புத்தகத்தின் தலைப்பைப் போலவே, தான் இலக்கில்லாமல் சென்ற பயணங்களையும், அதில் பெற்ற அனுபவங்களையும், நம்மோடு பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர். பத்து பேரோடு கூட்டமாக சுற்றுலா என்ற பெயரில் அவசர அவசரமாக இடங்களைப் பார்ப்பது போன்றதல்ல இவரின் பயணம். தனிமையின் துணையோடு,பெரும்பாலும் மழைக் காலங்களில் ஏகாந்தமாக, கையில் சுமை ஏதும் இல்லாமல் அற்புதமான அனுபவமாக இருக்கிறது அவரின் அனைத்து பயணங்களும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இலக்கில்லாமல் சென்ற பல பயணங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். அப்படிச் சென்ற ஒரு சில பயணங்களின் அனுபவ தொகுப்பே இருபத்தியேழு கட்டுரைகளாக விரிந்திருக்கிறது.
ஒரு நாடு தன்னிறைவு பெற்று வல்லரசாக மாற வேண்டுமென்றால், மிக முக்கிய காரணமாக இருக்கவேண்டியது தண்ணீர் வளம்.அப்படியொரு நிறைவைப்பெற்ற கனடாவின், ஒன்டாரியோ ஏரியையும் சிம்கோ ஏரியையும் பார்த்தபொழுது தண்ணீருக்கு சிறகுகள் இருப்பதை உணர்ந்ததாகச் சொல்கிறார். விரிந்து கிடந்த நீர்ப் பரப்பு, குட்டி குட்டியான தீவுகள், மரங்கள் நிறைந்த அந்த தீவுகளுக்குச் செல்லும் படகு போக்குவரத்து, பேரமைதியாக இருக்கும் ஏரி, குளுமை நிறைந்த காற்று அனைத்தையும் அவர் வர்ணிக்கும் விதமே நம் கண்முன்னே ஏரியின் அழகைக் காட்டுகிறது .
தண்ணீரின் கோபத்தையும் சாந்தத்தையும் அறிந்திருந்த காரணத்தினாலேயே அங்கிருந்த பழங்குடி மக்கள் நீரை கடவுளாகவே வணங்குகிறார்கள். ஏரிகளுக்கு சிறகுகள் இருப்பதாகவும் அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பறந்து போய்விடும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்த ஏரிகளை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜசிங்கமங்கலம் என்றொரு ஊரில் உள்ள கண்மாயை குறிப்பிடுகிறார். நாரைகள் பறந்து கடக்க முடியாதபடி நாற்பத்தி எட்டு மடைகள் உள்ளதாம் அந்தக் கண்மாயில்.கனடாவில் இருந்த பல ஆயிரம் ஏரிகளுக்கு பழங்குடியின மக்கள்தான் பெயர் வைத்திருக்கின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள் அதனை மாற்றி அவர்கள் உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள் பெயர்களையெல்லாம் சூட்டியிருப்பதை வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.
மதுரையைச் சுற்றியுள்ள சமண குகைத் தளங்களைப் பார்த்ததைப் பற்றியே அடுத்த கட்டுரை. குன்னத்தூர் மலைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சமணமுனிவர்கள் வாழ்ந்ததற்கான சமணப் படுகைகள் இருக்கிறதாம். அங்கிருந்த தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டுகள், சமணமதம் தமிழ் மொழியின் வளமைக்குச் சிறப்பு சேர்த்ததைப் பற்றிய தகவல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல மலையின் பாதி, வெடி வைத்துத் தகர்க்கப்பட்டு கிரானைட் கற்களுக்காக விற்கப்பட்டிருப்பதையும்
வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். மனிதனின் சுயநலத்திற்காக இயற்கையைச் சுரண்டி அழிப்பதன் விளைவை நாம் சந்தித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் பகிர்ந்திருக்கிறார்.
கொனார்க் சூரியக்கோவில்,காலம் பற்றிய இந்தியர்களின் பார்வை நுட்பத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக குறிப்பிடுகிறார். நெருங்கிச் சென்று பார்க்கும் போது அதன் விஸ்வரூபத்தில், நீர்வீழ்ச்சியின் அழகில் மயங்கி நிற்கும் சிறுவனைப் போன்ற உணர்வு இருந்ததாம்.தொழு நோயிலிருந்து விடுபடுவதற்கான இடம் என்று நம்பப்படுவதால் வழியோரமெங்கும் தொழுநோயாளிகள் அதிகம் உள்ளதைக் குறிப்பிடுகிறார். இந்தக் கோவிலின் சிற்பங்களையும் அழகையும் பார்க்க ஒரு மாதம் போதாது என்கிறார். போகிறபோக்கில் கண்டு செல்வது எதையும் தெரிந்துகொள்ள முடியாத வெறும் பார்வையாகவே மட்டுமே இருக்கும்.
டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் ஸ்ட்ராட் போர்டில் நடத்தப்படும் சேக்ஸ்பியரின் நாடகங்கள், நவீன ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் பழைய வடிவத்திலேயே நிகழ்த்தப்படுகிறது.அந்த நாடகத்தைக் காணச் சென்ற அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார். அங்கே நாடகத்திற்கு மக்கள் தந்த வரவேற்பையும், தமிழகத்தில் நாடகத்தின் நிலையையும் வருத்தத்தோடு ஒப்பிட்டிருக்கிறார். மிகுந்த ரசிகர்களோடு அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே இருக்கிறதாம் எப்பொழுதும்.
ஹரித்வாருக்குச் சென்ற மழைக்காலப் பயணத்தைப் பற்றியது அடுத்த கட்டுரை. கோடை காலத்தில் குறுகி ஓடும் கங்கை,மழைக்காலத்தில் கரைபுரண்டு ஓடும் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்கிறார். அடுத்து, ஒரிசாவின் கோரபுட்டின் அருகிலுள்ள பழங்குடியினரின் வாழ்க்கை முறையும், அவர்களின் பழக்கவழக்கங்கள் பண்பாடு, அவர்கள் இயற்கையாக விளைவிக்கும் பொருட்கள், அதை சந்தைப்படுத்தும் முறை அந்த சந்தைக்குத் தான் சென்ற அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
சங்க இலக்கியங்களில் பெருமை பெற்ற கொற்கை, பழமையான கடற்கரைக்கும் துறைமுகத்திற்கும் பெயர் பெற்றது. ஆனால் இன்றோ கடல் பின்வாங்கி வெறும் மணல் பரப்பாக காட்சியளிக்கிறது. பழமையான வரலாற்று சின்னங்கள் எதுவுமே இல்லை. இரண்டாயிரம் வருடப் பழமை மிக்க வன்னி மரம் ஒன்று மட்டும் பழமையைப் பறைசாற்றி நிற்கிறதாம். மரத்தைப் பாதுகாக்க அதை புனிதமாக்கி விடுவது என்ற வழி இங்கேயும் நடந்திருக்கிறது.கடற்கரைப் பகுதியாக இருந்தாலும் அதன் வளமை இன்றும் மாறாமல் இருப்பதையும் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரத்தைப் படித்தபடியே அதில் வரும் ஒவ்வொரு ஊரையும் கடந்து கொடும்பாளூரை அடைந்திருக்கிறார். மூவர் கோவில் என்று அழைக்கப்படும் ஒரு கோவிலும் அதில் இருக்கும் சரித்திரக் குறிப்புகள் பற்றியும் கூறியிருக்கிறார். வேளிர் மன்னர்கள் பற்றிய கல்வெட்டுகள், கோவில் உருவானதற்கான வரலாறு, அங்கிருந்த சிற்பக்கலை, சாலையோரம் மிகப்பெரிய நந்தி ஒன்று தனியாக இருந்தது, இப்படி நிறையத் தகவல்கள்.
அடுத்து, பாரி ஆட்சி புரிந்த பறம்புமலை. பறம்பைக் கண்டவுடன் கபிலர் பாரியுடன் கொண்டிருந்த நட்பு, பறம்பு மலையின் வளம், மக்களின் வாழ்க்கைமுறை, பாரி கொல்லப்பட்டதைப் பற்றிய கபிலரின் நெஞ்சை உருக்கும் பாடல்கள், பாரி மகளிருக்கு கபிலர் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில், வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த கதை இப்படி அனைத்தையும் நினைவு கூர்கிறார்.ஓரு இடம் அதனுள் எத்தனை வரலாற்றை ஒளித்து வைத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள “கபிலர் குன்று” இருக்கும் இடத்திற்கும் சென்று வந்திருக்கிறார் ஆசிரியர்.
புவனேஸ்வரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தௌலி, அங்கிருக்கும் தயா ஆற்றங்கரையில் நடந்ததுதான் புகழ்பெற்ற கலிங்கப்போர். அசோகரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய போர்.அங்கிருக்கும் சிறிய குன்றுக்கு செல்லும் வழியில் உள்ள பாறைகளில் எல்லாம் அசோகரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் காணப்படும் நீதிகள் அனைத்தும், எல்லா அரசுக்கும் மக்களுக்கும் பொதுவானவையாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். அங்கிருக்கும் சாந்தி ஸ்தூபியில் கலிங்கப்போரை நினைவுகூறும் வகையில் இன்றும் கலிங்க மஹோத்ஸவம் என்ற விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நிறைய வாகனங்களில் பயணித்திருந்தாலும் கூட்ஸ் வண்டியில் பயணிக்க வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்ற, நண்பன் உதவியோடு பல நாட்கள் காத்திருந்து சென்ற பயணத்தையும் பகிர்ந்திருக்கிறார்.அதுவும் கையில் புத்தகத்தோடு வாசித்தபடியே சென்ற பயணம். புதையுண்ட தனுஷ்கோடி, அழிந்த நகரங்களை காணும்போது வரும் பதற்றம் தனுஷ்கோடிக்கு செல்லும்போதும் இருப்பதைக் கூறுகிறார். கடற்கரையில் கிடந்த ஒரு கல், பல நினைவுகளைக் கிளறுகிறது. பெரும் அழிவின் மிச்சமாக இருக்கும் இது, இடிந்த இரயில் நிலையமா, தேவாலயமா,வீடா என்ற கற்பனையிலேயே நேரம் போவது தெரியாமல் கடற்கரையில் அமர்ந்திருந்ததைக் கூறுகிறார்.
நயாகராவின் முன்னால் பிரமித்து நின்றபோது, தன்னை மிகச்சிறியதாக உணர்ந்ததைக் குறிப்பிடுகிறார். சிறு மழையின் சாரலில்,வெயிலில் காலநிலைக்குத் தகுந்தபடி நயாகராவைக் கண்ட அவரின் அனுபவத்தை, சந்தோஷத்தை நமக்கும் கடத்தியிருக்கிறார். ஒற்றை நாணயத்தை நயாகராவில் எறிந்து தன் வரவை உறுதிப்படுத்தி மகிழ்ந்திருக்கிறார். சிங்கப்பூர், அதன் முன்னேற்றம், ஹம்பியில் தான்கண்ட நிழல்களைக்கூட பல நினைவுகளாகப் பகிர்ந்திருக்கிறார். அவர் சென்ற ஒவ்வொரு இடத்தையும் நாம் பார்வையிடும் சமயத்தில் இந்த வர்ணனைகளும் சிறப்பும் நினைவில் வராமல் இருக்காது. சுவாரசியம் நிறைந்த, அவசியம் வாசிக்க வேண்டிய பயணக்கட்டுரைகள் நிறைந்த தொகுப்பு.
சுமி
நூல்: | இலக்கற்ற பயணி |
பிரிவு : | பயணக் கட்டுரைகள் |
ஆசிரியர்: | எஸ்.ராமகிருஷ்ணன் |
வெளியீடு: | தேசாந்திரி பதிப்பகம் |
வெளியான ஆண்டு: | 2017 - முதல் பதிப்பு |
பக்கங்கள்: | 184 |
விலை: | ₹ 175 |
அமெசானில் நூலைப் பெற: |