படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை மனம் வேறு எதிலும் நிலைகொள்ளவில்லை..
நீ என்ன பெரிய பாரி வள்ளலின் பரம்பரையா என்று சிறு வயதில் அம்மாவிடம் திட்டு வாங்கிய நினைவோடு படிக்க ஆரம்பித்தேன். படிக்க.. படிக்க.. என்ன!!! என்னைப் பாரியோடு ஒப்பிட்டுள்ளார்களா?? அதுமட்டுமில்லை, ஒரு முல்லைக்காகப் பாரி ஏன் தேர் தந்தான் என்பதற்குப் பதில் ‘காதல்’!!
முருகன்-வள்ளி , பாரி – ஆதனி, நீலன் – மயிலா, உதிரன்- அங்கவை அனைவரின் காதல் கதைக் களம், குறிஞ்சி நில இயற்கையோடும், குணாதிசயங்களோடும் எழுத்தாளரின் விளக்கம் வியப்படைய வைக்கிறது.
அணிந்து வரும் மலரை வைத்து காதலியின் மனதை அறியும் காதலன், உதிரன். அங்கவையின் காதல் மொழி இயற்கையின் ஆதி இரகசியங்களைக் கொண்டது. கபிலன் பெரும் மொழிப்புலவர்தான் ஆனாலும் கபிலரால் காதல் மொழியை உய்த்தறிய முடியவில்லை.
கபிலர்-பாரியின் நட்புறவு மனதில் நிலைத்து நிற்கிறது.
சேர, சோழ பாண்டியர்களின் வீரம், விவேகம், அறிவு, வியாபாரம், செல்வம் பற்றி வியந்த நாம் அதன் மறுபக்கத்தைக் கேட்கத் தவறி விட்டோம். அவர்களின் சாம்ராஜ்ய உயர்வுக்கு நாம் அடகு வைத்தது இயற்கை என்ற ஆதி சொத்தையும்/இழக்கக் கூடாத இனக்குழுவையும். எத்தனை எத்தனை அதிசயங்கள் வியக்க வைக்கின்றன எழுத்தாளரின் குறிஞ்சியையும்/வேளிர் குலத்தையும் பற்றிய விளக்கம்
.
முருகக் கடவுள் ஏன் நம் தமிழ் கடவுள் என்கின்றோம் என்பதற்கு மிகவும் அழகாக விளக்கம் அளித்துள்ளார்.
அறத்தின் நிலைப்பாடு அதை மதிக்கும் இடத்தில் மட்டுமே காப்பாற்றப்படுகிறது. திசைவேழர்- கபிலரின் நிலைப்பாடே உதாரணம்.
திசைவேழர், தேக்கன், இரவாதன், வேட்டையனின் இழப்பு கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது.
பறம்பின் ஆசான் தேக்கன் இல்லாத பறம்பை ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறுகிறது.
ஓவியங்கள் ஒவ்வொன்றும் அற்புதம், பாரியின் காலத்திற்கே சென்றது போன்று மெய்சிலிர்க்கிறது.
படித்த/பார்த்த இதிகாசங்கள்(பொன்னியின் செல்வன், கம்ப இராமாயணம், மகாபாரதம்) எல்லாமே பெண்களை/பெண்மையை மையப்படுத்தியது . ஆனால் வேள் பாரியில் வரும் அனைத்து பெண்களும்(மயிலா, அங்கவை, ஆதினி, வள்ளி ) ஏனோ வீரச்சிகளாகவே மனதில் பதிகின்றனர்.
கோலம் உருவான கதை, ஜடை உருவான கதை, செல்வத்திற்கான பொருள், தண்டுக்கும், தண்டை தாங்கும் வேருக்கும் இல்லாத பெருமை ஏன் பழங்களுக்கு விழாக்களில், இயற்கை கொடுத்த வளம், கலையின் ஆழமும் அதன் முக்கியத்துவமும், புலவர்களின் வாழ்வியல் , மலர்களின் தன்மை… அனைத்தையும் தாண்டி மனிதன் இப்பொழுது எப்படி மாறியிருக்கிறான்!!!
மாற்றம் நல்லதுதான் ஆனால் மாற்றப்பட்டு இருக்கும் முறை கேள்விக்குறிதான்? பாரி மற்றும் பறம்பு மக்களின் இயற்கை மீதான காதல், 1% நமக்கும் அரசியல் தலைவர்களும் இருந்திருக்குமேயானால் விவசாயம் தழைத்திருக்கும். நீர்வளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது அறியப்படும் பொருளாதாரம், வணிகம், அரசியல் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத சொற்களாகவும்/ செயலாகவும் மனத்திற்குப் படுகிறது.
இயற்கையை அறிந்து வாழ்தல், அழித்து வாழ்தலாக மாறியதுதான் காலத்தின் கொடுமை.. !
பாரியின் காலத்தில் வாழ மனம் விரும்புகிறது. ஆசைக்கு அளவுகோல் ஏது!!
நூல் : | வீரயுக நாயகன் வேள்பாரி |
பிரிவு : | நாவல் |
ஆசிரியர் | சு.வெங்கடேசன் |
வெளியீடு: | விகடன் பிரசுரம் |
வெளியான ஆண்டு : | 2018 |
விலை : | ₹ 1500 |