ரா ஹாசி பூ என்றால் என்ன என்று என்னைக் கேட்டால், தலையைச் சொறிந்து பார்த்தாலும் அதன் அர்த்தம் விளங்கவில்லை என்று தான் சொல்வேன்.  உங்களுக்கு புரிகிறதா? வலைத் தளத்திலோ அல்லது புத்தகங்களை வாசிப்பவர்களுக்கோ புரிய சந்தர்ப்பம் உண்டு. நண்பர்களே, அதன் விளக்கம் ஒரு விசித்திரமானதாக எனக்குப் படுகிறது. பின்நாட்களில் அதன் உண்மை வெளிச்சமாகிறதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்வதில் ஆச்சரியம் இருக்காது. உங்கள் வயிற்றை சுமார் 80-சதவீதம் நிரப்புங்கள் என்பதுதான். நீண்ட ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை உண்மைகளில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர் இந்தப் புத்தகத்தை எழுதிய  இரண்டு ஆசிரியர்களும். அப்படியானால் அந்த 80 சதவீதத்தை எந்த மீட்டர் மூலம் அளக்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். நம் வயிறு கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது என்று நாம் உணரும்போது சாப்பிடுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கூற்று உணர்த்தும் செய்தி ஆகும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய இரு ஆசிரியர்களும் ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர்கள். அதில் ஹெக்டர் கார்சியா 10 வருடங்களுக்கு மேலாக ஜப்பானில் வாழ்ந்து வரும் ஒரு உளவியல் ஆராய்ச்சியாளர். ஆரம்ப காலத்தில் இவர் ஒரு கணினிப் பொறியாளர். பின்னாளில் தன் திசையை மாற்றி ஆராய்ச்சி மற்றும் எழுத்தாளன் ஆனார். பிரான்செஸ்க் மிராயியஸ் பலநூல்களை எழுதி சர்வதேச புகழ் பெற்றவர். இருவரும் ஜப்பானில் சந்தித்தபோது இதுபற்றி விவாதித்து, இந்த இக்கிகய்  தத்துவம் பற்றி மேற்கு உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தால் என்ன என்ற சிந்தனைக்கு பதில் தரும் முகமாக எழுதப்பட்டது இப்புத்தகம்.

இக்கிகய் என்றால் என்ன? ஜப்பானிய மொழியில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது, தரும் மகிழ்ச்சி என்று பொருள் படும். நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிவந்த விக்டர் ஃபிராங்கெல் கண்டுபிடித்த லோகோசிகிச்சையயைப் போன்றது தான் என்றாலும் அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டதுதான் இக்கிகய் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.

நீண்ட கால வாழ்க்கைக்கு பலவிதமான வடிவங்களில் பல செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மகான்கள் கூறிய எல்லா அறிவுகளையும் தாண்டி, ஒரு வித்தியாசமான முறையில் தங்கள் வாழ்க்கை முறைகளை ஜப்பானில் உள்ள ஓக்கினாவா தீவில்உள்ள மக்கள் இறுதி நாள் வரை சுறுசுறுப்பாக இருங்கள்  என்ற தத்துவம் உங்களை மிகவும் ஆச்சரியப்படவைக்கும். அதே வேளையில், அதன் உண்மையை இப் புத்தகம் வாசித்து முடிந்ததும் உங்கள் மனதிலும், எண்ண அலைகளிலும் நிட்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் இந்ந நூலில் தமிழ் மொழியாக்கம் PSV குமாரசாமியும் மிக அற்புதமாக, வாசிப்போருக்கு அலுப்புத் தட்டாத விதத்தில் சொற்களால் வாசிப்பாளர்களை கவர்ந்திருப்பதும் இங்கு பாராட்டத்தக்கது. அவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பல விதமான தத்துவங்கள், கருத்துக்கள், எண்ணங்கள், திறமைகள், முன் உதாரணங்கள், வழிகாட்டல்கள் இருந்தபோதும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு இக்கிகய் யைத் தெரிவு செய்து அதனை வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கடைப்பிடித்து வந்தால், நாம் நீண்ட ஆரோக்கியத்துடன் கூடிய, நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்றதாக நிட்சயம் அமையும் என்பதனை ஓக்கினாவாமக்கள் எங்களுக்குத் தரும் அருமையா செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இக்கிகய் யின் தத்துவங்களின் விளக்க வரைபடம் கீழ்கண்டவற்றைச் சுட்டுகின்றன.

 1. நீங்கள் மிகவும் நேசிக்கிற ஒன்று
 2. நீங்கள் மிகுந்த திறமை பெற்றிருக்கின்ற ஒன்று
 3. உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒன்று .
 4. உலகிற்குத் தேவையான ஒன்று

இவற்றுடன் தொடர்ந்து செல்லும் நமது பணியில்

 1. ஆழ்விருப்பம்
 2. இலட்சியப் பணி
 3. வாழ்க்கைத் தொழில்
 4. தொழில் முறை வேலை

இவற்றுடன் தொடர்ந்து பயணித்தால் நாம் எமது இலக்கை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக ஆசிரியர்கள் தமது ஆராய்ச்சியின் மூலம் நீரூபிக்கிறார்கள்.

இக்கிகய் மூலம் நாம் ஆரோக்கியமாக 100 வயதையும் தாண்டி எப்படி வாழலாம் என்ற கோட்பாடே முழுக்க முழுக்க பரவிக் கிடப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எப்படி சுகமாக இருக்கிறீர்களா? என்று நண்பன் ஒருவரைக் கேட்டால், அவரின் பதில் வயசு போகப் போக எல்லா மூட்டுகளும் நோத்தான்.இது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லும் பதிலை போட்டு உடைக்கிறது இந்த இக்கிகய்தத்துவம்.

உலகிலுள்ள 5 நீல மண்டலங்கள்இல் 1 வது இடத்தில் ஜப்பான் ஓக்கினாவா இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீல மண்டலங்கள் வரிசையில்

 1. ஜப்பானில் ஓக்கினாவா தீவு
 2. இத்தாலியில் சார்டீனியா தீவு
 3. அமெரிக்காவில் லோமா லின்டா, கலிபோர்னியா
 4. கோஸ்டா ரிக்காவில் நிக்கோயா தீபகற்பம்
 5. கிறீஸில் இக்காரியா தீவு

இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை இவர்கள் நேரில் சென்று, அவர்களுடன் ஒன்றாகப் பயணித்து, அவர்களுடைய உணவு முறை, உடற்பயிற்சி முறை, இயற்கையுடன் இயைந்து இயல்பாய் வாழும் முறை, அன்றாடம் செய்யும் வேலைகள், சக மனிதர்களுடன் பழகும் விதம், போன்ற பல அரிய தகவல்களை அறிய வேண்டும் என்றால் நூலை வாசியுங்கள். ஆச்சரியப்படுவீர்கள்.

ஓக்கினாவாவில் உள்ள மக்களிடம் இந்த ஆரோக்கிய வளர்ச்சிக்கு மற்றுமொரு முக்கிய காரணம், அங்கு வளங்களுக்குப் பற்றாக்குறை உண்டு என்பதையும், அதனால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அம்மக்களுக்கு இருக்கிறது என்பதாகும்.

மேலும் அவர்களது நீ்ண்ட கால வாழ்க்கைக்கு, உணவு பரிமாறப்படும் முறை, உணவு உட்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய நிலை பற்றி மிகத்தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

மொவாய் என்று அழைக்கப்படுகின்ற ஒரு நட்பு வட்டாரத்தின் மூலம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முறையும் மிக முக்கியமான ஒன்று. அன்றாட சில நிமிட உடற்பயிற்சியம், தினமும் மூளைக்கு பயிற்சி கொடுப்பதும் நீ்ண்ட ஆயுளுக்கான அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போது நமக்கு சில வேளைகளில் கடுமையானதாக இருக்கும். நாளடைவில் அது பழக்கப்பட்டு நமது எண்ணங்களுடன் சேர்ந்து பயணிக்கின்றது. அதே போல் புதிய நல்ல நண்பர்கள், புதிய விளையாட்டுக்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றின் மூலம் இந்த மூப்படையும் செயல் எப்படித் தாமதப்படுத்துகின்றன என்பதை வாசிப்பின் மூலம் அறியலாம்.

மேலும், மன அழுத்தம் நீண்ட ஆயுளுக்கு எதிரி என்பதன் விளக்கம் மிக அருமையாக தந்திருக்கும் ஆசிரியர், அது எப்படி ஒரு மனிதனை ஆட்டிப் படைக்கிறது,மன அழுத்தத்திற்கும் நமது உடம்பின் தோல் பகுதிக்கும் நிறைய தொடர்பு இருப்பதையும், அதிலிருந்து விடுபடுவது மிக சுலபமானது என்றும், அதற்கு குகை வாசிகளுக்கும் நவீன மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார். அதனால் மனித ஹார்மோன்களின் தொழிற்பாடுகள் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறியலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் விரைவில் மூப்படைய வைக்கும் என்கிற செய்தியைப் படித்துவிட்டு, அதிலிருந்து விடுபடுவது மிக சுலபமானது என்றும் எழுதியுள்ளார். சரியான முறையில் நித்திரைஅவசியம் என்றும் அதனால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை வாசித்து ஆச்சரியம் அடைந்தேன். எவ்வளவு மனக் கஷ்டங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் அதனை சரியான முறையில் கையாள்வது பற்றி வாசிக்கும் போது, நாமும் ஏன் அப்படி முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது .

இங்கே லோகோ சிகிச்சை என்றால் என்ன? உளப்பகுப்பாய்வுசிகிச்சை என்றால் என்ன? இவற்றுக்குமிடையேயான வித்தியாசம், அதனை எப்படிக் கையாள்வது, அது பற்றி விக்டர் ஃபிராங்கெல்  அவரது அறிவு பூர்வமான விளக்கங்கள், மற்றும் ஹிட்லரின் வதைமுகாம் பற்றிய சில அனுபவம், போன்ற பல அரிய தகவல்களும் அறியலாம். இவருடைய சிகிச்சை முறையும் கிட்டத்தட்ட சிக்மண்ட் பிராயட்  இன் சிகிச்சை போல் எனக்குத் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடுவதன் மூலமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று கூறியுள்ளார்.

இதனை விட மோரிட்டோ என்ற ஜப்பான் சிகிச்சை முறைக்கும், மேற்கத்திய உளவியல் முறைக்கும் உள்ள வேறுபாட்டை விரிவாக ஆய்வு செய்து எழுதுகிறார். மேற்கத்திய சிகிச்சை முறை, நோயாளிகளின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அல்லது திருத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் மோரிட்டா சிகிச்சை முறை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதைவிட அவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொடுக்கிறது

எல்லாம் எழுதி விட்டால் வாசிக்கும் உங்கள் ஊக்கத்தை கத்திரிக் கோலால் வெட்டுவது போன்று இருக்கும். இருந்தும், ஒரு செய்தி கூற விரும்புகிறேன்.

நீங்கள் செய்யும் அனைத்திலும் திளைத்திருக்கும் நிலையை அடைதல். இது பற்றி ஆசிரியர்கள் அதி நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் .  இத்துடன் சில பிரபல்யமானவர்கள் ஜப்பான் நாட்டை ஏன் நேசிக்கிறார்கள் என்பது பற்றி தந்துள்ள செய்திகள், தியானம், சடங்குகள். அவர்களுடைய பசுந்தேனீர் ஷிகுவா பழம், சமூக வாழ்க்கை, றேடியோ தாய்ஸோ இப்படி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

கண்டிப்பாக எல்லோரும் உள்வாங்கி வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம்.. மீள் வாசிப்பு செய்வது மிகவும் சிறந்தது என சொல்வேன்.


பொன் விஜி

– சுவிஸ்

நூல் தகவல்:
நூல்: இக்கிகய்
பிரிவு : கட்டுரைகள் – சுயமுன்னேற்றம்
ஆசிரியர்: பிரான்செஸ்க் மிராயியஸ்  & ஹெக்டர் கார்சியா
தமிழில் PSV குமாரசாமி
வெளியீடு: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
வெளியான ஆண்டு  2020
விலை: ₹ 350
 பக்கங்கள் 206

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *