பள்ளிப் படங்கள் தவிரப் பிறவற்றை வாசித்துப் பழகத் தூண்டிய அப்பா மு.குருசாமிக்கும் பெரியவர் குறித்துப் பேசுவதில் பெரு விருப்பம் கொண்டிருந்த அம்மா குரு.ராக்கம்மாளுக்கும் சமர்ப்பணம் என்று இந்த புத்தகம் துவங்குகிறது
ஒருவருடைய சுயசரிதையை முழுமையாக எழுதுவது என்பது சிரமம் வாய்ந்த பணி என்றாலும் வ.உ.சி பெற்று தன்னுடைய பார்வையில் நடு நிலைமையுடனும் அறிவியல் பார்வையுடனும் பல்வேறு தரவுகளுடன் பகுத்தாய்ந்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார் நூலாசிரியர் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. இராஜேந்திரன் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார்கள்.
இந்தியச் சுதந்திரப் போராட்டக் களத்தில் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்ட பேரன்மா. அந்நிய பொருட்களைப் புறக்கணிக்காமல் சுதேசியம் வெற்றி பெற இயலாது என அறைகூவல் விடுத்த விடுதலைப் போராளி குறித்த ஒரு ஆவணத் தொகுப்பு இது என்று ஆய்வாளர் ரங்கையா முருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் ‘கப்பலோட்டிய தமிழன்’ எனச் சிறுவயது முதல் அறிந்திருக்கும் வ.உ.சிதம்பரனார் கப்பல் ஓட்டுவதற்குப் பட்ட பாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பினை இந்த நூல் மூலமாகத் தமிழக மக்களுக்கு ‘நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்’ வழங்குகிறது என்பதில் பெருமிதம் கொள்வதாக பதிப்புரை தந்திருக்கின்றார்கள்.
வாழ்ந்த காலத்திலேயே ஒருவரது வாழ்க்கை வரலாறு தமிழகத்தில் நூலாகக் கொண்டுவரப்பட்டது என்றால் அது பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குத்தான். அத்தகைய பெருமைமிகு ஆத்மாவினுடைய வரலாற்றினை எழுதுவதில் பெருமிதம் கொள்வதாக ஆசிரியர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் தன்னுரை தந்திருக்கின்றார்கள்.
மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. அதனோடு 21 பின் இணைப்புகளையும் இணைத்துத் தொகுத்து புத்தகமாகத் தந்திருக்கின்றார்.
சுதேசி மித்திரனில் துணை ஆசிரியராகவும், சக்கரவர்த்தினியில் ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட பாரதியாரிலிருந்து கட்டுரை துவங்குகிறது. பாரதியார் பத்திரிக்கைத் துறையில் இருப்பதால் வ உ சிக்கு எத்தகைய பெரிய உதவி செய்திருக்கின்றார் என்பதனை நாம் இந்த புத்தகத்தினை வாசிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம். ஊடகத்துறை கைகளில் இருக்கும் பொழுது எத்தகைய மாற்றத்தினை விளைவிக்க இயலும் என்பதனை பாரதி நிரூபித்திருக்கின்றார். வ.உ.சி-யின் கப்பல் வாங்கச் சென்ற நிகழ்வுகளை ஒவ்வொன்றாகப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்து அதற்கென அவர் பட்ட பாட்டினை தெள்ளத் தெளிவாகத் தலையங்கங்களில் எழுதி அந்த சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நொடிந்தபோது அதனை மீட்டெடுக்க அவர் பங்குத்தொகையினை செலுத்த வேண்டி எழுதிய கட்டுரை போன்றவற்றை நாம் இங்கே நிறையக் கட்டுரைகளின் வாயிலாகக் காண முடிகிறது. இரட்டைக் கப்பலோடு வரும் வ.உ.சி-யைப் பாராட்டி ஒரு தாய் பிரசவத்தின் போது இரு குழந்தைகளை ஈன்றெடுத்தாலே எத்தகைய ஆனந்தத்தை அனுபவிப்பாளோ அத்தகைய ஆனந்தத்தினை இந்தியத் தாய் அனுபவிப்பார் என்று புளங்காகிதம் அடைகின்றார் பாரதியார். வ.உ.சி-க்கு பாரதியாரும், பாரதிக்கு வ.உ.சி-யும் கிடைத்தது வரம். இருவரது நட்பும் சுதேச, தேசப்பற்றும் அளவிடற்கரியது.
இந்தியத் தேசிய காங்கிரஸின் வரலாறு ஒரு கட்டுரையாக வருகிறது. யார் இந்த வஉசி? என்று துவங்குவதிலிருந்து கப்பலோட்ட அவர் பட்ட பாட்டினை கட்டுரைகள் தொடர்ந்து விவரித்துக் கொண்டே செல்கிறது. வெறும் கப்பலோட்டிய கதையினை மட்டும் சொல்லாமல் வ.உ.சி-யின் அறப்போராட்டங்கள், சுதேசி கொள்கை, கோரல் மில் தொழிற்சாலைப் போராட்டம் அதைத்தொடர்ந்து திருநெல்வேலி எழுச்சி என அனைத்துமே இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த விவேகானந்தரின் நேரடிச் சீரான ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தரை சந்தித்த பின் ஏற்பட்ட மன மாற்றங்கள் அவரை சுதேசிய கொள்கையில் ஈடுபடத் தூண்டுவதை ஆய்ந்து தந்திருக்கின்ற கட்டுரை சிறப்பு.
தூத்துக்குடி கடலின் சற்று தூரத்திற்கு முன்பே படகில் சென்று அபேதானந்தரையும் பிரம்மானந்தரையும் எதிர்கொண்டு அழைத்து வ.உ.சிதம்பரம் துறைமுகத்திலிருந்து அவர்கள் தங்குமிடம் வரை சீருடை அணிந்த சுதேசி கட்சியினரின் அணிவகுப்போடு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட செய்தி கண்முன்னே காட்சியாக வருகிறது
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ஸ்டீமர்கள் நடத்துவதற்குத் தேவையான மூலதனமும் அதன் வரும்படியும் என்று வரவு செலவு கணக்குகளை முன்னமே திட்டமிட்டு அதற்கான பங்கினை பெற்ற வரலாற்றை ஒரு கட்டுரையை தெளிவாகத் தெரிவிக்கிறது. அந்த பங்குத்தொகை பெற பாம்பேக்கு பயணம் மேற்கொள்ளுதல், கப்பல்கள் வந்த கதை, அதனை இந்தியா பத்திரிக்கை தலையங்கச் செய்தியாகப் படத்துடன் வெளியிட்ட செய்தி, கடலில் ஒரு யுத்தம் எனக் கட்டுரை தொடர்ந்து பேசிக் கொண்டே போகிறது. மிக முக்கியமாகப் பங்காளிகளின் பச்சை துரோகம் எனும் கட்டுரை அந்த பங்குதாரர்கள் எவ்வாறு வ.உ.சி-யை மட்டம் தட்டினார்கள் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்வதோடு அவரை ஒரு ‘மேஸ்திரி’ போன்ற வேலைக்குப் பணித்த அவல நிலையிலும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறது. வ உ சி அவர்கள் சிறைக்குச் சென்ற பின் அது மாலுமி இல்லாத கப்பலாக வீழ்ந்த கதையும் ஒரு கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது.
நூல் : கப்பலோட்டிய கதை ஆசிரியர் : குருசாமி மயில்வாகனன் வகை : சுயசரிதை & வாழ்க்கை வரலாறு வெளியீடு : நீந்தும் மீன்கள் வெளியீட்டகம். வெளியான ஆண்டு : 2021 பக்கங்கள் : 208 விலை : ₹ 250
