துயரங்களின் பின்வாசல்:

ணிமேகலை அடிவாங்கிய
நாட்களின் மறுநாள்
இட்லி உப்புக்கரிக்கும்

அடுத்தவீட்டு ராணி
மெல்லிய கிசுகிசுக்களின் வாசம்
தோசையில் அடிக்கும்

நங்நங்கென்று நசுக்கப்பட்ட
தேங்காய் கீற்றுகள்
முகம்சுளித்து வசவு வீசும்
மாமியின் பற்களே

முறத்திலிருந்து பறக்கும் தவிடு
தன்கவலை போல் தோன்றுகையில்
புடைக்கும் தாளம் வேகம் பிடிக்கும்

புழுங்கிய நெல் துழாவி
கட்டை வாருகோல் தேயய்பெருக்கி
முடிக்கும் அவளுக்கு
மூவ் தடவி
ஆறுதல் சொல்லும் கணவன்
பூ தைத்த சடையோடு
கண்ணாடி முன் எடுத்துக்கொண்ட
படம் போன்ற பொய்யே!


கர்ந்து கொண்டே இருந்தது மேகம்
கரைந்து கொண்டே இருந்தது நிலவு
பௌர்ணமி இரவுக்காக
தண்ணீர் உறைந்து கிடக்கிறது
அன்று என் முகமும்
காண்பேன் என்கிறது
கரையோர புங்கைத்தளிர்.


பொய்மையின் துளிரும்
அதே
செம்மையோடுதான் அசைகிறது
வேண்டுமென்றால் நினைத்துக்கொள்
நாணம் என.

என் சிந்தனைகள் :

ஜன்னல் வழி நுழைந்த பூச்சி மின்விசிறியில் அடிபட்டு விடக்கூடாது என்று துணுக்குற்று எழுந்து ஓடுபவர்களை அவர்களது துணை என்ன சொல்லும்? நாற்பதுக்கு மேல் புளியம்பிஞ்சைப் பார்த்து முகம் விரிப்பவர் பைத்தியமா? சின்னச்சின்ன சந்தோஷங்கள், சலனங்கள், எதிர்பார்ப்புகள், தவிப்புகள் மற்றும் ஏமாற்றங்கள், பெண்ணிருத்தலியலின் வலிகள் ஆகியவை உமா மோகனின் கவிதைகள். வயல்வேலை, வீட்டு வேலை என்று ஏதாவது வேலையுடனே அடையாளப்படுத்தப்படும் பெண்கள், செய்யும் வேலையில் அவர்களின் அப்போதைய உணர்வை பிரதிபலிக்கிறார்கள். வானவில்லை, பெயர்தெரியாத பறவையை, கடலை, செடியில் மறைந்து கவனிக்கத் தவறியப் பூவை…… பற்றி பேசும் பெண் இத்தொகுப்பில் தேடியும் கிடைக்கவில்லை. துரத்தும் திரவம் கவிதை படித்து வெகுநேரம் ஆகியும் அது என்னை துரத்திக்கொண்டு இருக்கிறது. துயரங்களின் பின்வாசலுக்கு பல அடுக்குகள்.


சரவணன் மாணிக்கவாசகம்

நூலாசிரியர் குறித்து:

உமா மோகன் திருவாரூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வசிப்பவர். இவரது  ’டார்வின் படிக்காத குருவி’ ,  ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’ ,  ‘துயரங்களின் பின் வாசல்’ ,  ‘நீங்கள் உங்களைப் போலில்லை’ ,  ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ ,  ‘கனவு செருகிய எரவாணம்’
முதலிய கவிதைத்தொகுப்புகள் ’வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரை
 ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பு  முதலியன இதுவரை வெளிவந்தவை.
நூல் தகவல்:
நூல்: துயரங்களின் பின்வாசல்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: உமா மோகன்
வெளியீடு: வெர்சோ பேஜஸ்
வெளியான ஆண்டு  பிப்ரவரி 2016
விலை: ₹ 80
நூலைப் பெற: எண் 30; முதல் தளம் (மாடி);  விமான நிலையச் சாலை;  புதுச்சேரி – 605 008
தொடர்புக்கு : +91 98946 60669