(‘கி.ராவின்கதவுசிறுகதையை முன்வைத்து)

ன வரையறை, வட்டார எழுத்தாளர் என ஒரு சிறு அடையாளத்துக்குள் அடைபடும் சுடரொளி அல்ல ‘கி.ரா’ என்றழைக்கப்படும் ‘கி.ராஜநாராயணன்’.

கி.ரா, நாஞ்சில் நாடன், பாவண்ணன், கோணங்கி என இலக்கிய ஆளுமைகள வந்து போன சிவகங்கை ‘அன்னம் பதிப்பகத்தில்’ புத்தகவாசத்தை நுகர்ந்தபடி கதிருடன் இலக்கியத்தின் அன்றைய அலைப் போக்குகளை பேசியபடி இருந்த பால்ய நாட்களில் தன் ஆளுமை அதிசயத்தை எங்களுக்குள் பரவவிட்டவர் கி.ராஜநாராயணன்.

கி.ராவின் கரிசல் காட்டுக் கடுதாசி நூலுக்காக ஆதிமூலம் வரைந்த  மருது சகோதரர்கள், கத்தி ஏந்திய அய்யனார் ஆகிய கோட்டோவியங்கள் வழி எனக்குள் அந்நாட்களில் புகுந்த முதல் இலக்கிய ஆளுமை ‘கி.ரா’ அவர்கள். ஆதிமூலத்தின் கோடுகளுக்குள் செய்த ஒரு தீராத பயணம் கொடுத்த மந்திர சுழிப்பு இன்றும் நீங்க்காமல் என்னுள் நிறை ந்திருப்பதை உணர முடிகிறது.

“The innocent is the person who explaining nothing” – Albert Camus

” In nature nothing exists alone” – Rachel Carson

ஆகிய வரிகளை நினைவு படுத்துபவை ‘கி.ரா’ அவர்களின் எழுத்துக்கள்.

1958ல் ‘கி.ரா’வுக்குள் திறந்து கொண்ட இலக்கிய ஊற்றுக்கண் வழியாக பாயத்தொடங்கிய எழுத்துக்களின் பாய்ச்சல் அவரின் இறுதிகாலம் வரை ஓயவில்லை. ‘கோபல்ல கிராமம்’, கோபல்லபுரத்து மக்கள்’, ‘நாட்டுப்புறக் களஞ்சியங்கள்’ ஆகியவைகள் இவரது சிகரம் தொட்ட படைப்புக்கள். 1990ல் ‘சாகித்திய அகாதெமி’ விருது பெற்றவர். “சரஸ்வதி” எனும் சிற்றிதழில் வெளியான சிறுகதை மூலம் தமிழ் இலக்கிய உலகில் தன் கரிசல் மண்ணின் முகம் காட்டிய சிருஷ்டிகர்த்தா கி.ரா. அவர்கள். கரிசல் மண்ணின் ஒவ்வொரு சுவடுகளையும் தன் சுவாசிப்புக்குள் உள்வாங்கி படைப்பில் பாய்ச்சிய கரிசல் வட்டார இலக்கியத்தின் ‘பிதாமகன்’ : இசை ஞானம் இழையோடிய விவசாயி. கரிசல் வட்டார மண் மற்றும் அம்மண்ணின் மக்கள் குறித்த வாழ்வோட்டங்களை தன் படைப்புகளில் துல்லியமாக காட்சிப்படுத்தியவர் இவர்.

“தமிழ் எழுத்துலகின் பீஷ்மராக ஒரு விருட்சமாகத் திகழும் ‘கி.ரா’ அவர்கள் இந்திய எழுத்தாளராகக் கொண்டாடப்பட வேண்டியவர்” என முன்னோடியும், மூத்த எழுத்தாளருமான இவரைப் புகழாரம் சூட்டுகிறார் இன்றைய நவீன எழுத்தாளர் ‘எஸ்.ராமகிருஷ்ணன்”. கரிசல்காட்டு சம்சாரிகளின் வாழ்வை மிகச்சிறந்த அழகியலுடன் படைப்பாக்க வெளிப்பாடாக கொடுத்த முக்கிய ஆளுமை கி.ரா. கம்பங்காட்டையும், பொக்கை மண்ணையும், பருத்திப்பூவின் அழகையும் சொல்லிச்செல்லும் எழுத்து இவருடையது. நிலத்தை மண்ணுடன் உருவகப்படுத்திப் பார்க்கும் தனித் தன்மை கொண்ட இலக்கிய சாரம் கி.ரா.வுடையது.

பனங்குருத்தை மென்று தாகம் தணிந்தபடி கரிசல் நிலத்தின் சகல பரப்பிலும் ஊர்ந்து கருஞ்சாம்பல் மண்ணின் சாரத்தை உள்வாங்கியவர் கி.ரா. கரிசல் நிலத்தில் தன் ஆனி வேரை ஊன்றி நின்றபடி சகல திசைகளிலும் சல்லி வேரைப் படரவிட்டவர் இந்த கதைசொல்லி. தன் நிலத்தின் வரைபடத்தை முழுமையாக உணர்ந்து அதன் பண்பாட்டையும், மொழியையும், தொன்ம எச்சங்களையும் சித்திரமாக்கிய கலை விருட்சம் ‘கி.ரா’ அவர்கள்.  மார்க்ஸிய அழகியலும், கரிசல் வட்டார மொழியும், குழந்தை கண் கொண்ட உலகியல் பார்வையும் முயங்க்கும் புள்ளியிலிருந்து பிறப்பவை இவரது படைப்புகள். பருத்திப் பூவாக வெடித்துக் கிடக்கும் கரிசல் சம்சாரிகளின் வாழ்வியலின் ஒவ்வொரு துணுக்கையும் தொட்டுத் தீண்டிய படைப்புலகம் இவருடையது.  இவர் தன் படைப்பில் காட்டும் நிறங்களின் எல்லை கரிசல் மண் மற்றும் தமிழ் சமுதாயத்தின் பரப்பையும் தாண்டி சர்வதேச பரிமாணம் காட்டுபவை. கரிசல்காட்டு சம்சாரிகளின் வாய்மொழிக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு படைப்பு உத்வேகத்தில் இயங்கிய சோர்வற்ற கலை உள்ளம் கி.ராவுடையது.

1959ல் ‘தாமரை’ இதழில் வெளியான கி.ராஜ நாராயணின் சிறுகதை “கதவு”.  அப்போது தொடங்கிய குழந்தைகளின் கதவாட்ட மனோபாவத்தை தனக்குள் சுமந்து வாழ்ந்தவர் கி.ரா அவர்கள். எதனையும் தங்கள் விளையாட்டு ஆரவார தளமாகப்பார்க்கும் குழந்தைமையின் அதிதீவிர புனைவு மனோபாவத்தை இக்கதைக்குள் அழகாக கி.ரா நெய்திருப்பதை பார்க்க முடிகிறது. குழந்தைகளின் அக உணர்வோட்டத்தை துல்லியமாக, அவர்களின் மொழி உரையாடலோடு காட்சிபடுத்தப்பட்ட கதைவெளி “கதவு”. சுவரில் கரிக்கோடு கிறுக்கல் சித்திரம் தீட்டும் அதே அலைவோட்டத்தை ஒத்ததுதான் மரக்கதவில் தீப்பெட்டிப் படத்தை ஒட்டிப் பார்க்கும் குழந்தைகளின் உணர்வோட்டம். தீப்பெட்டி படம் ஒட்டப்பட்ட கதவைப் பார்த்து கைதட்டி குதூகலிக்கும் குழந்தைகளோடு கதவு ஆட்டம் மீண்டும் தொடங்குகிறது. கதை நெடுகிலும் பனை ஓலை நரம்புகளில் ஒட்டியிருக்கும் சாமைகளின் அசைவாக குழந்தைகளின் குதூகலமும், கதவு ஆட்டமும் நிறைந்து நிற்கிறது.

சம்சாரிகளின் கஷ்ட ஜீவனம் அடியோட்டமாகக் காட்டப்பட்டுள்ளது; ஆனால் தீர்வை பாக்கிக்காக தலையாரி கதவை கழற்றி எடுத்துப் போவதைக் கூட தங்கள் விளையாட்டின் ஒரு காட்சியாகத்தான் பார்க்கிறார்கள் குழந்தைகள். “பீப்பீ…பீ….பீ” என்று சத்தம் காட்டியும், “திடும்….திடும்… ததிக்குணம்.. ததிக்குண” என்று குதியாட்டம் போட்டு தலையாரியை சுற்றி வரும் குழந்தைகளின் தனி உலகை பார்க்க முடிகிறது கதையோட்டத்தில். தீர்வை பாக்கிக்காக தலையாரி கதவினை எடுத்துப்போன சோகம் மீண்டும் கிடைத்த மற்றொரு தீப்பெட்டிப் படத்தை ஒட்டுவதற்கு இடம் தேடும் போதுதான் குழந்தைகளுக்கு உறைக்கிறது.

பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்து சாவடியில் கதவைப் பார்க்கும் போது இழந்த சொர்க்கம் மீண்டெழுகிறது குழந்தைகளுக்குள்.

கதவு ஆட்டம் நமக்குள் தொடர்கிறது. தீர்வை பாக்கிக்காக தலையாரி கதவினை எடுத்துப் போய்விட்டான். கதவில்லா வீட்டுக்குள் கார்த்திகை மாசத்து வாடை, விஷக்காற்றைப் போல அலை மோதிக் கொண்டே இருக்கிறது. கைக்குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே வருகிறது. ஆனாலும் சாவடிக்கு பின்புறம் கதவு உயிரோடு இருக்கிறது. சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் மிதிபட குழந்தைகள் கதவின் பக்கம் பாய்கிறார்கள். அவர்களின் கைகள் கதவைப் பலமாகப் பற்றிக் கொள்கின்றன. கதவு ஆட்டமும், குழந்தைகளின் குதூகலமும் கி.ராஜநாராயணின் மொழி அடர்த்தியில் தைல பூச்சாக நம் நெஞ்சில் ஒட்டிக் கொள்கிறது. குழந்தைமை சிரிப்போடு நம்முள் மலர்ந்து நிற்கிறார் “கி.ரா” தன் தனித்துவ “கதவு” படைப்பின் உலகு வழியாக. கடுங்கோடையில், தலைக்கு மேல் குடிசையின் முகட்டுக் கம்பில் தலை கீழாகக் கட்டி தொங்கவிடப்பட்ட சேவல் றெக்கையடிப்பில் வரும் காற்றின் சொகத்தைக் கொடுக்கிறது குழந்தைகளின் “கதவு” ஆட்டம்.

 

துரை. அறிவழகன்

 

நூல் தகவல்:

நூல் : கதவு

பிரிவு :  சிறுகதை

ஆசிரியர் :  கி.ராஜநாராயணன்

வெளியீடு :டமருகம், கோவை

வடிவமைப்பு : தரு, கோவை

(கி.ராஜ நாராயணின் மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்வை ஒட்டிய இலவச வெளியீடு : நாள் 21-02-2021)

 

One thought on “பருத்திக்காட்டு பிஞ்சு பூக்களின் சித்திரக்காரர்

  • மிக அருமையான பதிவு…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *