மிருகத்துக்கு
பிராணவாயு
மனிதாத்மாவுக்கோ
மனம் தான் வெளி.. பிரமிள்
அவரவர் கை மணல், காலடியில் ஆகாயம், அளவில்லாத மலர், இளவரசி கவிதைகள் என ஆனந்த் அவர்களை கவிஞராக தான் அறிமுகம். அவருடைய கவிதைகள் சிறிய சிமிழுக்குள் அடைபடாமல், சிறகு விரித்துப் பறக்கும் உணர்வின் வெளிப்பாடாக, ஒளியூறிய சொற்களைக் கொண்டதாக நான் உணர்ந்தேன். இளவரசி கவிதைகளின் வாசிப்பனுபவம், ஒரு மாய உலகிற்குள் பயணித்த அனுபவத்தைத் தந்தது. காலவெளிக்காடு, நான் காணாமல் போகும் கதை ஆகிய நூல்கள் புதிய உலகத்தை, புதிய சிந்தனைவெளியை எனக்கு அறிமுகப்படுத்தின. சுற்றுவழிப்பாதை என்ற அவரது நாவல், இது வரை நான் அறிந்த, உணர்ந்த ஆனந்தின் படைப்புலகத்தின் உள்ளே கூடுதலாக ஆழப்பயணிக்கும் வாய்ப்பை தந்தது. இது வரையில் நான் வாசித்த எந்த புத்தகமும் தராத ஒரு உள்முக சிந்தனையை, சேர்த்து வைத்த அத்தனை அனுபவங்களையும் கலைத்துப் போட்டு பரிசீலிக்கும் ஆத்மார்த்த தூண்டுதலை தந்தது சுற்றுவழிப்பாதை.
நாவல் என்பது பக்கங்களின் அல்லது கதை மாந்தர்களின் எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதல்ல. போலவே, நீண்ட கால சம்பவங்களின் விவரிப்பைக் கொண்டதும் அல்ல. நாவலின் உள்ளடக்கம் வாசகரின் மனதுக்குள் புகுந்து அவரது சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, தன்னைத் தானே பரிசீலித்துக் கொள்ள ஒரு கருவியாக, வாழ்வின் தரிசனத்தைக் கண்டடைய உணர்வூட்டம் கொடுப்பதாக அமைய வேண்டும். முதல் பக்கத்திலேயே
என்று குறிப்பிடுகிறார் ஆனந்த். அன்பூறித் ததும்பும், காருண்யம் பொங்கி வழியும் ஒரு பிரதியில் நுழைய வேறென்ன வேண்டும். 18 பக்கங்களில் கல்யாணராமன் அவர்களின் விரிவான முன்னுரை, சற்று வாசகரைப் பின்வாங்கச் செய்யும். துணிந்து தான் கடக்க வேண்டி உள்ளது. இந்நாவல் உருவானதன் பின்னணியை ஆனந்த், சுற்றுவழிப்பாதை- சில குறிப்புகள் என்று விவரிக்கிறார். “கதை எழுதும் முறைப்பாட்டுக்கும் வாழ்வனுபவ முறைப்பாட்டுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. இரண்டையும் பின்னிருந்து இயக்கும் காரணிகள் ஒன்றுதான் என்று நான் நம்புகிறேன். அவ்வாறு நம்புவதற்கு இடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என்று கூறுவது வாசகருடனான சினேகமான உரையாடலைத் துவங்கும் இடமாக இருக்கிறது.
// தன்னையே தனக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஒருவரை மாற்றிவிடும் வல்லமை வாய்ந்தது இந்த அகவெளி. பொன்னை உருக்கி வார்க்கும் தீமண்டலம் இது// என்பதை கலை இலக்கியச் செயல்பாட்டில் எத்தன்மையிலேனும் ஈடுபட விழையும் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய காலாதீதமான சொற்கள்.
ஒரு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஜகதீசன் வகைப்படுத்த வேண்டி, ஓலைச்சுவடிப் பிரதி ஒன்றை வாசிக்க முற்படுகிறார். “சுற்றுவழிப்பாதை – தேடியதும் தொடக்கத்திற்குத் திரும்பியதும்” மூன்று பகுதிகளில், தேடிக்கிளம்பியது, தேடிப் பயணித்தது, தொடக்கத்திற்குத் திரும்பியது என்றமைந்த அப்பிரதிகளை வாசகரும் ஜகதீசனுடன் இணைந்து வாசிக்கத் துவங்குகிறோம். நடுவில் ஜகதீசனுக்கும் அவர் மனைவி உமாவுக்கும் இப்பிரதிகள் ஏற்படுத்தும் சிந்தனை அதிர்வுகள் வாசகருக்கும் தானே.
ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு குன்று. அதன் மீதமைந்த ஒரு ஆசிரமம். அங்கு வசிக்கும் குருதேவரும் சில துறவிகளும். அங்கு எதிர்பாராமல் வந்து சேரும் ஒரு குழந்தை. வருடங்கள் நகர, அக்குழந்தை வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். அவனது கேள்விகளின் வழி, உலகை, இயற்கையை, மனித உறவுகளை, ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை, அதன் வழியே உலகியல் அனுபவங்களை வாசகரும் அறிந்து கொள்கிறோம். அவனது குடும்பம் பற்றிய தேடல், அதில் அவன் சந்திக்கும் நபர்கள், அந்த நிகழ்முறையில் ஆசிரமவாசிகளுக்கு கிடைக்கும் மாறுபட்ட அனுபவங்கள் தான் இப்பிரதியில் விவரிக்கப்படுகிறது.
இந்த நாவலைப் பொறுத்தவரையில் கதை என்பதன் முக்கியத்துவத்தை விட, அனுபவ விவரிப்புகளும், அதன் வழி வாசகரின் சிந்தனையில் ஏற்படும் அதிர்வுகளுமே மிக முக்கியமான கருதுகோளாக இருக்கிறது. வாகன வசதிகளோ, நவீன தொழில்நுட்ப வசதிகளோ உருவாகாத காலகட்டத்தில் நிகழும் சம்பவங்கள். பெரும்பாலும் கதை மாந்தர்கள் நடந்தே பயணிக்கிறார்கள். கதாபாத்திரங்களில் குன்றுகளும், பாறைகளும், சிற்பங்களும் அடக்கம். முதல் அத்தியாயத்திலேயே, நாமெல்லாம் எங்கிருந்து வருகிறோம்? என்று கேட்டான் சத்யரூபன்.அது எனக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை சத்யா. தெரிந்ததும் முதலில் உன்னிடம் வந்து சொல்கிறேன், சரியா?” என்கிறார் ஆதிநாதர்.
நாவல் முழுவதிலும் உரையாடல்கள், கேள்வி பதில்கள் எல்லாவற்றிலும் ஊடோடி இருப்பது பொறுமை..பொறுமை.. பொறுமை.. சக மனிதர்கள் மீதான நேசம், அக்கறை, பிறரின் கருத்துகளுக்கு இடம் கொடுக்கும் பெருந்தன்மை, அவர்களின் சொற்களுக்கு மரியாதை அளித்து பேசும் முதிர்ச்சி, அன்பு தோய்ந்த வார்த்தைகள், ஆறுதல் அளிக்கும் சொற்பிரயோகங்கள் என நாம் பேச்சு என்று இத்தனை நாள் செய்து வந்திருப்பதை வீசியெறிந்து கேள்வி எழுப்புகிறது இப்பிரதி. அன்றாட வாழ்வில் நமக்கு, நம் குழந்தைகளுக்கு மனதில் தோன்றும் கேள்விகளைக் கேட்கவோ, விவாதிக்கவோ எந்தவொரு வாய்ப்பும் இருப்பதில்லை. வீடு என்பது அத்தனை வெளிச்சத்தோடா இயங்குகிறது. கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே பெரும்செயல்திட்டத்துடன் இயங்குகின்றன. குழந்தைகளின் தனித்துவத்திற்கான எந்த இடமும் அங்கே இல்லை. சத்யரூபனின் மனதில் எழுவதைப்போல் ஆயிரமாயிரம் கேள்விகள் வாழ்க்கை குறித்து நமக்குள் தோன்றுகிறது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால், மன அழுத்தங்களுக்கோ, குடும்ப சச்சரவுகளுக்கோ இடமே இருக்காது.
//சத்யா, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒன்று தான். நாம் எல்லோருமே ஒவ்வொரு கணமும் நம் அறியாமையைத் தான் எதிர்கொள்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அறியாமை உருவெடுத்து வருகிறது. நம் அனைவருக்கும் ஒவ்வொரு கணமும் தத்தம் அறியாமையை எதிர்கொள்வதே வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது. நாம் இன்னும் அறியாதது நமக்கு இந்தக் கணம் அனுபவமாக வாய்க்கிறது. // என்று குருதேவர் கூறுகிறார். அட்சரலட்சம் பெறும் இதைப் போன்ற பல கருத்துகள் நாவல் முழுவதும் காணக்கிடைக்கிறது. 735 பக்கங்களில் ஆனந்த தனது பல்லாண்டுகால உழைப்பை கருத்துகளாக்கி தந்திருக்கிறார். நாம் வாசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.
ஆனந்த் அவர்களின் ஆழமான அறிவும், அனுபவச்செறிவும் இந்நாவலை ஒரு சிறந்த வாழ்வியல் நூலாக நம் கைகளில் பொக்கிஷமாக வழங்கியிருக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் அவசியம் இடம்பெற வேண்டிய நூல். ஏதேனும் பிரச்சினைகள் மனதை அரிக்கும் பொழுது, கவலையும் துக்கமும் சூழும் நேரத்தில் புனித நூல்களை எடுத்து, கிடைக்கும் பக்கத்தை படிக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. நம் பிரச்சினைகளுக்கான தீர்வு அப்புனிதநூலில் இருந்து கிடைக்கும், அதில் இருக்கும் சொற்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அது நிகழ்கிறது. அவ்வாறான வாழ்வியல் புனித நூலாக சுற்றுவழிப்பாதை அமைகிறது. மானுடவியலுக்கு, மனநலனுக்கு ஆனந்த் அவர்கள் அளித்த அழியாக்கொடை சுற்றுவழிப்பாதை.
அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. பாராட்டுகள்.
–ரஞ்சனி பாசு
நூல் : | சுற்றுவழிப்பாதை |
பிரிவு : | நாவல் |
ஆசிரியர்: | ஆனந்த் |
வெளியீடு: | காலச்சுவடு பதிப்பக்ம் |
வெளியான ஆண்டு : | 2020 (முதற் பதிப்பு) |
பக்கங்கள் : | |
விலை : | ₹ 795 |
Kindle Editon |