கி.ராவை நான்கு முறை சந்தித்திருக்கிறேன். முதல் முறை ‘ஆனந்த விகடன்’ இதழுக்காக நேர்காணல் செய்ய. இரண்டாவது முறை ‘விகடன் தடம்’ இதழுக்காக நேர்காணல் செய்ய. மூன்றாவது முறை அவரது 95வது பிறந்த நாளில், அவர் குறித்த 95 தகவல்கள் திரட்ட. நான்காவது முறை ஏன் சென்றேன் என்ற தகவலை இங்கே பகிர்ந்துகொள்ள முடியாது.
கி.ராவின் படைப்புகளைவிட, அவரது குறும்பான இயல்புக்குத்தான் நான் முதலில் ரசிகன். நிறைய மாதுளம் பழங்களோடு முதன்முறை காணச் சென்றிருந்தேன். “நான் என்ன சாப்பிடணும்னு நீயே முடிவுபண்ணி வாங்கிட்டு வந்துட்டியா?” என்றார் சிரித்துக்கொண்டே. அவரது குரலில் தொனித்த உரிமையும் குறும்பும் எனக்குப் பிடித்திருந்தது. “என்னத்த கேக்கப் போறிய? எல்லாம் பேசியாச்சே!” என்றார். முதல் பத்து நிமிடங்கள், நேர்காணலின் கேள்விகளுக்குப் பிடிகொடுக்காமலேயே இருந்தார். பிறகு, அவருள்ளே என்ன நிகழ்ந்ததோ… அடுத்த ஐந்து மணி நேரம், பேச்சின் வழியே அடைமழையை நிகழ்த்திக் காட்டினார் கி.ரா.
கதைகள்… கதைகள்… கதைகள்… அவர் கதை சொல்லிக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். “அந்தால… அந்தால” என்று அவர் காட்சிகளுக்கிடையே இடவெளி விடுகிற அழகே அழகு. அன்றைய மாலையில், ஆண்டன் செகாவின் ஒரு கதையை அவர் சொல்லி முடித்தபோது, உடனிருந்த அனைவரின் கண்களிலும் நீர் ததும்பியிருந்தது. அவ்வளவு உயிர்த்துடிப்போடு குரலாலும் உடலாலும் கதைசொல்லும் கலைஞன் அவர். இதைச் சொல்வது, இளையராஜா நன்றாக இசையமைப்பார் என்று சொல்வதுபோல. (இளையராஜா இசையமைப்பதை ஒருநாள் முழுக்க உடனிருந்து ஆசையாகப் பார்த்தவர் கி.ரா என்பது உபரிச் செய்தி)
‘நினைவடுக்கு’ என்கிற படிமத்தை முதல்முறை அவரது பேச்சின் வழியேதான் நான் காட்சியாகக் கண்டேன் அல்லது உணர்ந்தேன். ‘ம்……’ என்றபடியே, அவர் தனது நினைவு அடுக்குகளுக்குள் ஒரு மனிதரை, ஒரு சம்பவத்தை, ஒரு பெயரை, பொருளை அவர் தேடுவது நம் கண்களுக்கு பௌதிகமாகத் தெரியும்.
வாசிப்பு, இசை மீதான நாட்டம் இவை இரண்டும் கி.ராவிடம் நான் பொறாமைகொள்ளும் விஷயம். மனுஷன் கடைசிவரை ஓயாமல் வாசித்துக்கொண்டே இருந்தார். இசைமீதான பித்து குறையாமல் இருந்தார். வானத்துக்குக் கீழுள்ள எது குறித்தும் அவரிடம் பேசலாம். ஆனால், கி.ராவிடம் நான் எப்போதும் பேச விரும்பும் விஷயங்கள் இரண்டு. உடல் மற்றும் பாலியல். இதுவரையில் நான் சந்தித்துப் பேசிய, நேர்காணல் செய்த எழுத்தாளர்களுள் இந்த இரண்டு விஷயங்களில் அனுபவ அறிவும் (நேரடி அனுபவத்தைக் குறிப்பிடவில்லை) ரசனையும் சற்றுக் கூடுதலாகக் கொண்டவர் கி.ரா என்பது என் புரிதல்.
பாலியல் கதைகளைச் சொல்லும்போது, கதைசொல்லி கள்ளத்தனமாகப் புன்னகைக்கும் இடம் முக்கியமானது. அதை அவ்வளவு கச்சிதமாகச் செய்வார். “கலவியில ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கிற கெட்டவார்த்தைகளைப் பற்றி பேசினோம்னா…” என்று சொல்லிவிட்டு, “எல்லாம் சின்னப் புள்ளைகளா இருக்கிய..!” என்று அவர் சிரித்தது நினைவிருக்கிறது. வட்டார மொழியிலுள்ள வசவுச் சொற்களைத் திரட்டும் ஒரு முயற்சி அவரிடமிருந்தது. ஆனால், கடைசி வரையில் அது கைகூடவில்லை.
அன்றாட உடலியல் நிகழ்வுகள், உபாதைகள், நோய்கள் குறித்து கி.ரா பேசும்போது வியப்பாக இருக்கும். அதிலும்கூட மென்மையாக நகைச்சுவை இழையோடும். “காலைல எந்தப் பிரச்னையும் இல்லாம வெளிக்கிருக்கிறவன், குண்டிச் சதையத் தட்டி, அதுக்கு சபாஷ் சொல்றத பாத்திருக்கியளா? அப்படி உங்களுக்குத் தோணிருக்கா?” என்று கேட்டுச் சிரிப்பார். குறும்பும் சுவாரஸ்யமுமான மனுஷன்.
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியல் விஷயங்களை, தகவல்களைப் பற்றி அவரிடம் கேட்டு அறிவதும்கூட மகத்தான அனுபவம்தான். “இந்தியா மேப்பை எப்போ முதல்முறை பாத்தீங்கனு நினைவிருக்கா?” என்று கேட்டேன். “ஆமா… பள்ளிக்கூட சமயத்துல. சுவத்துல ஆணி அடிச்சு மாட்டிவிட்டாங்கன்னா… அது மெள்ள மெள்ள கீழ்நோக்கி விரிஞ்சிக்கிட்டே வரும். மாகாணங்கள் வரும்… ஜில்லாக்கள் வரும்… கோடுகோடுகளா வரும்!” என்று அவர் விவரித்த விதம் மனதில் அலையடிக்கிறது.
கி.ராவை ஒருவாறு புரிந்துகொள்ள அவரது (கீழுள்ள) இந்தப் பதில்கள்; விருப்பங்கள்; கருத்துகள் எனக்கு உதவியிருக்கின்றன:
- ஒலி மாசு இல்லாத இடத்தில் நிம்மதியாக, சுருதி சுத்தமான இசை கேட்டுக்கொண்டிருக்கவே ஆசை!”
- ‘முன்னத்தி ஏர்க்காரன்” என்கிறார்கள். ஆனால், வயலில் ஒழுங்காக ஏர் பிடித்து உழத் தெரியாதவன் நான்.
- ஒவ்வொரு சாதிக்காரனும் ‘நான்தான் ஆண்ட பரம்பரை’னு சொல்லிக்கிட்டு வர்றானுங்க. இங்க எல்லாருமே ஆண்ட பரம்பரைன்னா, அப்ப யாரு இங்க குடியானவன்? குடியானவங்கெல்லாம் செத்துப்போயிட்டாங்களா?
- “அசட்டுத்தனங்கள் பல கொண்டதுதான் இந்த உலகமாக இருக்கிறது. அதில்தான் சுவாரஸ்யமும் இருக்கிறது.”
- சாராயத்தை ஒரே ஒரு முறை தொட்டு நாக்குல வெச்சுப் பார்த்தேன். பிடிக்கலை; விட்டுட்டேன். (பிடிச்சிருந்தா என்னவாகியிருக்கும்?!)
- “ஒரு மொழியைப் பயன்படுத்தி ஒருத்தனைப் பார்த்து ‘நீ கோயிலுக்குள்ள வரக் கூடாது’ன்னு சொல்ல முடியுதுன்னா, அந்த மொழிமீது எனக்கென்ன வியப்பு வேண்டிக்கிடக்கு”
- “ஒழுக்கம் ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ, அங்கேதான் நிறைய ஒழுக்கக் கேடு இருக்கும்.”
- “கொட்டும் பனியில் உட்கார்ந்து பாடியதால், கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்ததால், எனக்கு சங்கீதம் வருவதற்குப் பதிலாக இருமலும் உடல்மெலிவும்தான் வந்தது.”
- வசவு இல்லாமல் மொழியில்லை. வசவு இல்லாமல் வாழ்க்கையுமில்லை.”
- “கலையில் தப்பு தப்பு என்று சொல்லப்பட்டு வருவது ஒருநாள் சரியாகிவிடும். சரி சரி என்று சொல்லப்பட்டு வருவது தப்பாகவும் ஆகிவிடும்”
- “நினைவுக்கூரப்படணும் என்கிற பேராசையெல்லாம் எனக்குக் கிடையாது.”
இப்படியான அவரின் ஸ்டேட்மெண்ட்ஸ் நிறைய இருக்கின்றன. அவற்றைத் தனியேகூட தொகுக்கலாம்.
அவரோடு இரண்டு விஷயங்களில் இரண்டு முறை முரண்பட்டிருக்கிறேன். அவை இப்போது இங்கே வேண்டாம்.
காலையிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒரு நேர்காணலின்போது, வாய் கொப்பளிக்க எழுந்து சென்றவர், வாஷ் பேஷனில் தனது பல்செட்டைக் கழற்றி வைத்தார். நான் அதைப் பார்த்தேன். அது என்னை நோக்கிச் சிரித்தது. நானும் பதிலுக்குச் சிரித்தேன். அதை அவர் பார்த்துவிட்டார். எனக்குக் கண் மறைவாக அதை எடுத்துவைத்தார். அந்த தருணத்தில் அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; சொல்லவும் இல்லை. அந்தப் பற்கள் அவ்வளவு நேர்த்தியானவை (அதன் தரம், அதை அவர் முதன்மையான மருத்துவர்களைக் கொண்டு வாங்கிய விதம் குறித்து தோழர் புதுவை இளவேனில் சொல்லி கேட்க வேண்டும்). கி.ரா இறந்துவிட்டார். அவரது பற்களோ புதிய கதைகளை அசை போட்டுக் கொண்டிருக்கலாம். அவரையே சுற்றிச் சுற்றி வரும் ‘சங்கு பாஸ்’ என்கிற பூனை அவரது கால்களைத் தேடி இன்று குழம்பிப் போயிருக்கும்.
ம்… அந்தக் குறும்புக்காரன் சொன்ன கதைகளும் அவன் குரலும் வலுவாக மூளையில் பதிந்துள்ளது… போதும்!
கி.ரா எனும் கதைசொல்லிக் கிழவனின் மரணம் கொண்டாடப்பட வேண்டியது. கொண்டாடுவோம்!
கி.ராவைப் பத்திரமாகப் பார்த்துகொண்ட தோழர் புதுவை இளவேனிலுக்கு நன்றி.!
– வெய்யில்