நூலாசிரியர் கவிதாயினி கனகா பாலன் அவர்களின் மூன்றாவது நூல் `உன் கிளையில் என் கூடு’. நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அணிந்துரை நல்கி உள்ளார்.

நூலாசிரியர் என்னுரையில், “எதையாவது எழுது! ஏதாவது படி, அடிக்கடி எனக்குள்ளே சொல்லிக்கொள்ளும் இந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கிறது எனக்கான ஊக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் எனக்கும் பொருந்தும், எதையாவது எழுதுவது, எதையாவது படிப்பது, இந்த இரண்டும் தான் எனக்குப்பிடித்த செயல்களாகும்.

அம்மா!

தோளணைத்துத் தோழியாக
தலைகோதி முத்தமிட
வேண்டலாகத் தான் இருக்கிறது
அம்மாவின் அருகாமை
நானொரு அம்மாவாகியுங் கூட!

கடைசி வரி தான் முத்தாய்ப்பு. அம்மாவின் அரவணைப்பு என்பது, தான் ஒரு அம்மா ஆனபின்பும் தேவைப்படுகிறது. ஆனால் இன்றைய நிலையோ மணமானவுடன் அம்மாவைப் பிரிந்துவிடும் சூழ்நிலை தான் பெண்களுக்கு நிலவுகின்றது. எத்தனை வயதானாலும் அம்மா அம்மா தான், அம்மாவிற்கு இணையான உறவு உலகில் இல்லை என்பதை அழகாக உணர்த்தி உள்ளார்.

அழைப்பு மணி!

விளையாட்டுக்கேனும்
அடித்துவிட்டுச் செல்லுங்களேன்
யாரேனும் அந்த அழைப்பு மணியை
எத்தனை நேரம் தான்
துணிகளோடும் தூண்களோடும்
உரையாடிக் கொண்டிருப்பது
நகரத்தில் தனிமையை
நாமாக ஏற்றுக்கொள்வது
நரகத்தின் சாயலை
நம்மீது திணிப்பதாகுமோ!

குடும்பத்தில் வேறு எந்த உறவுகளும் இல்லாது தனிமையில் வாடும் இல்லத்தரசியின் உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். உண்மை தான், நகரம் சிலருக்கு நரகமாகி விடுகின்றது.

நம்பிக்கை!

அப்பொழுதுதான் பெய்த பெருமழையில்
தன்னைக் கழுவிக்கொண்ட
அந்தப் பாறையின்
இடைவெடிப்பு வாயிலாக
எட்டிப்பார்க்கும் செடியின்
இலைகளையும் மீறி
பூத்துக் கொண்டிருந்தது
நம்பிக்கை!

வீரியமான விதையாக இருந்தால் பாறையின் இடுக்கிலும் விழுந்து முளைத்து வளர்ந்து வரும். அதுபோல நம்பிக்கை இருந்தால் வழி உண்டு, வளம் உண்டு என்ற கவிதையின் மூலம் நம்பிக்கை விதை விதைத்து உள்ளார். பாராட்டுகள்.

மிக எளிய சொற்களின் மூலம், படிக்கும் அனைவருக்கும் மிக எளிதாக புரியும் வண்ணம், நல்லபல கவிதைகளை வடித்து உள்ளார். புதுக்கவிதைகள் புரியும்படி இருப்பது நூலின் சிறப்பு. புரியாத இருண்மை கவிதைகள் புதிர்கவிதைகள் இல்லை என்பதும் சிறப்பு.

எதுவுமறியா நிகழுலகு!

நேற்றைக்கும் நாளைக்கும்
தாவிக் கொண்டிருந்ததில்
கையிலிருந்து களவு போகிறது
எதுவுமறியா நிகழுலகு!

“நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில்மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை” என்ற பொன்மொழிகளை நினைவூட்டியது. பலர் கடந்தகால பெருமைகள் பேசியும், எதிர்காலத்-திற்கான திட்டமிடலிலும் காலத்தினை விரயம் செய்து இன்றைய நிகழ்காலப் பொழுது வீணடித்து வருகின்றனர் என்பதே நடப்பு உண்மை. அதனை நன்கு உணர்த்தி உள்ளார். இந்த நொடியில் வாழ் ! மகிழ்ச்சியாய் இரு! என்பதே ஜென் தத்துவம் .அதை வழிமொழிந்து கவிதை வடித்துள்ளார் .

பொறுப்புள்ள குடிமகன்!

அச்சமும் பசியும்

அப்பிக்கொண்டு
அங்கொரு மூலையில்

அவனிரு மகனும்
நிறைமாத மனைவியும்

பெருந்தாக வறுமையை
சொல்லற்று மறைத்தபடி
ஊரடங்கில்

உலையேற்ற வழியின்றித்
தவித்தாலும்

போதையேற்றத் தவறவில்லை
பொறுப்புள்ள அக்`குடி’மகன்.

குடியால் இன்று தமிழகமே தள்ளாடி வருகின்றது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏதேதோ கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். ஆனால் கொரோனா பரவும் முக்கிய இடமான மதுக்கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. மதுக்கடைகளை மூடினால் தான் தமிழகம் தலைஎடுக்கும். இன்றைய இளையதலைமுறையினர் பலரும் பீர் என்று ஆரம்பித்து பிராந்தி வரை குடித்து சீர்கெட்டு அலைந்து வருகின்றனர்.

பள்ளித்தோழி!

முறுக்கிக் கொண்டேயிருக்கும்
தாவணி முனைக்குப் பதிலாய்
சேலையில் முடிச்சிட்டு
அவிழ்த்தவண்ணம் இருப்பதில்
அவளே தானென
அடித்து சொல்கிறதென் மனம்!

யதேச்சையாக கடக்கும் அவளை, தன் தோழி தானா? என அடையாளம் காணும் குறிப்பு நன்று. பலரது வாழ்வில் கடக்கும் நிகழ்வை புதுக்கவிதையாக்கி உள்ளார். சமுதாயத்தை உற்றுநோக்கி கிடைக்கும் தனிமையில் சிந்தித்து புதுக்கவிதைகளாக வடித்து உள்ளார். பாராட்டுகள்.

மழை எழுதும் கவிதை!

இனி பெய்யத் தொடங்கிய மழை
எழுதிக் கொள்ளட்டும்
ரயில் நிலையத்தின்
மிச்சக் கவிதையை!

மழையை கவிதையாகப் பார்க்கும் கவிப்பார்வை நன்று. மிச்சக்கவிதையை மழை எழுதும் என்று முடித்த முடிப்பு நன்று.

குனிந்து பணிந்து

கூன் பெறுதலை விட

எதிர்த்து நிமிரலில்

நொறுங்கட்டுமே எலும்பு!

கொட்டக் கொட்டக் குனிந்தது போதும், கொட்டும் கரம் முறிக்க நிமிர்ந்திட வேண்டும் என்ற வீரத்தை சொற்சிக்கனத்துடன் குறைந்த சொற்களில் வீரம் விதைத்து உள்ளார்.


கவிஞர் இரா.இரவி

 

நூல் தகவல்:

நூல் : உன் கிளையில் என் கூடு!

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : கனகா பாலன்

           வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2020

விலை: ₹ 80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *