புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத் தொழிலை இழந்தவர்களில் கவிஞர் யவனிகாவும் ஒருவர். வணிகராக இந்தியா மட்டுமல்லாது தேசம் கடந்து அலைந்து திரிந்த பெரும் பயணி யவனிகாவின் கவிதைகள் நிலத்தையும் மனிதர்களையும் மீட்டுருவாக்கம் செய்கின்றன.
ஒரு புதிய வர்த்தகக் காலனியம் உருவாவதை தீர்க்கதரிசனத்தோடு எழுத்தில் பதிவு செய்தவர் யவனிகா. தங்க நாற்கரச் சாலையின் வருகையால் தொலைந்து போன கிராமத்தைத் தேடிப்போகும் பேருந்தை நாம் யவனிகாவின் கவிதைகளில் காணலாம்.
யவனிகா கவிதைகளில் வரும் கடவுள் தன்னைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கதாபாத்திரமாகத்தான் காட்சி தருகிறார்.
கடவுளின் இடத்தில் கோட்பாட்டையும் கார்ல் மார்க்ஸையும் வைக்கும் யவனிகா.பல ஆண்டுகளாக தமிழ்க் கவிதைகளில் புழங்கப்படும் கடவுள் பிம்பத்தை உடைத்து புத்துருவாக்கம் செய்கிறார்.
பூமியிலுள்ள தாவரங்கள், பாலூட்டிகள், மெல்லுடலிகள், வெவ்வேறு மன, நிலப் பிரதேசத்து மனிதர்கள், உணர்வுநிலைகள், பால்நிலைகள், பாலியல் நிலைகள் என பல்லுயிர்கள் வாழும் பிரபஞ்சமாக யவனிகாவின் கவிதைகள் உருக்கொள்கின்றன.
வலியும் சந்தோஷமும் கொண்ட இயந்திரமாக மனிதனைப் பாடுவதைப் போலவே இயற்கையையும் இயந்திரமாகவே பாவிக்கிறார் யவனிகா.
இயற்கையை அனைத்து வலிகளுடனும் நினைவின் சுமைகளுடனும் ஏமாற்றத்தின் முனைகளில் வாழ்ந்து தீர்க்கும் மானுட உயிர்களுக்குப் போதையும் காமமும் மட்டுமே தப்பிக்கும் வழிகளாக யவனிகாவின் கவிதைகள் தீர்மானிக்கின்றன. உலகம் மாறுவதைப் பெண்களின், பாலியல் பழக்கவழக்கங்களின் மாறுதல் வழியாகப் காட்சியாக விரிக்கின்றன இந்தக் கவிதைகள்.
உயிரை நீட்டித்து வைத்திருக்க நப்பாசையாக ஒரு ராத்தல் மைதாமாவைக்கூட வாங்குவதற்கு இயலாத ஓட்டை நாணயங்களாக உடல்பையில் கிணுகிணுக்கிறது காமம். அது ஒன்றே ஆறுதலாக, கனவாக அவனது கவிதைப் பிரபஞ்சத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உள்ளது.
அறிவின் நம்பிக்கையில் எழுந்து அறிவின் பயனின்மையைப் பாடுவது; கருத்தியல் நம்பிக்கையுடன் மேலே போய்,கருத்தியலின் தோல்வியைப் பாடுவது; கோட்பாட்டின் பாட்டையில் பயணித்து கோட்பாட்டின் அபத்தத்தை எழுதுவது; உடலின் விடுதலையில் தற்காலிகமாகச் சுகித்து உடலின் எல்லைக்குள் துக்கித்துப் பகிர்வது’ என்று இவர் கவிதைகள் எழுதல், பறத்தல், அமர்தல் அமைகிறது என்று பிரமாண்டம் கொள்கிறது.
வரலாற்றையும் தத்துவத்தையும் இடைவெட்டி உரைக்கும் கதைசொல்லி என்ற வெளிப் பாடுகளைக் கொண்டிருக்கிறது யவனிகாவின் கவிதைகள்.
மரபற்றதும் அந்நியமானதாகவும் தோற்றமளிக்கும் ஒருவகைக் மொழியை யவனிகா உருவாக்குகிறார்.
இறகுகளைக் கொண்டதும் புனிதமானதும் இலேசானதுமான வஸ்து என்று கவிதையை வரையறுக்கிறார் ப்ளேட்டோ.
யவனிகா ஒரு மார்க்ஸியக் கவிஞன் என்றாலும் பெரும்பாலான தமிழ் மார்க்ஸியர்களுக்குத் அது தெரிய வே தெரியாது என்பதுதான் துரதிர்ஷ்டம்.
வாழ்க்கை முறையிலும், கலாச்சாரத்திலும், மக்களின் இயல்புகளிலும் உலகமயமாதல் காலகட்டம் ஏற்படுத்திய மாற்றங்களைக் கவிதைகளாக்கியவர் யவனிகா.
கவிதைகளில் யவனிகா நிகழ்த்தும் கற்பனைகளின் பாய்ச்சல் அசாத்தியமானது தனித்துவமானது.
பாரதியில் தொடங்கிய நவீன கவிதை மரபு முடிந்து விட்டதாக நாம் நினைத்துக் கொள்ள முடியாது. ஆனால் நவீன கவிதையின் இலக்கணம் பெருமளவுக்கு மாற்றப்பட்டு இலக்கிய அணுகுமுறையில் பலமான மதிப்பீடுகள் கவிதைகளாக மாறியுள்ளது. சமூகத்தின் பண்பாடும், பொது புத்தி மனோபாவமும் கவிதையனுபவத்தை பல்வேறு மதிப்பீடுகள் வழி நிர்ணயித்துக் கொண்டு புதிய பார்வைகளை கைகொள்கிறது.
பல்வேறு கிளைச்சம்பவங்களுடன் நீண்டு விரியும் யவனிகாவின் கவிதைகள் நவீன கவிதைத் தளத்திற்கு எக்காலத்திற்கும் புதியவை.
சிறு கவிதைகளையே அதிகமாக வாசித்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு யவனிகாவின் கவிதைகள் வியப்பளிக்கின்றன. ஆனால் கவிதைக்குள் நுழைந்து விடுகிற பொழுது ஒவ்வொரு சொல்லும் மொழியால் நம்மை வசீகரிக்கின்றன.
நின்று நிதானித்து உள்வாங்கிக் கடந்து போகிற நிலையினை ஒவ்வொரு கவிதையும் உருவாக்கி விடுகின்றன.
நான்கு வழிச் சாலைகள் வந்த பிறகு நமது வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கிபி இரண்டாயிரம் வரைக்கும் கூட சாலை வழியாக இருநூறு கிலோமீட்டர் என்பதும் பெரும் தொலைவு. விடிய விடிய பயணிக்க வேண்டும். இரு வழிச் சாலைகளில் நமக்கு எதிரில் வாகனங்கள் வரும் போது சற்று வேகத்தைக் குறைத்து ஒதுங்கி வழி விட வேண்டும். ஊர்களைக் கடக்கும் போது யாராவது குறுக்கே வருவார்கள். கால்நடைகள் சாலையைக் கடக்கும். நாய்கள் குறுக்குமறுக்குமாக ஓடும். வேகத்தைக் குறைக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. கிட்டத்தட்ட வேகம் குறையாமலே ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊரை அடைந்துவிட முடிகிறது. வழுக்கும் சாலைகளில் தொலைவுகள் சுருங்கிவிட்டன. எங்கள் தேசத்தின் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு சாலைகள் அடையாளக் குறிகளாக மாறியிருக்கின்றன.
இப்போது எட்டு வழிச்சாலை, இந்த வளர்ச்சியை அடைவதற்குத்தானே இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை இழந்திருக்கிறார்கள்? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது? பல நூறு ஊர்களுக்கு நடுவில் கறுப்பு எல்லைக் கோடுகளாக சாலைகள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கடக்கவே முடியாத பெரும் பாம்புகளாக அவை ஊர்களுக்கு நடுவில் படுத்திருக்கின்றன. தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் மனிதர்கள், விலங்குகளின் எண்ணிக்கை மட்டுமே இலட்சக்கணக்கில் இருக்கும். இவையெல்லாம் வலி இல்லையா?
வளர்ச்சி என்று ஒரு பக்கம் இருந்தால் அதற்கான இழப்புகள் இன்னொரு பக்கம் இருக்கும். யவனிகாவின் கவிதைகள் அந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டக் கூடியவை. நம்மைச் சுற்றிலும் பின்னப்படும் நுண்ணரசியலைப் பேசக் கூடியவை.
பழைய, செப்பனிடப்பட்ட பேருந்து ஒன்று காட்சிப்படுத்தப்படும் கவிதையை வாசிக்கிறேன்.
பலமுறை செப்பனிடப்பட்ட பழைய பேருந்தினுள்
அதன் கண்ணாடி சன்னல்கள் தகரங்கள்
மற்றும் இருக்கைகளும் நடுங்க
எளிய மக்களுடன் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது
ஒரு நான்குவழிச் சாலையின் அழகிற்கு
சற்றுப் பொருத்தமில்லாததுதான்
தனது நிறுத்தத்தில் இறங்க அக்கிழவர்
கால்களில் வலுவற்று இருந்தார்
அவரின் நிலம் கைமாறி இருக்கலாம்
இரண்டு ரூபாய்க்கு ஏழு தையல் ஊசிகளை
விற்பவன் உற்சாகமாக இறங்கிப் போயிருந்தான்
இன்னுமிருக்கிறதா கிழிந்த துணிகள்
பழக்கூடைகள் பள்ளிச் சிறார்கள்
தலை வறண்ட பெண்கள் இடையே
ஏதோ நடத்துனர் தன் கால்களால் பேருந்தை
உந்தி ஓட்டுபவர் போல சிரமமாகத் தெரிகிறார்
எத்தனைமுறை செப்பனிடப்பட்டாலும் அப்பேருந்து
நான்குவழிச் சாலையின் மேம்பாலத்தில்
தோன்றும்போது இருபுறமும்
தொலைந்துபோன தன் கிராமத்தையேதான்
திடுக்கிட்டுத் தேடிச் செல்லும் போல
சாலையின் நடுவே நீளமாக வைத்த அரளிகள்
இளம்சிவப்பில் பூத்திருக்கின்றன.
நான்கு வழிச்சாலைகளை அமைத்து கார்போரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அவர்களின் சொகுசுக் கார்களுக்கும், சரக்கு வண்டிகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாலும் கூட இந்த தேசத்தில் நிலத்தை விற்றுக் கொண்டிருக்கும் முதியவர்களும், இரண்டு ரூபாய்க்கு ஏழு ஊசிகளை விற்றுக் கொண்டிருப்பவர்களும், தலை வறண்ட பெண்களும், பழக்கூடையைச் சுமந்து திரிகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள். எளிய மனிதர்களின் அவலங்கள் வளர்ச்சி பிம்பத்தின் நிழலில் ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள்தான் இந்த தேசத்தின் நிதர்சனம். இல்லையா? இன்னமும் சாமானிய மக்கள் வறுமையில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள். சாலைகள், மால்கள், ஒளி கூசும் சோடியம் விளக்குகள், கணினி நிறுவனங்கள், ஜீன்ஸ், டீஷர்ட் என எல்லாவற்றையும் தாண்டி இந்த மண்ணின் மனிதர்களைச் சுட்டிக் காட்டுவதாக இந்தக் கவிதையை எடுத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் மறைத்துவிட்டு சாலையின் நடுவில் இளஞ்சிவப்பில் பூத்திருக்கும் அரளியைப் பார்த்து பூரித்துக் கொண்டிருக்கிறோம்.
அங்காடித் தெரு என்ற மற்றொரு கவிதை ஒரு நிதர்சனத்தை நம்முள் விதைத்துச் செல்கிறது. ஒரு மெல்லிழை சோகம் இந்த கவிதையை வாசித்து முடிக்கும் போது நம்மை சூழ்ந்துக் கொள்கிறது.
பொருளில்லாதவன் எவ்வாறு பிறவற்றை காட்சிப் பொருளாக்கிக் கொள்கிறான் என்பதை இக்கவிதை எந்தவொரு புனைவுமின்றி உண்மையாக சொல்லிச் செல்கின்றது. இதே நிலையை நாமும் பல வேளையில் கடந்து வந்திருப்போம். ஆனால் யவனிகாவிற்கு வாய்த்துவிட்ட இந்த கவிதை வேறு எவருக்கும் வாய்க்க சாத்தியமே இல்லை. அந்த கவிதையில் நாம் நம்மை பொருத்திப் பார்க்கலாம். கையில் போதிய பணமில்லாமல் நாம் எத்தனையோ முறை கடைவீதிகளில் சுற்றி அலைந்திருக்கின்றோம். எண்ணற்ற மனிதர்களும் எண்ணற்ற விலை அட்டை தாங்கிய பொருள்களும் நம்மை இம்சைப்படுத்தும் நொடிகள் அவை.
வணிக வீதி என்பதைத் தாண்டி நமது வாழ்வும் இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும் ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே வாழ வகை செய்யும் பொருளாதார கட்டமைப்பில் எப்போதாவது ஆளும் வர்க்கம் வீசி எரியும் ஒன்றுக்கும் உதவாக இலவசங்களாலும் அவ்வப்போது மகிழ்ச்சியளிப்பதாய் தோன்றும் நிரந்தரமில்லாத சலுகைகளாலும் வாழ்வு நகர்வதாய் தோன்றுகிறது. நம்மீது வீசும் நறுமணம் கூட வழியில் விற்பனைக்காக நம்மீது தடவப்பட்ட நறுமணமாகத்தான் இருக்கிறது.
பிறந்த குழந்தைகளை
உயிருடனோ பிணமாகவோ
குப்பைத் தொட்டியில் போட்டு விடுபவர்கள்தான்
நாய்களுக்கு நல்லவகையான
புரதசத்துக் கிடைக்க உதவி செய்கிறார்கள் என்கிறார் யவனிகா.
இந்த கவிதை ஒரு மெல்லிய நடுக்கத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.
ஒரு மூச்சில் படித்து விளங்கிக் கொள்ளும் தன்மையை யவனிகாவின் கவிதைகள் கொண்டிருக்கவில்லை. அவரது கவிதையை விளங்கிக் கொள்ள நமக்கு சில அடிப்படை அறிவு தேவையானதாக இருக்கிறது. சில கோட்பாடுகள் குறித்த புரிதல்களும் திணைகளும் அங்குள்ள மனிதர்களின் வாழ்வு குறித்த அடிப்படை அறிவும் தேவைப்படுகிறது.
நவீன கவிதை சட்டென்று வேறு கால கட்டத்துக்கு அல்லது கனவுமயமான ஒரு மந்திரச் சூழலுக்கு இட்டுச் செல்லவில்லை என்றால் கவிஞர் அதிகம் மெனக்கெடவில்லை என்றே பொருள் கொள்ளலாம். பல சந்தர்ப்பங்களில் நல்ல கவிதைகள் தருக்கத்தின் சறுக்கல்கள் வழியே புகுந்து புறப்படும். கூர்மை கண்டிப்பாக இருக்கும். ஆனால் நாம் அதிக தூரம் போக வழியில்லாமல் கவிதையே மறித்து நிற்கும் ஆனால் யவனிகாவின் கவிதைகள் அவ்விதம் நிற்பதில்லை.
கொண்டாடப்படும் வரலாற்றைக் கொண்டாடி, இல்லாததெல்லாம் இருந்த பொற்காலம்’ என்னும் போதையைத் தாண்டித் தோண்டிப் பார்த்தால் போர்களும், நிலவெறியும் மூட நம்பிக்கைகளும் பெண் அடிமை செய்யும் ஆணாதிக்கமுமே கிடைக்கும் இந்த உண்மைகளை நாம் யவனிகாவின் எழுத்தின் வழி மட்டுமே அறிய முடியும்.
கவிதை உணர்த்த விரும்புவது எதுவாயினும் அதில் பொதிந்து கிடக்கும் உண்மை நிலைதான் அக்கவிதையை தூக்கி நிறுத்துகிறது. யவனிகா எழுதியிருக்கும் உண்மைகள் நம்மை அறைந்து கேள்வி கேட்கின்றன. நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, மிக சாதாரணமானதாக கருதி நாம் கடந்து போய்க் கொண்டிருப்பவற்றைக் கனம் பொருந்தியவையாக காட்சிப் படுத்தி, உன்னதம் என கருத்தப்டுபவற்றைக் கேலிக் குள்ளாக்கும் யவனிகாவின் கவிதைகள் தொடர் வாசிப்பைத் தூண்டுகின்றன. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு சொல்லையும் கவனத்துடன் நோக்க வேண்டிய பொறுப்பைத் தருகின்றன.
தொகுப்பில் உள்ள சில கவிதைகளோடு நிறைவு செய்கிறேன்.
“எனது தேசம் விடுதலையின் கனவுகளில்
இருந்தபோது பிறந்தவன் நான்
அப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்
கிழக்கும் மேற்குமாய் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்
வெகுகாலம் முன்பாக கப்பலில் வந்தவர்கள்
சுருட்டிக் கொண்டதுபோக ஒருநாள் நள்ளிரவில்
நைச்சியமாய் கைகுலுக்கி விடைபெற்றார்கள்
மக்கள் பெருமூச்சு விட்டபடி விவசாய நிலங்களுக்கு
நீர்நிலைகளுக்கு கிராமச் சாலைகளுக்குத் திரும்பினார்கள்
நான் காப்பிக் கொட்டைகளை சீராக வறுக்கும்
ஒரு இயந்திரத்திற்கு உரிமையாளனானேன்
எனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்
தறியில் நெசவாளியாக அமர்ந்தான்
சிலரோ எப்போதும்போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்
கோவில்களில் மங்கல விளக்குகளும்
ஆலயங்களில் மெழுகின் தீபமும்
மசூதிகளில் பாங்கும் இழைய
எனது தேசம் அணைகளில் பாய்ந்து
ஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது
ஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்
வேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்
அதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்
கடைபெருகி வீதியாகி வீடுள்ள தெருவெல்லாம்
விறுவிறுவென சந்தைக் காடானது
இந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ
தாராளமாய்க் கடன் கொடுத்தார்கள்
இப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்
என் கையைவிட்டுப் போனது
என் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்
விடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்
மனைவியோடு ஒரு வாடகை வீடு
காப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி
பவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்
கல்லாப்பெட்டியும் கொஞ்சம் கடனும் இருக்கின்றன
புகை படர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு”
என்று முடியும் இந்தக் கவிதை என்னை பல இரவுகள் தூங்கவிடாமல் செய்திருக்கிறது.
நவீன கவிதைக்குள் இயங்க விரும்புவர்கள் தொடர்ந்து யவனிகாவின் கவிதைகளை வாசிக்க வேண்டும். அக்கவிதைகள் குறித்த கருத்துப் பகிர்வுகள், உரையாடல்கள் குறித்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். கவிதையைத் தாண்டி நிகழ்கால உலக இயங்கியலை அவரது கவிதைகளில் வழி நாம் உணரலாம், அந்த வகையில் இந்தத் தொகுப்பு முக்கியமானது.
– முருக தீட்சண்யா
நூல் : யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : யவனிகா ஸ்ரீராம்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : ஜனவரி 2018
விலை: ₹ 350