தேங்காய் பத்தைப் போன்ற நடை. ரெண்டு கைப்பிடி பொட்டுக் கடலை, ஒரு பச்சை மிளகாய், நீண்ட தேங்காய் பத்தை ஒன்று, கொஞ்சமாய் கல்லுப்பு.., இவைகளைப் போட்டு அரைக்கும் முன் அம்மிக் குழவியால் வைத்து நசுக்க வேண்டும். தேங்காய் பத்தை உடைந்து நசுங்கி பால் தெறிக்கும் அப்போது அரைப்பதை ஒரு கனம் நிறுத்த சொல்லி  அதிலிருந்து ஒரு தேங்காய் தெறிக்கை வாயிலிட்டு மெல்லுவது எனக்கு சிறு வயதில் ரொம்பவும் பிடிக்கும். ஊருக்கு சென்றால் இப்போதும் அப்படித் தான்.


லா.ச .ராவின் எழுத்து..,

“.., ..மாமா பக்கத்தில்

யானைத்தலை பெரிது

ரயில் கூஜாவில் தீர்த்தம்

 

அருகே

எப்பவும் வெள்ளி

வெற்றிலைச் செல்லம்

 

உதட்டோரம்

சாறு ஒழுகும்

 

அவருக்கு ஏற்ற படி

வைத்து விட்டால் போதும்

பேச்சின் ஜோரூம்

அலாதிதான்

 

நானும் அவரும்

பிட்டு கொண்டதே

இதுபோல் புகையிலை

காட்டம் அவருக்கு பேச்சு வழி

தப்பி போனதால்தான்..,..”

இது கவிதை நூல் அல்ல…  நாவல்.  ஆம், முற்றிலும் உண்மை.

ஆனால்.., முழுக்க முழுக்க கவித்துவமான நடை.

இலக்கிய உலகில் கதை எழுத்தாளர்களை விட கவிஞர்களின் எண்ணிக்கை தான் அதிகம். சில கவிஞர்களே ஒரு கட்டத்தில் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு கதை எழுதுவதற்கு மாறிவிடுவார்கள்.

ஆனால் லா.சா.ரா வின் எழுத்து நடை தனித்து தெரியும். அவரின் எழுத்து எப்போதும் கவித்துவம் நிறைந்த நடையாகவே இருந்து வந்துள்ளது.

இப்போது பலர் கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில் கொலை செய்கிறார்கள். ஒரு உரைநடை பத்தியை வார்த்தை வார்த்தையாக பிரித்துப் போட்டு இடைவெளிவிட்டு கவிதை என்று சொல்லிக் கொள்கிறார்கள். மன்னிக்கவும் கொல்கிறார்கள்.

கவிதை என்றாலே  காலில் புழுதி பறக்க ஓட வேண்டியதாக இருக்கிறது.

நாவலில் ஓரிடத்தில் பெண்ணொருத்தி மலையில் உள்ள கோவிலுக்கு தண்ணீர் சுமந்து செல்கிறாள். அவளைப் பற்றிய வர்ணனை இப்படி எழுதுகிறார் ..,

பத்தி பிரித்து எழுதி இருந்தாலும் அது கவிதையாகவே மிளிர்கிறது.

“… இடுப்பில் குடத்துடன் அவள் முன் நேர்கையில் வேணுமென்றே என் நடை அவளை இரண்டு படிகள் முன் விட்டது.

இடுப்பில் இடத்திற்கு இடம், குடத்தின் செருக்கு.

இடையில் குடம் இடுப்பின் செருக்கு.

இடையின் வளைவுகள் குடத்தின் வளைவு புதைந்தது கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை. இதயத்தில் ஒளித்தட்டுகின்றது.

படியேறுகையில் அவள் உடலில் லேசான வளைவுகள் சுடர் ஆட்டம் போல் விளைகையில், முதுகுப்புறம் வலது தோளில் ரவிக்கை தையல் விட்ட இடத்தில் பளீரிட்ட சதை நெருப்பு நெஞ்சில் பற்றிக் கொள்கையில், இது வரை சென்று போன வருடங்களில் அங்கு குவிந்து அழகிய குப்பை கூளங்கள், வயதின் சருகுகள் எரிகின்றன. நானே லேசாகி கொண்டிருக்கிறேன்.”

…..

இளங்கவிகள் இதுப் போன்ற எழுத்துகளை நிறைய வாசிக்க வேண்டும்.

கதைக் களத்திலும் இந்த அபிதா ஒரு வித்தியாசமான நாவல் ..,மனிதனின் உளவியல் ரீதியான உணர்வுகளை அப்பட்டமாக சித்தரிக்கின்றது.

இவரின் கதைகளில் கேள்வியும் பதிலுமாய் பேசிக் கொள்ளும் சுய கதாபாத்திரங்களே சித்தரிக்கப்படுகின்றன.

தேங்காய் பத்தை சுவையானது மட்டுமல்ல. கவித்துவமானது கூட.

ஆனால்.., தேங்காய் பத்தையை சற்று வலுவாக மெல்ல வேண்டும். அப்போது தான் அதனை ருசிக்க முடியும்.

– மஞ்சுநாத்

நூல் தகவல்:

நூல் : அபிதா

பிரிவு:  நாவல்

ஆசிரியர்: லா. ச. ராமாமிருதம்

வெளியீடு :  எழுத்து பிரசுரம் (2019)

வெளியான ஆண்டு : 1970 (முதல் பதிப்பு)

விலை: ₹ 120

Kindle Edition

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *