதியிருக்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் மஞ்சுளா கோபி