கவிஞர் மஞ்சுளாவின் வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை” கவிதை தொகுப்பு நூலுக்கு கவிஞர் சக்தி ஜோதி எழுதிய அணிந்துரை.
“வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை”. என்கிற கவிதை நூலை எழுதியுள்ள கவிஞர் மஞ்சுளாவிற்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மனித மன உணர்வுக்கும், மொழிக்கும் மிகப்பெரிய வெளி இருக்கிறது. மனதின் நுட்பமான பகுதிகளைச் சொல்வதற்கு மொழி எப்போதும் போதுமானதாக இருப்பதில்லை. எனவேதான் மொழியை பல்வேறு கலை வடிவங்களாக ஆக்கி பார்க்கிறோம். இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பமென பல்வேறுபட்ட கலைவடிவங்கள் வழியாகவும் மனித மன உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம். இவை அனைத்திலும் கவிதை, வாசிப்பு அனுபவம் சார்ந்து மிக நுட்பமானது. மனதின் மென்மையான ஒர் உணர்வினை வெளிப்படுத்த வன்மையான சொற்களை பயன்படுத்துவதும், மனதின் வன்மையான அல்லது வன்மமான உணர்வினை வெளிப்படுத்த மிக மென்மையான சொற்களை பயன்படுத்துவதும் கவிதையில் இயல்பாக நிகழ்கிறது.
புற சிக்கல்களுக்கும் அகப்போராட்டங்களுக்கும் இடையிலானவை கவிஞர் மஞ்சுளாவின் கவிதைகள். ஒரு பெண்ணின் சுயத்திற்கும் அவள் சார்ந்து வாழ்கிற சமூகம் மற்றும் குடும்ப உறவுகளுக்கும் இடையே நிகழ்கிற உளவியல் சிந்தனைகளை இவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு பெண் ஒவ்வொரு பருவத்திலும் பல்வேறுவிதமான உளவியல் சிக்கல்களுக்கு ஆட்பட்டு வெளி வருகிறாள்.
பெண்களின் உளவியலை பேசுகின்ற கவிதைகளாக பெண்ணுக்கும் இயற்கைக்கும் இருக்கின்ற தொடர்புகளை வெளிப்படுத்துகிறவிதமாக அமைந்துள்ளன இவரது கவிதைகள். இயற்கை என்பது ஐம்பூதங்களாலானது. காற்று தானாக வீசுகிறது. தானே அடங்குகிறது. கடல் பொங்கி தன்னுள் அமைகிறது. நிலம், தன்னுள் தானே கொதித்து அடங்குகிறது. நெருப்பின் இயல்பும் அவ்வாறுதான். விரிந்த ஆகாயம் எல்லாவற்றையும் மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதுபோல இருந்தாலும் அவ்வாறு அது இருப்பதில்லை, தானே தன்னுள் அசைவுற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு பெண் இயற்கையைபோல, ஐம்பூதங்களின் இயல்பினைப்போல தானாகப் பொங்கி, தானாக அமைதி கொள்கிறாள். தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக்கொள்கிறாள். கவிதைகளின்வழியாக ஒரு பெண் தன்னை தன்னுடைய அந்தரங்கமான உணர்வுகளை ஆற்றுப்படுத்துக்கொள்ளும் வகையிலானவை இவரது கவிதைகள்.
‘தவளையின் இசைக்குறிப்பு’ என்ற கவிதையில் கோடைகால பரிசாக மழையை தருவிக்கிற பச்சைத்தவளைக்கு, தவளையின் ஓசை இசையாகியறிந்த பாம்பு, தன்னுடைய இசைக்குறிப்புகளோடு வந்துவிடுவதான ஒரு கவிதை மனித வாழ்வின் தத்துவார்த்தமான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி விரிகிறது. தவளைக்கு பாம்பு என்பது துன்பம் தரக்கூடியது என்பது நம்முடைய பார்வை, அது தவளைக்கு துன்பம் தரக்கூடியதா அல்லது தவளைக்குத் துன்பமென்று நாம் கருதுவதே அதற்கு இன்பம் தரக்கூடியதாயென்பதை தவளை அறியும். பாம்பும் அறியும், அதனதன் வாழிடம் அதனதன் இசைமை. அதனதன் உயிர்த்தேவை. இந்த மண்ணின் உயிர்கள் அனைத்தும் அதனதன் இயல்புக்கும் சூழலுக்குமேற்ப வாழ்வதற்குத் தனித்த விருப்பங்கள் உண்டு. அதன்படி வாழ்வதற்கு எல்லா உயிர்களுக்கும் அதுஅதற்கான சுதந்திரம் உண்டு என்கிற வகையிலான பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்குமென இந்தத்தொகுப்பின் கவிதைகள் அமைந்திருக்கின்றன.
“நீ வராமல் போனாலும்
இந்த மழை எனக்கு நிரந்தரம்
ஒரு சுவரைவிட
இங்கு எதுவும்
அதிகமாக
எனக்கு கற்பித்து விடவில்லை.”
என்கிற கவிதையில் ஒரு சுவர் என்பது எவ்வளவு பாதுகாப்பு தருகிறது, இங்கே சுவர் என்பது சுவர் மட்டுமல்ல. இந்தக்கவிதையில், வெட்டவெளியாக கிடப்பதுபோல ஒரு வெளி, எல்லாவற்றிற்கும் அனுமதி தருகிற உறவு, தடை எதுவுமற்று எல்லாவற்றையும் அனுமதிக்கிற மனம் என்று இருக்கும்போது கண்டடைகிற வெளிச்சத்தைவிடவும் மனதுக்குள் ஏற்படுகிற மாயச்சுவர் கடந்து ஒளிர்கிற சிறிது வெளிச்சத்திற்கு ஒளி அதிகம் என்பதும் இன்னொரு விதமான உளவியல் சார்ந்த கவிதை.
“பறவைகள்
தன் குஞ்சுகள் பொரிக்க
கிளை தாங்கும் கூடாவேன்
இரை வேண்டின்
கனியாவேன் “
இதுதான் உலகப்பெண்கள் பெரும்பாலனவர்களின் நிலை. உலகம் முழுக்க எந்த மொழி பேசுகிற அல்லது எந்தஇனத்தைச்சேர்ந்த பெண்ணாக இருப்பினும் குடும்ப உறவுகளால் ஆட்பட்டு இயங்குகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு பெண் அம்மா, மகள், சித்தி, அத்தை, அக்கா, தங்கை, அம்மாச்சி, பாட்டி என வேறுவேறு உறவு முறைகளால் அழைக்கப்பட்டாலும் பெண் என்கிற ஒற்றை சாளரத்தில் உள் அடைந்து விடுவாள். அவளுடைய வலி, துயரம், இன்பம் ஆகியன அவள் மட்டுமே அறிந்தவை. பெண் என்பவள் ‘பெண்’ அவ்வளவுதான்.
பெண்களின் மனதில் ஒரு நெருப்பு அணையாமல் சுடர்ந்து கொண்டிருக்கிறது.. அது அவளது கண்களிலிருந்து இறங்கி ஒரு தீப்பந்தமாக வயிற்றுக்குச் சோறிட, கருணையை ஏந்திப் பிடிக்கும்படியாக அந்தப்பெண்ணுக்கு இந்தச்சமூகம் சில கரண்டிகளை அவளிடம் கொடுத்திருக்கிறது என்கிற மஞ்சுளாவின் கவிதையில் அடிவயிற்று நெருப்பென்பது பெண்ணின் தனித்த அடையாளமாக இருப்பதைப்பேசுகிறார். எல்லாப்பெண்களிடமும் உறங்காத ஓர் இரவும், உலர்ந்து விடாத கண்ணீர்த்துளியும் எப்போதுமிருக்கிறது. அந்த ஈரத்தைக்கொண்டுதான் பெரும்பாலான பெண் கவிதைகள் எழுதப்படுகின்றன. எனவேதான் பெண் எழுத்துக்கள் தனித்தவை.
“பழம் கொறிக்கும் அணிலொன்று
கூடு திரும்ப வேண்டிய பறவை ஒன்று
அவள் காதருகே வந்து
சிறகு கோதுகிறது.”
பெண்ணின் அந்தரங்க உணர்வுகளுக்கும், புறச்சூழலுக்குமிடையேயான நிலையினைப் பேசுகிற இந்தக்கவிதையில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல் அநேகமான பெண்களின் உளவியலைப்பேசுகிறது.
ஒரு பெண்ணை பார்க்கிற ஒவ்வொருவருக்கும் அவர்களது கனவில் அவளை அறிந்திராத கனவொன்று பாலை நிலம்போல விரிந்து கிடக்கிறது. ஒரு பெண் என்பவள் புறக்கண்களால் பார்க்கப்படுபவர் அல்ல என்பதை இயற்கையில் காணப்படுகிற மரங்கள், பறவைகள், விலங்குகள், ஆறுகள் ஆகியவற்றின் வண்ணங்களைக்கொண்டு இவரது கவிதைகள் வழியே ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் பெண்ணின் காதல், காமம், தனிமை, கசப்பு போன்றவை நிறமாகவும், நிறமற்றும் விரவியுள்ளன.
பெண்களின் உளவியலை மட்டுமன்றி மனிதச்சமூகத்தின் பொதுவான உளவெளிப்பாட்டுக் கவிதைகளும் மஞ்சுளாவின் சொற்களில் வெளிப்படுகின்றன. நாம் கடந்து வந்த ஒவ்வொரு நொடியும் அற்புதம் என்பதை வாழ்வின் கடைசி நொடிதான் தீர்மானிக்கிறது அல்லது கற்பிக்கிறது என்று எழுதுகிற இவர்,
“இந்த உலகம்
இனிமையையும்
கசப்பையும்
சரிசமமாகவே
வைத்திருக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ள
வாழ்வில் இறுதி கணமே
உறுதி செய்கிறது
வாழ்வெனும் கடலும்
அதன் சிறு துளியும்
வேறு வேறல்ல
என்பதை உணரும் தருணம் அது”
என்று முழுமை செய்கிறார். மேலும் ஒரு நெருப்பின் முதல் சுடர் மற்றும் கடைசி சுடரைப் பார்த்துவிட்டு, இடையில் எரிந்து ஒளிரும் வெளிச்சத்தினையும், அந்த வெளிச்சத்தின் அடியில் மறைந்திருக்கும் இருளையும் காணாமல் கடந்து செல்கிறோம் என்பதையும் குறிப்பிடுகிறார். உண்மையில் இருளுக்குத்தான் ஆயிரம் கண்கள், இருள்தான் வெளிச்சத்தை அதிகமும் அறிந்திருக்கிறது என்பதை கவிஞர் மஞ்சுளா தம் கவிதைகளில் பேசுகிறார்.
“எது கடல்,
எது ஆகாயம்,
எது பூமி,
திருப்பங்கள் எது,
சுழலும் சூழலில்
வாழ்வின் சாத்தியம் அறிந்தேன் இல்லை”
என்று தத்துவார்த்தமாக மனிதவாழ்வின் சாத்தியங்கள் பற்றி எழுதுகிற மஞ்சுளாவின் பெருந்தொற்றுக்கால கவிதைகள் சமூகம் சார்ந்த, உறவுகள் சார்ந்த. அறம் சார்ந்த உணர்வுகளையும் எழுதியுள்ளார். “முதல் மனிதன்” என்கிற கவிதையில்
“வேரோடு
என் உறவுகள்
கீழே விழுந்தபோது,
இலைகளை உதிர்த்தேன்”
என்கிற வரி இயற்கைவிட்டு நெடுந்தொலைவு விலகி வந்த அன்பற்ற மனித மனத்தை அடையாளம் காட்டுபவை. எச்சில் இலைகளுடன் போராடுகிற ஒரு நாயும், ஒரு மனிதனும் ஒரே உறவுகளாக இணைந்திருக்க எத்தனை தூரம் கடந்து வந்தார்களோ” என்கிற கேள்வியில் இந்தச்சமூகத்தின் மனசாட்சி உலுக்கப்படுகிறது.
“எல்லா நிறங்களையும்
பூக்களிடம் கொடுத்துவிட்டு
வெயிலின் நிறம்
அந்தியின் கரையில்
தன்னை
மறைக்க தொடங்குகிறது”
என்கிற வரிகளைப்போல சமூகம் சார்ந்தும். பெண்கள் சார்ந்தும் இயல்பான நீரோட்டம் போன்ற சொற்களால் கவிஞர் மஞ்சுளா, நிறங்களால் வாசகன் தன்னை நிரப்பட்டுமென வாசக மனதுக்குள் மாற்றங்களை நிகழ்த்துகிறார்.
“வாகை மரத்தினடியில் ஒரு கொற்றவை” என்பது ஒரு படிமமாக, காலகாலமாக ஒரு ஆணுக்கு காத்திருக்கும் ஒரு பெண் தன்னுடைய சிவந்த நிறத்தை, பாலின் நிறத்தைக்கொண்ட தூய சொற்களாலான ஒருவனிடம் தொலைத்து நிறமிழந்து போனதையும், அவள் மீது காலத்தில் சருகுகள் இடைவிடாமல் உதிர்ந்து கொண்டேயிருப்பதையும் பேசுகின்றன. அந்தக் கொற்றவை, சொற்களின் வாசனையை முகர்ந்தபடி கடந்து செல்கிறாள். நிலவையும் நட்சத்திரங்களையும் தன்னுடைய விழிகளில் ஏந்தியிருக்கும் அவளை பட்டாம்பூச்சியாக வாழ்வதற்கு இந்தச்சமூகம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று எழுதுகிற மஞ்சுளாவின் கவிதைகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அம்மழை பெண்ணின் எழுத இயலாத ஒரு காதலை எழுதி முடிக்கிறது.
அதிகாலையில் பறவைகளின் குரலில் தன்னுடைய தினத்தைத் திறந்து கொள்கிற பெண் ஒருத்தி, நாள் முழுவதும் யார் யாருக்காகவோ தன்னுடைய தனிமையை விட்டுக் கொடுக்கிறார். உண்மையில் அவளுக்கு ஒரு நூற்றாண்டுகள் வரையிலான தனிமையை தனக்கெனப் பரிசளித்துக்கொள்ள விரும்புகிறாள். கவிஞர் மஞ்சுளாவின் கவிதையில் உலவுகிற பெண்ணின் தனிமையை தயவுசெய்து யாரும் கலைத்து விடாதீர்கள் என்பதுதான் இந்தக்கவிதைத் தொகுப்பின் நிறைவுக்கவிதையை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய சொற்கள்.
சங்ககாலம் தொட்டு இன்றுவரையில் பெண் எழுத்துக்கள் சந்தித்து வந்திருக்கக்கூடிய அல்லது வெளிப்படுத்தக்கூடிய அரசியல் சார்ந்த வகைமையில், மஞ்சுளாவின் கவிதைகள் இந்த திசையில் தொடங்கி, இந்த திசையில்தான் பயணப்பட்டுப் பேசுறது என்கிற நோக்கிலான பார்வையில் மேலும் இக்கவிதைகளை அணுகி இந்தத்தொகுப்பினுள் தனிமையின் திசைவெளியில் தனித்திருக்க விரும்புகிற ஒரு கவி மனதினைக் கலைக்காமல் அப்படியே விட்டுவிடவே நானும் விரும்புகிறேன். கவிஞர் மஞ்சுளாவுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அன்புடன்,
சக்தி ஜோதி
அய்யம்பாளையம்.
நூல் : வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை
வகை : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : மஞ்சுளா
வெளியீடு : கடல் பதிப்பகம்
வெளியான ஆண்டு: நவம்பர் 2021
பக்கங்கள் : 98
விலை: ₹ 140
நூலைப் பெற : தமிழ்வெளி - +91 9094005600
நூலாசிரியர் குறித்து:
கவிஞர் மஞ்சுளா மதுரையைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக மரை, செம்மலர், உயிரெழுத்து, அம்ருதா, வடக்கு வாசல், புதிய பார்வை, புதிய காற்று, இனிய நந்தவனம், கல்வெட்டுப் பேசுகிறது, மனித நேயம், புதுகைத் தென்றல், நிலவெளி, புரவி முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இது தேனீர் காலம், தீமிதி, மொழியின் கதவு, இன்னுமொரு மழை, ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும் ஆகிய ஐந்து கவிதை நூல்களை எழுதியுள்ளார். மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை மௌனங்களை ரகசியங்களை உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
மொழியின் கதவு என்ற நூலுக்காகத் திருப்பூர் அரிமா சங்கத்தின் 'சக்தி' விருது (2012), தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை (தேனி) வழங்கிய அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019), உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதை நூல்களுக்காகப் பெற்றுள்ளார். முத்தமிழ் இலக்கிய மன்றம் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுறை, வளரி போன்ற கலை இலக்கிய அமைப்புகளில் தனது இலக்கியப் பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தாரகை, வளரி, பயணம் இதழ் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நினைவுப் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை என்ற இக்கவிதைத் தொகுப்பு இவரது ஆறாவது தொகுப்பாகும்.
சக்தி ஜோதி (Sakthi Jothi) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒரு தமிழார்வலராவார். கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி மற்றும் சமூகப்பணியாளர் என்று பரவலாக இவர் அறியப்படுகிறார். திண்டுக்கல் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவார கிராமமான அய்யம்பாளையத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டில் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும்.
அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.