வெறும் 120 பக்கங்கள். கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தால் ஒரு மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் வாசித்து முடித்து விடுவேன். ஜனவரி 2020 சென்னை புத்தக காட்சியில் தோழர் இயக்குனர் விஜய் மகேந்திரன் என்னிடம் தந்தார். “வாசித்துக் கருத்து சொல்லுங்கள் ‘’ என்றார்.
ஆனால் நான் வாசிக்க விரும்பவில்லை. வாசிப்பை துவங்கவும் விரும்பவில்லை. நேற்று வரைக்கும் அந்தப் புத்தகத்தைப் பார்ப்பேன். கையில் எடுப்பேன். அட்டையை மட்டும் முன்னும் பின்னும் பார்ப்பேன். வாசிக்காமல் கடந்து போய்விடுவேன். காரணம்?
வேறொன்றுமில்லை தோழர்களே. சில புத்தகங்களை வாசித்து “முடித்துவிட்டோம்’’ என்ற “இல்லாமை’’ உணர்வு வலி தருவதாக இருக்கும். இன்னும் வாசிக்கவில்லை,வாசிக்கவில்லை என்ற உணர்வே அந்தப் புத்தகம் ஏதோ ஓர் உன்னதத்தோடு எனக்காகக் காத்திருக்கிறது என்ற நிறைவைத் தரும். சிலிர்ப்பைத் தரும். மனதில் ஒரு துள்ளலைத் தரும். வாசித்து முடித்துவிட்டால் அந்தத் துள்ளல் காணாமல் போய் ஏதோ ஓர் இல்லாமை,வெறுமை தோன்றும்.
அதனால்தான் இந்த புத்தக வாசிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தினேன். என் ஆதர்ச இசையமைப்பாளர் குறித்த புத்தகம் என்பதால் அது என்னோடு காலம் முழுக்க வாசிக்கப்படாத சந்தோஷம், புத்தகம் தீர்ந்துவிடாத மனநிறைவு. இப்படி இருக்க வேண்டும் என நினைத்தேன்.
சின்னப் பிள்ளைகள் இனிப்பை முழுசாகத் தின்றுவிடாமல், போகும் போது ஒரு கடி ,வரும் போது ஒரு கடி என்று கொஞ்சம் கொஞ்சமாக ருசிப்பார்களே, அது போல மெதுவாக வாசிக்கலாம் என்று இன்று காலையில் கையிலெடுத்தேன். வாசிக்க ஆரம்பித்ததுதான் தெரியும். ஒவ்வொரு பக்கமாக, ஒவ்வொரு பகுதியாக வாசித்து வாசித்து, அலைபேசியில் பாடல்களை கேட்டு ரசித்து இப்போது அந்தப் புத்தகம் வாசித்து முடிந்துவிட்ட ‘’இல்லாமை’’யில் வந்து நிற்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்திய திரையிசையின் அடையாளம் இந்தப் புத்தகம் “புலம்’’ வெளியீடாக வந்துள்ளது. தோழர் இயக்குனர் விஜய் மகேந்திரன் மின்னம்பலம்.காமில் தொடராக எழுதிய கட்டுரைத் தொகுப்பு. BREEZY WRITING என்று சொல்வார்களே அந்த ஒப்புமைக்கு இந்த புத்தகத்தை உதாரணமாகச் சொல்லலாம். அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசை போல ரம்மியமான எழுத்துக்காரர் விஜய் மகேந்திரன் என்றும் சொல்லலாம்.
எனக்கு நினைவிருக்கிறது. 1992இல் ஓர் எளிய சின்னத்தம்பி போன்ற தோற்றத்தில் முகம் முழுக்க புன்னகையோடு இருந்த ரஹ்மான்… இப்போது 2020இல் வாழ்க்கை அனுபவ முதிர்ச்சியோடு இருக்கும் ரஹ்மான். இந்த இரண்டு பருவத்துக்குள் என்ன நடந்தது? கிட்டதட்ட முப்பது வருடங்களில் ரஹ்மான் திரையிசையில் செய்த மாயாஜாலம் என்ன? அன்பு, வெறுப்பு என்ற இருவழிகளில் அன்பைத் தேர்ந்தெடுத்த ரஹ்மான் எப்படி அந்த உணர்வை இயல்பாக வாழ்ந்து காட்டுகிறார்? வாழ்க்கையெல்லாம் வெற்றிகள், தலையெல்லாம் கிரீடங்கள், கைநிறைய விருதுகள் என்றாலும் கால்கள் தரை ஊன்றி, ஆணவ உணர்வின்றி இன்னும் இன்னும் எளியவராக எப்படி இருக்கிறார்?
தோழர் விஜய் மகேந்திரனின் எழுத்து எல்லாவற்றையும் விவரிக்கிறது. ஒரு தோழமையான எழுத்து, ஒரு ரசனைக்காரனின் எழுத்து, வியப்புக் குறியோடு இருக்கும் எழுத்து என்பதன் ஒட்டுமொத்த அடையாளம்.
ரஹ்மானின் இசைப்பயணம் குறித்த பத்திகள் என்பதனால் சென்னையில் சென்ட்ரல் நிலையத்தில் ‘கூ’ என்று கூவிக் கிளம்பி முன்னோக்கிப் பாயும் ரயில் பயணமாக, கூகூகூ என்று ஒரு வழியாக் புதுடில்லி சென்று சேர்வதாக எழுதவில்லை.முன்னே பின்னே என்று இந்த வருஷத்துச் சம்பவம்,, உடனே பத்து வருஷத்துக்கு முந்தைய சம்பவம். இப்படியாக NON LINEAR என்பது புதினத்தின் கட்டாயம். NON LINEAR என்பது பத்தியின் சுவாரஸ்யம். அதை விஜய் மகேந்திரன் கையாளும் விதத்தில் அலுப்பும்,சலிப்பும் தவிர்க்கப்படுகிறது.
இப்படி நடந்துச்சா?…இதுதான் விஷயம் தெரியுமா…? என்பதாகச் சொல்லும் போதே, திடீரென்று நினைவு வந்து ‘’ இரு இரு …அதுக்கு முன்னாடி இதைக் கேளு..’’ என்பதாகத் துள்ளாட்டம் செய்யும் விஜய் மகேந்திரனுக்கு நன்றி.
ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு பகுதியிலும் அவர் சொல்லுகின்ற எல்லாப் பாடல்களையும் நாம் கேட்டுத்தான் ரசித்திருப்போம். இந்தப் புத்தகத்தில் விஜய் மகேந்திரன் அந்தப் பாடல்களைப் பற்றிச் சொல்கையில், மறுபடியும் இன்று முழுவதும் அந்தப் பாடல்களை அலைபேசி யூடியூபில் பார்த்தேன். விஜய் சொல்லும் நுணுக்கங்கள், கூர்ந்து கவனிக்காத இசைத்துணுக்குகள், உயிரைக் கட்டிப்போடும் உற்சாக இசைகோப்புகள், சனாதனக் கட்டுக்குள் சிக்காமல் புதுப்புதுக் கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது, பாடலாசிரியர்களுக்கு இசையமைப்பாளர் தருகின்ற இயல்புத்தன்மை மிகுந்த தோழமையும், மரியாதையும் என ரஹ்மான் என்ற விஸ்வரூப ஆளுமை குறித்து மீள்பார்வை தருகிறார்.
‘’தமிழ்ப் படப் பாடலே நான் கேட்க மாட்டேன். ஹிந்திப் பாடல் தான் கேட்பேன்.’’ என்று சொன்ன நுனிநாக்குகளையும் தமிழ்பாடல்களை பாடவைத்தவர்களில் ரஹ்மான் இளைஞர்களின் மனசுக்கு நெருக்கமான கலைஞராகிறார்.
உலகம் முழுக்க உச்சரிக்கும் பெயரோடு, உலகத்தின் எந்த அரசும் சிகப்புக் கம்பள வரவேற்பும், குடியுரிமை வசதியும் தரும் என்றாலும், தனது வீட்டு முகவரி கோடம்பாக்கம் சுப்பராயன் தெரு என்று இருப்பதையே ரஹ்மான் விரும்புகிறார் என்று எல்லாப் பகுதியிலும் விஜய் மகேந்திரன் சிலாகிக்கிறார்.
ரஹ்மானோடு பணியாற்றும் வாய்ப்பு பெற்ற பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் கூறும் அனுபவங்கள் வாயிலாக இசையமைப்பாளர் குறித்த வியப்பின் உயரங்கள் அதிகமாகின்றன.
திரை இசை ரசிக்கும் ரசிகப் பார்வையும், இயக்குனர் பார்வையும் இருவேறு பரிமாணங்களையும், பரிணாமங்களையும் இழைத்துத் தருகின்ற விஜய் மகேந்திரன் அடுத்த தொகுப்பு விரைவில் தருவார் என நம்புகிறேன்.
இந்த கொரோனா தனிமையை ரஹ்மான் குறித்த புத்தகம் மூலம் விஜய் மகேந்திரன் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார். தோழருக்கு நன்றியும் அன்பும். இப்போது என் முன்னே ரஹ்மான் புத்தகம் வாசித்து முடித்த ‘’இல்லாமை’’ உணர்வும், ‘’அப்பாடா’’ என்ற உணர்வும் கலந்து என்னைச் சுற்றிக்கொண்டுள்ளது.
நீங்களும் வாசித்துப் பாருங்கள் தோழர்களே…இசையைப் பிராவாகமாக பெருக்கெடுக்கும் ரஹ்மான், சிறந்த இசை, மிகச் சிறந்த இசை,மிக மிக மேன்மையான இசை என்ற ஒற்றைச் சிந்தனையோடு உலகை மயக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் அதிகமாக மனசுக்கு நெருக்கமாவார். தோழர் விஜய் மகேந்திரனும் அப்படியே…
வாழ்த்துக்களுடன்
ஆண்டாள் பிரியதர்ஷினி
நூல் : | ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் |
பிரிவு : | கட்டுரைகள் |
ஆசிரியர்: | விஜய் மகேந்திரன் |
வெளியீடு: | புலம் வெளியீடு |
வெளியான ஆண்டு : | டிசம்பர் 2016 ( முதற் பதிப்பு) |
பக்கங்கள் : | 150 |
விலை : | ₹ 120 |
தொடர்புக்கு: | 98406 03499 |
Buy on Amazon |
நூலாசிரியர் குறித்து:
விஜய் மகேந்திரன்
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்'' ஆகியனவும் வெளிவந்துள்ளது.
இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது.