சொற்களில் ஊதாரியாய் இருப்பவனைக் கவிதை ஏற்பதில்லை. அது மிகவும் மோசமான கெட்ட பழக்கமென்று கவிதை நம்புகிறது. வெறுங்கால்களோடு வெட்ட வெளியில் ஓடும் குழந்தையைப் போல இந்த முதல் தொகுப்பில் ரூபன் தம் கவிதைகளில் பல்வேறு சாகஸ மடிப்புகளோடு அலைபாய்ந்திருக்கிறான். இப்படித்தான் ஒரு கவிஞன் செயல்பட வேண்டும். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஓர் இளங்கவிஞனின் முதல் கவிதைப் பயணம் என்கிற வகையில் மணற்புகைமரம் அது ஏன் வெளிவர வேண்டுமோ அதற்கு பெருமளவில் நியாயம் செய்திருக்கிறதென்றே நம்புகிறேன்.

நூல் அணிந்துரையில்

– பாலை நிலவன்


ழுத அமர்கிற கணத்தை உப்புநீரால் வணங்கி, கதை சொல்கிற புத்தியை மீன் முட்களால் தைத்தேன். கவிதை என நம்பிய மொழிச்சித்திரத்தை எழுத்துப் பக்கங்களாக தந்திருக்கிறேன். எதுவும் பேசத்தெரியவில்லை. மொழியை சுருள்முட்களாக மடித்து உடலில் நடக்கச் சொல்கிற உணர்வில் இருக்கிறேன் . எதற்கும் தலை ஆட்டாத மரமாகவே இருக்கப் பிடிக்கிறது. என் உடலுக்கும் உயிருக்கும் ஓடுகிற பாதை தான் காணாமல்போன ரெட்டைத்தாழை . எங்கள் ஊரின் மேடு பள்ளங்களில் இருந்து ரெட்டைத்தாழை வரை நடந்து பார்த்தக் கவிதைகள் இருக்கின்றன . யாருக்கும் சொல்லமுடியாத கதைகளில் தான் மணற்புகைமரம் இருக்கிறது . அங்கு கைதை மலர்களோடும் உமரிப்பூக்களோடும் ஓடிவரும் மணற்பிள்ளை தான் இந்தக் கவிதைகள். உப்புநீர் வாய்க்காலில் முகம்கழுவுகிற வாடைக்கல் மேகங்கள் கஞ்சாரொட்டிக்காக ஏங்கியே என் பால்யத்தில் வந்து விழுந்தது. ஓவியங்களில் பதுங்கும் தனிமை எனக்கு உறைகணத்தைத் தந்தது . அதன் வாலில் ஏறி உலர்ந்த நீரின் தரவையைச்சுற்றி பறக்க வேண்டும். எப்போதும் என்னைநோக்கியே வரும் அலைக்காற்று ஒரு சூளைக்குழந்தை மாதிரி. வெம்புழுதியோடு உடம்பில் குத்தும் தனுஷ்கோடி காற்றில் எல்லாமும் இருக்கிறது. காற்றின் முட்களைப் பிடுங்கி உடம்பின் உப்பை எழுதவேண்டும் . அவ்வளவு தான் . நண்டுக்குழிக்குள் ஒழிந்துகொள்கிற இந்த உப்புநீர் வாழ்வு போதுமானது .

– அதிரூபன்

நூல் தகவல்:

நூல் : மணற்புகை மரம்

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : அதிரூபன்

வெளியீடு : சால்ட்

வெளியான ஆண்டு :   ஜனவரி 2021

விலை: ₹150

விற்பனை உரிமை : தமிழ்வெளி

தொடர்புக்கு: +91 9094005600