வாழ்ந்து தீரவேண்டிய ஒரு வாழ்க்கையில், எல்லா உயிருக்குமான அன்பைப் பாதுகாப்பதும் பகிர்ந்தளிப்பதும் இயற்கை நமக்களித்த பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்விலிருந்து எழுதப்படுகிற படைப்புகள் காலத்தின் சேமிப்பில் நிரம்பிக்கொள்ளும். அந்தச் சேமிப்பை நாம் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படித்தான் நாம் தொல்காப்பியத்தையும் புறநானூற்றையும் திருக்குறளையும் மணிமேகலையையும் கலிங்கத்துப்பரணியையும் முக்கூடற்பள்ளையும் அழகின் சிரிப்பையும் எடுத்துக்கொண்டு பயனடைகிறோம். இந்தப் பயன்தான் இலக்கியத்தன் நோக்கம். மானுடப் பயன், மானுடமும் மாநிலமும் பயனுற வாழவத மகத்தான வாழ்வு, படைப்பு.

காயத்ரி ராஜசேகரின் கவிதைகள், அந்தப் பயனை வழங்கவல்ல தன்மையோடு இருக்கின்றன. மொழிக்கும் நிலத்துக்கும் வாழ்வுக்கும் போதுமான அன்பையும் அக்கறையையும் கொடுத்திருக்கின்றன என்று துணிவோடு சொல்லலாம்.

பெண் மனதின்வழியே இந்த வாழ்வைப் பார்ப்பதுதான் உண்மையில், வாழ்வைப் புரிந்துகொள்ள சரியான வழியென்று நினைக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வைக் குறித்து ஒரு பெண் மேற்கொள்ளும் விசாரணைகள். விசாரணையின் தேடலில், கண்டறிதலில் அந்தப் பெண் முன்வைக்கும் தத்துவங்கள், தரிசனங்கள், நம்பிக்கைகள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், தீர்வுகள் யாவும் ரொம்ப முக்கியமானவை. வாசிப்பின்வழியே அவ்வளவு எளிதில் அவற்றைக் கடந்து போய்விட முடியாது. நிறுத்தி நம் கண்களை நேருக்கு நேராய்ப் பார்க்கும் வலிமையான எழுத்துக்கு முன் நாம் நின்றுதான் ஆகவேண்டும். நின்று அது வைக்கும் கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். குறைந்தபட்சம், ஒரு நேர்மையான புன்னகையையாவது வெளிப்படுத்தி நிற்க வேண்டும். ஓர் எழுத்தைப் பொருட்படுத்தும் ரொம்ப முக்கியமான பண்பு இது. அந்தப் பண்போடு அணுகினால், காயத்ரியின் கவிதைகள் நமக்குக் கொடுக்கும் அனுபவங்கள் மேலானவையாக இருக்கும்.

உள்ளிருக்கும் கவிதைகளை எடுத்து, சில வரிகளை காட்சிப்படுத்தி, சில நுட்பங்களை சிலாகித்து, சில அபரிமிதங்களை வியந்து. சில உட்பொருளைக் கொண்டாடி எழுதிவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை . வாசகருக்கான பேரறிவை அது குறைத்து மதிப்பிடும் செயலாக மாறும். நான், என் வாசிப்பு அனுபவத்தை அப்படியே எனக்குள் வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். காயத்ரியின் கவிதைகள் மேலுமான வாசகர்களுக்கும் காத்திருக்கின்றன அவர்களுக்கு மட்டும் ஒன்றை .சொல்ல விருப்பம். இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் ’கனிந்து கனம்கூடிய பனங்கனிகள்’. பனங்கனியின் வாசனை எப்படியிருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். இந்தக் கவிதைள் அப்படியானவை

வாழ்த்துகளும் பேரன்பும்

  • மௌனன் யாத்ரிகா

 

நூல் தகவல்:
நூல் : ஏவாளின் பற்கள்
வகைமை கவிதைகள்
ஆசிரியர் காயத்ரி ராஜசேகர்
வெளியீடு: படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு :  2020  (முதல் பதிப்பு)
பக்கங்கள்: 137
விலை : ₹ 120
நூல் வாங்க  +91 97908 21981

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *