பாரதியை படிக்கும் போதெல்லாம் அழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. சிந்திக்க முடிகிறது. தனித்திருக்க முடிகிறது. தவித்திருக்க முடிகிறது. இப்படி வேக வேகமாய் எழுதி விட முடிகிறது. பாரதி ஒரு கடல்.. நீந்த தெரிந்த காலத்துக்கு அது தான் சாட்சி. படிக்க படிக்க கட்டுகள் உடைபடும் சமூகம் வியந்து பார்க்கும் மேலோன். ஞான செருக்கின் சுந்தர ஒளி. ஞான கிறுக்கின் சுதந்திர வழி.
பாரதிக்கு 7 வயதிலேயே கவிதை பாடும் திறன் அமைந்து விட்டது என்று நாம் அறிகிறோம். அதன் நீட்சியாக தான் எட்டயபுர ஜமீனில் அவருக்கு பாரதி என்ற பட்டம் 11 வயதில் “விருதை சிவஞான யோகி”யாரால் வழங்கப்பட்டது. (நூலில் ஓரிடத்தில் ஏழு வயது என்றிருக்கிறது). தன் மகன் படித்து பெரிய அரசு உத்தியோகத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான் பாரதியின் அப்பா சின்னசாமிக்கு தன் மகன் மீதான அக்கறை ஆசை அன்பு எல்லாம். சிறுவயதிலேயே தாயை இழந்த பாரதிக்கு படிப்பும் அதன் அழுத்தமும் சிரமத்தைத் தந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு வழக்கமான சிறுவனாக இல்லாமல் தனித்திருப்பதும் கவிதை எழுதுவதும் படிப்பதும் என்று புது மாதிரியான ஒரு சிறுவனாக இருந்தது தந்தைக்கு வருத்தத்தை தந்தது.
மகனை கணித சாஸ்திரியாக ஆக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. மகான் மகாகவி ஆக வேண்டும் என்பது காலத்தின் ரகசியம்.
தனக்கு பின் பிறந்த “பாகீரதி” என்று அழைக்கப்பட்ட தங்கை ஒரு வயதிலேயே இறந்து விடுகிறாள். ஒரு கட்டத்தில் அம்மாவும் இறந்து விட பாரதிக்கு 7 வயதாகும் போது அப்பா மறு கல்யாணம் செய்து கொள்கிறார்.
பாரதியின் தந்தை ஜமீன் சமஸ்தானத்தில் வேலை செய்யும் காரணத்தால் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. பாரதிக்கும் ஜமீனில் நல்ல செல்வாக்கு. அப்பாவுக்கோ பாரதி மீது கவலை. வயதுக்கு மீறிய நட்பு. கேளிக்கை. விளையாட்டு. எங்கே வழி தவறி போய் விடுவானோ என்று .பாரதி ஜமீனில் கவிதை பாடுவது கூட அவருக்கு பிடிப்பதில்லை. ஆனால்… எட்டயபுர ஜமீனுக்கு பாரதியை பாட சொல்லி கேட்பதில் அலாதி விருப்பம். காதலையும் அதன் நிமித்தமுமான பாடல்களைப் பாட சொல்லி கேட்டு அரட்டை அடித்து ஜாலி செய்வதில் ஜமீன் ஜாம் ஜாமென்று ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து களிக்கிறார். அதிகாரத்தின் கைகளில் கீழுள்ளோர் எல்லாரும் பப்பட்கள் தானே. பாரதிக்கும் அது தான் நடக்கிறது.
இதில் 10 வது வயதில் பாரதிக்கு காதல் கூட வருகிறது. அந்த பெண் பெயரை அவர் எங்குமே சொல்வதில்லை. ஆனால் அவளை காளிதாசன் உருவாக்கிய சகுந்தலை பாத்திரத்தோடு பிற்காலத்தில் ஒப்பிடுகிறார். உடலியல் இன்பம் தவிர்த்து அமரத்துவம் வாய்ந்த காதல் என்று பின்னாளில் தன் சுயசரிதையில் சொல்கிறார்.
14 வயதில் 7 வயது செல்லம்மாவோடு கல்யாணம். அதே நாளில் பாரதி வீட்டில் இன்னும் இரண்டு திருமணங்கள் நடக்கின்றன. செல்லம்மாவின் மூத்த சகோதரிக்கும்…. தன் சிற்றன்னை வயிற்றில் பிறந்த இளைய சகோதரிக்கும்… காசியில் இருக்கும் தன் அத்தையின் இரு மகன்களுக்கும் முறையே திருமணம் நடப்பதாக இந்த நூல் சொல்கிறது.
