நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *