நூல் விமர்சனம்புனைவு

சிப்பத்தில் கட்டிய கடல்- ஒரு பார்வை


கமனதின் அலைக்கழிப்புகளை, நுட்பமான உணர்வுகளை அதிக சோகமின்றி எப்போதும் சொல்லும் உமா மோகனின் கவிதைகள்.

சொல்ல முடியாமல் தவித்து விலகிச்சென்ற தருணங்கள் எத்தனை? காயப்பட்டுக்கூட இருந்திருக்கலாம் ஆனாலும் சொல்லியிருக்க வேண்டும்.

“நெளிந்தபடியே முடிந்து விடுவோமோ
அஞ்சுகிறது
கூடுடைக்க வலிமையறியாப்புழு”

உணர்வுகளின் மேல் படிமச்சாயம் பூசுகையில்:

” இருளை நீ தின்னுவாயா
இருள் உன்னைத் தின்னுமா
ஒளிப்புள்ளியால் அளக்க வருவேன்”

வா அன்பே எனச் சொல்லத் தோன்றுகிறதா?

பாதைகளும் பயணங்களும் கடைசிவரை புதிராய் இருக்கும் வாழ்க்கை:

“இலைகளற்று நிற்கும் பெருமரத்தின்
காலடியில் சலசலத்து ஓடும்
நதியிடம் கேட்க
நூறாயிரம் கேள்விகள் இருந்தன
உருண்டுவந்த கூழாங்கல்
வேரடியில் சிக்கி நின்ற தருணம்
கேள்விகள் மறந்து போயிற்று”

மண்மகள் அறியா வண்ணச்சீறடி கண்ணகியிலிருந்து எவ்வளவு தூரம் வந்திருக்கிறது!

ஒடுக்கப்பட்ட மனைவியின் குரலாய்

” துண்டு காகிதம் தான் நான்
என்றாலும்
இல்லையென்று பதில் சொல்ல
அனுமதியுங்கள் ராசாவே”

“நன்கு குழிந்த பாத்திரமாய் எடுத்திருக்கலாம்
இப்போது பார்
இரண்டு சொட்டு
அன்பிலேயே ததும்பி விடுகிறது”

” உன்னோடு தான் நின்றுகொண்டிருந்தேன்
நேற்று உன்னைக் காணும் வரை
இருக்கும் போது இல்லாமலிருப்பதும்
இல்லாத போது
இணைந்தே இருப்பதுமான வன்முறை
புரிவதில்லை”

அற்புத தருணம் எப்போது எனத்தெரியாத காத்திருப்பின் சுவாரசியத்தில் போகும் வாழ்க்கை

” யுகங்கள் என்பது
தூரதூரமாகவும் இருக்கலாம்
கசிந்த கண்ணீரை
கசியாது மூக்குறிஞ்சி விழுங்கிவிட்டு
தலைநிமிர்கையில்
ஒரு புன்னகையை உதிர்க்கும்
அருகாமையிலும் இருக்கலாம்”

தட்டாமாலை சுற்றிய பொழுதுகளில் அறியாமை என்ற வரம் இருந்தது. பின்னர் தான் தெளிவு என்ற சாபம் பீடித்தது.

” பாவாடைக்குடை விரிய
கரகரவெனச் சுற்றிய போது
கோர்த்த கரங்களைப்பற்றி
அச்சமில்லாதிருந்தது
பிறகும்
அப்படியே இருந்திருக்கலாம்”

சிப்பத்தில் கட்டியிருப்பினும் கடல் அதன் பிறவித் தன்மையான ஆழத்தையும் அமைதியையும் விட்டுவிடவில்லை. உமா மோகன் ஒவ்வொரு கவிதைத் தொகுப்பிலும் அடுத்த படிக்கு ஏறிக் கொள்வது மகிழ்ச்சி. ஐந்தாம் படியிலிருந்து மூன்றாம் படி செல்லும் அபிக்குட்டிகளைப் பார்த்திருக்கிறேன். அணிலும் குருவியும் விளையாடும் பொழுது மதிற்சுவர் கண்ணாடிச்சில் குறித்து கவலை கொள்ளப் பெரிய உடம்பில் குழந்தை மனம் வேண்டும். நல்ல கவிதைத்தொகுப்பு சிறிது நேரமேனும் வன்முறை, துவேஷம்,துரோகங்கள் மறந்து வேறு உலகத்திலிருந்துவர அனுமதிக்கின்றது. அதற்காகத் தான் கவிதைகளைத் தேடுவது. நிறையக் கவிதைகள் உருவகங்களில் உணர்ச்சி தத்தளிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. பூக்களும், மூக்குச்சளியும் அதைத் தாண்டிய அர்த்தம் கொண்டவை. வாசக அனுபவத்தை விஸ்தரிக்கும் கவிதைகள்.


நூலாசிரியர் குறித்து:

உமா மோகன் திருவாரூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வசிப்பவர். இவரது  ’டார்வின் படிக்காத குருவி’ ,  ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’ ,  ‘துயரங்களின் பின் வாசல்’ ,  ‘நீங்கள் உங்களைப் போலில்லை’ ,  ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ ,  ‘கனவு செருகிய எரவாணம்’
முதலிய கவிதைத்தொகுப்புகள் ’வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரை
 ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பு  முதலியன இதுவரை வெளிவந்தவை.
நூல் தகவல்:
நூல்: சிப்பத்தில் கட்டிய கடல்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: உமா மோகன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு  டிசம்பர் 2019 ( முதற்பதிப்பு)
பக்கங்கள் : 96
விலை : ₹ 180
தொடர்புக்கு : +91 87545 07070

 

இந்நூலின் மற்றொரு விமர்சனம்

சிப்பத்தில் கட்டிய கடல் – விமர்சனம்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *