நூல் விமர்சனம்புனைவு

கிருமி – ஒரு பார்வை


“பட்சி அறியாது அதன் எச்சம் பிரசவித்த பெறு வனங்களை” ஆசானுக்கு வணக்கம் சொல்லும் இவ்வரிகளில் உறைந்து பின் கதைகளில் உருகத் தொடங்கினேன்.

“பிணி தீர்த்து அருள் பாலிக்க உயர்த்திய கரத்தை கிருமி நாசினியால் அவசரமாகக் கையை கழுவிக் கொள்கிறார் கடவுள்” இப்படியாக மனுஷ்யபுத்திரனின் கவிதை கதைக்குள் நுழைய வழிவிடுகிறது.

ஒவ்வொரு கதையும் மூளை நரம்புகளை அதிர வைக்கும் vibrators..!

1. இரண்டாம் காதல்

வேறொரு பெண் ப்ரியாவுக்கும் தன் கணவன் மருதனுக்கும் இருக்கும் காதலை அறிந்த மனைவி சாவித்திரியின் துடிப்புகள்…. தோழி நான்சியின் ஆலோசனைகள்…. மருதன், ப்ரியாவின் break up.., ப்ரியாவின் நாசூக்கு., எல்லாம் துல்லியமான அழகிய பின்னல்

2. நவகண்டம்

ருத்ரன் – கொற்றவை காதல் அழகாய் நகர்கிறது. கொற்றவையைச் சிறையெடுத்த சோழ அரசைப் பழிவாங்க ருத்ரனோடு நாமும் காத்திருக்க, கொற்றவை எடுத்திருந்த முடிவு ருத்ரனுக்கு மட்டுமல்ல நமக்கும் பேரதிர்ச்சி தான். ருத்ரனின் பழிவாங்கல் கொடூரமானது தான். பின் தனக்குதானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை நிலைகுலைய வைக்கிறது.
ருத்ரனோடு பயணித்தன் விளைவு., அவன் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் போது நாம் வெட்டுப்பட்ட வலியை உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

3. ஜலப்பிரவேசம்

ஷியாமளா – பெண் எனும் பிரமாண்டம் என்று தான் சொல்ல வேண்டும். “ஓர் உறவில் சொல்லிக்கொண்டெல்லாம் விடைபெற முடியாது. அறுக்க வேண்டுமெனில் பட்டெனச் செய்ய வேண்டும். அப்படிக் காணாமல் போவதன் பொருள் பரிசுத்த விலகல்”
ஆழமான வரிகள்..! கண்கள் அகல 2 நிமிடங்கள் ஆனது.
நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த ஷியாமளா என்ன ஆனார் என்று யோசிக்கையில் முடிவை வாசகர்களின் கற்பனைக்கு விடுவது வாசகர்களைக் கதைக்குள் இழுக்கும் வித்தை.

4. யமி

ஆதி மனிதர்களைப் பற்றிப் படித்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம். இக்கதை கடைசி மனிதர்களைப் பற்றியது. நவீனும் நூதனாவும் உலகின் கடைசி ஆதாம் ஏவாள்.
எல்லாம் ஒரு வித சுவாரஸ்யத்தில் நகர்ந்து கொண்டிருக்க, கடைசி அத்தியாத்திற்கு முன் அத்தியாயத்தில் ஒரு கணம் இதயத் துடிப்பு நின்றது. நான் கதையைச் சரியாகத்தான் புரிந்துக்கொண்டேனா என மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கடைசி அத்தியாயத்தில் இருக்கும் உண்மையை ஜீரணிக்க முடியாமல் மென்று கொண்டிருக்கிறேன் இன்னமும்.

5. நுளம்பு

இன்னும் நடுக்கம் குறையாத மனநிலையில் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘இந்த ஆயிஷா ஆரம்பத்திலேயே அபர்ணா பத்தி வீட்ல சொல்லியிருக்க கூடாதா..? ஆயிஷா தான் இப்படி இருந்திருக்கானா இந்த ரஞ்சித்துமா? ச்சை. என்ன மனிதர்கள் இவர்கள்.!! கொஞ்சம் கொஞ்சமாக develop ஆகி, அபய்யின் உயிர் குடித்துச் சமைத்துத் தின்னும் அளவு போயிருக்கு.’ இப்படிதான் 2 நாட்களாக புலம்பிக்கொண்டிருந்தேன்.

ரத்தம் குடிக்கும் ஒரு மனுஷியை நேசிக்கும் மனிதர்கள் விசித்திர பிறவிகள் என்றே தோன்றியது. ஒரு வித குமட்டலோடு இதை எழுதிக்கொண்டிருப்பது இக்கதையின் வெற்றி.

6. வீ

அந்த ஊரின் சம்பிரதாயம் : குசாஸா ஃபும்பி. அதாவது பருவத்தில் ருதுவாகும் பெண்களை ஆண் கடவுள் என நம்பும் ஒருவரோடு ஓர் இரவு தங்க வேண்டும். (பெரிய மனிதர்கள் மற்றும் அரசுக்கும் உடன்பாடுதான்) இதை எதிர்க்கக் களமிறங்கும் எல்லியட்டுக்கு கடவுளின் சாயல்! கூடுமானவரை ஒவ்வொருவரிடமும் பேசி, பின் ஆண் கடவுள் லும்பினியின் மனைவி லிண்டாவிடம் பேசும் போது, அந்த ஆண் கடவுள் நூறு பெண்களை இழக்க மனமில்லாமல் மனைவியைத் தள்ளி வைத்திருப்பதும், லிண்டாவும் அச்சடங்கிற்கு விதிவிலக்கல்ல என்றும் தெரிய வருகிறது.
லிண்டாவின் மகளுக்கும் அச்சடங்கு நடக்கும் தானே என்று எல்லிய்ட் பேசும் போது சரிதானே என்று தோன்றுகிறது.

லும்பினியின் பலகீனத்தைப் பயன்படுத்தி அவனுக்குப் பதில் தான் சென்று அப்பெண்ணைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சொல்லும் போது பல மடங்கு உயர்ந்து நிற்கிறார் எல்லியட். வேலியே பயிரை மேய்வது இது தானோ.! இதயம் கணக்கும் முடிவு.

7. கலி

தொன்று தொட்டு இருந்து வரும் வர்ண பேதம், சாதிய ஏற்றத்தாழ்வு, ஆணவப்படுகொலைகள், இன்ன பிறவும்…! இவற்றை யதார்த்தமாய் சுட்டிக்காட்டி விட்டு, இன்றைய கலிகாலத்தில் இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொரு மனிதனும் சம்புகனின் அவதாரம் எனக் கொள்வோம் எனச் சொல்லாமல் சொல்கிறார் writer.
(தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் இக்கதை வெளியானது என்பது கூடுதல் செய்தி)

8. தான்தோன்றி

ஒரு மனிதன் அறிவுத்தேடலில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டால் அது ஆரோக்கியமான விஷயம். ஒரு இயந்திரம் – ஒரு ரோபோ அதைச் செய்தால்.., மாறுபட்ட சிந்தனை கொண்ட கதை இது.

9. கிருமி

இக்கதையைப் படித்து முடித்து கண்களில் நீர் வரச் சிரித்தேன். எதிர் காலத்தில் அதாவது, இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண் பெண் எழுத்துக்களின் முதல் எழுத்து மட்டும் மாறி இருக்க.., மற்றவையெல்லாம் as usual. சரவணகார்த்தியேனின் கற்பனை அபாரம்!! இம்மாற்றம் தற்போது உலகை ஆட்டிவைக்கும் கிருமியால் வந்தது என்பதாக..

10. ஜி

பெண்ணின் மனம் மற்றும் உடல் தேவையின் யதார்த்தத்தைச் சொல்லும் கதை. மனைவி வேறு ஒருவனிடம் உச்சம் அனுபவித்தாள் என்பதற்காகவே அவளைப் பிரியும் கணவன்.
ஒரு நாள் உச்சம் அனுபவித்தற்குப் பரிசாய் புற்றுநோய் கண்டு காலம் முழுதும் தனிமையில் வாழும் முல்லை பெரிய மனுஷி தான். ஒரு பெண் வாழ எத்தனை தான் போராட வேண்டியிருக்கு.
ஜி என்பது ஜி ஸ்பாட்டை குறிக்கும் வார்த்தை மட்டுமல்ல. முல்லை என்ற மனுஷியை உயர்த்தும் ஒரு சொல் கூட.

இது கதை விமர்சனம் லா இல்ல. கதைகளைப் படிக்கும் போது நான் உணர்ந்தவைகள். அவ்வளவு தான். ஒவ்வொன்றும் நீண்ட கதை தான். ஆனால் எங்கும் தொய்வில்லை. சலிப்பில்லை. ஒரு கதை முடித்து அடுத்த கதை ஆரம்பிக்க எடுத்துக் கொள்ளும் காலம் கூட அதிகம் தான். அவ்வளவு indigestible. செறிக்க முடியாத அவஸ்தையை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம் போலும்.

வாழ்த்துகள் csk..!


– வாசுகி தேவராஜ்

நூல் தகவல்:
நூல் :

 கிருமி

பிரிவு : சிறுகதைகள்
ஆசிரியர்:

சி. சரவணகார்த்தியேன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு :  2021
பக்கங்கள் : 304
விலை : 350

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *