புவியில் மனித இருப்பின் உயிர்நாடியாகக் காடுகளும், சுற்றுச்சூழலும் விளங்குகின்றன. இவற்றுக்கும், மனித உயிரினங்களுக்குமிடையேயான ஆதார பிணைப்பை, அறிவியல் கோணத்தில் விளக்குவதே, இந்நூலின் .நோக்கம். .
வழிபாட்டுத் தலங்களில், சிலைகளைச் சுமக்கவும், ஆசி வழங்கவும், வித்தை காட்டவும், பிச்சை எடுக்கவும் ஆன அற்பச் செயல்களுக்காகவே யானைகள் அவதரித்தவை என்ற நமது முடிவுகள், யானையைத் தடவிப் பார்த்த குருடர்கள் கதை போலவே இருக்கின்றது, என்கிறார் ஆசிரியர்.
யானையின் பரிணாம மாற்றங்கள், ஆசிய, ஆப்பிரிக்க யானை இனத்தின் வேறுபாடுகள், சங்க இலக்கியங்களில் பயின்று வரும் யானை பற்றிய செய்திகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகின்றது இந்நூல். யானை ஆராய்ச்சியாளர்கள் குறித்த, சுருக்கமான அறிமுகமும், இதில் உள்ளது.
மனிதனுக்கும், யானைக்கும் இடையேயான மோதல்களைக் குறித்து, அடிக்கடி நாம் கேள்விப்படுகின்றோம். அதன் வலசைப் பாதைகளை ஆக்கிரமித்து, விளைநிலங்களாக மாற்றியது நாம்; காடுகளை அழித்து, அவற்றின் வாழ்விடங்களைச் சுருக்கியது நாம்; ஆனால் வேறு வழியின்றி, அவை உணவும், நீரும் தேடி, ஊருக்குள் வந்து விளைநிலங்களைப் பாழ்படுத்தும் போது, யானைகளின் அட்டகாசம் என்று பத்திரிக்கைகளில், செய்திக்குத் தலைப்பிடுவது, எவ்வளவு அநியாயம்?
“யானை ஒரு விலங்கு. அதன் மனதில் உணவு தேடலும், தண்ணீர் நாடலும், காட்டுவழித்தடத் தேவையும் தான், ஒரே நோக்கமாக இருக்கும்;சொத்து சேர்ப்பதல்ல – அகப்பட்டதைச் சுருட்டுவதல்ல. காட்டுத் தீவனம் கிடைக்காத வகையில், தடுக்கப்படும்போது, பசியால் உந்தப்பட்டு, வேறுவழியின்றி, உயிரைப் பணயம் வைத்து, துணிவான முயற்சியை எடுக்கிறது யானை”. (பக் 104)
தனது வாழிடத்தை, எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ, அந்த விலங்கே ‘ஆதார உயிரினம்,’ எனச் சூழலியல் கூறுவது, யானைக்குப் பொருத்தம்.
யானைகள் பெரிய மரங்களின் கிளைகளை முறித்து, உடைத்துத் தின்னும் போது விழும் இலைதழைகள், முயல், மான் போன்ற மற்ற தாவர உண்ணிகளுக்கு உணவாகின்றன. படர்கிளைகள் முறிவதால், சூரிய ஒளி உட்புகுந்து,, புல் பூண்டு போன்றவற்றைத் தழைக்க வைக்கின்றன. தாவர உண்ணிகள் அதிகரிப்பதால், ஊன் உண்ணிகளுக்குப் போதுமான உணவு கிடைக்கின்றது. இப்படி உணவு வலைப்பின்னலுக்கு யானை பெரும்பங்கு ஆற்றுகின்றது என்பதை இந்நூல் விரிவாகச் சொல்கின்றது.
இத்தகைய ஆதார உயிரினமான யானை தந்தத்துக்காகப் பெருமளவு வேட்டையாடிக் கொல்லப்படுகின்றது. வலசை வரும்போது, மின்வேலிகளில் மின்சாரம் தாங்கி இறக்கின்றது; தொடர்வண்டிகளில் அடிபட்டு, அவ்வப்போது சாகின்றது.
இப்படி ஐந்தாண்டுகளுக்குள், இந்தியாவில் மட்டும் கொல்ல்ப்படும் யானைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 5000. ஆனால் அதே காலத்தில் 5000 குட்டிகள் பிறக்க வாய்ப்பேயில்லை என்கிறது இந்நூல்.
இதே நிலை தொடர்ந்தால், நம் வருங்காலத் தலைமுறை, டைனோசர் போல, படத்தில் மட்டுமே யானையைப் பார்க்கக்கூடிய நிலை ஏற்படும்.
யானையின் சிறப்பியல்புகளை, விரிவாக அறிந்து கொள்ள மட்டுமின்றி, காட்டின் வளத்தைக் காக்க, சூழலைக் காக்க, பூமியில் மனித இருப்பைத் தக்க வைக்க, யானை மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் இந்நூலை, அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.
சிறப்பான விமர்சனம். யானைகள் குறித்து பல அறியாத பல சுவாரசியத் தகவல்களை அறிந்துகொள்ள இந்நூல் உதவும் என்று புரிகிறது. மிக்க நன்றி.