பாரதி நூற்றாண்டு இது. நாம் கண்ட புதுமை பாருக்கும் அப்படித்தான் என்கிறேன். பாரதி என்றொரு சொல் தான் எத்தனை வலிமையை உச்சரிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை நினைக்கையிலும் ஒவ்வொரு முறை உலகை அசைக்கும் பாரதி… வந்து தங்கிய காலம் கொஞ்சமாகினும்…. வருகை உவகை பூமிக்கு.

பாகீரதியின் பேரனுக்குத்தான் எத்தனை எத்தனை சிறகுகள். செல்லம்மாவின் கணவனுக்கு தான் எத்தனை எத்தனை தீர்க்கம். கண்ணம்மாவின் காதலனுக்கு தான் எத்தனை எத்தனை ஆர்வம்.

காலத்துக்குமான தலைவன் பாரதி. காலனுக்கும் அப்படித்தான் என்று தலை குனிந்த காலனை நாம் அறிவோம். வாழ்ந்தது 39 ஆண்டுகள். அதில் எழுதாத ஆண்டுகள் 6. எத்தனை அலைக்கழிப்புக்கிடையே அத்தனையும் கவிதையாய் ஆனது தான் அவன் வாழ்வின் அற்புதம். பாரதியை நினைக்கும் போதெல்லாம் அக்கினிக் குஞ்சு ஆழ்மனதில் சுடர் விடுவதை உணர்கிறேன். வெந்து தணிய வேண்டியது மனித கசடுகள் என்பதைப் புரிகிறேன்.

உள்ளத்திலே உண்மையுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்ற பாரதி… விடுதலை மனதின் ஜுவாலை. வாழ்வின் ருசி அறிந்த ஜென். வறுமை வாட்டிய போதெல்லாம் வாளை எழுதுகோலில் சுழற்றியவன். மீசை முறுக்கி… வழக்கமாக வரும் மேக ஊர்வலத்தைக் களைத்தவன். அவன் வேண்டியதெல்லாம் ஞான மழை. அவனைத் தீண்டியதெல்லாம் கான மழை. பெண் விடுதலையைப் பேரின்பமாய் நினைத்தவன். தன் விடுதலையை ஆங்கிலேயன் பறித்த போதும் கவிதையாய் சிரித்தவன். அவன் கண்ட குஞ்செல்லாம் அக்கினிக் குஞ்சென்று அறிவோம். அவன் பாட்டுக்கு தத்தகிட போடும் தாளங்கள் ஆகுவோம்.

தினமும் துணிகளைத் துவைத்து உலர்த்துவது போல மன கசடுகளைத் துவைத்து தினமும் உலர்த்தி விட வேண்டும். புது சூரியனாய் ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ள வேண்டும் என்று யதுகிரி அம்மாள் பாரதி சொன்னதாகச் சொல்லும் சொற்களில் தான் எத்தனை தூய்மை. பிரம்மாண்டங்கள் மிக மெல்லியதாக பாரதியைப் போலத் தான் அரங்கேறும்.

எத்தனை எழுதினாலும்… சித்தனைச் சுமக்கும் போதி வரிகள் பாரதிக்குத் தீராது. புத்தனே சொல்லுவான்…ஆசையே துன்பத்துக்குக் காரணமெல்லாம் பாரதியைச் சேராது.

பாரதியைக் கொண்ட பிறகு தான் என் மனதின் துயரங்கள் தூள் தூளாகின. என் பயண தூரங்கள் தூபங்கள் ஆகின. தேடிச்சோறு நிதம் தின்று தான் வாழ்வின் சரியான பாதையைக் காட்டியது. நான் வீழ்வென்று நினைத்தாயோ தான் அறிவுச்சுடரை ஏந்தச் செய்தது.

எட்டயபுரத்தில் பாரதி வீட்டில் நிற்கையில்… பாதி ரதி ஆனது போல உணர்ந்தேன். தான் பிறந்த இடத்தில் சிலையாய் நிற்கும் பாரதியோடு நிற்கையில்…. பாயும் ஒளி நானும்தான் என்றுணர்ந்தேன். புழக்கடையில் நின்று… கிணறு எட்டிப் பார்த்து… மாடிப்படி அருகே… உள்ளறை ஒன்றில் நின்று… உயிர் உருக…..” பா……ரதி…” என்றிழைத்த போது… ” சொல்லும்” என்று கேட்டது உடன் வந்திருந்த தம்பியிடம் கேட்டதா என்றேன்.

சிறு நிச்சலனத்துக்கு பின் “அது எனக்கு மட்டும் கேட்டது” என்றேன்.

“தரித்திரம் போகுது செல்வம் வளருது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்”

அத்தனையும் தீர்க்கம். நேர் கொண்ட பார்வையில்…. நிமிர்ந்த நன்னடையில்…. ஒளி வீசும் உத்தம வரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.

“படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்… போவான் போவான் ஐயோவென்று போவான்” – ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் ஓத வேண்டிய மந்திர சொல். ஆரவாரம் தவிர்த்து ஆழ்ந்து காண். அது மானுட சொல். பிரபஞ்சம் எப்போதேனும் நிகழ்த்தும் முன் பின் அற்ற மாயம் இந்த நூற்றாண்டில் பாரதியாய் பிறந்திருக்கிறது.

புதுமைகள் தான் பாரதியின் வேதம். சக மனிதர்கள் தான் பாரதி கண்ட பாரதத்தின் யோகம். சுற்றி வளைத்துப் பேசத் தெரியாத… சூட்சுமம் சிறிதும் அறியா அச்சம் தவிர்த்த ஆண்மை தவறேல்… இவனொரு எழுத்து பிரம்மா. சிறுகதை வடிவத்தை ‘சின்ன சங்கரன்’ கதையில்…. ஒரு சித்திரமாகவே வடித்தெடுத்த முதல் புள்ளி. எட்டயபுர ஜமீனுக்கு ஆமாம் சாமி போட்டிருந்தால் சிம்மாசனத்தில்… சும்மாவே அமர்ந்திருக்கலாம். அது என்ன சாமி இது என்ன சாமி என்று நக்கலும் நையாண்டியுமாய் போட்டுத் தாக்கியதில் தான் புதுச்சேரி புறப்பட வேண்டியதாயிற்று. மாறு வேஷ காவலர்கள் ஆங்காங்கே சுற்றினாலும்….. குவளைக்கண்ணன் போன்ற உயிர் காக்கும் நண்பர்கள் எங்கும் கொண்டார்.

பாரதி சூரிய சுடர் எனும் போதே பாரதி நிலவொளியும் தான் எனலாம். பாரதி இருள் எனும் போதே பாரதி கொஞ்சம் ஒளியும் தான் எனலாம். இருள் என்பதே குறைந்த ஒளி என்றவனுக்கு இருள் என்பதும் ரசனை தானே. குரலில் வனப்பு கொண்ட எழுது கோலன். தரத்தில் சிறிதும் சமாதானம் கொள்ளா எழுத்து சாலன். தன் வாழ்விலிருந்தே தனக்கான இலக்கியத்தைக் கண்டடைந்தவன் பாரதி. அதனால் தான் அதுவரை இருந்து மூச்சு மொழி அதன் பிறகு பேச்சு மொழியானது.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” இன்று வரை பேசு பொருளாகவே இருக்கிறது. சோர்ந்தோருக்கெல்லாம் உந்து சக்தி அவ்வரி என்றால்… ” தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே….காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்…” அவரவருக்கான சொந்த வரி. எல்லோருக்குள்ளும் ஒரு பாரதி இருக்கிறான். அதனால் தான் அவன் எல்லைகளற்று இல்லையென்காமல் இன்றும் இருக்கிறான்.

நீலக்கடலைத் தாண்டிடும் பாதங்களின் ஆர்ப்பரிப்பை என்ன செய்வது. குயில் பாஷை அறிந்து கொண்டதைச் சொல்லலாமா வேண்டாமா. காக்கை குருவிக்கு அரிசி வேண்டுமே… யாரிடம் கேட்க. இன்னொரு முறைகூட தூக்கி வீசட்டும்… அதற்காக யானை அருகே செல்லாமல் எப்படி. நேரமற்று எட்டிக் குதிக்கும் அருவியை உச்சந்தலையில் யாசகம் வாங்க வேண்டுமே. தீர்த்தக்கரை தனிமையைப் போக்க… ஒரு பொடி நடை வேண்டும் தானே. சாந்து நிற பூனை என்ன… சாம்பல் நிற கழுதை என்ன… கொஞ்சி குலவும் அன்பு நீளட்டும். வானிலிடத்தையெல்லாம் வந்து தழுவும் வெண்ணிலவுக்குத் துணை நிற்பதுதானே முறை. பாரதியாய் இருப்பது செல்லம்மாவுக்கு மட்டுமல்ல பாரதிக்கும் தான் கஷ்டம். பாரதியைப் புரிகின்ற போது அவன் புருவங்கள் கூட கவிதை என்றறிக.

நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் முடிக்க நினைப்பான் பாரதி. ஆள் கொஞ்சம் புலம்பல் பார்ட்டி என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். தன் தேகம் குறித்தான தாழ்வு மனப்பான்மை அவனுக்கு இருந்திருக்கிறது. ஆனாலும் கிறுக்குத்தனங்கள் பாரதிக்கு அழகூட்டின. எப்போதுமே கவிஞர்களின் உலகம் வேறு. அதுவும் பாரதி போன்ற மகாமுனிகளின் உலகம் வேறிலும் வேறு. உள்ளத்தின் நடைபாதையில் பறக்கும் சக்தி அதற்குண்டு.

இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பது பாரதியின் வேதவாக்கு. பச்சை வாழைப்பழம் போதும் கொஞ்சம் பட்டாணியும் சேர்ந்து விட்டால்… சிறுபிள்ளை ஒருவனை தன்னிலிருந்து மெல்ல வெளியிலெடுத்து தன் மடியில் தானே அமரும் வித்தை காட்டும் பாரதியின் குஷி. சிறுபிள்ளையைப் போலத் தான் சாப்பிடுகையில் சோறு சிதறும். சிதறும் ஒவ்வொரு பருக்கையின் சிந்தனையிலும் கவிதை வரும் என்பது தான் கிளைமாக்ஸ்.

மதிக்கத்தக்கக் குணம் உடையார் பாரதி. இவரைக் கண்டு பலர் நயப்பார். சிலர் வெறுப்பார். ஆனாலும் இவரைப் பார்த்து வியக்கும் குணம் பல உண்டு என்று பால்ய நண்பனான சோமசுந்தர பாரதி சொல்வதில்… அன்றைய காலத்தில் பாரதி என்ற ஒற்றை மரம் தன் வேர் பிடிக்க என்ன பாடு பட்டிருக்கும் என்று புரிகிறோம். ஒரு தனித்த கவிஞனின் தவித்த வாழ்க்கையின் தகித்த பொழுதுகள் பற்றி கண் திறவா ஊருக்கு என்ன தெரிந்திருக்கும் என்று புரிகிறது.

தமிழில் தவம், ஆங்கிலத்தில் அசத்தல், கன்னடத்தில் கவனம், தெலுங்கில் சுந்தரம், மலையாளத்தில் மகத்துவம், வங்காளத்தில் வசீகரம், சமஸ்கிருதத்தில் சங்கீதம், பிரெஞ்சில் பிரமாதம், ஜெர்மனில் ஜெம்…. என்று ஒன்பது மொழிகளோடு… இரண்டு கூட்டி தன் கண்களிலும் ஒளி வீசும் வல்லமை தான் பாரதி.

இந்தியா, ஞானபாநு, பாலபாரதா, சக்கரவர்த்தினி, சூர்யோதயா….. ஆகிய இதழ்களின் ஆசிரியர். கவிதை எனும் பிரம்மாண்டத்தை மண் குடத்தில் நிரப்பி எளியோனுக்கும் தலையில் ஏற்றிய சித்தன். ஷெல்லி மீது தீராத பற்று கொண்டு தன் பெயரை ஷெல்லிதாசன் என்று மாற்றிய நூதனன். தன் வயிற்றுக்கு இல்லாத போதும் செல்லமா இரந்து கொண்டு வந்த அரிசியைக் காக்கை குருவிக்கு அள்ளி போட்ட பேரன்பன்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”

அதனால் தான் எழுத முடிந்தது இப்படி. இதனால் தான் இன்னும் வாழ முடிந்தது இப்படி.

செல்லமா ஊருக்குப் போன ஒரு நாள் பாரதிதாசனோடு சேர்ந்து பால் காய்ச்சப் பட்ட பாடு பாரதியின் நகைச்சுவை பக்கத்தை நாசூக்காக வெளிப்படுத்துகிறது. பெண்கள் இல்லாமல் நம்மால் ஒரு நாளை கூட கடத்துவது சிரமம் என்று அவர்கள் பேசிக் கொண்ட சம்பாஷணைகள்…. செல்லம்மாக்களை வழி படச் செய்கிறது.

 

சில காலம் தாடி வைத்து அலைந்ததுண்டு. சிவயோகமெனக் காலம் அதை அனுமதித்ததுண்டு. வழுக்கை பிரச்சனைக்குச் சுலபமாக முண்டாசு கட்டி தீர்வு கண்ட பாரதிக்குத் தலை வாரலே தனித்த தவமாம். அலங்கார பிரியன். அதிரூப மர்மன். கோட்டில் பூ மலர பையில் காகிதமின்றி வெளியே செல்வது கிடையாதாம். வேப்பம் பூவாயினும் இனித்த முகத்தில் சிரித்துத் தான் பழக்கம். முன் கோபத்தைத் தடுக்க தன் மீதே கோபம் கொள்ளும் மென் தீபம் அவன். புறணி பேசுதலை வெறுத்தவன். தரணி செழித்திட நினைத்தவன். நிகழ்ந்திடும் முன்னே நிகழ்வென நின்ற வெளிச்சம் பாரதி. நீண்ட நெடிய வாழ்வியல் தருணங்களின் சிறுகுறிப்பெனத் தான் இவன் டைரி. வாழும் போது செத்தவன் செத்த பின் வாழ்வது தான் கவிதை முரண். காலத்திற்குச் சிறகு பூட்டிய பாரதி காலத்துக்கும் கண்களில் தீ மூட்டி அலைந்தான்.

கையெழுத்தில் எப்போதும் கவனம் இருக்கும். காகிதத்தில் மேலும் கீழும் தாராள இடவசதி இருக்கும். பாரதிக்கு பெரும்பாலும் பென்சிலில் எழுதும் பக்குவம் எப்படியோ வாய்த்திருக்கிறது. எழுத்தில் உருளும் தத்துவம் பாரதிக்குச் சுலபம்.

“மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ” என்று கேட்ட பாரதி அதற்குச் சற்று முன் நடந்த சம்பவத்தால் பாரதி எனும் வள்ளலின் வசீகரத்தை நாம் அறிய வேண்டும்.

கொஞ்சம் கையில் காசு கிடைக்க அதைக் கொண்டு அதைச் செய்ய வேண்டும்….. இதைச் செய்ய வேண்டும் என்று நெல்லையில் ஒரு பாலத்தருகே நண்பர் விஸ்வநாதரோடு உலாவிக் கொண்டிருக்கையில் அவ்வழியே பழக்காரி ஒருத்தி “இன்று எப்படிப் பிழைப்பேன்” என்று புலம்பிச் சென்றதைப் பார்க்கிறார். ஓடோடி நிறுத்தி “அது என்ன நாம் இருக்கையில் அப்படிச் சொல்லலாமோ…..இறக்கு கூடையை” என்றாராம்.

“உம் பசி எம் பசி இல்லையா’ என்று அந்த அன்பின் குரல் வழக்கம் போலவே கர்ஜித்திருக்கிறது.

கூடையில் பாதி பழங்களை அவரும் நண்பரும் சாப்பிட்டு விட்டு மீதி இருந்த 20 பழங்களை ‘பாரதி தந்தான்’ என்று உன் குழந்தைகளுக்குக் கொடுத்து நீயும் சாப்பிடு என்று கையிலிருந்த 6 ரூபாய்களை எடுத்து நீட்டி இருக்கிறார்.

“பழங்கள் 4 ரூபாய் தான். நீங்கள் 6 ரூபாய் தந்திருக்கிறீர்கள்” என்று சொல்லி இருக்கிறாள் பழக்காரி.

அதைக் கேட்ட பாரதி ” உமக்கு எத்தனை குழந்தைகள்…” என்று கேட்க அவள் “இரண்டு பெண்கள்” என்று சொன்னாள்.

நமக்கும் அப்படியே…. என்று இன்னும் இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்து “இரண்டு பிள்ளைங்களுக்கும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடு” என்று சொல்லி…”மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என்று பாடிக் கொண்டே சென்றாராம்.

ஏன் பாரதி காலம் கடந்தும் நடக்கிறான் என்று புரிகிறது தானே.

இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது காந்தியின் வாக்கு. காக்கத் தவறியது தமிழர்களின் போக்கு.

அந்த சின்ன உடலில் தான் ஜீவனோடு சேர்ந்து சீறிய மொழியும் குடியிருந்தது. நின்றால் நடந்தால் பார்த்தால் சிரித்தால் ஏன்… தூங்குகையிலும் அசையும் சிந்தனையில் பாட்டு தான். கவிதை தான். கவிதையின் அங்கமென இருந்தவன். அவன் காலத்தின் தங்கமென நிறைந்தவன். கொட்டும் அருவி போலப் பட்டுத் தெறிக்கும் கவிதைகள்…. இவன் தொட்ட மாத்திரத்தில் எழுதுகோலிலிருந்து சிட்டாய் பறக்கும் வரிகள். சுரண்டலில் வறட்சி தான் மிஞ்சுமேன தெரிவோம். தீராத அகப்பையில் பாரதியே கவிதை தான் என அறிவோம்.

ஒருமுறை தாகூர் மதுரைக்கு வந்திருந்த சமயம்…வங்கத்துக்கு நோபிள் பரிசு கிடைக்கும் போது ஏன் தமிழுக்குக் கிடைக்கக் கூடாது என்று கேட்ட பாரதி… தாகூரையும் பாடச் சொல்லுங்கள்… நானும் பாடுகிறேன். எது நன்றாக இருக்கிறது என்று பார்த்து விடலாம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார். தாகூர் அவர் வாங்கிய நோபிள் பரிசை நமக்களித்து விட்டுச் செல்ல வேண்டியது தான் என்றாராம். ஆனால் அன்றிரவு எட்டயபுர அரண்மனையில்… நண்பரோடு பாஞ்சாலி சபதத்தைப் பேசி… ஆடி…. தீர்ந்து நன்றாகச் சாப்பிட்டு விட்டு அந்த விஷயத்தை மறந்தே போய் தூங்கி போனார். அதுதான் பாரதி. கள்ளம் இல்லா கவிஞன்.

பாரதி வேண்டுமானால் மறந்து போகலாம். நாம் எப்படி மறந்து போக முடியும். எந்த வகையிலும் உலக கவிக்குக் குறைந்த கவி அல்ல பாரதி. ஓரடியாவது மேலே தான். அதிகாரத்தில் மேலுள்ளோருக்குக் காலம் காலமாய் நிஜம் பேசுபவனை இருட்டடிப்பு செய்வது கை வந்த கலை தானே. பாரதிக்கும் அது தான் நிகழ்ந்தது. பாரதியை படிப்போனுக்கும் அது தான் நிகழ்கிறது.

“காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

அன்பின் மிகுதியால் எங்கெல்லாம் மனம் திறக்கிறோமோ அங்கெல்லாம் வரி வரியாய் இதழ் திறக்கும் தமிழ் அமுதம் இது. ஆதலினால் கொள்ளும் காதலின் நிலையை இத்தனை மென்மையாய் எடுத்துரைக்க இனியொரு தரமும் அவனே தான் வர வேண்டும்.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா… எனும் போது அன்பென்பது கொடுக்கும் வகைமை. அன்பென்பது கொட்டும் முரசு என்று உணர்கிறோம்.

நாட்டை காப்பாற்றும் ஒரு ராணுவ வீரனை மனதளவில் பாரதி சுமந்து கொண்டே அலைந்தான். அதன் வெளிப்பாடு தான் அந்த விறுவிறு வீறு கொண்ட நடை. கையை வீசி கண்கள் வீசி நடக்கும் பாரதி எனும் பேரு கொண்ட நடை. ஒரு பக்கம் சுதேசியான பாரதியை ஆங்கிலேயன் விரட்ட….ஒரு பக்கம் இயற்கை விசுவாசியான பாரதியை வாழ்வின் இயல்பு விரட்டி இருக்கிறது.

பாரதி ஓர் ஆத்ம ஞானி. அதனால் தான் கழுதையைக் கூட தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்ச முடிந்தது. நய வஞ்சகர்களையும் மன்னிக்க முடிந்தது. புரியாத சமூகம் அவரைப் பித்தனென்றது. புரிந்த பிறகு சொல்கிறேன். பாரதி நம் சொத்து என்கிறார் செல்லம்மா. கடைய வாசத்தில் பாரதி பொலிவிழந்து போனது தான் உண்மை. வசீகரம் இழந்த உடலில் எலும்புகள் தெரிவதை சகிக்க முடியாமல் தான் கண்டோம் என்கிறார்.

பாரதி… சிறுவயதிலிருந்தே ருசியான உணவு விரும்பி. நல்ல நல்ல ஆடைகளை அணிந்து அமர்க்களமாகத்தான் தன்னை வைத்துக் கொள்வான். வாழ்வின் எல்லா முனைகளிலும் நின்று பார்த்திட அவன் வாழ்ந்த அந்த சின்னஞ்சிறு காலங்களே போதுமானதாக இருந்திருக்கிறது. வாழ்வின் தொடுவானத்தில் நின்று ஒரு கட்டத்தில் மனதளவில் ஏற்பட்ட துறவை வயிற்றுக்கில்லாமல் வேப்பங்காயை தின்ற சிறுவர்களோடு சேர்ந்து தானும் வேப்பங்காயைத் தின்னுகையில் மேற்கொண்டானோ என்று புரிய முயற்சிக்கலாம். கசப்பும் இனிப்பும் முதலில் மனதில் இருக்கிறது. பிறகு தான் நாவில் என்ற புரிதலால் தான்…. “காண்பதெல்லாம் கனவினைப் போல புதைந்தழிந்தே போனதினால் நானும் ஓர் கனவோ… இந்த ஞாலமும் பொய் தானோ” என்று உரக்க பாட முடிந்தது.

ஒருமுறை மிருக காட்சி சாலையில் சின்ன சின்ன விலங்குகளை எல்லாம் தொட்டுப் பார்த்து பழங்கள் கொடுத்து பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த பாரதி… சிங்கத்திடமும் அதே போல செய்ய முற்படுகையில்… “அய்யா சிங்கத்திடம் வேண்டாம். அதுக்கு புத்தி ஒரு நேரம் மாதிரி இன்னொரு நேரம் இருக்காது என்று காவலன் எச்சரித்திருக்கிறான்..” சூழலைப் புரிந்து கொண்டு…பாரதியை தடுக்கவும் முடியாமல்…. தடுக்காமலும் இருக்க முடியாமல்…..”ஐயோ சிங்கத்துக்கு நல்ல புத்தி குடு பகவானே” என்று வேண்டிய செல்லாம்மாவை நினைத்துச் சிரிப்பதா…! “கவி ராஜனைச் சிங்கம் ஒன்றும் செய்யாது… நான் தழுவிக் கொண்டால் அது அமைதியாகி விடும்” என்று சொன்ன பாரதியை வியப்பதா…. பேரன்பில் பிறிதொரு தரம் பிரிக்கலாகாது என்பது தான் பாரதியின் செயலின் ரூபமா. ஒரு கணம் சிங்கமாகி யோசிக்கிறேன். கூண்டுக்கு வெளியே நிற்பதும் சிங்கம் தான்.

இவன் மானுட இனத்தின் பொல்லாதவன். மற்றோர் போல இல்லை. கடவுளின் நிலை. உள்ளொடுங்கிய கன்னத்திலும் உயிர் கொண்ட புன்னகை அது தான் பாரதி.

வட்ட குங்குமத்தில் தமிழ் கொட்டும் சங்கமம் என்பது பாரதி நம்பிக்கை. எழுதாத போதெல்லாம் மீசை முறுக்கும் வலது கையே எழுத்தாணி போலாகும்.

நானூறு வருடங்களுக்குப் பிறகு தோன்ற வேண்டியவன் முன்னமே தோன்றி விட்டேன் என்று சலித்துக் கொண்டதும் உண்டு. ஷேக்ஸ்பியரின் புலமையை உலகம் உணர்ந்து கொள்ள நானூறு ஆண்டுகள் ஆகின என்று அவரோடு தம்மைப் பொருத்திப் பார்த்து பெருமை கொண்டது பாரதிக்குத் தகுதி தானே.

ஒருமுறை நண்பர்கள் இருவருக்குமான விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னொரு நண்பர் பாரதியின் அற்புதமான பாடல் ஒன்றைக் கேட்டு இந்த விவாதத்தை முடிப்போம் என்றிருக்கிறார்.

உடனே பாரதி… ” பாடப்படாத பாடலே அதி அற்புதமானது” என்று சொல்லி இருக்கிறான். மகாகவியின் சொல் எத்தனை ஆத்மார்த்தமானது. வந்து விட்டவைகளை விட வாராமல் விட்டவைகளிடம் இருக்கும் மேன்மையை உணர பாரதிக்குத் தெரிந்திருக்கிறது.

ஆங்கிலேயன் அபகரித்த தமிழை மீட்டெடுத்து வீதியில் குவித்த வரிகள் பாரதியினுடையது. தலைமறைவு வாழ்விலும் தான் மறைந்திடாத வாழ்வு அது. வஞ்சம் இல்லாத நெஞ்சில் சதைப்பற்று இல்லையே தவிர தன் தமிழ்ப்பற்று ஒரு போதும் குறைந்ததில்லை. கோட்டு போட்டு சட்டையில் பட்டன் இல்லாததை மறைத்த மனிதன். கழுத்தெலும்பை மறைக்க கர்சீப் கட்டிக் கொண்டவன். கம்பீரத்தைக் கடைசி வரை நெற்றியில் சுமந்தவன். திரண்ட கண்களில் இரு பூமி உருண்டைகள் எனலாம். மாநிற மேனியில் ஆதி மானுடம் குடி கொண்டிருந்தது. யானை தள்ளி விட்டதால் நிகழவில்லை பாரதியின் மரணம். நிலை குலைந்த வாழ்வின் போதாமை பறித்துக் கொண்டது. மீண்டெழ முடியாத வருத்தம் அவனுள் இருந்திருக்கிறது. மானுட அலைக்கழிப்பு போதும் போதும் என்றிருக்க வேண்டும். புதுவைக்குள் நுழைந்த போது கானம் அவன். வெளியே வருகையில் ஞானம் அவன். மானுட சூத்திரம் பிடிபட்ட பின் மண்ணில் என்ன வேலை என்பது ஞான தத்ரூபம்.

“காலா உனை நான்
சிறு புல்லென மதிக்கிறேன்
என்றன் காலருகே வாடா
சற்றே உனை மிதிக்கிறேன்”

என்று பாட எத்தனை துணிச்சல் இருந்திருக்க வேண்டும். வாழ்வின் மீதிருந்த பற்று… சாவை எட்டி உதைக்கச் செய்தது. பாரதி மீதிருந்த பற்று காலனுக்கும் பதட்டத்தைத்தான் கூட்டி இருக்க வேண்டும். ஆனாலும் மனிதன் வந்த வீடு இந்த உடம்பு என்று பாரதிக்குத் தெரியும்.

வாழ்ந்த நாளெல்லாம் தமிழுக்கு தனையே தந்த சுந்தர புருஷன்… நண்பர் சுரேந்திர நாத் ஆர்யாவின் சொற்பொழிவோடு தீயில் வெந்தான்.

ஏனோ மீண்டும் வாசிக்கத் தோன்றியது.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ.!


  • கவிஜி 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *