மகரந்தச் சேற்றில் புதைந்த கால்களை
அலச
குளத்துக்கு வந்த சிறு வண்ணத்துப்பூச்சி
தாமரைகளைக் கண்டு
தடுமாறி
தாயிடம் ஆலோசனை கேட்கும் அழகிய
காடுகளிருந்தன
எம்மிடம் முன்பு….

நகரத்தில் பிறந்து நகர வாசத்தை மட்டுமே சுவாசித்து வளர்ந்த என் போன்றோருக்கு, காடுகள் மிக மிக தூரமாய் அணுக முடியாத ஒரு அயலகத்தை போல் நினைவில் மட்டுமே பசுமையாய் நின்று கொண்டிருக்கிறது.

காடு என்றால் தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு, ஆரண்யம் என்று பல சொற்களில் வழங்கி வந்தாலும், ஆரண்யம் என்ற சொல் நமது இதிகாச மரபில் அதிகம் புழங்கப்பட்ட சொல்லாக நமக்கு காட்சிப்படுகிறது.

கவிஞர் கயல் இத்தொகுதிக்கு ‘ஆரண்யம்’ என்று பெயரிட்டிருக்கிறார். இது அந்த சொல்லின் மீதான ஈர்ப்பாக இருக்கலாம். தொகுதிக்குள் நுழைந்ததும் அவர் கவிதை வழியே ஆரண்யம் என்ற சொல்லால் குறிப்பிடும் காடு நம் கண்களுக்குள் விரிகிறது. காடு என்றால் நிறைய மரங்கள், பறவைகள், வன விலங்குகள், காட்டுயிர்கள் என பலவிதமான காட்சிகள் மனதில் விரியும். பல்லுயிர் பெருக்கமும் காட்டில்தான் நிகழ முடியும்.

மேலும் காடு என்றால் புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்கள் வாழும் பிரதேசமாக, நம் குழந்தை மனங்களில் அச்சத்தை விதைக்கும்படியான புனை கதைகளை ஏராளமாய் உருவாக்கி, காடு என்றாலே அச்சம் என்ற ஒரே பார்வையை நம்மில் விதைத்துவிட்டுப் போன உருவங்கள், உருவகங்கள் இவற்றையெல்லாம் கயலின் ஆரண்யம் என்ற தொகுப்பின் வழியாக களையெடுத்து காடு என்பதை மரங்களின், பறவைகளின், பூச்சிகளின் அழகியல்களாக பயின்று திரும்புகிறேன்.

காட்டுயிர்களை நேசிக்கத் தெரிந்த கவிமனம் கொண்ட கவிஞராக கயல் இத்தொகுப்பின் வழியே நமக்கு அறிமுகமாகிறார். கயல் அவர்களை மதுரை முற்போக்கு கலை இலக்கிய மேடையில் சந்தித்தேன். அவர் நூல் அறிமுக நிகழ்வின் போது அவருடன் உரையாட வாய்ப்பில்லாமல் போனது. அவருடைய தொகுப்பை மதுரை புத்தக கண்காட்சியில் தேடி எடுத்தேன். பிரித்துப் படிக்கத் தொடங்கிய போது வனம் என்னுள் புகுந்து விட்டதுபோல் ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிட்டது. சலிப்புத் தட்டாத வரிகள். தொகுப்பை வாசிக்க தொடங்கியது முதல் முடிக்கும் வரை பலவித பறவைகளோடும், பூச்சிகளோடும், பூக்களோடும், குளத்தில் குதித்து எழும் தவளைகளோடும், பாம்புகளோடும் நானும் இருந்தேன் என்ற உணர்வை மட்டுமே எனக்குத் தருகிறது. அதே வேளையில் காடுகள் வாழ்வதற்கான நம்பிக்கைளையும் கவிதை வழியே தருகிறார்.

ஒரு மல்லிகைப் பூப்பந்தைப் பார்க்கிறார்
தரை நடக்கும் மேக கூட்டமாகவும்
கரைக்கு வந்த கடல் நுரையாகவும்
குறுகுறுவெனப் பார்க்கும் பஞ்சுப் பொதியாகவும்
துள்ளும் பனிக்கட்டியாகவும்
சீனத்து வெண்பட்டாகவும்
பெயர் சொன்னாலே மனம் பூரிக்கும்
செல்ல முயலாகவும் (பக்.21)

இவரிடம் கவிதையாய் இதழ் விரித்து வாசிப்பவரின் இதயத்தில் மல்லிகையின் மணத்துடன் அதன் காட்சிப்படிமங்களோடு வந்து வெகு இலகுவாய் ஒட்டிக் கொள்கின்றன.

காடு என்ற சொல் ஆரண்யம் என்று திரிபு கொண்டாலும், காட்டில் மிதக்கும் நாம் காணாத அழகுகளை இவரது கவிமொழியில் மொழி பெயர்த்து நம் கண்முன் விளையாடுவதைப் பார்க்கிறேன். என்ன, காடு விளையாடுகிறதா? என்று கேட்பவருக்கு, ஒரு கவிதை

“பவழமல்லி மரத்துக் கிளிக்குஞ்சின்
உதிர்ந்த சிறகெல்லாம்
உயிர் சொக்கும் பூ வாசம்”  (பக்.66)

சிறகுகளுக்கெல்லாம் சிந்தனை கிடையாது என்று யார் சொன்னாலும் இனி நம்பப் போவதில்லை. இந்தக் கவிதையை வாசித்த பிறகு.

இதே போல் இன்னொரு கவிதை,

தும்பி என்று இலக்கிய வார்த்தையாக அறியப்பட்டாலும், (இது இலங்கை வழக்கு என்றும் சொல்லப்படுகிறது) இலங்கையோ, இலக்கியமோ, நாம் சிறு வயதில் நீர் நிலைகளுக்கு அருகேயும், சிறு புதர்களுக்கு மேலேயும் சுற்றிப் பறக்கும் தட்டான்களையும், அதன் சிறகுகளைப் பிடித்து விளையாடிய அனுபவங்களையும் நம்மால் மறக்க முடியாது. கயல் என்ற கவிஞர் அதன் நினைவுகளை மீண்டும் நம்மிடையே புதுப்பித்து தருகிறார்.

“குளத்தருகே பறக்கும்
குட்டி விமானம்
வெண் தங்கத்
தகட்டுச் சிறு இறகு
வண்ணத்துப் பூச்சியின்
சின்னத் தங்கை
ஒற்றைப் புல்லின்
ஒய்யாரப் பொன்னூஞ்சல்
சிறகிருந்து பறக்காத மயிலாய்க்
காலிருந்து நடக்காத
தட்டாரப்பூச்சி

(பக்.69)

அதிலும் வண்ணத்துப் பூச்சியின் தங்கை என்று தட்டானை குறிப்பிடுவது அழகோ அழகு. கவிதையை அழகியல் சிந்தனையாகவும், சமூக சிந்தனையாகவும் இணைத்து இவர் எடுத்துக் கொண்ட இயற்கையின் பாடுபொருள்கள் மரம், பறவைகள், மலர், மீன், யானை என்று பலவிதம். அத்தனை பொருளிலும் இயற்கையின் மீதான நேசத்தை அதன் அழகியலை காடு கொள்ளாத அவர் உணர்வுகள் தாண்டியும் இந்த கவிதை தொகுப்பெங்கிலும் நிறைந்திருக்கிறது.

காடு என்பதை எப்போதும் சூழலியல் சார்ந்துதான் சிந்தித்து வருகிறோம். இப்போது பெருவாரியாக காடுகள் அழிந்து வரும் நிலையில், இயற்கையின் சமநிலை குலைந்து வருகிறது. மனித குலத்தின் வளர்ச்சி என்பது இயற்கையை புறம் தள்ளி, தனது சுய லாபங்களுக்காக அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தியும், காட்டுயிர்களை அழித்தும் வருகிறது.

சிறு கூடு கட்ட
செத்த மரத்தை மட்டுமே
சிதைக்கும்
மரங்கொத்தி
பச்சை மரத்தை
வெட்டிப்
பல பறவைகள்
கூடழிக்கும்
‘மனித’
அறிவற்று (பக்.59)

மரங்கொத்தி என்ற ஒரு பறவை, தனக்காக சிறு கூடு கட்ட செத்த மரத்தை மட்டுமே சிதைக்கும் போது, மனிதர்களோ, அறிவற்றுப் போய் பச்சை மரத்தை வெட்டி, பல பறவைகளின் கூடழிப்பதை தன் கவிதையின் வழியாக சாடுகிறார்.

அழகின் உச்சமாக மலர்களையும், அன்பின் உச்சமாக காதலையும், மொழியின் உச்சமாக கவிதையையும், ஞானத்தின் உச்சமாக மௌனத்தையும் கூறத் தெரிந்த இவருக்கு, இறைவனின் மிச்சமாக காடு என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்.

அத்தகைய காட்டை அதில் உறையும் இயற்கையை மனிதன் தன் சுயலாபங்களுக்காக வேட்டையாடுவதைப் பார்த்து பறவைகள் புரியாமல் குழம்புவதை,

“மனிதனிடமிருந்து காட்டைக் காக்க
அவனைவிடக் கொடிய உருவாய்
எதைத் தேர்வதென
இன்று வரை
புரியவேயில்லை
பறவைகட்கு” (பக்.54)

 

“தொழிற்சாலைக் கழிவுகளால்
செத்துக் கரையொதுங்கும் மீன்களிடம்
அழுதழுது
தினம்
மன்னிப்புக் கேட்டு
இனி
சிந்த விழி நீரற்று
வற்றிப் போனதோ
ஆறு” (பக்.51)

இது இயற்கைக்கு ஒரு இரங்கற்பா பாடியதைப் போல் இருக்கிறது.

வாழும் உயிர்களெல்லாம் இயற்கையை அடியொற்றியே வாழ்ந்து வருகின்றன. மனிதனைவிட சிறய அறிவு படைத்த உயிர்கள் எல்லாம் இயற்கையை மீறாமல், அதனதன் இயல்பில் வாழப் படைக்கப்பட்டு இருக்கின்றன. அதன் உயிராதாரம் இயற்கையின் உயிர்ப்பாற்றலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆறுகள், மரங்கள் யாவும் மனிதர்களால் மரணமடையும் போது சின்னஞ்சிறு உயிர்கள் உயிர் வாழ வழியின்றி போகும் அவலத்தை மேற்கூறிய இரண்டு கவிதைகளும் தெளிவாக்கி விடுகின்றன.

காங்கிரீட் காடுகளில் வாழும் நமக்கு இயற்கையின் சங்கேதங்கள் புரியவில்லை.

கல்லெறியத் தெரியா
உயிர்களுக்காய்
கசிந்துருகிக்
கனிகள் உதிர்க்கும்
காற்றும் கடவுள் (பக்.87)

என்று இயற்கையின் ஒத்திசைந்த நிகழ்வுகள் யாவும் கயலின் வரிகளில் நமக்கு நினைவூட்டலாகவே வருகிறது.

கவிதைப் புத்தகத்தின்
படித்து முடித்த பக்கத்தில்
வைக்கப்பட்ட
பறவை இறகும் காகிதமும்
பரிமாறிக் கொள்கின்றன
தத்தம் நினைவுகளின் மரங்களை (பக்.88)

பூமியை சுத்தமாக்குபவை மழையும், மரங்களும்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவும் அதிகமாக இருக்கும். பூமி செழிப்படையும். மக்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். இத்தகைய இயற்கையின் ஒழுங்கை சிதைக்காமல் மனிதனின் வாழ்க்கை அமையுமானால், அதைவிட இந்த மனித குலத்திற்கு கிடைக்கும் பேறு வேறு எதுவாக இருக்க முடியும்?

“மழைக்கால மாலை
வானவில் மண்ணிறங்கி
பவழமல்லிக்
கிளைக்கிடையே படர
காட்சிப் பிழையோ
என அம்மாவைக் கேட்டேன்
பரிகசித்து,
உன்னைப் போலொரு கள்ளன்
தோட்டக் கள்ளன்
பஞ்சவர்ணக் குருவி
மாம்பழக் குருவி
காசிக்கட்டிக் குருவி
கஞ்சால் குருவி
ஆறுமணிக் குருவி
பொன்னுத் தொட்டான்
பச்சைக்காடை
எனப் பல பெயர்கள் என்றாள்
ஆயிரம் பெயர் சொல்லி
ஆண்டவனை அழைத்தாற் போல” (பக்.37)

சமீபத்தில் நான் அதிகம் நேசித்ததாகவும் எனக்குப் பிடித்த கவிதைப் புத்தகமாகவும் கயலின் ஆரண்யம் என் மனதில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆரண்யம் என்ற ஒற்றைத் தொகுப்பில் பறவைகளை, பூக்களை, பூச்சிகளை ஆயிரம் பெயர் சொல்லி அழைத்து வருகிறர்.

வாசிக்கும் நாமும் கயலின் வனச்சித்திரங்களுக்குள் பறவையாயும், பூக்களாயும், பூச்சிகளாயும் பறந்து திரிந்து வருவோம்.

சாமந்திப்பூ இலையில் அமர்ந்த சிறு வண்ணத்துப் பூச்சியாகவும், கூழாங்கற்களிடம் தீராக்கதை பேசியபடி நீரிலாடிக்களிக்கும் பசுமரத்து வேராகவும், மூங்கில் தளிரின் பேரழகில் மயங்கும் குட்டி யானைகளாகவும், சீனத்து வெண்பட்டாய் மினுங்கும் செல்ல முயலாகவும், காற்றில் அசைந்து குழந்தை என குதூகலிக்கும் சூரியகாந்தி மலராகவும் இன்னும் பலவாக காட்டில் மிதக்கும் மெல்லோசைகளையும், இயற்கையின் ஒத்திசைவில் நடம் புரியும் உயிர்களின் பேரன்பினையும் பெருங்கருணையையும், அழகின் நிறங்களையும், உயிரின் ரகசியங்களையும் கருத்தின் சிறப்போடு கற்பனை வளத்தையும் கூட்டி ஆரண்ய வாசத்தின் வசீகரத்தை, நமது விழிகள் விரிய விரிய அழகிய வரிகளில் கவிதைப் பூக்களாக தொடுத்துள்ளார்.

தொகுப்பு முழுவதும் படித்து முடித்த பிறகு கயல் என்பவர் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், இயற்கையை நேசிக்கும் தாயாகவே நம் மனதிலும் பதிந்து கொள்கிறார். ஆரண்யம் வெறும் கவிதைத் தொகுப்பு என்று அளவில் சுருக்கி விடாமல் இவற்றைப் படிப்போருக்கு கானகத்தில் நுழையும் சிறகுகள் தானாகவே முளைத்துவிடும் என்பதில் ஐயமில்லை.

மஞ்சுளா.

நூல் தகவல்:
நூல் :  ஆரண்யம்
பிரிவு : கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்: கயல்
வெளியீடு: படி வெளியீடு ( டிஸ்கவரி புக் பேலஸ்)
வெளியான ஆண்டு :  2018
பக்கங்கள் :
விலை : ₹ 80