நூல் விமர்சனம்புனைவு

பூமியை வாசிக்கும் நட்சத்திரவாசி


‘எல்லோருக்காகவும் வந்து கொண்டிருக்கிறது ரயில் ‘ என்ற இந்த ஒற்றை வரியில் ரயிலேறி “சௌவி” என்னும் கவிஞனைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன்.

புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே வழியெங்கும் நட்சத்திரங்களும், நிலாவும், மேகங்களும், அந்தி வெயிலின் நிறங்களும், கடலும், மலையும், மழைத்துளிகளும் ரயில் பெட்டிக்குள் வந்து என்னோடு கை கோர்த்துக் கொண்டு விட்டன. ஒவ்வொன்றும் ஒரு கதையை வைத்துக் கொண்டு அந்த ரயிலை நகர்த்திப் போவதாகவே எனக்குத் தோன்றியது.

ரயிலில் பயணிக்கும் நட்சத்திரங்கள் 

“நான் வெளியே எடுத்து

வானத்தில் வீசிக்கொண்டேயிருக்க

இன்னொரு சன்னல் வழியாக

நுழைந்து கொண்டேயிருக்கின்றன

நட்சத்திரங்கள்

…………………..

…………………..

தொடர் வண்டிக்குள் விரிந்திருக்கிறது

ஒரு இரவு வானம் ”

தொடர் வண்டிக்குள் விரிந்திருக்கும் அந்த அழகிய இரவு வானத்தைப் பார்க்க….. பார்க்க வசீகரமாயும், விசித்திரமாயும் இருக்கிறது. மழையின் வழியாக பயணிக்கும் கவிதையொன்று கடலுக்கு வரச் சொல்லி நம் கரம் பற்றி இழுக்கிறது.

கடலைத் தேடிப் போகும் மழைத் துளி 

“யாரும் பார்க்காத இப்பின்னிரவில்

ரகசியங்களின்றி பெய்து கொண்டிருக்கும்

மழையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

மூடப் படாத என் அறையின் சன்னல் வழியாக

செடிகளோடு பேசிக் கொண்டிருக்கின்றன சில மழைத் துளிகள்

பெரிய மரங்களோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன சில மழைத் துளிகள்

உயரமான சுற்றுச் சுவரில்

மேலிருந்து கீழே வழிந்து தரைதொட்டு

வீதியில் ஓடிக் கொண்டிருக்கின்றன

சில மழைத் துளிகள்

பார்த்துக்கொண்டிருக்கும்போதே

ஒரு மழைத் துளி மட்டும்

என் வீட்டுச் சுவரேறி

திறந்து வைக்கப்பட்ட என் அறையின்

சன்னல் வழியாக உள்ளே வந்து

தூங்கவில்லையா எனக் கேட்டபடி

கால்களை நீட்டி எனக்குப் பக்கத்தில்

படுத்துக்கொண்டது

…………………

…………………

என் கையை பிடித்து அழைத்துக் கொண்டு

சன்னல் வழியாக வெளியேறுகிறது

தான் வாழ்ந்திருந்த கடலின்

பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று

……………..

……………….”

இந்த கவிதையை வாசித்து விட்டு என் சன்னலின் வழியாக பார்க்கிறேன். இது வரை பேசிக்கொள்ளாத செடிகளையும், மரங்களையும், அதன் ரகசியங்களையும் கவிதையின் மொழி காற்றோடு எனக்கு அனுப்பி வைக்கிறது.

கவிதை என்றாலே அதன் ஒற்றை அடையாளமாக பொதுவில்,  கற்பனை என்றே நினைவில் கொள்ளும் பொதுப் புத்தியை விட்டு  நமது கவிதை மனங்கள் வேறு வேறு அடையாளங்களை நிறுவி வருகின்றன. அதில் சமூக, அரசியல் காரணிகள் எண்ணிக்கையற்று நிறைந்திருக்கும். ஆனாலும் இயற்கையின் ஒரு பகுதியாக இன்றளவும் கவிதைக்கான அழகியலுடனும்,  பாடுபொருளுடனும் கவிதைகள் வந்த வண்ணமுள்ளன.

வாழ்வின் அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளைத்  தாண்டியும் இயற்கையின் மீதான காதலால் அதன் பேசும் பொருளும் கவிதையின் தீராத பக்கங்களில் தன்னை எழுதிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இயற்கையின் காட்சிப் புலங்களை கவிதைச் சித்திரங்களாக தீட்டி நம் கண் முன் நிறுத்தும் கவிஞர்களில் சௌவி தனக்கென ஒரு பாதையை கண்டெடுத்துள்ளார்.

அந்தப் பாதை பழையதுமல்ல, புதியதுமல்ல என்ற ஒரு நிலையில் அன்றாடம் நாம் கண்ணால் கண்டும் காணாது விடுகின்ற அரிய நிகழ்வுகளை கலை நயத்துடன் வரிகளுக்குள் வார்த்தைகளை கோர்க்கும் நுட்பம் இவருக்கு இயல்பாய் வருகிறது. இயற்கையின் அழகுகள் ஒன்று கூடி இவரின் வார்த்தைக்குள் கூடு பாயும் மாயமும் நிகழ்கிறது. இன்னும் சொல்லப் போனால், இவருக்கேயுறிய தனித்த மன உணர்விலும் ரசனை உணர்விலும் குறையாது இருக்கின்றது இயற்கை.

ஓர் இறகு பறவையாகிறது 

“உதிரும் இறகை ஏந்திக்கொள்ள

பூமியைத் தவிர யாருமில்லை

உதிர்ந்த இறகை

மறுபடி பறக்க வைக்க

குழந்தைகளைத் தவிர

பூமியில் யாருமில்லை “

வரிகள் இறகை போலவே நம் மனதுக்குள் பறக்கிறது. குழந்தைகளால் மட்டுமே உதிர்ந்த இறகை பறக்க வைக்க முடியும் என்ற கற்பனை எவ்வளவு அழகானது !

இந்த காட்சியை நாமும் பார்த்திருப்போம்…. கடந்திருப்போம். சௌவி அதை கவிதையால் கடந்து பார்த்திருக்கிறார்.

‘வாசத்தை தின்னும் பசி’ என்றொரு கவிதையில் கானல் நீரில் நீந்துகின்ற மீன்களைப் பிடித்து வந்து மதிய உணவுக்கு குழம்பாக்கும் ஒருவன், எப்போதும் தன் தூண்டிலை தயார் படுத்திக்கொண்டேயிருக்கிறான்.

கவிதை என்பது எப்போதும் அடங்காத பசியாகவும் எழுதித் தீராததாகவும் கவிஞனுக்குள் இருக்கிறது. ஒரு வாசகனால் அதன் வாசத்தை மட்டுமே நுகர முடிகிறது.

தனிமையின் கனத்தில் (பக் 134)

“பாதி வாசித்து விட்டு

பக்கம் மாறிப் போகாமல் இருக்கட்டுமென

கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகத்தின் மீது

படிந்து கிடக்கும் நேற்றைகளின்

மணல் துகள்களின் கனத்தில்

புரள முடியாமல் கிடக்கிறது நிகழ்காலம் “

ஒரு வாசகனால் எளிதில் கடக்க முடியாத வரிகளாய் கனக்கிறது.

கவிதை என்ற ஒற்றை வார்த்தைதான் வாழ்வின் மீதும், சமூகத்தின் மீதும்,  இயற்கையின் மீதும் கவிழ்ந்து கிடக்கின்ற தன் பன்முக அடையாளங்களை கவிஞனுக்குள் விதைக்கிறது. அந்த விதை எந்த நிலமோ, எந்த பொழுதோ, எந்த காலமோ… எதுவாயினும் அங்கிருந்தே முளைக்கிறது.

முளைத்தவை காலமறிந்து, இடமறிந்து, பொழுதும், பொருளுமறிந்து தக்க சமயத்தில் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறது.

“அழகான நீல மசிக் கையெழுத்தைத் தாங்கிய

அக் காகிதம் தேடியோடுகிறது

தன் மீது எழுதிய கைகளை “

…………….

……………

நம்பிக்கையோடு ஓடுகிறது

குப்பையென வீசப்பட்ட காகிதம் “

கவிஞர் சௌவி, இயற்கை தன் மீது வீசியெறிந்த சொற்களை அழகான ஓவியங்களாக்கி “கடலைத் தேடிப் போகும் மழைதுளியாய் ”  வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

ஈரமற்ற  மழை, பெருமழை, ஞாபக மழை, காதல் மழை, பெய்யும் மழையின் ருசி, மழை முடிந்த ஒரு நாளில், ரசிக்க முடியாத மழை, பெய்யென பெய்யும் மழை என ஏராளமான மழைக் கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.  வாசிக்கையில் இவரின் சொற்கள் மழை வாசனையோடு நிறைந்து நம்மையும் ஈரப் படுத்திவிட்டே செல்கிறது.

“நட்சத்திரங்களையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து

மேகத் துணியில் மூட்டை கட்டி

பொள்ளாச்சி சந்தையில்

பொற்கொல்லர்களுக்கு விற்று விட்டு

வீடு திரும்புகிறேன்

வானத்தில் மறுபடியும் முளைத்துப்

பளிச்சிடுகின்றன நட்சத்திரங்கள்

முத்துக்களா நட்சத்திரங்கள்? “

காணும் அழகிய காட்சியெல்லாம் மண் தொட்டு, மழை தொட்டு ஈரமாக்கி… மண்ணிலும், மரத்திலும், கடலிலும், குளத்திலும், ஆற்றிலும், கிணற்றிலும் பூத்த சௌவியின் கவிதைகள் யாவும் பூமியில் பூத்த புதிய நட்சத்திரங்களாய் தொகுப்பெங்கும் மின்னுகின்றன.


 

 கவிஞர் மஞ்சுளா 

நூலாசிரியர் குறித்து.

சௌவி  சின்னபாப்பனூத்து  கிராமத்தைச் சார்ந்தவர். முன்பு கோவை மாவட்டத்திலிருந்த இந்த ஊர் இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் மாற்றப்பட்டிருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கும் தன் கிராமம்தான் தன்னுடைய இயற்கை அழகுகளையெல்லாம் காட்டிக் காட்டி தன்னைக் கவிதைகள் எழுதப்பழக்கியதென்கிறார் சௌவி. இயற்கையே தன் முதல் காதலி என்றும் இயற்கையின் மீதான தன் காதலின் அளவை வார்த்தைகளால் சொல்லமுடியாது என்கிறார். இக்கவிதைத் தொகுப்பு இவருடைய முதல் தொகுப்பு. இவருடைய கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, குமுதம் – தீராநதி, குங்குமம், கல்கி, இனிய உதயம், காமதேனு, புன்னகை, குறி, இருவாட்சி, அருவி, கொலுசு, படைப்பு – தகவு, படைப்பு – கல்வெட்டு உள்ளிட்ட அனைத்து வெகுசன இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன. விரைவில் இவரது இரண்டாவது கவிதைப் புத்தகமும், மூன்றாவது கவிதைப்புத்தகமும் வெளிவர இருக்கின்றன.

நூல் தகவல்:
நூல் : கடலைத் தேடிப்போகும் மழைத்துளி
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: செளவி
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
வெளியான ஆண்டு : ஆகஸ்ட் 2020
பக்கங்கள் : 184
விலை : 200
தொடர்புக்கு : +91 9080909600

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *