தொண்ணூறுகளின் கடைசி . ஆண்டு துல்லியமாக நினைவிலில்லை. தருமபுரி ஒகேனக்கல்லில் , தங்கர் பச்சான் முன்னெடுப்பில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதை பயிலரங்கு ஒன்று நடந்தது. பிரம்மராஜன், ஆர். சிவக்குமார் இருவரும் அதனை ஒருங்கிணைத்து நடத்தினர். அவ்வரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கி.ரா வந்திருந்தார். அதன் பங்கேற்பாளராக வந்திருந்த பலரும் அப்போதுதான் வாசிக்கவும் அதன் தொடர்ச்சியாக எழுதவும் தொடங்கியிருந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் நவீன இலக்கியம் குறித்த தோராயமான ஒரு புரிதலை உருவாக்குவது என்பதே அப் பயிலரங்கின் நோக்கம்.

அவ்விதமாக நவீன இலக்கியத்தை குறித்து அறிமுகப்படுத்தி சிறுகதை எழுதுவதற்கான உத்திகள், அதன் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையேயான உறவு, அதில் இயல்பாகக் கூடிவரவேண்டிய ஒருமை, இடம்பெறும் பாத்திரங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் நடுவிலான முரண் என்பன பற்றியெல்லாம், சிலர் ஆழமாக வகுப்பெடுத்தபோது அரங்கில் ஒரு வகை மெளனமே நிலவியது. அது பேசுபொருளுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் நடுவிலிருந்த இடைவெளியை மறைமுகமாக உணர்த்துவதாக இருந்தது.

பிறகு கி.ரா பேச அழைக்கப்பட்டார். “யார் வேண்டுமானாலும் எழுதலாம் ! உனக்கு எது தெரியுமோ, என்ன தோணுதோ அதை நீ எழுது. அதுதான் உன் எழுத்து. எழுத எழுததான் எழுத்து படிந்து வரும். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத நான் அப்படிதான் எழுத ஆரம்பித்தேன்.” என்று ஆரம்பித்து தனது எழுத்து அனுபவங்களை அவருக்கேயுரிய அந்த நயப் பாங்கோடு பேசிக்கொண்டு போனார். பிறகுதான், அரங்கத்தில் இறுக்கம் தளர்ந்து உரையாடல் தொடங்கியது.

நடுவில் எதைத்தொட்டோ ஒரு பேச்சு வந்தபோது “ஜி. நாகராஜன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். ஏனோ தெரியவில்லை அவர் எழுதிய கதைகளில் குழந்தைகள் எதுவும் வரவே இல்லை.” என்றார். எனக்கு அப்போது முதிரா வயது. அந்த வயதிற்கே உரிய துடுக்குத் தனத்துடன் அவரைப் பார்த்து “ஒரு எழுத்தாளன் எதை எழுதியிருக்கிறானோ அதை வைத்துதான் அவனை மதிப்பிட வேண்டுமே தவிர, அவன் எதையெல்லாம் எழுதவில்லை என்று பார்த்து குறை சொல்லக்கூடாது.  ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எதை எழுதுவது என்பது குறித்து அவனுக்கு தனிப்பட்டத் தேர்வு இருக்கும்தானே?” என்று நான் அதுவரை படித்ததை வைத்துக் கேட்டேன். லேசானதொரு புன்னகையோடு என்னை நோக்கியவர் “தம்பி சொல்றதும் ஒரு வகையில் சரிதான்!” என்றவராக தன்பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

மதிய உணவிற்கு பிந்திய ஒய்வின் போது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நானும் அவரது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராக என்னைப் பார்த்து “நீங்களெல்லாம் நாகராஜனைப் பார்த்திருக்க மாட்டீர்கள்!” என்றார்.

” புகைப் படத்தில் பார்த்திருக்கிறேன்” தயங்கிபடி சொன்னேன்.

“நேரில் பார்த்திருக்கணும் அப்படியொரு ஆகிருதி! முறுக்கிவிட்ட மீசையும் மூட்டுக்கு மேல சுருட்டிவிட்ட சட்டைக் கையுமா அப்படியொரு கம்பீரம்! எல்லாம் வேண்டாத பழக்க, வழக்கத்தால ஒண்ணுமில்லாப் போச்சு. எனக்கு சிநேகிதம்தான். கடைசியா வீட்டுக்கு வந்தப்போ சாப்பிடச் சொன்னேன். ‘இன்னிக்கு இதுதான் என்னோட சாப்பாடுன்னு’ பையிலிருந்து ஒரு லட்டை எடுத்துக் காமிச்சாரு ! சாயங்காலம் திரும்பிப் போற மட்டும் அதைத்தான் ஒவ்வொரு பூந்தியா உதுத்து தின்னுக்கிட்டிருந்தார். பார்க்கவே அவ்வளவு கஷ்டமா இருந்தது. எப்பேர்பட்ட புத்தி, எவ்வளவு நுணுக்கம் ? எல்லாமிருந்தும் எதுவோ கோணலாப் போச்சு! ” சற்று நேரம் பேசாமல் எட்ட எங்கோ பார்த்தவாறிருந்தார். “வாழ்க்கையில அல்லாதது பொல்லாததுன்னு நாலுந்தான் இருக்கும். திகைச்சி போய் நின்னுடாம , நாமதான் நல்லதுன்னு ஒன்னை வம்படியா பிடிச்சுக்கிட்டு வழிகண்டு மேல ஏறி வரணும்.” எங்களைப் பார்த்து சிரித்தவாறே சொன்னார்.


க.மோகனரங்கன்

கவிஞர் | எழுத்தாளர் | மொழிபெயர்ப்பாளர்

 

எழுத்தாளர் க.மோகனரங்கன் எழுதிய முகநூல் பதிவு இது.  கி.ரா குறித்தான நினைவுக் குறிப்பாக உள்ள இப்பதிவு விமர்சனம் இணையதளத்தின் ”கி.ரா- புகழஞ்சலி” பகுதிக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுமதி அளித்த எழுத்தாளர் க.மோகனரங்கன் அவர்களுக்கு விமர்சனம் இணையதளத்தின் நன்றி !

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *