ன்னுடைய முப்பது வயதுக்கு பிறகே எழுதத் துவங்கிய கி.ரா கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக படைப்பூக்க மனநிலையுடனே இருந்தது அறிவுத்தளத்தில் செயல்பட விரும்பும் யாருக்கும் ஒரு முன்னுதாரணம்.

கரிசல் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் இருந்து உலகியலின் அனைத்து உணர்ச்சிகளையும்,  மானுட வாழ்வின் பல்வேறு மனநிலைகளையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய அவரது கதைகளில் இருந்த பிரபஞ்ச தன்மை அவரது படைப்புகளை மேன்மையானதாக்குகிறது.

காம உணர்வை பற்றி பேசுவது என்றாலே திரையிட்டு பேசும் வழக்கத்திற்கு மாறாக அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மனிதர்களுக்கு ‘மேல் பசி போலவேதான் கீழ் பசி’ என்று துணிந்து தன் படைப்புகளில் தொடர்ந்து அதை நாசுக்காகவும்,  அழகியலோடும் பேசிய அற்புதமான படைப்பாளி.

இன்று எழுதும் ஒரு தலைமுறை இயல்புவாத எழுத்தாளர்கள் எல்லோருக்குமே முன்னத்தி ஏராக இருந்தவர். கி.ராவே வட்டார மொழி மீதான காதலை உருவாக்கிய முன்னோடி ‘என் மொழியில் என் மண்ணின்,மக்களின் கதையையும் எழுதலாம்’ என  எழுத முன்வந்த எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.

மக்கள் மொழியில்,எளிதான நேரடியான கதைசொல்லலில் மண்மணம் நிறைந்த வாழ்க்கை தருணங்கள் அவர்தம் எழுத்துக்கள் மூலம் தமிழிலக்கியத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் செல்வங்கள். அவரின் கதைகள் எவ்வளவு நேரடித் தன்மையுடன்,எளிமையானதாக இருப்பினும் அது தரும் வாழ்க்கை தரிசனங்களின் மூலம் அது உயர்ந்த இலக்கிய அந்தஸ்தை அடைகிறது.

“இந்த கரிசல் மண்ணை நான் ருசித்து தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடி வாங்கியிருக்கிறேன் இன்றைக்கும் எனக்கு திகட்டவில்லை இந்த மண் ” கி.ரா வின் இந்த வார்த்தைகளில் அம்மண்ணின் மீதிருக்கும் இணைபிரியா நேசம் வெளிப்படுகிறது. அந்த நேசம்தான் கடைசியாக வெளிவந்த “மிச்ச கதைகள்” தொகுப்பு வரைக்கும் அவரை எழுத உந்தியிருக்கிறது. எந்த மகத்தான எழுத்தாளனும் அவனது எழுத்தின் மூலம் தன் மண்ணை சிருஷ்டித்து காட்டும் உலகம் அற்புதமானது, பெருமையுடைது, நினைவுகளில்  அழிவற்றது. கி.ரா ஆரம்பத்திலிருந்து கரிசல் மண்ணை அப்படித்தான் உலகிற்கு காட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளன் தன் வேரை எழுதும்போது அவனிடமிருந்து காத்திரமான, உயிரோட்டமான படைப்புகள் உருவாகிறது. கோபல்ல கிராமும், கோபல்ல கிராமத்து மக்களும், கிடையும், அந்தமான் நாயக்கரும் நாம் வாழாத வாழ்க்கையை, நாம் காணாத நிலத்தை நமக்கருகில் கொண்டு வந்தன, அவற்றின் மூலம் நம் மண்ணையும், நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையையும் புரிந்துணரச் செய்தன.

அவரது படைப்புகள் கரிசல் மண்ணை, தமிழ் வாழ்வியலை, ஒட்டுமொத்த மானுட நேசத்தை பேசுகிறது என  ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்தடுத்த புரிதல்களை அளித்து, விரிந்த வாசிப்பனுபவத்தையே உள்ளுக்குள் நிகழ்த்தி இருக்கிறது.

கி.ரா கதைகளில் வரும் பல நுட்பமான வரிகள், அதில் இருக்கும் அழகியல், வார்த்தை பிரயோகங்களில்   இருக்கும் எளிமையின் விஸ்தாரம் என அது வாசிப்பனுபவமாக கொடுப்பது ஒரு பேரானந்த கவித்துவ அனுபவத்தை  உதாரணமாக சில:

“பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரைமீது பாலை பீய்ச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல அவளது மெல்லிய குறட்டை ஒலி. அவள் தூங்கும் வைபவத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன்”             – (கன்னிமை) 

 

“வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளைமேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல் கொண்ட யானைமந்தைகள்போல நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டன உச்சியில். கட்டுத்தறியை அறுத்துக் கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது.இரைக்கு சென்றிருந்த அரசமரத்து காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பிவந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி மூலையில் திடாரென்று மின்னல் அந்த பகலிலும் கண்னை வெட்டியது…”               (நிலைநிறுத்தல்) 

 

” அன்று அவர்களின் தொழுக்கதவை ஓங்கி மிதித்து தள்ளித் திறந்து கொண்டு வேகமாய் புகுந்தார். இன்று இவள் மொள்ளத் தொட்டு கதவைத் திறக்க ராகம் பாடிக்கொண்டே திறந்தது”              (இல்லாள்) 

 

இதையெல்லாம் தாண்டி ஒரு தாத்தாவின்  காலடியில் அமர்ந்து அவரை அண்ணாந்து கதை கேட்கும் சிறுவனாகவே அவரது கதைகளை வாசிக்கையில் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவரது எழுத்து உணர்த்துவது ‘இன்னும் அறிய ஏராளம் இருக்கிறது’ என்ற தாகத்தைத்தான்.

வாழ்வில் சந்திக்க வேண்டும் என்று நினைத்த படைப்பாளியின் இறுதி நாளில் கூட அவரை அருகிருந்து பார்க்க இயலாத நிலை மிகுந்த துக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் அவரது கதைக்குள் சென்று அவரது உலகத்தில் அவருடனே பிரவேசிக்க முடியும் என்பது மட்டும் ஆறுதல் அளிக்கிறது!

அவரது இலக்கிய சேவையை பாராட்டும் வண்ணமாக தமிழக அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்எழுத்தாளர் ஒருவருக்கு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.. ஆக அந்த வகையிலும் கீழவை முன்னதாக முன்னுதாரணமாகத் திகழ்கிறார்!

குன்றா படைப்பு மனநிலையோடு வாழ்ந்த பெருவாழ்வு கி.ராவுடையது. அவர் படைப்புகளில் என்றென்றைக்கும் வாழ்வார்.

செந்தில் ஜெகன்நாதன்

எழுதியவர்:

1 thought on “இலக்கிய பிதாமகருக்கு எளிய அஞ்சலி

  1. சிறப்பு.. இவரைப் பற்றி அவ்வளவாக தெரியாது. மேற்கூறிய விமர்சனங்கள் வாயிலாக இனி இவரது நாவல்களை படிப்பதற்கு உதவியாக இருக்கும். மிக்க நன்றி வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர் அவர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *