கடல் பழங்குடிகளின் தொப்புள் கொடி உறவு. சாகசம், வாழ்வு, இழப்பு, துயரம் இவற்றை நடைமுறை நிகழ்வுகள் மூலமும் கள ஆய்வுகள் மூலமும் உயிர்ப்பான வரிகளால் உருவான இந்நூல் நம் உணர்வின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இயற்கை எப்போதும் தன்னியல்பில் தான் நகர்கிறது. பல சமயம் மனிதனே அதில் குறுக்கீடு செய்கிறான். இயல்பான வாழ்வு முடங்கினால் இயற்கை சீற்றம் என்கிறான். அதன் விளைவுகளைப் பேரிடர்கள் என்கிறான். உண்மையில் பேரிடர்கள் மனிதனின் அணுகுமுறையால் தான் உருவாகின்றன.
முல்லை நில மக்களின் துன்பங்களைப் பதிவு செய்த அளவிற்கு நெய்தல் நில மக்களின் துன்பங்களை நம் இலக்கியங்கள் வலுவாகப் பதிவு செய்யவில்லை. ஆழ்கடலோடிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் துயரங்களை அழுத்தமாகப் பதிவு செய்த தமிழ் சினிமாக்கள் எதுவுமில்லை
காரணம் கடல் பழங்குடிகளைப் பற்றிய நமது அடிப்படை புரிதல் வெகு தொலைவில் உள்ளது.
கரைத் தொடும் புயல்களைப் பற்றிக் கூட நமக்குச் சரியான புரிதல் இல்லை. அதன் பாதிப்புகளைச் சமவெளி விவசாயிகள் மீதான துயர பிம்பமாகவே மட்டும் பார்த்துப் பழகி விட்டோம். இதற்கு நமது ஊடகங்களின் அணுகுமுறையும் காரணம்.
ஒரு புயல் வருகிறதென்றால் அதில் முதலில் பாதிக்கப்படுவது கடலோடிகள். அதுவும் உச்சபட்சமான முதற்கட்ட பாதிப்பை எதிர்கொள்வது நடுக் கடல் மீனவர்கள்.
வேணாட்டு மீனவர்கள் சங்க காலம் முதலே ஆழ் கடல் மீன் பிடிப்பில் வழி வழியான பாரம்பரிய மரபு நுணுக்கங்களையும் இயல்பான திறனையும் கொண்டிருந்தனர். ஆனால் தற்கால தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம் அவர்களது விழிப்புணர்வை சூறையாடி விட்டது.
மீனவர்கள் புயலின் போது தொலைந்து போன செய்திகளைப் பார்க்கும் போது..,
“முன்னடியே அறிவிப்பு செய்யறாங்க .இருந்தும் அத மீறி மீனவர்கள் ஆழ்கடலுக்கு ஏன் போறாங்க..? ” என்ற அலட்சியமாகக் கடந்து போகும் பொதுப் பார்வை தான் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
ஏன் கரைக்கடலை தாண்டிப் போகிறார்கள்..? ஏனெனில் கரைக்கடலில் மீன்கள் அறுகிவிட்டது. காரணம் அவை சமவெளி தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத ஒட்டுமொத்த ரசாயனக் கழிவுள் சங்கமிக்கும் இடமாகி விட்டது. மீன்வளத்தை அதிகரிக்கும் விதை நெல் போன்ற “சங்காயம் “, “சாளை ( sardine)” போன்ற சிறு மீன்கள் லிட்டருக்குக் குறைந்த பட்சம் நான்கைந்து மில்லி அளவு உயிர்வளி (ஆக்ஸிஜன்) இல்லாமல் சுருங்கி விட்டன. இதனால் கரைக்கடல் மீன் பெருக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
எனவே ஆழ்கடல் மீன் பிடித்தலுக்குச் சட்டத்திற்குப் புறம்பாகச் செல்கிறார்களா..?
” 360 கிலோ மீட்டர் தொலைவு வரை நம்முடைய முற்றுரிமை பொருளாதார மண்டலம் என்பது அதற்கப்பால் 270 கிலோ மீட்டர் பன்னாட்டுக் கடல் பகுதி வரையிலும் மீன் பிடிக்கலாம் என்பது இந்திய மீனவர்களின் சட்டப்பூர்வமான உரிமை . 600 கிலோ மீட்டர் தொலைவு வரை நாம் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று UNCLOS பன்னாட்டு விதிகள் அனுமதிக்கின்றன. பல நாடுகள் நடுக்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கின்றன.
360 கி.மீ வரை விரியும் 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட இந்தியப் பொருளாதார கடற்பரப்பிலுள்ள நமக்குப் பாத்தியப்பட்ட மீன்வளம் இந்திய உணவுப் பொருளாதாரத்தையும் பல லட்ச நேரடி மறைமுக வேலை வாய்ப்புகளையும் உள்ளடக்கியது.
ஆனால் அரசு இதற்குச் சரியான தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவில்லை. பாதுகாப்பு மற்றும் தேடுதலை ஐரோப்பிய நாடுகளைப் போல் அமல்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதில்லை.
“வரும்.., ஆனா வராது.., ” என்கிற வானிலை அறிவிப்புகளும் “குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டுவது போன்ற பேரிடர் அணுகுமுறைகளும் ” நமது நிர்வாக முறையின் தொடரும் சாபக்கேடுகள்.
புயல் வரும் என்கிற எச்சரிகையோடு மையம், திசை, நகர்வு , காற்றின் வேகம் போன்ற தகவல்களைத் தருவதில்லை. புயல் எச்சரிக்கை கூட கடலில் உள்ள மீனவர்களுக்குச் சென்று சேர்வதில்லை.
(நடுக்கடல் மீன்பிடிப்பு மாதக்கணக்கில் நடை பெறக்கூடியது) என நாம் அறியாத தகவல் பலதை பதியும் செய்யும் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒக்கிப் பேரிடர் குறித்து “வெதர் மேன்” என்கிற தனி மனிதர் தான் முதல் அறிவிப்பைத் தந்தார்.மேம்பாடற்ற நவீனத் தொழில்நுட்ப அபாய கால எச்சரிக்கை கருவிகளும், நடுக்கடல் மீட்புத்தேடல் நாடகங்களும் இருமுனை தகவல் தொடர்பு சிக்கல்களும் தொடர்வதை போதிய ஆய்வு தரவுகளுடன் முன் வைக்கிறார்.
ஒக்கிப் புயலால் ஆழ்கடலில் தொலைந்து போன 200 மீனவர்கள் பற்றி நிலை பரிதாபகரமானது மட்டுமல்ல. அது நமது கட்டமைப்பின் இயலாமை. இடைத் தேர்தல் பின்சென்ற ஊடகக் கூட்டமும் , அதிகாரிகளின் அலட்சியமும் ஒக்கிப் புயலின் தீவிரத்தைத் தமிழக பொதுசன பார்வைக்குக் கொண்டு செல்லாத அதே சமயம் கேரள அரசு இந்த நிகழ்வின் போது ஓரளவு திருப்திகரமாகச் செயலாற்றியது. அதன் பின்பு மீனவர்களுக்கு ISRO உடன் ஒப்பந்தம் செய்து ஆபத்துக் கால தகவல் தொடர்புகளை வலுவாக்கியது.
10% அசைவ விரும்பிகளை மட்டும் கொண்ட குஜராத்தின் மீன் பிடி துறைமுகங்களின் மேம்பாட்டினையும் நவீன பேரிடர் கால சாதனங்கள் பற்றிய வியப்பையும் தருகிறார். அதன் உள்கட்டமைப்பு , ஏற்றுமதி முறைகளின் ஒருங்கிணைப்பையும் விவரிக்கிறார். இந்தியாவின் அதிதொழில்நுட்ப மீன்பிடி கிராமமான “விராவல்” குஜராத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2004 சுனாமி அனுபவத்துக்கு பிறகு தேசம் இயற்றிய தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005) , தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கை (2016) ஆகியவற்றில் நடுக்கடல் புயல் மேலாண்மை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
உலகமயமாக்கலும் பெரும் கார்பேரேட் நிறுவனங்களும் ஆழ்கடல் மீதான கனிம வளங்களை களவாட கடல் பழங்குடிகளை ஒரு தடையாகவே பார்க்கிறது.
புரிதலற்ற நிபுணர்கள் மற்றும் ஊடகங்களின் மீனவர்கள் மீதான கனிவு என்பது அவர்களை “கடற்கரைகளிருந்து அப்புறபடுத்துவது அவர்களின் பாதுகாப்புக்காகவே.., ” என்கிற புனைவை கட்டமைக்கின்றன. கடற்கரை முழுவதும் ரிசார்ட்டுகளும், பெரும் பணக்காரர்களின் பீச் ஹவுஸ்களும் பெருகி வருவதைப் பற்றிய கேள்விகள் அவர்களிடம் எழுவதில்லை.
நிலத்தில் உழவனின் கால்படுவதைப் போன்று கடல் மீது மீனவனின் கண் எந்நேரமும் இருப்பது அவசியம்.
பேரிடர்களில் போகும் உயிரோடு பிரச்சனை முற்று பெறுவதில்லை. அவர்களை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீது அவலமாக தொடரும் வாழ்வின் பரிதாபத்தை வலி நிறைந்தை வார்த்தைகள் மூலம் நம்மை கலங்க வைக்கிறார்.
முழு முழுக்க ஆணைச் சார்ந்து வாழும் கடற்கரை பெண் சமூகத்தின் பொருளாதார பிரச்சனை, குடும்ப நிர்வாகம், சமூகப் பிரச்சனை இந்த மூன்று சிக்கலில் பிழைத்து வளர்வது பெரும் சாதனையாக உள்ளது. கடலுக்கு சென்ற தன் கணவன் இறந்தாரா இல்லையா என்ற தகவல் கூட இல்லாமல் பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் பெண்களின் துயரார்ந்த அகத்தையும் நமக்கு தெளிவுப்படுத்துகிறார்.
தனுஷ்கோடி புயல், ஒரிஸா புயல்கள், பியான் புயல், ஒக்கிப் புயல் ஆகியவற்றின் கரையோர தாக்குதல்களை மட்டும் அறிந்த நமக்கு ஆழ்கடலில் ஒரு புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆழமான அனுபவமாக நமக்கு தருகிகிறார்.
இவரது தரவுகளையும் நிகழ்வுகளையும் ஒப்பிடும் போது சென்னை பெருவெள்ளம் என்பது ஒரு சிறுதுளி. அதனைக் கூட கையாளும் திறமையற்ற நிர்வாக கட்டமைப்பு பற்றியும் , நவீன தொழில் நுட்பத்தினை அமுல்படுத்தும் திறன் பற்றியும் நாம் மறுஆய்வு செய்ய வேண்டும்.
கடல் பற்றிய அறிவு என்பதும் நமக்கு கடற்கரையில் நடையிடுவதும் தூரத்தில் உதயமாகும் கதிரவனின் காட்சியோடும் நின்று விட்டது.
மர்மம் நிறைந்த கடலின் மறுபக்கத்தையும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையேயான கழைக்கூத்தாட்ட சமநிலை அச்சினையும் இந்நூல் புலப்படுத்துகிறது.
மீன் சுவைக்கு நா பழகி மீன் வாடைக்கு முகம் திருப்பும் சமூத்திற்கு சர்வதேச கடல் எல்லையில் இருக்கும் மனித மூச்சின் லயத்தையும் அவனைச் சார்ந்த குடும்பத்தின் உணர்வின் மீதான அடிப்படை புரிதலை இந்நூல் நமக்கு எடுத்தோம்புகிறது.
இனி தொலைக்காட்சியில் புயல் பற்றிய அறிவிப்புகள் வாசிக்கும் போதும் , தெருவில் மீனைக் கூவி விற்றுச் செல்லும் பெண்மணியின் குரல் ஒலியும் நம் மனதை ஆழம் தெரியாத கடல் மீது ஈர்த்து செல்வதை தவிர்க்க முடியாது.
கடல், கடல் பழங்குடிகள், பேரிடர்கள் மீதான ஒரு பரந்துபட்ட தெளிவான புரிதலை ஆவணப்படுத்தியமைக்கு இந்நூலாசிரியர் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின்(1959)
தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018-ல் பணி நிறைவு பெற்றவர். கடல், மீன்வளம், கடல் சார் மக்கள் குறித்த ஆய்வில் தீவிரமாக இயங்கி வருபவர்.
“கடலம்மா பேசுறங் கண்ணு”, “நெய்தல் சுவடுகள் “, “பழவேற்காடு முதல் நீரோடி வரை”, “மூதாய் மரம்”, “The Sea Tribes Under Seige” உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் , ஒரு ஆவணப்படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி ஆகியவற்றின் நிறுவன பதிப்பாளரான இவர் ” விகடன் இலக்கிய விருது ( 2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2017) என பல விருதுகளை பெற்றவர்.
-மஞ்சுநாத்
நூல்: | 1000 கடல் மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப்பேரிடரும்) |
பிரிவு : | கட்டுரைகள் |
ஆசிரியர்: | வறீதையா கான்ஸ்தந்தின் |
வெளியீடு: | தடாகம் வெளியீடு |
வெளியான ஆண்டு | 2018 |
பக்கங்கள் : | 248 |
விலை : | ₹ 250 |
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.