விஞர் சாம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு பட்டாளத்து வீடு. இந்த தொகுப்பில் மொத்தம் பத்துக் கதைகள் உள்ளன.

ஒரு வகையில் இந்த பத்து கதைகளுமே வாழ்வில் பெரும் இழப்பை சந்தித்தவர்கள் அல்லது வாழ்வையே தொலைத்தவர்கள் பற்றியது எனலாம். நாட்கள் வேகமாக கழியும் நடுத்தர வயதில் திடீரென்று நின்று கடந்து வந்த வாழ்வை எண்ணிப்பார்த்தால் நாம் இழந்தவைதான் முதலில் நம் கண்முன் வரும். அப்படியான இழந்தவைகளை பற்றிய நினைவுக்குறிப்பாக இக்கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வாசிக்கும்போது ஒருவித மனக்குமுறலை உண்டாக்கியது.

பறவைகள் மற்றும் விலங்குகளின் மேல் காதல் கொண்ட ஒருவனின் வாழ்வு, பள்ளியிலும் குடும்பத்திலும் ஒதுக்கப்படுவதாக எண்ணி தற்கொலை செய்ய முயலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், குடும்ப கக்ஷ்டத்தால் துணைநடிகையாகி பின் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக தமிழகம் வந்து வாழ்நாள் முழுவதும் அவமானங்களைச் சந்திக்கும் மலையாள பெண், விவாகரத்துக்காக காத்திருக்கும் மனைவியை சந்திக்க முயன்று தோற்கும் கணவன், பொது வாழ்விற்காக, காதலையும் குடும்பத்தையும் துறந்து அடித்தட்டு மக்களோடு துணை நிற்கும் இடதுசாரி சிந்தனையுள்ள இளைஞன் என முற்றிலும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்த வெவ்வேறு மனிதர்களை பற்றிய கதைகள் என்றாலும் இந்த எல்லா கதைகளையும் இணைக்கிற ஒரு புள்ளியாக இழப்பு இருக்கிறது.

கதைகள் மிக சுருக்கமாகவும் அதே சமயம் தெளிவாகவும் இருக்கின்றன. ஆழமான பொருள் பொதிந்த வரிகளையும், சில நேரங்களில் துக்கத்தையும்கூட இதழோரம் உண்டாகும் வெற்றுப் புன்னகையுடன் நகைச்சுவையுடனும் இக்கதைகளில் பேசியிருக்கிறார் சாம்ராஜ். சூழ்நிலை பற்றிய குறியீடுகளை கொண்டு அகவுணர்வை கூறுவதில் தேர்ந்த சிறுகதையாளராக தெரிகிறார்.

சாம்ராஜின் கதைகளில் வர்ணனைகள் சிலநேரங்களில் தேவை ஏற்படாத இடங்களில் புகுத்தி இருப்பதை போன்று உணர்ந்தேன். ஆனால் அதை தேவையில்லை என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அது ஒரு கவிஞனின் பார்வை. கவிஞர்களால் மட்டும்தான் எந்நிலையிலும் வாழ்வை துயரங்களுக்கிடையே ரசிக்கமுடியும். (இதுவும் ஒருவேளை எனக்கு நானே சொல்லிக்கொண்ட சமாதானமாக இருக்கலாம்)

அனந்தசயனபுரி என்றொரு கதை.

மணவிலக்கு வழக்கு நீதிமன்றத்தில் இருக்க இறுதியாக ஒருமுறை பேசிப்பார்க்கலாம் என மனைவியை தேடி வரும் ஒருவனை பற்றியது. தன் மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக அவள் வீட்டிற்கு செல்கிறான். வீடு பூட்டியிருக்கிறது. பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்துவிட்டு மீண்டும் இரவு வெகு நேரம் கழித்து வருகிறான். வீட்டு வாசலில் இப்போது செருப்புகள் இருக்கிறது. அவன் வாசலில் ஓரமாய் உட்கார்ந்து சத்தமில்லாமல் அழுகிறான்.

மறுநாள் காலை மீண்டும் அவள் வீட்டிற்கு செல்கிறான். அவள் அவனை காண பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள். மிகுந்த ஏமாற்றத்துடனும் துயரத்துடனும் ஊர் திரும்புவதற்கு இரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். அங்கே எதிர் ப்ளாட்பாரத்தில் தூரப் பயணம் போய்வந்த களைப்பில் நிற்கும் ரயில் ஒன்றின் கதவுகள், ஜன்னல்கள் மூடியிருப்பதை பார்த்துக்கொண்டிருந்த வேலையில் அவனது துக்கத்தை பெருக்கும் வகையில் அவன் மனைவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அவனுக்கு குரல்வளை அடைப்பது போன்று இருக்கிறது.

எத்துனை இடர் வந்தாலும் இந்த வாழ்வை வாழ்ந்துதான் கடக்க வேண்டும் என்பதை கடைசி வரியில் அந்த ரயில் நகர ஆரம்பித்தது என்று சொல்லி முடிக்கிறார்.

இன்னொரு கதை. கதையின் பெயர் நாயீஸ்வரன்.

விலங்குகள் மற்றும் பறவைகள் மேல் பெருங்காதல் கொண்ட பள்ளிச் சிறுவன் சி. ஈஸ்வரன் நாயீஸ்வரனாக ஆனதை நகைச்சுவையுடன் சொல்ல ஆரம்பிக்கிறது கதை. அவனால் பறவைகளுடனும், விலங்குகளுடனும் உரையாட முடிகிறது. அவைகள் அவன் சொல்லுக்கு கட்டுபடுகின்றன. பின்னாட்களில் அதே ஈடுபாட்டினால் பொருள் சார்ந்த இவ்வுலகில் பிழைக்க தெரியாதவனாக அவன் படும் துன்பத்தையும், அவலத்தையும் மிக எளிய வரிகளில் ஆழமாக உணர்த்துகிறார் சாம்ராஜ்.

வளரும் வயதில் தந்தையை இழந்து அவனுக்கும் தாய்க்கும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தனது சேகரிப்பில் இருக்கும், புறா, அணில், மைனா, நாய், பூனை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலைக்கு செல்ல அவன் மனம் ஏற்கவில்லை. இந்த விலங்கு மற்றும் பறவைகள் சேகரிப்பை தொழிலாக மாற்றலாம் என அவன் மாமா யோசனை சொல்கிறார். ஒவ்வொரு உயிரினத்தை விற்கும்போதும் அவன் அதை பிரிந்து மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். இந்நிலையில் விலை அதிகமான ஒரு பறவை அதன் ஜோடியை விட்டு பறந்து போய்விடுகிறது. அதை தேடிச் செல்லும் அவன் எதிர்கொள்ளும் துயரம் தான் கதை.

இந்நூலை வாசிக்கும்போது, ஒரு எழுத்தாளர் இவ்வளவு துக்கத்தை வாசகருக்கு ஏன் தரவேண்டும் என்ற கேள்வி மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளரும் வாசகருக்காக எழுதுகிறார்கள் என்றால் சாம்ராஜ் இந்த கதைகளை தனக்காக எழுதிகொண்டார் என நினைக்கிறேன். தன் ஆற்றுபடுத்த முடியாத துயரத்தை எழுத்தின் மூலம் ஒரு துளியேனும் கடந்துவிட இக்கதைகளில் முயற்சி செய்திருக்கிறார்.

சரி. இந்த கதைகள் எல்லாம் உண்மையில் இழப்பைப்பற்றி மட்டும் பேசுகின்றனவா என்றால், நிச்சயம் இல்லை. இழப்புக்கு பின்னால், துயரங்களுக்கு அப்பால் தொடரும் வாழ்வை பேசுகின்றன. இந்த வாழ்வு நாம் விரும்பியோ விரும்பாமலோ முன்னோக்கி நகரத்தான் செய்யும். நகருதல் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும் என்கிற நம்பிக்கையையும் பேசுகின்றன.

நன்றி: – வித்யா.மு

Blogger :  இருப்பும் இன்மையும்

நூல் தகவல்:

நூல் :  பட்டாளத்து வீடு

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : சாம்ராஜ்

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2016

விலை: ₹ 100

Kindle Edition