பாரதியின் 15வது வயதில் அவர் தந்தை ஆரம்பித்த ஜின்னிங் மில்லின் தோல்வி அந்த குடும்பத்தை வாழ்வின் அதல பாதாளத்திற்கு தள்ளி விட குடும்பத்தின் சுமையை குறைக்க ஜமீனில் சிறுது காலம் வேலை செய்கிறார். ஜமீனின் பங்கு பணமும் தோல்வியுற்ற தொழிலில் முடங்கி விட ஜமீன் மேலும் சின்னசாமிக்கு உதவ முன் வரவில்லை. அதே வருடத்தில் அவர் இறந்தும் போகிறார். சித்தி….. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட செல்லாம்மாவை அவள் அம்மா வீட்டில் விட்டு விட்டு பாரதியை பாட்டி பாகீரதியோடு அத்தை குப்பம்மாள் காசிக்கு அழைத்து செல்கிறார்.
தாயில்லாத பாரதி பாட்டி பாகீரதியின் செல்லம். (பாட்டியின் பெயரைத்தான் இறந்து போன பாரதி தங்கைக்கு வைத்திருந்தார்கள்) இந்த இடைவெளியில் ஆறு ஆண்டுகள் பாரதியை விட்டு கவிதை விலகி கொண்டது என்று தெரிய வருகிறோம். இந்த ஆறு ஆண்டுகளில் அவர் எந்த கவிதையையும் எழுதவில்லை என்ற செய்தி பயங்கர ஆச்சரியத்தை தருகிறது. இதுவரை நாம் தெரிந்திடாத இந்த செய்தியை இந்த நூல் வெளிக்கொணர்கிறது. கவிதாதேவி அவரை விட்டு அகன்ற பிறகு தான் காசி பயணமே நிகழ்கிறது என்கிறது நூல்.
அதன் பிறகு ஆறு வருடங்கள் கழித்து காசி செல்ல நேரிடும் எட்டயபுர ஜமீன் பாரதியை பார்த்து பேசி ஜமீனுக்கு வேலைக்கு வந்து விடு உன் இஷ்டம் போல இரு….என்று ஆசை காட்டி அழைத்து வந்து விடுகிறார். வந்து கொஞ்ச நாள் பாரதியும் வேலை செய்கிறார். ஆனால் பாரதியின் தனித்த பொது நோக்கும் பொதுவான ஜமீனின் தனித்த தான் போக்கும் ஒன்று கூடாத இடைவெளியில் கருத்து வேறுபாடு கொண்டு ஜமீனை விட்டு வெளியேறுகிறார் பாரதி. அதன் பிறகு தான் அவரைப் பிரிந்த கவிதாதேவி மீண்டும் அவருக்கு வாய்க்கிறாள்.
அப்படி வெளியே வந்த பிறகு அவர் எழுதிய கவிதை தான் “தனிமை இரக்கம்…” – பெரும்பாலைய பாரதி நூல்களில் இந்த பாடல் சேர்க்கப்படவில்லை என்பது நூதனம்.
இந்த கவிதையில் வரும் “பன்றி” என்ற ஒரு சொல் தான் “அருந்தவப்பன்றி” என்ற இந்த நூலின் மொத்தம். அந்த சொல்லில் இருந்து முன் பின்னாக பயணிக்கிறது பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் எழுதிய இந்த “அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி” நூல்.
கவிதை எழுதுவதை விட்டு விட்டு ஓர் அடிமையை போல சோறு கண்ட பக்கம் சுகமென ஒரு பன்றியைப் போல இருந்தால் கவிதாதேவி எப்படி கூட இருப்பாள்… அது தான் அவள் விலகி விட்டாள் என்று சுய விமர்சனம் செய்து கொள்ளும் பாரதியை இந்த நூல் காட்டிக் கொடுக்கிறது.
பாரதியை இத்தனை நெருக்கமாக நான் இந்த நூலில் தான் கண்டடைந்தேன். பாரதி பற்றிய பல நூல்கள் படித்திருந்தாலும் ஆங்காங்கே குழப்பங்கள்…அதீத செய்திகள் என்று ஒரு கட்டுக்குள் பாரதியின் வாழ்வு வராமலே இருந்தது எனக்கு. மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல பாரதியின் பாதி தான் உள்ளே வந்திருந்தார். ஆனால் இந்த நூலில்…சுருங்க நெருங்கி விட்டார். என்ன தேவையோ அதன் விரல் பிடித்து நடக்க…..எந்த வழி இலகுவோ அந்த வழியில் “பாரதி கிருஷ்ணகுமார்” அழைத்து சென்று விட்டார். இந்த நூலில் நீக்கமற நிறைந்திருக்கும் பாரதியின் தரிசனம் பக்கத்துக்கு பக்கம் பரவசம். இந்த நூல் முழுக்க பாரதி என்றொரு சூரியனின் சுடர் தான் ஒளி வீசுகின்றது.
ஜமீனுக்கும் பாரதிக்கும் உள்ள நட்பு விலகி இருந்தால் சேர துடிக்கும் அன்பு. சேர்ந்திருந்தால் விலக துடிக்கும் சுயம் என்று வர்ணிக்கிறார் நூல் ஆசிரியர்.
பாரதியின் வரியைப் போல இல்லை அவரின் தேகம். அவரின் தேகம் மிக சிறியது. அவரை சட்டையில்லாமல் யாருமே கண்டிருக்க முடியாது செல்லம்மா தவிர என்று தெரிய வருகிறது. அத்தனை சிறு உடல் தான் பாரதிக்கு. அந்த சிறு உடலில்தான் கவிதை கடல் குடியிருந்தது. அந்த சிறு உடலில்தான் காக்கை குருவிக்கு இறங்கும் பெரும் மனமும் குடியிருந்தது. அந்த சிறு உடலில் தான் மகாகவி என்றொரு பிரம்மாண்டம் பேரமைதியாய் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த சிறு உடல் கொண்ட உயிரில் தான் நாட்டின் மீதும் நாட்டு விடுதலையின் மீது தீரா வேட்கை சூழ்ந்திருந்தது.
என்ன உடம்பை இப்படி வைத்திருக்கிறாய்., நன்றாக சாப்பிட வேண்டும். அதற்கு இந்த லேகியத்தை எடுத்துக் கொள் என்று ஜமீன் சொல்லி… அப்படி பழக்கமானது தான் “அந்த லேகிய” பழக்கம் கூட. ஆனால் அதற்கும் அவரின் கவிதை எழுதும் திறமைக்கும் தொடர்பில்லை. புதுச்சேரி சென்று மூன்று நான்கு வருடம் வரை கூட லேகியத்தை அவர் துறந்திருந்தார் என்று தெரிகையில் மேற்சொன்ன வரிகள் நூலின் வழியே ஊர்ஜிதமாகின்றன.
எப்போதும் உம்மென்று இருக்கும்……ஊர் கவி அல்ல பாரதி. நையாண்டியும் கேலியும் கிண்டலும் என்று…….தான் எங்கிருக்கிறாரோ அங்கு பல்பெரிய வைத்து விடும் நவரச கவிஞன் பாரதி. பாரதியின் 39 கால வாழ்வுமே பயணங்களால் பிரிக்கப்பட்ட நகர்வுகள் தான். வறுமை அவரோடே காலத்துக்கும் இருந்ததை நாம் நடுக்கத்தோடு பின் தொடர்கிறோம்.
ஜமீனை விட்டு வெளியேறி அதன் பிறகு தான் மதுரைக்கு செல்கிறார். அதன் பிறகு தான் புதுச்சேரி வாசம். அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடையம் வாசம். அதன் பிறகு தான் சென்னை – திருவெல்லிக்கேணி.
அங்கு கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு கிடைக்கும் தேங்காய் பழத்தை வீட்டுக்கு கொண்டு வராமல் அங்கே இருக்கும் யானைக்கு தின்ன கொடுப்பது அவரின் வழக்கம். அப்படி கொடுக்கையில் தான் கோயில் யானை அவரைத் தள்ளி விட்டு விடுகிறது. பிறகு தான் தெரிகிறது. யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்று. மதம் பிடித்த யானை கூட தான் கீழே விழுந்ததும் நான் என்று தெரிந்து கொண்டு அமைதியாக நின்று விட்டது என்று சொல்லி இருக்கிறார். கஜராஜன் ஒரு போதும் கவிராஜனை மிதிக்க மாட்டான்…என்று அந்த சூழலிலும் தன் சொல்லாடலில் ஆசுவாசம் நிகழ்த்த பாரதிக்கு தெரிந்திருக்கிறது. அதன் பிறகு உடல் நிலை தேறி சில கூட்டங்களில் எல்லாம் பேசி இருக்கிறார். சாவதற்கு 20 நாட்களுக்கு முன் ஈரோட்டில் பேசிய கூட்டம் தான் கடைசி கூட்டம். அவரின் இறுதி சடங்கில் 20 பேருக்கு குறைவானார்கள் தான் கலந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. அத்தனை அச்சத்தை பிரிட்டிஷ் ஆதரவாளர்களுக்கு அவரின் கவிதை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல் சிறுகதையை தமிழுக்கு அவர் தான் கொண்டு வந்தார் என்று அறிகிறோம். சின்ன சங்கரன் கதையின் மூலமாக ஜமீனின் தின்று கொழுத்த தினசரி வாழ்க்கை முறையை அடித்து நொறுக்கும் பாரதி….. அந்த கதையில் தன் சுய சரிதையைத்தான் எழுதி இருக்கிறார். ஜமீன் சகவாசம் எப்படி பாரதியின் கவிதை வாழ்வை சீரழித்தது என்று தெரிய வருகிறது. சிறு பையனான தன்னை காம கதைகளை பேச விட்டு கேட்டு ரசிக்கும் ஜமீன் மீது ஆழ்மனதில் அவருக்கு வெறுப்பே இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக தான் “சின்ன சங்கரன்” கதையில் வரிக்கு வரி வாரி இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் ஜமீனிடமே வேலை வேண்டி கடிதம் எழுத இந்த காலம் சதி செய்திருக்கிறது.
ஜமீனை விட்டு வெளியேறிய பிறகு பழையபடி கவிதை கூடி வந்த பிறகு அடுத்த 17 ஆண்டுகள் அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கினார் என்பது தெளிவு. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுகதை என்று தொடர்ந்து அடித்து ஆடி இருக்கிறார். வயிற்றுக்கு இல்லாத போதும் எழுத்துக்கு அவரிடம் பஞ்சம் இல்லை. ஒரு நாவல் கூட எழுதி இருக்கிறார். அது பாதியில் நின்றிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.
தமிழ் ஆங்கிலம் கன்னடம் தெலுங்கு மலையாளம் வங்காளம் சமஸ்கிருதம் பிரெஞ்சு ஜெர்மன் என்று 9 மொழிகள் தெரிந்த பாரதி இந்தியா, ஞானபாநு, பாலபாரதா, சக்கரவர்த்தினி, சூர்யோதயா ஆகிய 5 இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஷெல்லி மீது தீராத பற்று கொண்ட பாரதி தன் பெயரை ஷெல்லிதாசன் என்று கூட மாற்றி இருக்கிறார். உரையாசிரியர் இல்லாமல் படிப்பவரே புரிந்து கொள்ளும் வசன கவிதையை முதலில் செய்தவர் பாரதி. இதழ்களில் கார்ட்டூன் கொண்டு வந்த பெருமை பாரதியையே சாரும் என்று பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் காணொளி ஒன்று தொடர்ந்து பாரதியை பற்றி ஆச்சரியங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறது.
பின்னாட்களில் குழந்தை திருமணத்தை எதிர்க்கும் பாரதிக்கு சிறு வயதில் தனக்கு நிகழ்ந்த குழந்தை திருமணம் கடும் பாதிப்பை ஆழ்மனதில் ஏற்படுத்தியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று குழந்தை இலக்கியம் செய்த முதல் கவிஞன் பாரதி. சிறுவயதுக்கான வாழ்க்கை முறை தனக்கு அமையவே இல்லை என்ற வருத்தம் தான் அவரை அப்படி பாட்டெழுத வைத்திருக்க வேண்டும். அம்மா மீதும் மிகுந்த தேடல் இருந்திருக்கிறது….நண்பர்களோடு உரையாடுகையில் அவ்வப்போது அந்த ஏக்கம் வெளிப்பட்டிருக்கிறது.
பாடம் படிப்பதால், ஜமீனில் வேலை செய்வதால் தன் கவிதை எழுதும் காலம் வீணாகிறது என்று சிறுவயதில் புலம்பி இருக்கிறார். அதனால் தான் எழுத்து என் தொழில் என்று பின்னால் சொல்ல முடிந்திருக்கிறது.
இந்த நூலின் வழியே பாரதி என்ற சுடரை மிக அருகே சென்று காண முடிகிறது. பாரதி காலத்துக்குமானவன். காலமாகவே ஆகி விட்டவன். மனித வரலாற்றில் அபூர்வமாய் நிகழும் சம்பவம் பாரதி. பாரதி வாழ்வில் எல்லாமே வேக வேகமாய் நடந்து விட்டன. வேர் மட்டும் ஆழமாய் இன்னும் இன்னும் சொற்கள் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.
வந்ததும் தெரியவில்லை. சென்றதும் தெரியவில்லை. ஆனால் பூமியில் நிகழ்ந்தது மட்டும் ஒரு போதும் மறைவதில்லை. ஏனெனில் பாரதி என்றுமே ஓர் அக்கினிக்குஞ்சு.
கவிஜி
நூல்: | "அருந்தவப்பன்றி" சுப்பிரமணிய பாரதி |
பிரிவு : | ஆய்வு நூல் |
ஆசிரியர்: | பாரதி கிருஷ்ணகுமார் |
வெளியீடு: | சப்னா புக் ஹவுஸ் |
வெளியான ஆண்டு | |
பக்கங்கள் : | 174 |
விலை : | ₹ 140 |
தொடர்புக்கு : | 94442 99656 |
அமெசானில் நூலைப் பெற: |
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.