01/12/1918-ல் கங்கை கரையோரம் நர்தராவில் (உத்திரப் பிரதேசம்) பிறந்த ராம்சுரத் குன்வர் என்கிற பட்டதாரி ஆசிரியர் 4 குழந்தைகளுக்குத் தகப்பனாகி தனது இல்லற கடமைகளைச் செய்து வரும் போது அவரின் ஆன்மீக தேடலுக்கான காலம் கனிகிறது.

யோகப்பாதையில் நடையிடும் கிரகஸ்தர்களுக்கு வீடு என்பது ஒருபோதும் தடையல்ல. ஆனால் குடும்பத்தினரின் புரிதலையும் தாண்டி அவர்களின் இருப்பு குடும்பத்தினருக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தும். எனவே தான் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கிருந்து நகர வேண்டியதாக இருக்கிறது. சில சமயங்களில் அரிதாக மனைவியும் ஆன்மீக பாதையில் நடையிடும் போது இலக்கு எளிதாகி விடுகிறது. துரதிருஷ்டவசமாக ஞான வரலாற்றில் அது சிலரது வாழ்வில் மட்டுமே சாத்தியமாகி உள்ளது.

ஆன்மீக தீவிரம் உச்சியை வெடித்தெழுச் செய்யும் போது பெரும்பாலான சாதகர்கள் இமயத்தின் குளிர்ச்சியை நாடி கதகதப்பாகிக் கொள்ள வடக்கு நோக்கி நடையிடுவார்கள். ஆனால் இவரோ தகிக்கும் பெருங்கனலாய் இருந்தும் இமயம் நாடாமல் அக்னி பிழம்பாய் கொதித்தெழும் அருணையை நோக்கி வருகிறார். தேசம் முழுக்க சுற்றியலைந்து 1947-ல் முதல் முறையாகத் திருவண்ணாமலைக்கு வருகிறார். ரமணமகரிஷியும், ஸ்ரீ அரவிந்தரும் அவரது வளர்ச்சியை துரிதப்படுத்துகிறார்கள்.

சுவாமி ராமதாஸ் தரும் மந்திர தீட்சை அவரது பாதையை முழுமையடையச் செய்கிறது. தீவிரத்தன்மையில் வெடித்தெழுகிறார். ஜீவநதியாக நெஞ்சில் பொங்கி பிரவாகமெடுக்கும் மந்திரம் அவரை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. குருவின் மடியில் இளைப்பாற விரும்புகிறார். குருவோ அவருக்கான பணியை உணர்த்த மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்.

குரு என்பவர் சுயநலமற்றவர். அவரின் அதி தீவிர வழிமுறைகளும் இருப்பும் சீடனை முற்றிலும் தகர்த்தெறியும். அதன் வலி கொடுமையானது. ஆன்மீக பாதையில் உச்சத்திற்குச் சென்ற ஒவ்வொரு குருமார்களும் இதைக் கடந்தே வந்திருக்கிறார்கள்.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி வழி என்பது வழிமுறைகளற்றது. அவருக்குத் தனித்த வழிகள் எதுவும் கிடையாது. JK வின் முரண்பாடு யோகிக்குச் சரியான திசையைக் காட்டுகிறது.

சாதகன் நிலையிலிருந்து யோகி நிலைக்கு மிளிர்ந்து 1965 முதல் திருவண்ணாமலையைத் தனது நிரந்தர வீடாக்கிக் கொள்கிறார். வழக்கம் போல் சமூகம் தனது அன்பான வரவேற்பை வன்முறை மூலமே காட்டுகிறது.

குருமார்களில் பல வகைகள். அதிலொரு விதம் தங்கள் இருப்பின் மூலமே அருளைப் பரப்பிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்தவொரு தத்துவ விளக்கத்தையும் தருவதில்லை. மந்திர மாயாஜால வித்தைகளையும் புரிவதில்லை. அன்றாட சமூக நிகழ்வுகளில் பங்கெடுப்பதுமின்றி சும்மா வெறுமனே அமர்ந்து கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களை அருள் நிறைந்த அணுக்கத்தால் ஆற்றுப்படுத்துவார்கள். யோகி ராம் சுரத்குமாரின் தர்பார் துவங்குகிறது. அவர் பலரின் வாழ்க்கையை உயர்த்துகிறார்.

யோகியின் சரிதம் குறிப்பிட்ட பகுதிகளைக் கடந்த பின் அவர் பக்தர்களின் சரிதமாகிறது. யோகியின் ஆற்றல் சமூகத்தில் ஒன்றாய் கலந்த பின்பு அவருக்குத் தனிப்பட்ட சரிதம் இல்லை. அவரது வாழ்வு வெட்ட வெளியாகிறது.பக்தர்களின் வாழ்வோடு அந்த பேராற்றால் பயணப்படுகிறது. எனவே பக்தர்களின் மூலமே அவரது சரிதத்தைத் தொடர்கிறார் ஆசிரியர்.

நிகழ்வுகளை விவரிக்கும் போது அது ஆங்காங்கு பாதியில் அறுபட்டு விடுகிறது. திரும்பத் திரும்ப விவரித்த நிகழ்வுகளே மறுபடியும் சுழல்கின்றன.

யோகியுடன் பண்டிட் , டி.கே.சுந்தரேச ஐயர், சுவாமி ஞானானந்தா, ராஜமாணிக்க நாடார், டாக்டர்.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், கி.வா.ஜ , தூரன், முருகேஷ்ஜீ, பார்த்தசாரதி ஆகியோருடனான தொடர்பைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.ஆன்மீக பாதையில் நடையிடும் சாதகர்களின் தடையை அகற்றவும் அவர் உதவியதாகத் தெரிவிக்கிறார்.

எளிமையான இடங்களில் தெய்வீகத்தை உணர்வது எளிது. மேற்பூச்சற்ற நிலையில் அங்குத் தெய்வீகம் பேரருவியைப் போல் வழிந்தோடுகிறது. சன்னிதி தெரு இல்லம் அப்படியொரு நிலையிலிருந்ததை உணர முடிகிறது.

யோகியை ஒரு அமைப்பு மூலம் அமர வைக்க முயற்சிக்கும் போது அரசியலும் அதிகாரமும் ஆக்கிரமிக்கிறது. பக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு பாசாங்கு முன்னிறுத்தப்படுகிறது

ஆசிரமக் கட்டுமானம் முதற்கொண்டு மகா சமாதி ( 20/02/2001)வரை அவரை சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளின் அரசியல் நிழலையும் ஆன்மீக சூட்சமத்தையும் விவரிக்கிறார்.

காலம் தாழ்த்தி துவங்கப்பட்ட அமைப்பு (ஆசிரமம் & Trust) நடவடிக்கைகள் ஒரு காரணமாக இருந்தாலும்,யோகிராம் சுரத்குமார் என்கிற பிரமாண்டமான ஞான விருட்சத்தின் வழிமுறைகளை அடுத்த தலைமுறைக்குப் பழுதின்றி கொண்டு செல்ல தீவிர சிஷ்ய பரம்பரையை உருவாகவில்லை. அவரை சுற்றி இனிமையான பக்தர்கள் உருவானார்கள். ஆனால் சீடர்கள் உருவாகவில்லை.பக்தரின் செயல்பாட்டிற்கும் சீடரின் செயல்பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பக்தர் தன்னை கரைத்துக் கொண்டவர். சமாதி நிலையின் விளிம்பிற்குச் செல்ல . தவித்துக் கொண்டே இருப்பார். சீடர்கள் விழிப்புணர்வு வழியில் குரு பாரம்பரியத்தைப் பரப்ப உருவாகிறார்கள். இது போன்ற விஷயங்களில் அவருக்கு ஈடுபாடு இல்லை. தன்னளவில் ஒரு ஞான சூரியனாய் அவருக்கான பணியை முழுமை பெறச் செய்வதிலேயே காலத்தைச் செலவிட்டார்.

ராமகிருஷ்ணருக்கு விவேகானந்தர் கிடைத்தது போல் யோகிராம் சுரத்குமாருக்கு அத்தகைய ஒரு சீடர் கூட உருவாகவே இல்லை. பலர் குருட்டுப் புத்தி கொண்ட சுயநலமிகளாகவே இருந்துள்ளனர். தான், தன் குடும்பம், தொழில் என இவற்றின் பிடியிலும் அதை அவர் அருள் கொண்டு வளர்த்துக் கொள்ளும் வேட்கையிலுமே வலம் வந்துள்ளனர்.

ஆரம்பக் காலத்தில் அவருடன் இருந்தவர்கள் கூட அவரை வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். அவர்களது மேம்பாடு என்பது அவரிட்ட அருள் பிச்சை. தன்னையொரு பிச்சைக்காரன் என்று கூறிக்கொண்ட மாபெரும் ஞான கருவூலத்தைச் சுற்றி அதைப் பெறுவதற்கான தகுதிகளை உயர்த்திக் கொள்ளாத கூட்டமே இருந்துள்ளது. எப்போதும் தன்முனைப்பும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலுமே இருந்துள்ளனர். சமூகம் ஒரு ஞானியை ஒருபோதும் முழுமையாக உணர்ந்து கொள்வதில்லை. ஸ்தூல இருப்பில் தவறவிட்டப் பிறகு சூட்சம இருப்பில் கூப்பாடு போடுவது காலந்தொட்டு வழக்காய் இருப்பது அவலம்.

தனது அளப்பறியச் சக்தியால் நிறைய உயிர்களின் கர்ம வினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கரைத்துள்ளார். தனது ஆன்ம சக்தியை முழுவதும் அதற்குப் பயன்படுத்தியுள்ளார். சில சமயங்களில் அதன் பாரத்தை அவரே சுமந்துள்ளார். நீண்ட நாள் இடைவிடாத சாதனா மூலம் அடைய வேண்டிய ஆன்மீக அனுபவங்களை நிறை பேருக்குத் தனது இணையில்லாத கருணை மூலம் எளிதாக வழங்கி உள்ளார். அவரது இருப்பின் அதிர்வே சிலருக்கு உச்ச பட்சமான ஆன்மீக சாத்தியங்களை வழங்கி உள்ளது. பக்திக்கான ஒரு பாதையை அவர் தெளிவாக வகுத்தளித்தார். அர்ப்பணிப்பு என்பதின் உண்மையான பொருளை அவரது உண்மையான சில பக்தர்கள் மட்டுமே பற்றிக்கொண்டனர்.

யோகி ஒரு காந்தம் போன்றவர். பக்தர்களை இரும்புத்துகளாய் ஈர்த்துக் கொள்ளும் போது மண் துகள்களும் தூசி துரும்புகளும் ஒட்டிக் கொள்வது இயல்பானது.

காற்றில் அடித்து வரும் காகிதம் கர்ம வினைகளைக் கரைத்துக் கொள்ளக் காந்தத்தைச் சுற்றிக் கொள்கிறது. காந்தத்தின் மாபெரும் ஈர்ப்பு அந்த காகித மேற்பரப்பின் மீதும் இரும்பு துகள்களை அனைத்துக் கொள்ளும்.காகிதம் நினைத்துக் கொள்ளலாம் காந்தமும் இரும்பும் தனது சக்தியால் தான் ஈர்க்கப்பட்டுள்ளன என்று. காலம் புரளும் போது எஞ்சியிருப்பது எதுவோ அதுவே பூரணம்.

இப்புத்தகம் இயற்றிய திரு.பார்த்தசாரதி யோகியுடன் பல காலம் பயணப்பட்டவர். அவரது அருள் கடலில் மூழ்கியவர். ஒரு குருவைப் பற்றி யாராலும் முழுமையாக விவரித்து விட முடியாது. குருடன் யானையைத் தடவிப் பார்த்து விவரிப்பதைப் போன்றது அது. ஆனால் யானையை நெருங்கவும் அதைத் தொட்டுத் தடவவும் தைரியம் தேவை. அது குருவின் கருணை. இந்த கருணையை முழுமையாகச் சுவீகரித்துக் கொண்ட பார்த்தசாரதி அவர்களின் இந்நூல் அவரது குருவின் முழுமையை, பணியை, கொண்டாட்டத்தை , அளவில்லாத சக்தியை விவரிக்கிறது.

அதே சமயத்தில் குருவுக்கும் அவருக்குமான தொடர்பு , தனது நெகிழ்வுகள், ஆற்றாமைகள், தவறுகள், சாத்தியங்கள், அவர் மீது இயற்றப்பட்ட கீதங்கள் அனைத்தையும் ஒரு வெளிப்படையான அறிக்கை போல் தந்துள்ளார்.

யோகி பரிந்துரைக்கும் நீண்ட நூல் பட்டியலும், சுரத முனி காணிக்கை என்ற பெயரில் 1976-ம் திரு.பார்த்தசாரதி அவர்களின் 100 பாடல்களும் இந்நூலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பெரும் அதிர்வினையும் தெளிவையும் தரக்கூடிய இந்நூல் பூரணத்தை நோக்கிய பயணத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்தும்.

மூலத்தைத் தழுவிய நண்பர் சரஸ்வதி சுவாமிநாதனின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது.


மஞ்சுநாத்

 

நூல் தகவல்:
நூல்: அமர காவியம் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சரிதம்
பிரிவு : வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்: எஸ். பார்த்தசாரதி
தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
வெளியான ஆண்டு 2021
பக்கங்கள் : 520
விலை : ₹  500
தொடர்புக்கு : +91 9994541010
கிண்டிப் பதிப்பு: