யிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு . மதுரையில் கி.ரா வின் மணி விழாவை, மிகச் சிறப்பாகக் கொண்டாடினார் கவிஞர்.மீரா.

பண முடிப்பெல்லாம் கொடுத்தார். மதுரை டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் காலேஜ் ஹவுஸின் முதல் மாடியில் நிகழ்ச்சி நடைபெற்றது . இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அன்றைய கால கட்டத்தில் காலேஜ் ஹவுஸ் மதுரையின் மதிப்பு மிக்க அடையாளங்களில் ஒன்று.

நான் பணியாற்றிக் கொண்டிருந்த வங்கிக் கிளைக்கே அழைப்பிதழ் வந்திருந்தது . என் புத்தகக் கிறுக்கு மீராவுடன் எனக்கு ஒரு நெருக்கத்தை உண்டாக்கி இருந்தது. கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள் என்னும் தனது புத்தகத்தின் வழியே ஏற்கெனவே எங்கள் மனதில் கொலு வீற்றிருந்தார் மீரா.

மதுரை வந்து , திடீர் நகரில் இருந்த மோட்டார் யூனியன் அலுவலகம் சென்று , தோழர் சி.எஸ் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஆசான் எஸ்.ஏ. பி விரைந்து உள்ளே வந்தார்.

அவர் அப்போது ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்டத்தின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர். ஐவகை நிலங்களும் கொண்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய சமவெளி இராமநாதபுரம் மாவட்டம்.

என்றைக்கு எங்கே இருப்பார், எந்தப் பணியில் இருப்பார் என்று அறிந்து கொள்ள இயலாத இயக்கமாக இருந்தவர். எழுந்து வணங்கி வரவேற்றேன்.

“என்னா bk …? “ என்றார்.

“கி.ரா மணி விழா” என்றேன்.

“அதற்குத் தான் நானும் ஓடி வந்தேன்.” என்றார்.

உடை மாற்றிக் கொள்ள பக்கத்தில் இருந்த வீட்டுக்குப் போனார். உடன் அழைத்தார்.  அந்த வீடு என்பது, உச்சியில் இருந்த ஒற்றை அறை . பதினெட்டுப் படிகளுக்கும் மேலே இருந்தது . ஒருவர் இறங்கும் போது இன்னொருவர் ஏறி வர முடியாது. ரொம்பக் குறுகலான “மரியாதையான” வீடு. பத்து நிமிடத்தில் புறப்பட்டோம். சிறந்த ஆனால் அளவு குறைவான தேநீர் தந்து மதினி உபசரித்தார்கள். அந்தச் சின்னஞ்சிறு வீட்டுக்கு எப்போது போனாலும் மதினி சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள்.  அவர் படிக்க ஏதாவது புத்தகம் கொடுப்பார்.

விரைந்து நடந்தே காலேஜ் ஹவுஸ் வந்தோம். மீரா மனமார வரவேற்றார். நிறையப் பேசினார்கள்.  பாராட்டினார்கள். பெரும்பாலும் அரங்கு முழுவதும் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் தான் நிறைந்து இருந்தார்கள். CPI தோழர்களுக்கும் குறைவில்லை. CPM தோழர்கள், த.மு.எ.ச தோழர்கள் ரொம்பக் குறைவாகத் தான் இருந்தோம்.

எல்லோரும் துண்டு போட்டு, மாலை போட்டு, புத்தகம் கொடுத்து கி.ராவைக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.

சட்டென எஸ்.ஏ.பி கேட்டார்.

“அட என்னப்பா … ஒண்ணுமே வாங்காம வெறுங்கைய வீசிட்டு வந்துட்டோம் … ஓடிப் போயி ஒரு துண்டாவது வாங்கிட்டு வரணுமே” என்று பையில் இருந்து காசு எடுத்தார் .

காசு இருக்கு எஸ்.ஏ.பி … என்ன வாங்குறதுன்னு தான் தெரியல “என்றேன்.

அட … மரியாதைக்கு எதை வாங்குனா என்ன … எல்லாரும் போறதுக்குள்ள வாங்கணும் “என்றார்.

எதை வாங்குனா என்ன ? என்ற சொல் பளிச்சிட்டது. ஓடிப்போய் ஒரு பரிசை வாங்கிக் கொண்டு வந்து எஸ்.ஏ.பியிடம் சொன்னேன் . சபாஷ் என்றார்.

ஒலிபெருக்கியில் பேரைச் சொல்லி, ரெண்டு வார்த்தை பேசி வரிசையாக மரியாதை செய்து கொண்டு இருந்தார்கள்.

கொஞ்சம் கூட்டம் வடியக் காத்திருந்தோம். வடிந்தது.

நான் எழுந்து ஒலிபெருக்கியை நோக்கிப் போனேன்.

எஸ்.ஏ.பி பரிசைக் கையில் எடுத்துக் கொண்டு கி.ராவை நோக்கிப் போனார்.

அம்மணமாய்க் கிடந்த கரிசல் இலக்கியத்திற்கு வேட்டி கட்டி விட்ட எங்க நைனாவுக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு வேட்டி அணிவிக்கிறார் தோழர் எஸ்.ஏ.பி ” என்று அறிவித்தேன்.

கூட்டம் ஆரவாரம் செய்தது.

கி.ரா எழுந்து நின்றார்.

எட்டு முழ வேட்டியை விரித்து அழகாகவும் அம்சமாகவும் அணிவித்தார் எஸ்.ஏ.பி.

குனிந்து மகிழ்ந்து அதைக் கி.ரா ஏற்றுக்கொண்டு நிமிர்ந்த போது கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

அடேங்கப்பா … எம்புட்டுப் பெரிய பரிசு அது ” என்று …சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை இடைசெவலில் அவரது வீட்டில் ஒரு மதிய உணவு உண்ணுகிற போது குறிப்பிட்டார். (அது தனிக்கதை) அப்போதும் கண்கள் சிறு ஈரங்கொண்டு மினுமினுத்ததை நான் அறிவேன்.

நூறு வயது இருந்திருக்கலாமே என்று நண்பர்கள் வருந்துகிறார்கள். எனக்கும் அந்த வருத்தம் உண்டு.

ஆனால், உங்க மொழியில் சொல்வதானால் ” நொம்பலப் படாம போயிரணும் … அது முக்கியம் ” என்பீர்கள்.

நைனா .. நீங்க நொம்பலப்படல

நொம்பலப் படுத்தல …

கதவு திறந்திருக்கிறது .

போயிட்டு வாங்க நைனா…


பாரதி கிருஷ்ணகுமார்

எழுத்தாளர்

குறிப்பு: கி.ராஜநாராயணின்  அட்டகாசமான ஒரு சிறுகதை “வேட்டி” 1972- இல் வெளியானது.
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய முகநூல் பதிவு இது.  கி.ரா குறித்தான நினைவுக் குறிப்பாக உள்ள இப்பதிவு விமர்சனம் இணையதளத்தின் ”கி.ரா- புகழஞ்சலி” பகுதிக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுமதி அளித்த எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார் அவர்களுக்கு விமர்சனம் இணையதளத்தின் நன்றி !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *