நூல் விமர்சனம்புனைவு

உப்பு நாய்கள் – நாவல் – வாசிப்பு அனுபவம்


முதலில் எழுத்தாளர் திரு.லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்.,!!! நம் கண்முன்னால் இயங்கும் உலகம் வேறு அதன் நிஜ முகம் வேறு என எந்த வித பூசி மெழுகல் இல்லாமல் உண்மையை உரக்கச் சொல்லத் தனி தைரியம் வேண்டும்.. ஏனெனில் முதலில் அந்த நிஜங்களைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

இது வரை நம்மில் அநேகம் பேர் கேள்விப்படாத,  அனுமானிக்காத ஒரு உலகையும்.. அது இயங்கும் விதத்தையும் எந்த வித சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.  இப்படி கூட ஒரு வாழ்வா.. இப்படியும் இருப்பார்களா என யோசிக்க வைக்கும் ,அதிர்வுறும் நமக்கு. ஆம்.. இருக்கிறார்கள் எனத் தெரிய வரும் போது வரும் அதிர்வில் இருந்து மீள முடியவில்லை.. இது வரை திரைப்படங்களில் காட்டிய நிழல் உலகமும் அது தான் நிஜம் அல்லது இப்படித்தான் இருக்கும் என நாம் அனுமானிக்கும் நிழல் உலகத்திற்கும் அதன் நிதர்சனத்திற்கும் இருக்கும் பார தூர வித்தியாசம் மலைக்க வைக்கிறது..

இந்த நாவல் நிழல் உலகின் விளிம்பு நிலை மனிதர்களையும், அவர்கள் இயங்கும் விதம் ,அன்றாட வாழ்க்கை..பற்றிப் பேசுகிறது. நிழல் உலகின் கடை மட்ட வேலையாட்களாக மாறும் சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்கள், அவர்களை இயக்கும் திரை மறைவு அரசியல்.. எல்லாம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டிருக்கிறது. அதே நேரம் பிழைப்புக்காகச் சொந்த நாட்டிலேயே அகதியாக நகரும் மக்களும் அவர்கள் எதிர்கொள்ளும் நகரமும்.. அவர்களை எதிர் கொள்ளும் நகரமும்.. அவர்கள் அன்றாடமும் அவர்கள் மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. உழைப்பு சுரண்டல் போலவே உணர்வு சுரண்டலும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பதைச் சொல்கிறார். அதே நேரம் ஒவ்வொரு மனிதனும் தனக்கான கூடடைதலைத் தான் விரும்புகிறான், தனக்கான சரணடைதலை.. அன்பே வாழ்வின் அடிநாதமாக இருப்பதை இங்கே பதிவு செய்கிறார். அதற்கு மிக அழகிய உதாரணமாகப் புலம் பெயர்ந்து வரும் குழந்தை ஆதம்மாளின் கதையும் , ஷிவானி சம்பத்தின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது.

இது மொத்தமும் இருட்டைத் திரை விலக்கிக் காண்பிக்கப்பட்ட ஒரு உலகம்.. அநேகரால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சம்பத், சுந்தர், பாஸ்கர், மணி, ஜாஃபர், கோபால், செல்வி, தவுடு, முத்துலட்சுமி, முருகன்,இவாஞ்சலின், சோபியா, மகேஷ் ,ஷிவானி, ராஜு, ஆதம்மா, ஆர்த்தி.. என மிக அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. எந்தவித வாழ்க்கை நியதிகளுக்கும் , அடிப்படை சமூக விழுமியங்களுக்கும் அப்பாற்பட்ட மனித உலகைப் பார்க்கும் போது வரும் அதிர்ச்சியும் , விதிர்ப்பும் தாங்கவே முடியவில்லை.. இரவும்.. அதன் நிழலும் அதன் பின் இயங்கும் உலகமும் நமக்கு புது அனுபவமாக இருக்கிறது.

பொதுவாக நாம் இது வரை பார்த்த, கேள்விப்பட்ட நிழல் உலகம் அல்ல இது.. பெரிய ஆட்களிடம் குருவியாக, எடுபிடியாக, பாலியல் தொழிலாளியாக வேலை செய்யும் விளிம்பு நிலை மனிதர்களை இத்தனை விரிவாக யாரும் சொன்னதில்லை இது வரை. அவர்கள் வாழ்க்கை, எதிர்பார்ப்பு, தேவை, இவர்கள் சுரண்டப்படும் விதம்.. அதன் பின் இழையோடும் அரசியல், சமூக சிக்கல், எல்லாம் ரொம்பத் தெளிவாக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. நாவலில் நாம் காண விரும்பாத அல்லது கண்டும் காணாமல் கடந்த சில விஷயங்களை நம் முகத்துக்கு நேராக தோலுரித்து காண்பித்திருக்கிறார் ஆசிரியர். அந்த நிதர்சனத்தில் இருந்து நாம் தப்பிக்கவே இயலாது.

இந்த கதை மாந்தர்கள் ஏதாவது ஒரு புள்ளியில் இணைவார்கள் என நினைத்தேன்.. ஆனால் அவர்கள் வாழ்வியல் மட்டுமே ஒரு இழை போல் இணைகிறதே தவிர அவர்கள் இணையவில்லை.. அவர்கள் அனைவரும் இணையும் இழையாக , இடமாகச் சென்னை காட்டப்படுகிறது. அதுவே இந்த கதையை இன்னும் அழகாக மாற்றுகிறது. இந்த எதிர்ப்பதமான வாழ்வியலிலும் அடிநாதமாக இருப்பது “அன்பு” என உணர்த்தி இருப்பது உள்ளபடி ஆச்சரியமும் நிறைவும் தருகிறது. அடிப்படையில் மனிதன் தான் சரணடைய ஒரு கூட்டைத்தான் தேடுகிறான்.

ஒரு அத்தியாயத்தை எழுத்தாளர் இப்படி ஆரம்பிக்கிறார்.

”அதிகமா குற்றவுணர்வு கொள்கிற மனிதர்கள் தான் அதிகமாய் குற்றம் புரியத் தூண்டப்படுகிறார்கள். குற்றங்கள் செய்து திருப்தி கொள்பவன் மேலதிகமான குற்றங்களைச் செய்யத் தவிக்கிறான் “

சாதாரணமாக கடந்து போகக் கூடிய சொற்கள் அல்ல இவை..! மிக ஆழமாக மனிதர்களைக் கவனித்து உள்வாங்கி இருந்தாலொழிய இந்த வார்த்தை சாத்தியம் அல்ல. இது மிகப் பெரிய உளவியல். தவறு எனத் தெரிந்தே மேலும் மேலும் குற்றம் செய்கிறவன், தன் முந்தைய குற்றங்களின் குற்ற உணர்வில் இருந்து விடுபடவே மேலும் மேலும் குற்றம் செய்கிறான். மேலதிக குற்றங்களின் வழியாக ஒரு பாதுகாப்பு உணர்வைத் தேடுகிறான் அடிப்படையில் பயமும், குற்றவுணர்வும் அவனைக் குற்றங்கள் நோக்கி உந்தித்தள்ளுகிறது.. அதைப் போக்கிக்கொள்ள மேலதிக குற்றம் செய்கிறான்.

இந்த நாவல் விளிம்பு நிலை மனிதர்களோடு வாழ்வியல் மட்டும் பேசாமல் மனிதர்களின் உளவியலும் பேசுகிறது.. உறவுச் சிக்கல்களையும் பேசுகிறது. மனித மனதின் எல்லா வித அவலட்சணத்தையும், வக்கிரத்தையும் ,குரூரத்தையும் இயல்புகளையும் வெளிப்படையா பேசுகிறது.. இதை ஏற்றுக்கொள்ள மனப் பக்குவமும் , தைரியமும் வேண்டும். இது சமூக நாவலா உளவியல் நாவலா எனக் கேட்டால்… ஆம்.. சமூக உளவியல் பேசும் நாவல் எனச் சொல்வேன்.

படிக்கும் போதே இது எத்தனை உழைப்பைக் கோரி இருக்கும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. சற்றே தவறினாலும் பிசகாகி விடக் கூடிய எல்லா சாத்தியங்களும் உள்ள கதைக் களம். நாவலின் முதல் பாகத்தில் வரும் உறவு மீறல்கள். உணர்வு சிக்கல்கள் தனித்து உறுத்தலாகத் தெரியாத அளவு மிக நேர்த்தியாக மொழி கையாளப்பட்டிருக்கிறது. சில இடங்களில் மேம்போக்காகச் சொன்ன சில கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம்.. அதனாலேயே சில சங்கடங்களையும் தவிர்த்திருக்கலாம் நினைக்கிறேன்.

இறுதியாக.., வெறுமனே வாசகர்களை பயமுறுத்தாமல் நம்மைக் கவனமாகவும் இருக்கவும், நம்மைச் சுற்றி இயங்கும் உலகைக் கவனிக்க அதே நேரம் நமக்குள் இயங்கும் நம் நிஜ முகத்தைக் காணச் சொல்லித் தருகிறது இந்த நாவல். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இந்த உலகம் அன்பால் இயங்குகிறது என மிக அழுத்தமா சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். வாசகர்களுக்கு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தற்காக மீண்டும் வாழ்த்துகளும் அன்பும்..!


நூலாசிரியர் குறித்து

லஷ்மி சரவணகுமார்

 மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர்.  ஊர் ஊராக சுற்றி மக்களை படிப்பதையே தனது கல்வியாக நினைக்கும் இவர் பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என பன்முக படைப்புகளைத் தருபவர். இவர் இதுவரை மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

‘மயான காண்டம்’ எனும் குறும்படம் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான சரவணகுமார், ‘கானகன்’ என்ற நாவலுக்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதினை வென்றவராக அறியப்படுகிறார். இவர் எழுதிய உப்பு நாய்கள் என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.

நன்றி : விக்கிபீடியா

நூல் தகவல்:

நூல் :   உப்பு நாய்கள்

ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார் 

வகை :   நாவல்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு :  முதல் பதிப்பு ;  2012 

மறுபதிப்பு : 2016 (டிஸ்கவரி புக் பேலஸ்)

பக்கங்கள் :  280

விலை : ₹  300

கிண்டில் பதிப்பு :

 Courtesy : Lakshmi Saravanakumar  Photo : Vikatan.com

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *