பாரதியார் நினைவு நூற்றாண்டு

பாரதி -நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி


வீன தமிழ்க் கவிதையுலகம் சம காலத்து நவீன கவிதைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், நம் பாட்டன் பாரதி தமிழ்க் கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாக இருந்தவர் என்பதை பாரதியின் நூற்றாண்டு நினைவை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

      தமிழ் மீதும் தமிழர் வாழ்வு மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் பாரதியார் என்பதை அவரது கவிதைகள், பாடல்கள் வழி அறிகிறோம்.

”  கல்வி சிறந்த தமிழ் நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு –
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் –
மணியாரம் படைத்த தமிழ் நாடு “

     கம்பனையும், வள்ளுவனையும் போற்றிய கையோடு சிலப்பதிகாரத்தையும் அவர் படித்துத் தெளிந்திருக்க வேண்டும். பாரதி வெறும் படைப்பாளி மட்டுமல்ல. நல்ல படிப்பாளியும் கூட. !

எல்லாவற்றையும் கற்றுத் தேறாமல் இந்த வரிகளை வெறும் வார்த்தைகளாக அவர் கோர்த்து விடவில்லை என்பது நமக்குத் தெளிவாக புலப்படுகிறது. அவ்வண்ணமே அவன் கவிதையும் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்புவோம்.

  பாரதி வெறும் தமிழ்ப் புலவனாக மட்டும் இருக்கவில்லை. பாரதிக்கு உலகம் தழுவிய பார்வை இருந்தது. இலக்கியத்தின் வழியாக, ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதாக இருக்கக் கூடாது ‘ என்பதுடன், அது உலகுடன் உரையாடும் ஊடகமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர். பாரதியின் உலகளாவிய நோக்குதான் நவீன இலக்கியத்தின் அடிப்படையாகும்.

         பாரதி வாழ்ந்த காலம் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். அந்த அடிமைத் தனத்திலிருந்து தமிழக மக்களை விடுதலை பெறச் செய்ய எண்ணியும், தமிழக மக்கள் மனதில் சுதந்திர உணர்ச்சியை ஊட்டும் விதமாக பாடல்கள், கவிதைகள் புனைந்தும் வந்துள்ளார். இதில் மிக முக்கியம் என்னவென்றால், எளிய மக்களை சென்றடைய வேண்டிய யுக்தியை அவர் கையாண்டதுதான்.

“தேடியுனைச் சரணடைந்தேன், 

தேச முத்து மாரி !

கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய் “

என்று பாடுகிறார்.

பாரதி எதைத் தேடுகிறார்?

அவர் கேடு என்று சொல்வது எதனை?

அவர் கேட்கும் வரம் தான் என்ன?

பாடலின் வரிகள் யாவும் பாமர மக்கள் வணங்கும் முத்துமாரியை பாரதி தான் நேசிக்கும் பாரத தேசத்தின் அடையாளமாகவும் உருவமாகவும் மாற்றிக் கொள்கிறார்.   எனவே தேச முத்து மாரி என்று தேசிய உணர்வை  மக்கள் நெஞ்சில் ஆழப் பதிக்கிறார். அடிமை என்ற கேடு நீங்கவும், நாட்டு நலன் கருதியும் , மக்கள் விடுதலை கருதியும் அவர் கேட்கும் வரமாக அமைவது தெளிவாக புலப்படுகிறது.

   பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாறு புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் உடையது. அவை கோயில்களையும், சிறு மன்னர்களையும் சார்ந்து வாழ்ந்த கவிராயர்களால் அந்தச் சபைகளைச் சேர்ந்த சிலருக்காக உருவாக்கப் பட்டது. இது ஒரு பண்பாட்டு தேக்கத்தை உருவாக்கி விட்டது. பெரிய அரசுகள் எதுவும் இல்லாததால் தமிழகம் நிலப்பிரபுக்களின் பிடியில் சிக்கி இருந்த காலம் அது. இதிலிருந்து மிகுந்த வீச்சுடன் எழுந்து வந்த ஒரு விசையைத் தான் நாம் சுப்பிரமணிய பாரதி என்று சொல்கிறோம்.

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும், மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்று பாடுகிறார் பாரதி.

    “சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க்கவிதை பாடி, பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும் “

பாரதிக்கு கவிதையே மூச்சு. அவரின் சக்தி கவிதா சக்தி தவிர வேறொன்றில்லை. பாரதி எட்டையபுரம் அரசரின் சபையில் இருந்து அந்த பதவியை உதறி சென்னை நகரின் இதழியல் உலகை நோக்கி பயணித்ததே நவீன இலக்கியம் நோக்கிய நகர்வின் அழகிய குறியீடு எனலாம்.

    பாரதியின் புதிய பாய்ச்சலுக்கு  அவரது  இசை ஞானமும் கை கொடுத்தது. இவருடைய தேசிய கீதங்கள் யாவும் ராகத்தோடு பாடக் கூடிய வகையில் அமைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

   பாரதியின் ‘வந்தே மாதரம் ‘ என்று தொடங்கும் பாடல் தாயுமானவர் அருளிய “ஆனந்தக் களிப்பு ” வர்ண மெட்டில் அமைந்துள்ளது. ” நாட்டு வணக்கம் ” காம்போதி ராகத்திலும்,  “பாரத நாடு ” ஹிந்துஸ்தானி தோடி ராகத்திலும்,  ” எங்கள் நாடு ” பூபாளம் ராகத்திலும்,  “எங்கள் தாய் ”  காவடிச் சிந்து  மெட்டிலும் அமைந்துள்ளன.

தக்கவிதமாக இசையமைத்துப் பாடும் பாடல்களில் சொற்களின் வீரியம் ஓங்கி நிற்பதை உணர முடியும்.

      பாரதி தேச விடுதலைப் பாடல்கள் இசையோடு புனைந்த போதிலும் பார்க்க, இவரது ஞானப் பாடல்கள் நமக்கு மன உறுதியைத் தருவதாக அமைகிறது. மாந்தர் எந்த நிலையில் இருந்த போதிலும், இவரது ஞானப் பாடல்களைப் பாடினாலோ அல்லது செவி வழியாக கேட்டாலோ அவரின் மனதில் அச்சம் நீங்கியும், மனம் தெளிவுற்றும், சிட்டுக்குருவியைப் போல விட்டு விடுதலையாகித் திரிந்தும், மனதில் எப்போதும் ஒரு இனிமையை தேக்கியபடியும் நாம் எப்போதும் இன்புற்று  இருப்போம் என்பதில் மிகையில்லை.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச் சகத்து ளோரெலாம்  எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

 

காக்கை குருவி எங்கள் ஜாதி -நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

 

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தத்
சிட்டுக் குருவியைப் போலே

 

மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்

இது போன்ற நிறைய பாடல்கள்…. !!!

    பாரதிக்கு முன்பு இப்படி உணர்வெழுச்சியுடன் கவிதை பாடியவர்கள் உண்டா?  என்றெண்ணிப் பார்க்க வேண்டும்.

     “உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் “

எத்தகைய வைர வரிகள் என்று பாருங்கள் !

      மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் நாக்கில் வரும் சொற்கள் எத்தகையது?

மனிதன் தான் வாழும் சூழலுக்கேற்ப பொய்மையும், வஞ்சமும் கொண்டு பிறர் பொருளை அபகரிக்கும் நயவஞ்சக சூழ்ச்சியில் அகப்பட்டு மாண்டு மடிந்தவர் பலர். அத்தகைய கொடிய வலையை அறுத்தெறியும் வழி தெரியாமல் சிக்கித் தவிக்கும் மானிடருக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே பாரதியின் இது போன்ற வரிகள் நெஞ்சில் ஆழப் பதிந்து விடுமானால்,

“பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடெரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார் “

என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ வழியும் விழியும் பெற்றிடுவர் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

    பாரதி பிற மொழி கற்றுத் தேர்ந்தவர் என்ற படியால், பக்கிம் சந்திர சாட்டோபாத்யாயர் வங்காளியில் இயற்றிய ” வந்தே மாதரம்” கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இப் பாடலுக்கு இரண்டு மொழி பெயர்ப்புகள் காணப் படுகின்றன. மொழி பெயர்ப்பிலும் அவர் பாடலின் வலிமையை அறிய முடிகிறது.

    பாரதி தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியமான புள்ளி. பாரதி தன் கவிதையை நவ கவிதை என்றே எப்போதும் சொல்கிறார். புதியன வேண்டும் என்ற குரல் அவர் பாடல் வழி தொடர்ந்து கேட்கிறது.

   பாரதியின் புதுமை பண்புகளில் மிக முக்கியமானது பெண்கள் மீது அவர் கொண்ட பெருங்கருணையாய் “புதுமை பெண்ணை” பாடியதை நினைவு கூறலாம்.

       “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ் வையம் தழைக்குமாம் “

       மனித உயிர்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் சமானமான இடத்தை பாரதி வழங்கி விட்டதால், நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்.  ஞானம், நல்லறம், வீரம், சுதந்திரம் பேணுதல் நற்குடிப் பெண்களின் குணங்களாக புதுமைப் பெண்ணை வடிவமைத்த பாரதியை முற்போக்கு சிந்தனை கொண்ட அறிஞர் பெருமக்கள்

வரவேற்கின்றனர். பாரதி வாழ்ந்த காலத்திலும், அதற்கு முந்தைய காலத்திலும் பெண் அடிமைத்தனம் மேலோங்கியிருந்ததால் அவரது பாடல்களில் பெண் பற்றிய புதுமைச் சித்திரம் பொங்கி வழிவதைப் பார்க்கலாம்.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் “ என்ற வரிகளில் இன்றைக்கு மட்டுமல்ல.. என்றைக்குமான புதுமைப் பெண்ணை அவர் பாடல் வழி அறியலாம். நவீன காலத்திற்கேற்ற சிந்தனைகளை இயற்கையிடத்தும், மனித உயிர்களிடத்தும் கண்ட போதுதான்.. பெண்மை வாழ்கவென்றும், பெண்மை வெல்கவென்றும் பாரதியால் கூத்தாட முடிந்தது. இந்த மனிதக் களிப்பிலும், இயற்கை களிப்பிலும் எப்போதும் மூழ்கி கிடப்பவர்தானே பாரதி !

  பாரதியின் வசன கவிதைகளைப் படித்துப் பார்த்தோமானால் இயற்கையைப் போற்றிய வரிகள் அமைந்திருப்பது தெரியும். மகா கவி பாரதியார் “ரிக் ”  வேத சுலோகங்களை மகான் அரவிந்தரிடம் கற்றறிந்திருக்கிறார்.

  பாரதியார் பிறரிடம் தான் கேட்டறிந்த விஷயங்களை, கேள்வி ஞானத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அதைப் பற்றி மேலும் மேலும் தீவிரமாக சிந்தித்து அதனுள் நுழைந்து பற்பல அரிய முத்துக்களை வெளிக்கொணரும் பழக்கமுடையவர். வேதங்களில் மிகப் பழமையானது ரிக் வேதம். அது இயற்கையை வழிபடும் விதமான சுலோகங்களை கொண்டது. பாரதி தன் மன இயல்புக்கேற்பவே அவற்றை வசன கவிதைகளாக மாற்றி அமைத்திருக்க வேண்டும். வேத காலத்து ஒலி வடிவக் குறிப்புகளை நவீன காலத்துக்கு ஏற்ற வடிவில் தமிழரும் அதைப் படித்து இன்புற வேண்டும் என்ற நோக்கிலேயே அவரது வசன கவிதைகள் அமைந்துள்ளன.

    இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து, காற்றும் இனிது, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, ஞாயிறு நன்று, திங்களும் நன்று, வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன,  மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது, கடல் இனிது, மலை இனிது, காடு நன்று, ஆறுகள் இனியன…

      இவ்வாறு உலகத்து இயற்கை காட்சிகளையெல்லாம் நமக்கு இனிய காட்சிகளாகவே எடுத்துரைப்பது, உலகமும் மனித வாழ்வும் மாயம் என்பது போன்ற, உலகத்தார்க்கு பொருந்தாத பழமை தோய்ந்த கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, மனிதனை வாழ்வின் புதிய சிந்தனையை நோக்கி இழுத்து வருவதாக அமைந்துள்ளது.

    பாரதியின் பார்வை மிக ஆழமானதும், சிந்தனையில் மிக உறுதியானதும் ஆகும். நெஞ்சத்தில் நேர்மைத் திறம் கொண்டு பார்ப்பாராயின் அவர் இயற்றிய பாடல்களையும், கவிதைகளையும் கற்கும் தோறும் நமக்கு எப்போதும் இனிமை அளிப்பன என்பதும் விளங்கும்.

பாரதி பாடலில் மட்டும் புதுமை செய்யவில்லை. அவர் செயலிலும் புதுமையை புகுத்துபவர்தான். எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வாராம். ஊரார் கிண்டலடித்த போது இவர் பாடிய பாட்டுதான் நிமிர்ந்த நன்னடை… நேர் கொண்ட பார்வை என்ற பாட்டு.!

     பாரதி ருஷ்ய புரட்சியை ஆதரித்து ஆகாவென் றெழுந்ததுபார் யுகப் புரட்சி ! என்று ஜார் சக்கர வர்த்தியின் வீழ்ச்சியையும் புதிய ருஷ்யாவின் எழுச்சியையும் பாடி மகிழ்ந்தார். பாரதிக்கு உலகம் தழுவிய பார்வையும், உலகளாவிய நோக்கும் தான் நவீன இலக்கியத்தின் பாதையில் நடைபோட வைத்தது. ஜனநாயகமே நவீன இலக்கியத்தின் அடிப்படையாகும். இதை  அவரின் பாடல்களிலும், கவிதைகளிலும் துலக்கமாக காணலாம். தமிழ்ச் சமூகத்துக்கு புதிய வாழ்வையும் ஒளியையும் தந்து நவீன இலக்கியத்துக்கு வித்திட்ட பாரதியை அவரது நூறாவது நினைவு ஆண்டில் மீண்டும் அவரது கவிதைகள் வழியே சென்று  நாம்  பெருமையுடன் நினைவு கொள்வோம்.


 

மஞ்சுளா 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “பாரதி -நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி

  • மிக.மிகச் சிறப்பு சகோதரி!!💐💐
    உளமலர் பாராட்டுக்கள்..!!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *