அந்த சமயத்திலே நாட்டிலே புதிய விழிப்புணர்ச்சி தோன்றி வளர்ந்துகொண்டு வந்தது. அது சமூகத்தின் மேல் மட்டத்திலேயே பரவியிருந்தது. இந்த விழிப் புணர்ச்சி எதனால் ஏற்பட்டது? காங்கிரஸ் மகாசபையினால் ஏற்பட்டது. சென்னையிலே இதற்குத் தூண்டுகோலாக விளங்கியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர் . ‘ சுதேசமித்திரன்’ பத்திரிகையைத் தொடங்கி, அப்பத்திரிகை மூலம் இந்த உணர்ச்சியைப் பரப்பி வந்தார் ஐயர்.
ஆங்கிலத்தில் வரும் செய்திகளை உணர்ச்சியுடன் அழகான தமிழில் – எளிய தமிழ் நடையில் – வடித்துத் தரத்தக்கவர் ஒருவரை அவர் தேடிக் கொண்டிருந்தார். தற்செயலாக மதுரைக்கு வந்தார் அவர். அவர்தம் வரவு அறிந்தார் பாரதி.
பாரதி சுப்பிரமணியம் பத்திரிகை சுப்பிரமணியத்தை நாடினார்; சென்றார்; வென்றார். விளைவு என்ன? ”சுதேச மித்திரன்” பத்திரிகையில் உதவியாசிரியர் வேலை ஏற்றார் பாரதி. 1904-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலே “சுதேச மித்திரன்” உதவியாசிரியர் ஆனார். அப்போது பாரதிக்கு வயது இருபத்தி இரண்டு.
அந்தக் காலத்தில் “சுதேசமித்திரன்” எங்கிருந்து வெளி வந்தது? சென்னை ஜார்ஜ்டவுன் அரண்மனைக்காரத்தெருவிலே ஒரு வீட்டிலிருந்து வெளி வந்தது. அரண்மனைக் காரத் தெருவிலே இப்போது அந்தோணியார் ஆலயம் இருக்கிறதே. அதற்கு எதிர்ப்புறத்தில் இருந்தது அந்த வீடு.
சம்பளம் அதிகம் இல்லை. எனினும் உற்சாகமாகப் பேசி வேலை செய்ய வைத்துவிடுவார் ஐயர். மாலையிலே வேலை முடித்துவிட்டு மேல் மாடியிலே திறந்த வெளியிலே நின்று கொண்டிருப்பார் பாரதியார். அங்கிருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருப்பார். வேலைக்காரன் ஒருவன் வருவான்; ஒரு டம்ளர் காப்பியைக் கொடுப்பான்; “ஐயரி இதைக் கொடுக்கச் சொன்னார்” என்பான்.
அதை வாங்கி அருந்திக் கொண்டிருப்பார் பாரதி. ஐயரும் வருவார்.
“பாரதி! இதைப் படித்தாயா?” என்று சொல்லிக் கொண்டே ஒரு பத்திரிகையைக் கொடுப்பார்.
”ஓ! படித்தேனே!” என்பார் பாரதி.
“அதை நமது பத்திரிகையிலே வெளியிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்” என்பார் ஐயர்.
”ஓ! வெளியிடலாமே!” என்பார் பாரதியார். “அந்த சாமர்த்தியம் உன்னைத் தவிர வேறு எவருக்கு இருக்கிறது. நீ காளிதாசன். ஆனால் நான் போஜனாக இல்லையே!” என்பார் ஐயர்.
“கொடுங்கள்” என்று வாங்கிக் கொள்வார் பாரதி.
“இப்பொழுது ஒன்றும் அவசரமில்லை. வீட்டுக்குக் கொண்டு போய், நன்றாக நிதானமாக எழுதி, நாளை கொண்டு வந்தால் போதும்” என்று சொல்லிக் கொண்டே போய் விடுவார் ஐயர்.
தம்பு செட்டித் தெருவில் இருந்த ஒரு வீட்டில் குடி யிருந்தார் பாரதியார் . வக்கீல் துரைசாமி ஐயர் மண்ணடி யிலுள்ள ராமசாமி தெருவில் இருந்தார். இருவரும் நண்பா ஆயினர். சர்க்கரைச் செட்டியாரும் பாரதியின் நண்பா ஆனார். இவர்கள் எல்லாரும் மாலை நேரத்திலே கணேஷ் கம்பெனியில் கூடுவார்கள். கணேஷ் கம்பெனியார் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற காப்பிக் கொட்டை வியாபாரி களாக விளங்கினார்கள். இந்தக் கம்பெனி முதல்வர் ராமசேஷய்யர் இவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார்.
கணேஷ் கம்பெனியில் ஒன்று கூடும் நண்பர்கள் வெகு உற்சாகமாகப் பேசிக்கொண்டே கடற்கரை செல்வார்கள். மணலில் அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். பற்பல விஷயங்கள் பற்றி விவாதிப்பார்கள். திட்டங்கள் தீட்டு வார்கள். பாரதியார் பாடுவார். என்ன பாட்டு? கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரப் பாடல்கள். அந்தப் பாடல்களிலே பெரிதும் ஈடுபட்டிருந் தார் பாரதியார். பாடல்களை எல்லாரும் கேட்டு இன்புறுவர். பின்பு எழுந்து அவரவர் இருப்பிடம் சேர்வர். இவ்வாறு நாள்தோறும் நடக்கும்.
* சமூக சீர்திருத்தம் என்பது அந்த நாளிலே பெரிதும் பேசப்பட்ட ஒன்று. சமூக சீர்திருத்த சங்கம் ஒன்றும் சென்னையில் இருந்தது. அதன் பெயர் சோஷல் ரிபார்ம் அசோசியேஷன்’ என்பதாகும். (*கூறியவர் – சர்க்கரைச் செட்டியார்.)
இச்சங்கத்தினர் எல்லாரும் கூடுவர்; சமூக சீர்திருத்தம் பற்றி வானளாவப் பேசுவர். என்ன சீர்திருத்தம்? சமபந்தி போஜனம் செய்யலாமா? கூடாதா? இதுதான் சீர் திருத்தம். ‘எல்லா ஜாதியினரும் ஒன்று கூடி உண்பதில் தவறில்லை. நாட்டின் முன்னேற்றம் கருதி எல்லாரும் ஒருங்கே அமர்ந்து உண்ணலாம். இப்படிப் பேசுவாரிகள். நீண்ட தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள். அவ்வளவு தான். அதற்குமேல் ஒன்றும் செய்யமாட்டார்கள்.
இவர்களை ஏளனம் செய்தார் பாரதி; மேடைப் பிரசங்கம் செய்தாலோ, தீர்மானம் நிறைவேற்றி விட்டா லோ சீர்திருத்தம் வந்துவிடுமா?
வேண்டுவது செயல்; செயல்
.
இதுதான் பாரதியின் கருத்து. தமது கருத்தைச் செயலில் காட்ட விரும்பினார் பாரதி; சங்கம் ஒன்று தோற்றுவித்தார். அந்த சங்கத்தின் பெயர் ‘ராடிகல் கிளப்’. வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஐயா , சர்க்கரைச் செட்டியார், ஜெயராம் நாயுடு ஆகியவர் பலர் அச்சங்கத் திலே அங்கம் வகித்தனர். மண்ணடி ராமசாமி தெருவிலே வக்கீல் துரைசாமி ஐயர் வீட்டிலே இருந்தது சங்கம்.
தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதாது. பிராமணர் பிராமணரல்லாதார் எல்லாரும் சமமாக உட்கார்ந்து உண்பது மட்டும் போதாது. பிராமணரல்லா தார் சமையல் செய்ய வேண்டும்; பிராமணர் சாப்பிட வேண்டும். இப்படி ஏற்பாடு. சமையல் செய்தவர் ஜெயராம் நாயுடு. மற்றையோர் சமமாக அமர்ந்து உண்டனர். அந்தக் காலத்திலே பெரியதொரு சமூகப் புரட்சியை உண்டு பண்ணியது இச்சங்கம்.
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐந்தாம் ஆண்டு. நமது விடுதலைப் போரிலே முக்கியமானதோர் ஆண்டு இது. இந்த ஆண்டுதான் நமது விடுதலைப் போருக்கு வேகம் கொடுத்தது.
இந்த ஆண்டிலேதான் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது இந்திய வைசிராயாக இருந்தவர் கர்ஸான் என்பவர். 1905ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலே வங்கப் பிரிவினை அமுலுக்கு வந்தது.
இந்தப் பிரிவினையை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றது.
கண்டனக் கூட்டங்கள் ஒன்றா? இரண்டா ? ஆயிரம் என்றால் அது மிகக் குறைவு. 1905ம் ஆண்டு டிசம்பர் மாதம் காசியிலே கூடியது காங்கிரஸ்; வங்கப் பிரிவினையைக் கண்டித்தது.
அதிகாரவர்க்கம் அசைந்து கொடுக்கவில்லை. வங்கப் பிரிவு முற்றுப்பெற்ற விஷயம்’ என்றது. ஆனால் கிளர்ச்சி ஓயவில்லை; தொடர்ந்தது.
கிளர்ச்சி வங்காள மாகாணத்துடன் நிற்கவில்லை. இந்திய நாடு முழுவதும் நடந்தது. வங்காளத்திலே இக் கிளர்ச்சியை முன்னின்று நடத்தியவர் சுரேந்திரநாத் பானர்ஜி, விபினசந்திரபாலர் முதலியோர் .
பாஞ்சாலத்திலே பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயும், மகாராஷ்டிரத்திலே பாலகங்காதர திலகரும் வங்கப் பிரிவினையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்.
காங்கிரசுக்குள்ளே இரண்டு விதமான கருத்துத் தோன்றலாயிற்று. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நல்ல பிள்ளைகளாகவே நடந்து கொண்டு, அதனிடம் மன்றாடிக் கேட்டுக் கேட்டு நன்மை பெறவேண்டும் என்பது ஒரு விதக் கருத்து. இக்கருத்துக் கொண்டவர் கோபால கிருஷ்ண கோகலே, பிரோஸ்ஷா மேத்தா போன்றோர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மண்டியிட்டுப் பிச்சை கேட்க வேண்டுவது இல்லை. நமது பலத்திலேயே நாம் நிற்க வேண்டும். கிளர்ச்சி செய்து நமக்கு வேண்டிய வற்றை அடைய வேண்டும் என்பது இன்னொரு கருத்து. இக் கருத்துக் கொண்டவர் பாலகங்காதர திலகர் , விபின சந்திர பாலர் முதலியோர்.
இந்த இரண்டு விதமான கருத்துக் கொண்டவர்களும் வெளிப்படையாக மோதிக் கொள்ளவில்லை. ஆனால் இவ்விரு கோஷ்டியினரும் தங்கள் கருத்துக்கு ஆக்கமும் ஆதரவும் தேடிக்கொண்டே வந்தனர்.
இந்தக் கால கட்டத்தில்தான் பாரதியார் அரசியலில் பிரவேசித்தார். பாரதியாரின் கருத்து முழுவதும் திலகர் பக்கமே நின்றது. ஆனால் ஜி. சுப்பிர மணிய அய்யரோ அதற்கு இடம் கொடுக்கவில்லை.
‘ஆசையும் நேசமும் ஆனந்தமும் அங்கே; பாசலும் பேசலும் பிதற்றலும் இங்கே, என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கினார் ஜி. சுப்பிரமணிய அய்யர்.
திலகர் கோஷ்டியிடத்திலே அவருக்குப் பற்றுதல் இருந்தது; மதிப்பும், மரியாதையும் இருந்தன. ஆயினும் கோகலே கோஷ்டியை எதிர்த்து நிற்க அவர் விரும்ப வில்லை .
ஆகவே, ஜி சுப்பிரமணிய அய்யா பாரதியிடம் அன்பு காட்டினார்; ஆதரவு அளித்தார்; ஆனால் தீவிரமாக “சுதேசமித்திர’னில் எழுத அவர் இடமளித்தாரிலர்.
சுதேசமித்திரனில் சேர்ந்த போது பாரதியாரின் அரசியல் அறிவு அவ்வளவு தெளிவு பெறவில்லை எனலாம். சுதேசமித்திரனில் சேர்ந்த பின்னர் நாளடைவில் அவரது அரசியல் அறிவு கூர்மை பெற்றது; தீவிரமடைந்தது.
பாரதியாரின் அரசியல் அறிவை நன்கு பட்டை போட்டுத் தீட்டிவிட்டது சுதேசமித்திரன்.
தீவிரக் கட்சியில் நின்ற பாரதியார் தமது கருத்துக் களை எந்த விதமான தடையுமின்றி வெளியிடத் தக்கதோர் பத்திரிகையை விரும்பினார். அவரைப் போலவே வேறு சிலரும் விரும்பினர்.
அவருள் ஒருவர் என். திருமலாச்சாரியார் என்பவர். அவர் ஒரு புதிய பத்திரிகையை வெளியிடுவதற்கு வேண்டியன செய்தார். புதிய பத்திரிகைக்கு . இந்தியா’ என்று பெயரிட்டனர்.
1906ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரந்தோறும் வெளிவரத் தொடங்கியது இந்தியா.
* இந்தியா’ (* சித்திர பாரதி ) பத்திரிகையின் காரியாலயம் பிராட்வே யில் இருந்தது; பிராட்வேயில் 34 என்ற இலக்கமிட்ட இடத்திலிருந்து வெளிவந்தது; அதே இடத்தில் அதன் அச்சகமும் இருந்தது. அதன் பெயர் இந்தியா அச்சகம்’ என்பது.
பத்திரிகையின் அளவு அரை கிரவுன் சைஸ். அதாவது 15 அங்குல நீளம்; 10 அங்குல அகலம். பக்கங்கள் எட்டு. சென்னையில் ஒரு பிரதியின் விலை முக்கால் அணா; வெளியூர்களில் ஓரணா, பத்திரிகையின் பதிவு எண் எம். 578.
இப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை மேற் கொண்டார் பாரதியார். பத்திரிகையின் காரியாலய நிர்வாகியாக இருந்தவர் எம். பி. திருமலாச்சாரி என்ற இளைஞர். பத்திரிகையின் சொந்தக்காரராகவும், வெளியிடுபவராகவும் பதிவு செய்து கொண்டவர் எம். ஸ்ரீநிவாசன் என்பவர் .
தமிழ் நாட்டில் முதன் முதலாக அரசியல் கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிகை – இந்தியா’வே. பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்த அரசியல் கார்ட்டூன் வெளி வந்தது.
*சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற மூன்று சொற்களும் ‘இந்தியா’ (* மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் – பாரதி புதையல்) பத்திரிகையின் உயிர் நாடியாக தலைப்பிலே அச்சிடப்பட்டிருந்தன. இந்த மூன்று சொற்களும் பிரஞ்சுப் புரட்சியின் உயிர் நாடியான கோஷங்கள். இவற்றையே ‘இந்தியா’ பத்திரிகையின் உயிர் நாடி கோஷமாகக் கொண்டார் பாரதியார்.
காங்கிரசுக்குள்ளே உருவாகி வளர்ந்து வந்த புதிய கட்சியின் கருத்துக்களை எல்லாம் மிகத்தெளிவாக விளக்கி வந்தது ‘இந்தியா’ பத்திரிகை. அம்மட்டோ ! பாலகங்காதர திலகர் . விபின சந்திரபாலர் ஆகியவர் களுக்குச் சமமாகத் தமிழ் நாட்டிலே விளங்கினார் பாரதியார்.
“ஒரு நாளும் காங்கிரசாரின் கெஞ்சுதல்களுக்குச் செவி கொடுக்கப் போகாதவர்களாகிய கவர்ன்மெண்டாரை மீண்டும் மீண்டும் கெஞ்சுவதைத் தொழிலாக வைத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஜனங்களின் அபிவிருத்தி பயிற்சி என்பவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
“கவரின் மெண்டாரின் சகாயமில்லாமல் ஜனங்கள் தாமாகவே செய்து கொள்ளக் கூடிய விஷயங்களில் முக்கியமாக சிரத்தை செலுத்த வேண்டும்.
“டம்பப் பேச்சுக்காரர்களின் தொகை குறைந்து தேசாபிவிருத்தியில் ஆத்திரமுள்ள வர்த்தகர் , ஜமீந்தார் கள் என்றபேர் காங்கிரஸ் கூட்டத்தில் சேர்தற்குரிய முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இவையன்றி நமக்கு வேறு பல விருப்பங்களும் உள்ளவெனினும் இவையே முக்கியமானவை.” (இந்தியா- 7 – 7- 1906)
இவ்வாறு பாரதியார் காங்கிரஸ் மகாசபைக்கு யோசனை கூறினார்.
1906ம் ஆண்டு சூலைமாதம் 14ந் தேதி இந்தியா பத்திரிகையில் இக்கருத்துக்களை மேலும் வற்புறுத்தினார் பாரதியார்.
“காங்கிரஸ் விஷயத்திலே நாம் சென்ற வாரம் ஓர் குறிப்பு எழுத நேரிட்டது. அதற்கப்பால் நமது கருத்தைப் பெரும்பாலும் தழுவியே அரிய தேச பக்த ராகிய ஸ்ரீகாபாதே ‘ஹிந்து’ பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்தி யாவின் நலத்தை விரும்பும் எல்லோருக்கும் காங்கிரஸ் முறைமைகளில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டு மென்ற எண்ணம் ஒருங்கே தோன்றுகிறது. ஸ்ரீமான் காபாதேயின் பிரரேபணைகள் காங்கிரஸ் தலைவர்களால் நன்கு கவனிக்கப் படுமென நம்புகிறோம். காங்கிரஸ் தீர்மானங்கள் சம்பந்தமாக முக்கியமான சீர்திருத்தம் நடக்க வேண்டும். கேட்போர் காது புளித்துப் போகும் படியாக, அந்நியர்கள் ஒரு நாளும் செய்து கொடுக்கப் போகாத விஷயங்களை, அவர்கள் செய்து கொடுக்க வேண்டுமென்று கெஞ்சிக் கொண்டே இருப்பதற்கு அபரிமிதமான பணச் செலவு ஏன் செய்ய வேண்டும்? பிரம்மாண்டமான பொதுச்சபைகள் கூடியும், விண்ணப் பங்கள் அனுப்பியும், பிரார்த்தனைகள் புரிந்தும், மன்றாடியும், எத்தனையோ மாதங்களாக பெங்காளத் துண்டிப்பு விஷயத்தில் பெங்காளத்தில் செய்து வந்த பிரயத்தனங்கள் விழலுக்கிறைத்த நீராய் போய்விட்டன அல்லவா? பிரிட்டிஷார் நமது உண்மையான குறைகளை அறியாமலிருப்பதனாலேதான் அவற்றை நிவாரணம் செய்யாமலிருக்கிறார்கள் என்றும், நமது குறைகள் இன்ன என்று தெளிவாக எடுத்துக் காட்டி விடுவோமானால் உடனே அவற்றை நீக்கி விடுவார்கள் என்றும் நமது ஜனத் தலைவர்கள் நம்பினார்கள். அந்த சமயத்தில் காங்கிரஸ் முறைகள் ஒரு மாதிரியாக ஏற்பட்டன. இப்போது அந்த எண்ணம் மாறிவிட்டது. பிரிட்டிஷா ரிடம் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் அவர்கள் தமது சௌகரியங்களுக்குச் சிறிது பிரதிகூலமாயிருக்கும் சீர்திருத்தங்களை ஒரு நாளும் செய்யப் போவதில்லை. இவ்வாறு நாம் அறிந்து கொண்டதற்கப்பால் நமது காங்கிரஸ் முறைகளை மாற்ற வேண்டும் என்பது நமது கடமையாகின்றதல்லவா?… இந்த வருஷத்துக் காங்கிரஸ் நடக்கும் முன்பாகவே நமது தலைவர்கள் இவ்விஷயத்தில் சரியானபடி நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.”
1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவிலே நடைபெற இருந்தது காங்கிரஸ் மகாநாடு. அம்மகா நாட்டின் போக்கை உருவாக்கினார் பாரதியார் என்றால் அது மிகையாகாது. காங்கிரஸின் போக்கை உருவாக்கும் வகையிலேதான் மேற்குறித்தவாறு எழுதினார் பாரதியார்.
கல்கத்தா காங்கிரசுக்குத் தலைவர் யார்? வங்காளத்திலே புதிய கட்சியின் தலைவராக விளங்கிய விபினசந்திர பாலர் , திலகரே தலைவராக வர வேண்டும்’ என்று விரும் பினார்; விரும்பியதோடு மட்டு மன்றி ஊர் ஊராகச் சென்றும் பேசினார். ஆனால் கல்கத்தா காங்கிரசின் ‘ஸ்டேஜ் மானேஜராக விளங்கிய நிதானக் கட்சியினர் திலகர் தலைவராக வருவதை விரும்பவில்லை; பலவாறு முயன்றபின் தாதாபாய் நவுரோஜியையே கல்கத்தா காங்கிரஸ் தலைவராக்குவது என்று முடிவு செய்தனர். தாதாபாய் நவுரோஜியும் கல்கத்தா காங்கிரசுக்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டார்.
நிதானக் கட்சியினர் என்ன நினைத்தனர்? தாதாபாய் தங்கள் பக்கம் நிற்பார் என்று எண்ணினர்.
“காங்கிரஸ் தலைமைக்குத் திலகர் வரக் கூடாது என்றும், தாதாபாய் நவுரோஜியே வரவேண்டும் என்றும் சொல்லும் ஜனங்களிலே சிலா தாதாபாய் நவுரோஜி நிதானக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தப்பான நம்பிக்கை.
“பிரிட்டிஷாரை சும்மா கெஞ்சிக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. இந்தியர்கள் தமது நலத்தைத் தாமே தேடிக் கொள்ள வேண்டும்” என்ற கோட்பாட்டிலே தாதாபாய் நவுரோஜி திலகரைக் காட்டிலும் மிஞ்சியவர். இதையறியாத சிலர், தாதாபாய் நவுரோஜி சென்னை வக்கீல்களைப்போல கோழை ராஜ தந்திரக் கட்சியைசி சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.” (17 – 11 – 1906)
இவ்வாறு “இந்தியா” பத்திரிகையில் எழுதினார் பாரதியார். ‘தாதாபாய் காங்கிரசுக்குத் தலைமை வகிக்க வேண்டும்’ என்று நிதானக் கட்சியார் தீர்மானித்த உடனே புதிய கட்சியார் அதை ஆதரித்தனர்; எதிர்க்க வில்லை. திலகர் தலைமை வகிக்க வேண்டும் என்பதையும் வற்புறுத்தாமல் விட்டனர்.
பிறகு என்ன? புதிய கட்சியார் தங்களுக்கு பலம் திரட்டுவதில் முனைந்தனர். இது பற்றி “இந்தியா” பத்திரிகையில் 1906 டிசம்பர் 22ந்தேதி பின்வரும் செய்தி வெளியிடப்பட்டது;
“காங்கிரஸ் இனிது நடைபெறும் பொருட்டு எல்லா வகுப்பைச் சேர்ந்த ஜனத் தலைவர்களும் அரிய முயற்சிகள் செய்து வருகிறார்கள். இந்த சமயத்தில் நமது புதிய கட்சித் தலைவர்கள் சும்மா இருக்கவில்லை. காங்கிரஸ் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே இந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏழு பேர் ஒருங்கு சேர்ந்து ஒரு மீட்டிங் கூடி காங்கிரசில் இப்போது நடக்க வேண்டிய முக்கிய திருத்தங்களைப் பற்றித் தமக்கு நியாயமாகப் புலப் படும் ஆலோசனைகள் செய்ய நிச்சயித்துள்ளார்கள்.
சென்னையில் புதிய கட்சிக்கு ஒரே பிரதிநிதியாய் இருக்கும் நமது தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் மேற்படி சபைக்கு அவசியம் வந்து சேரவேண்டும் என்று ஸ்ரீ விபின சந்திரபாலரும், ஸ்ரீ திலகரின் உயிர்த் துணையாகிய ஸ்ரீ காபாதேயும் வற்புறுத்திக் கடிதம் எழுதியபடியால், இப்பத்திராதிபா அங்கு செல்கின்றார்.
மேற்கண்ட செய்தியிலிருந்து – நமக்கு என்ன தெரி கிறது? வங்கத்தில் புதிய கட்சித்தலைவராக விளங்கிய விபின் சந்திரபாலர் பாரதிக்கு அக்கட்சியில் எவ்வளவு முக்கிய இடம் அளித்திருந்தார் என்பது தெரிகிறது. திலகர் பெருமானின் உயிர்த்துணைவராகிய காபாதேயின் அழைப்பு எதைக் குறிக்கிறது? திலகர், பாரதியை எவ்வளவு முக்கியமானவராகக் கருதினார் என்பதையே குறிக்கிறது.
‘பாலபாரதம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்று ஏற்படுத்தி யிருந்தார் பாரதியார். இச்சங்கத்தின் மூலம் புதிய கட்சிக் கொள்கைகளைப் பரப்பி வந்தார். இந்த சபை யானது ‘இந்தியா’ ஆபீசில் கூடியது. கல்கத்தா காங்கிரசுக்கு டெலிகேட்டுகளாகப் பின் வரும் பெயர் களைத் தெரிந்தெடுத்தது.
1. சி. சுப்பிரமணிய பாரதி
2. எம், நரசிம்மம்
3. வி. நரசிம்மம்
4. ஆர். சபாபதி.
கல்கத்தா காங்கிரசுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் பொருட்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப் பொருட்காட்சி பற்றி “இந்தியா” பத்திரிகையிலே ஒரு தலையங்கம் எழுதினார் பாரதியார். 1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ந் தேதியிட்ட ‘இந்தியா’விலே அது வெளியிடப்பட்டுள்ளது. அது வருமாறு:
“பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் இந்தியரை அரசாட்சி புரிவதில் மிகவும் சமர்த்தான முறைகளை அனுசரிக் கிறார்கள் என்பதும் அம்முறைகள் எப்பொழுதும் அனுகூல மடைந்து வருகின்றன என்பதும் வெளிப்படையாய் தெரி கின்றது. ஜனங்கள் மிஞ்சுகிற சமயம் கெஞ்சுவதும், கெஞ்சுகிற சமயம் மிஞ்சுவதும் அவர்களுடைய பரிசுத்த முறைகளாம். அவ்வாறே இப்போது வங்காளத்து ஜனங் களும் ஜனத் தலைவர்களும் இருக்கும் நிலையை அறிந்து அதற்கேற்ற சில யோசனைகள் செய்தார்கள். பொருட் காட்சி நடத்தும் ஜனத்தலைவர்களுக்கும் கூட ஹால்களும் இடங்களும் கொடுத்துப் பரப்பினார்கள். பொருட்காட்சி விஷயத்தில் தங்களுக்கு மிகுந்த அநுதாபமும் உத்ஸாகமும் இருப்பது போல் நடித்தார்கள். பற்பல விளம்பரங்கள் விடுத்தார்கள்.
இதைக் கண்ட பாபு சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய ஜனத்தலைவர்கள் கவர்ன்மெண்டாருடைய உட்கருத்தை அறியாமல் அவர்களைப் பூரண விசுவாச முடையவர்கள் என்று எண்ணி மனங்குளிர்ந்து லார்டு மிண்டோவையே பொருட்காட்சியைத் திறக்கும்படி வேண்டினார்கள். இது கல்கத்தா மாணாக்கர்களுக்கும் புதுக் கட்சித் தலைவர்க ளாகிய ஸ்ரீ விபின் சந்திர பாலர் முதலியவர்களுக்கும் சரியாகத் தோன்றாமையால் சரியில்லை யெனத் தடுத்தார்கள். தடுக்கவே, இத்தனை காலமும் சுதேசியத்துக்கு உழைத்து வந்த மாணாக்கர்களை வாலண்டியர்களாகச் சேர்ப் பதின்றித் தள்ளிவிட்டார்கள். என்ன மடமை! கேவலம் விதேசியாகிய லார்டு மிண்டோவையே சந்தோஷிப்பிக்க வேண்டும் என்ற பேராசையால், இந்தியாவுக்குத் துணையாக நின்று சுதேசியத்துக்கு உழைக்கும் மாணாக்கர்களைத் தள்ள லாமா? அந்நியருடைய வாசனையே ஆகாது என்று விரதம் பூண்டு வளரும் சுதேசியத்தில் லார்டு மிண்டோவை ஏன் கலக்க வேண்டும்? இதனால் சுதேசியத்துக்கு ஏதேனும் நன்மையுண்டா? வாய்ப்பேச்சு மட்டும் லார்ட் மிண்டோ இனிமையாய் பேசுவாரேயன்றி சுதேசியத்தில் அவருக்கு உண்மையான பற்று இருக்கும் என்று நம்பலாமா? பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது போல், சுதேசியப் பொருட்காட்சி. ஒருவரையும் அறியாமல் மிண்டோ காட்சி யாய் போய்விட்டது.”
பாரதியார் கல்கத்தா காங்கிரசுக்குப் போனார் என்று சொல்லவும் வேண்டுமா? கல்கத்தா காங்கிரசுக்குப் போனார்; புதிய கட்சித் தலைவர் பலருடன் நெருங்கிப் பழகினார்; கலந்து பேசினார்.
கல்கத்தாவுக்கு அருகே ‘டம்டம்’ என்ற பகுதியிலே நிவேதிதா தேவி இருப்பதாக அறிந்தார். அவரைச் சந்தித்தார்.
நிவேதிதை யார்?
சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டிலே வீர முழக்கம் செய்து விட்டு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே தொடர்ந்து பிரசங்கம் செய்து வந்தார். ஏராளமான மக்கள் வந்து சொற்பொழிவு கேட்டனர். அப்படிக் கேட்டவர் பலருள் ஓர் இளம் பெண்ணும் இருந்தார். அப்பெண் மணியின் பெயர் மார்க்கரெட் நோபிள் என்பது. இவர் ஓர் ஐரிஷ் பெண்மணி. அயர்லாந்து தேசம் பிரிட்டனின் விலாப் பக்கம் உள்ள நாடு. இந்த அயர்லாந்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆண்டு வந்தது பிரிட்டன். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வந்தது அயர்லாந்து. எனவே அங்கு எல்லாருடைய ரத்தத்திலேயும் சுதந்திர வேகம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நாட்டிலே பிறந்த இளம் பெண் எப்படியிருப்பாள்?
மார்க்கரெட் நோபிள் சுவாமி விவேகானந்தரின் ஆவேசச் சொற்பொழிவிலே பெரிதும் ஈடுபட்டார். அவரைப் பின் தொடர்ந்தார்; இந்திய நாட்டுக்கு வந்தார். நிவேதிதை என்று அவருக்குப் பெயர் சூட்டினார் சுவாமி விவேகானந்தா . கல்கத்தா அருகே இருந்து கொண்டு இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வந்தார் நிவேதிதை.
இவரை தரிசித்தார் பாரதியார்; இவரிடம் உபதேசம் பெற்றார்; உணர்ச்சி பெற்றார்; பின்வருமாறு பாடினார்.
“அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நா
டாம் பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்பைத்தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன். ”
கல்கத்தா காங்கிரசின் போது ஸ்ரீ விபின சந்திர பாலருடன் நெருங்கிப் பேசினார் பாரதியார்; சென்னைக்குவருமாறு அழைத்தார். சென்னை திரும்பியவுடனே பாலரை வரவேற்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாரதியார் : 1907ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ந்தேதி “இந்தியா” விலே பின்வருமாறு எழுதினார்:
“இந்தியா இப்போதிருக்கும் இழிந்த நிலையிலிருந்து கை தூக்கி விடும் பொருட்டாக சுதேசியம் என்ற தெய்வம் வந்திருக்கிறது. இத்தெய்வம் நமது நாட்டிலே ஒவ்வொரு பாகங்களிலும் ஒவ்வொரு ரூபமாக அவதரிக்கின்றது. சிற்சில இடங்களிலே அவதாரங்கள் எல்லாக் கலைகளும் பொருந்தின வாகவும், சிற்சில இடங்களிலே கலைகள் குறைந்தனவாகவும் ஏற்பட்டிருக்கின்றன. பரிபூரண கலாவதாரம் என்று ஸ்ரீ திலக மகரிஷியைக் கூறலாம். அவருடைய பிராண சிநேகிதரும், கீழ் பெங்கால் முழுவதும் முடிசூடா அரசரு மாக விளங்கும் ஸ்ரீ விபினசந்திரா சுதேசிய தெய்வத்தின் வழிகாட்டவதாரமாகக் கருதுவதற்குரியவர், ஹநுமான் எப்படி ஆகாரம் முதலிய எவ்விதமான லோக போகங் களையும் இச்சிக்காமல், ராம ராம’ என்று தியானம் செய்து கொண்டே ஆனந்தமடைந்திருந்ததாகச் சொல்லப் படுகிறதோ, அதுபோல ஸ்ரீ விபின சந்திரரும் சதாகாலமும் பாரத நாட்டின் அபிவிருத்தியைப் பற்றியே தியானம் செய்வதிலேயே நாள் கழிக்கின்றார். ஹநுமானுக்கு எப்படி ராமாமிருதம் ஜீவனமாக இருந்ததோ அதுபோல விபின சந்திரருக்கும் “பாரதாமிருதம் ஜீவனம்” என்று கூறுதல் மிகவும் பொருந்தும். இவர் இன்னும் சில வாரங் களுக்குள்ளே சென்னை மாகாணத்துக்கு யாத்திரையின் பொருட்டாகவும் ஜன எழுப்புதலின் பொருட்டாகவும் வருகின்றார் என்ற நற்செய்தியை மகா சந்தோஷத்துடன் தெரிவிக்கின்றோம். தெய்வத்திற்குச் செய்யும் உபசரணையைக் காட்டிலும், தொண்டர்களுக்குச் செய்யும் உபசரணைகள் மிகவும் பலிதமுடையன என்பது ஆரிய சம்பிரதாயம். அதுபோலவே பாரத தேவியிடம் பக்தி யுடைய எல்லா ஜனங்களும் மேற்படி தேவியின் முக்கிய பக்தர்களில் ஒருவராகிய இவருக்கு ராஜோபசாரம் செய்யக் கடமைப்பட்டிக்கிறார்கள். பாரததேவியின் விரோதிகள் இவரிடத்திலும் விரோதம் செலுத்துவார்கள் என்பதில் ஆக்ஷேபமில்லை. நமது இந்தியா’ பத்திரிகையின் பெயரை ஒட்டி இவருக்கு ஏதேனும் தக்க உபசாரம் செய்ய வேண்டு மென்ற எண்ணம் நமக்கிருக்கின்றது. இவ்விஷயத்தின் பொருட்டு ஒரு நிதி சேகரிக்க எண்ணியிருக்கிறோம். ஒவ்வொரு சந்தாதாரரும் ஒவ்வொரு ரூபாய் அனுப்பும் பக்ஷத்தில் நமக்குப் பெரிய தொகை சேர்ந்துவிடும்.”
இவ்வாறு வேண்டுகோள் ஒன்று வெளியிட்டார் பாரதியார். இதுவரை இதற்கு நிதியளித்தவர் ஜாபிதா ஒன்றையும் வெளியிட்டார். அந்த ஜாபிதாவிலே முதலில் ‘இந்தியா’ பத்திராதிபர் பெயரும், இந்தியா’ பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் பெயரும் உள்ளன. இந்தியா பத்திராதிபர் ஸ்ரீ திருமலாச்சாரியார் 15 ரூபாயும், பாரதியார் 5 ரூபாயும் அளித்துள்ளனர். இன்னும் சிலர் நிதியளித்திருக்கின்றனர், ஆக , அன்றைய நிதி வசூல் மொத்தம் ரூ.55.
1907-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ந் தேதி விபின சந்திர பாலா வருகை பற்றி எழுதத் தொடங்கினார் பாரதியார்; பிறகு தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.
“ஸ்ரீ விபின் சந்திர பாலர் இன்னும் வெகு சீக்கிரத்தில் தென் மாகாணத்துக்கு வந்துவிடுவார். அவர் வரும் தேதி இன்ன தென்பதை வரையறுத்து மற்றொரு முறை வெளி யிடுவோம். ‘இந்தியா’ பத்திரிகை சந்தாதார்களும் வேறு சில உபகாரிகளும் இவருக்கு உபசரணை நடத்தும் நிதியின் பொருட்டு, பணம் அனுப்பியிருக்கிறார்கள். முழு ஜாபிதா அடுத்த தடவை பிரசுரிக்கப்படும். இது நிற்க. வாயால் மட்டும் நாமெல்லாரும் விபின சந்திர பாபுவை ஸ்தோத் திரம் செய்து கொண்டிருந்து விட்டு, அவர் வரும் சமயத்தில் தக்கபடி மரியாதை செய்யாதிருப்போமானால் கடமையிலே தவறியவர்களாயிருப்போம். இதைத் தமிழ் நாட்டின் சுதேசிகள் கவனிக்கும்படி வேண்டுகிறோம்.” (இந்தியா -9-2-1907)
‘இந்தியா’ பத்திரிகையில் மேலும் எழுதினார் :
“காக்கிநாடா, விசாகப்பட்டினம், ராஜ மகேந்திரபுரம் முதலிய நகரங்களில் எல்லாம் விபின சந்திர பாபு ஸ்வராஜ்யம், ஸ்வதேசியம் முதலிய தேச தர்மங்களைப் பற்றி உபந்நியாசங்கள் செய்து வருகின்றார். சென்னை “பால பாரத” சங்கத்திலிருந்து இவரை அழைத்து வரும் பொருட்டு ஒரு பிரதிநிதி அனுப்பப்பட்டிருக்கிறார். இங்கு இரண்டு வாரங்களுக்குள்ளே நிச்சயமாக வந்து விடுவார்.” (9-4-1907)
‘பால பாரத’ சங்கத்திலிருந்து ஒரு பிரதிநிதி அனுப்பப் பட்டிருக்கிறார் என்று மேற்கண்ட கட்டுரையிலே குறிப்பிடப் பட்டுளதே! அந்தப் பிரதிநிதி யார்? பாரதியாரே.
பாரதியாரின் பிரச்சார முறை எவ்வளவு பிரமாதமா யிருக்கிறது பாருங்கள் !
ஏப்ரல் மாதம் 27 – ந் தேதி விபின் சந்திர பாலா சென்னை வந்து சேர்ந்தார். அப்போது பாரதியார் • இந்தியா’ பத்திரிகையில் எழுதினார் :
“புதுக் கட்சித் தலைவராகிய ஸ்ரீஜத் பாபு விபின சந்திர பாலர் இன்று தினம் சென்னைக்கு வருகிறார். இவரை வரவழைத்தது சென்னையிலுள்ள சில புதுக் கட்சியார்களே யன்றி பழைய ஜியார்களல்ல. பரம யோக்கியர்கள், இந்தியர்களுக்கும் இந்திய காங்கிரஸ் சபைக்கும் தீமை செய்து அவமதிப்பவராய் இருந்த “மெயில்” பத்திராதிபரா யிருந்த ஒரு பரங்கிப் பிள்ளைக்கு மாப்பிள்ளை விருந்து செய்து உபசரிப்பார்களேயன்றி, ஸ்ரீ விபின் சந்திர பாலா போன்ற சாமான்ய மனிதருக்கு உபசாரம் செய்ய முன்வர மாட்டார்கள். ஏனென்றால் ஸ்ரீ பாலரால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளிலும், காலஞ் சென்ற H. K. பீச்சாம் என்னும் பரங்கிப் பிரபுவால் அதிக நன்மை விளைந்திருப்ப தாய் இந்த மகாத்மாக்களின் திருவுளத்திலே பதிந்திருக் கிறது. ஆகா! என்ன செய்யலாம். நமக்கு யாதொரு சம்பந்தமற்றவரும், நமக்கு நேர் விரோதியாய் இருந்தவரு மாகியவருக்கு சம்பந்தி உபசாரம் செய்துவிட்டு, இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்துவும் இந்தியாவின் பொருட்டு இந்தியாவிலுழைத்துக்கொண்டு வரும் தேசாபி மானியுமாகிய ஸ்ரீ விபினரை உபசரணை செய்வதற்குப் பின் வாங்குவார்களேயானால் இப்படிப் பட்டவர்கள் இந்தியர்கள் தானா? இவர்களிடமும் தேசாபிமானம் என்பது மருந்துக்காகிலும் கிடைக்குமா என்பதைப்பற்றி அறிஞர்கள் அறிந்து கொள்ளலாம். இவர்கள் ஜனத் தலைவர்கள் தானா? இவர்களை ஜனங்கள் மதிக்கலாமா? என்பதை பொது ஜனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மனதிலே நல்லெண்ணம் இருக்கிறதா? இல்லையா என்பது வெளி நடையில் திட்டமாய் விளங்கிவிடும்.”
சென்னையிலேயிருந்த பிரமுகர்கள் விபின சந்திர பாலருக்கு உபசாரம் செய்ய முன் வரவில்லை. ஏன், விபின் சந்திரர் பேசிய கூட்டங்களில் தலைமை வகிக்கக்கூட எவரும் முன் வரவில்லை. இப்படியாக இவர்கள் விபின சந்திரரை பகிஷ்கரித்தார்கள் . பயம்! பயம்!
மயிலாப்பூர் பிரமுகர்களின் இந்த நடவடிக்கையால் சீற்றங் கொண்டார் பாரதியார். ‘மெயில்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பீச்சாம் என்ற வெள்ளையருக்கு விருந்துபசாரம் செய்தார்கள் சென்னைப் பிரமுகர்கள்; பாராட்டுரைகள் வழங்கினார்கள். ஆனால் விபின சந்திர பாலருக்கு ஏதும் செய்யவில்லை. அதனால் சீற்றங்கொண்ட பாரதியார் மேலே குறிப்பிட்டவாறு “இந்தியா” பத்திரிகையில் எழுதினார்.
விபின சந்திர பாலர் சென்னையில் நிகழ்த்திய சொற் பொழிவுகள் பற்றி பாரதியார் தமது “இந்தியா” பத்திரி கையிலே ஒரு கட்டுரை வெளியிட்டார். மேற்படி கட்டுரை 1907-ம் ஆண்டு மே மாதம் 11ந் தேதியிட்ட “இந்தியா” பத்திரிகையிலே வெளிவந்தது. அதன் சில பகுதிகள் வருமாறு :
“……. இவரது வாக்குத் திறமையும், விவகார நுட்பமும், தேச பக்திப் பெருமையும் அளவிட்டுக் கூற முடியாதன. பதினாயிரக் கணக்கான ஜனங்கள் திருவல்லிக்கேணி சமுத்திரக்கரை மண்ணிலே சென்ற சில தினங்களாக இவரது அற்புத உபந்நியாசங்களைக் கேட்டுப் பரவச மடைந்து விட்டார்கள். இவர்மீது விரோதத்துடன் சென்றவர்கள் கூட, இவரது உபந்நியாசங்களைக் கேட்டவுடனே இவருக்கு அடிமைகளாய் விட்டார்கள். புதிய கட்சி என்றால் ஏதோ வாலிபர் செய்யும் குறும்பென்று நினைத்து வந்த சில சென்னை மேதாவிகள் கூட, இவரது உபந்நியாசங்களைக் கேட்டவுடன், புதிய கட்சியார் சொல்லும் முறைகளைத் தவிர நமது பாரத தேசம் உன்னதம் பெறுவதற்கு வேறு வழிகளே கிடையாதென்று தெரிந்து கொண்டு விட்டார்கள். புதிய கட்சியாரிடம் வெறுப்புக் காட்டி வந்த ‘ஹிந்து’ ‘ஸ்டாண்டர்ட்’ ‘இந்தியன் பேட்ரியட்’ என்ற பத்திரிகைகள் இப்போதுவிபின சந்திர பாலரைப்பற்றிப் பக்கம் பக்கமாக ஸ்தோத் திரங்கள் எழுதத் தலைப்பட்டு விட்டன. ”ஹிந்து” பத்திரிகை விபின பாபுவின் விவகாரங்களையும், கொள்கை களையும் தழுவிப் பேசத் தொடங்கி விட்டது. புதிய கட்சிக்கும் பழைய கட்சிக்கும் இடையிலே அங்கு பாதி இங்கு பாதியாக நின்ற “கதேசமித்திரன்” பத்திரிகை இப் போது முற்றிலும் நமது பட்டணத்தைச் சார்ந்து விட்டது. சென்னையிலே எங்கு பார்த்தாலும் விபின் சந்திர பாபுவைப் பற்றியே பேசுகிறார்கள். எங்கே கேட்டாலும் அவருடைய புகழ்ச்சிதான். தெருக்களிலே ‘வந்தே மாதரம்’ வெகு சாமானியமான வசனமாகி விட்டது.
“சென்ற காங்கிரஸ் கல்கத்தாவிலே கூடிய காலத்தில் சில மயிலாப்பூர் வக்கீல்கள் கல்கத்தாவிற்குப் போய் சென்னை மாகாண முழுவதும் பழைய கட்சிக்கு அநுகூல மாகவேயிருக்கும்படி தாம் நிபந்தனை செய்திருப்பதாக டம்ப நடிப்பு நடித்துவிட்டு வந்தார்கள். விபின பாபுவை அப்போது இங்கே வரும்படியாகக் கேட்டுக் கொண்ட நாம், அவர் இங்கே வரும் பக்ஷத்தில் மயிலாப்பூர் வக்கீல்கள் செய்து கொண்ட டம்பம் வெறும் பொய் என்பதை நேரிலே கண்டு கொள்வார் என்று நமது பத்திரி கையிலே தெரிவித்திருந்தோம். இப்போது நாம் சொல்லியது முற்றிலும் வாஸ்தவமாக முடிந்து விட்டது. மயிலாப்பூர் வக்கீல்கள் வெளியே தலையை நீட்டவில்லை. வீடுகளுக்குள்ளே பதுங்கியிருப்பவர்களும் வெளியூர்களுக்கு ஓடுபவர்களுமாக இருக்கிறார்கள். இந்தப் புலிகள் கல்கத்தாவிலே செய்து கொண்ட டம்பத்தைப் பார்த்தால் சென்னை மாகாண முழுதும் இவர்கள் உள்ளங்கைக்குள்ளே அடங்கியிருக்கிற தென்று மற்ற மாகாணத்தார் நினைக்கும் படியாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ இவர்கள் இருக்குமிடத்தையே காணவில்லை.”
திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய மகாகவி பாரதியார் (புதுமைக் கண்ணோட்டம்) - [ நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்] எனும் நூலில் இடம்பெற்ற இப்பதிவு பாரதியார் நினைவு நூற்றாண்டு நிறைவை முன்னிட்டும், மகாகவி பாரதியார் செயல்பாடு குறித்து வாசகர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலும் மட்டுமே விமர்சனம் இணையதளம் சிறப்பு பகிர்வுக்காக தட்டச்சு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
நூல் : மகாகவி பாரதியார் ( புதுமைக் கண்ணோட்டம்)
எழுதியவர் : சக்திதாசன் சுப்பிரமணியன்
பதிப்பகம் : பாரி நிலையம் ; சென்னை.
முதற் பதிப்பு : 1980