கவிஞர் சியாமளா ராஜசேகரின் “சோலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூலுக்கு புலவர் நாகி எழுதிய அணிந்துரை.
தமிழ்ச் சான்றோர்களுக்கு வணக்கம் !
கவிதை என்பதும் செய்யுள் என்பதும் பாட்டு என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றில் ஓசை நயமும் சேர்ந்து ஒலிக்கும்போது கேட்பவர் மெய்மறந்து விடுகின்றனர். பாடலுக்கு உயிர் உண்டாகிறது.
“ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பம்” என்றார் பாரதியார். கவிதை என்றால் ஒருவருடைய உள்ளத்தைக் கவர வேண்டும் அதில் உணர்ச்சியும் இருக்கவேண்டும் . அதனால்தான் நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர்
“பல்வகைத் தாதுவின் உயர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வனச் செய்யுள் “
என்று இந்நூற்பா வழியாக கவிதையின் தன்மையை விளக்கிக் காட்டியுள்ளார்.
இந்நூலாசிரியரான தாய்குலத்தின் சிறப்புக்குரிய கவிஞர் சியாமளா ராஜசேகர் வடித்த “சோலைப்பூக்கள்” கவிதை நூலைக் கண்ணுற்றேன் . படித்தேன் சுவைத்தேன் , களிப்புற்றேன். கவிதைப் பூக்கள் அனைத்தும் உள்ளத்து உணர்வினை வருடிச் செல்லும் தென்றலாகவே உணர்ந்தேன். மரபுக்கவி என்றாலே காத தூரம் ஓடும் கவிஞர்களுள் மரபின் மாண்புகளை மனத்தில் இருத்தி வெண்பா, விருத்தம், கலிப்பா, சிந்து, கும்மி, சந்தம் என்று எதையும் விட்டுவைக்காமல் படைத்திருக்கும் கவிதாயினியைப் போற்றுகிறேன்; வாழ்த்தி மகிழ்கின்றேன்.
கொன்றை வேந்தனில் ஔவை படைத்தது போலவே அன்னையை வணங்கித் தன்னுடைய கவிதைக் கணக்கைத் தொடங்குகிறார் ..
ஔவை, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று தொடங்கியது போலத் தானும் தாயை முன்னிருத்தி வணங்கித் துதித்துப் பாடலை வடித்திருக்கிறார் .. அந்நாளில் நூலைத் தொடங்கும்போது விநாயகர் காப்பு , சுப்பிரமண்யர் துதி, பெருமாள் காப்பு என்று எழுதி இறைவணக்கம் செய்யும்போது, இவர் தாயையே கடவுளாகப் பாடுவது மிகவும் உள்ளத்தை நெகிழச் செய்கிறது.
சோலைப்பூக்களாக ஆட்டம் , ஆனந்தக் களிப்பு, அப்பாவென, கனவு மெய்ப்பட வேண்டும் , குற்றால அழகு என்ற பல்வேறு பாடல்கள் எழுதியுள்ளார். அந்த வரிசையில் “கொரொனா குறள்” மற்றும் “காதல் பாக்கள்” தலைப்பில் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட குறள்வெண்பாக்கள் பாராட்டுக்குரியன . குறள்வெண்பா இலக்கணம் வழுவாமல் சிறப்பான கருத்துகளோடு சொல்நயம், பொருள்நயம் கொண்டு எழுதி நம்மை வியக்க வைக்கிறார்.
உதாரணமாக….
சொல்லி முடிக்குமுன் துள்ளி யெழலாமா
மெல்லியளே மென்விரல் மீட்டு.
ஏற்க மறுப்பாயேல் என்னுளந் தாங்குமோ
சீற்றந் தணிவாய் சிரித்து.
என்று எழுதிச் சிந்திக்க வைக்கிறார். காதல் பாக்கள் மண்டலவந்தாதியாக அமைந்தது தனிச்சிறப்பு !
“அவன் நிற்கிறான்” என்ற தலைப்பில் எழுதிய
நெஞ்சி லுரத்தொடு நேர்மை திறத்தொடு
நித்திலம் தோன்றியது -அது
வஞ்சக மாந்தரை வாய்ச்சொலின் வீரரை
மாற்றிட எண்ணியது.
என்ற பாடலில் சொக்க வைக்கிறார் .
மேலும், “இவை வேண்டா ” என்ற தலைப்பில் இவர் படைத்த பாடல் இவர் ஏழாம் நூற்றாண்டு பெண்பாற் புலவரோ என்று சிந்திக்க வைக்கிறார்.
கண்ணதாசன், முடியரசர், ஈரோடு தமிழன்பன் என்று மிகச் சிறந்த கவிஞர்களைச் “சோலைப்பூக்களில்” மணம்பரப்பச் செய்துள்ளார்.
யாரும் தொடமுடியாத வண்ணப்பாடல் பாடுமிவர் அருணகிரிநாதரின் பூரண அருள் பெற்றவரென்றே கூறத் தோன்றுகிறது . பெண்குலத்துப் பெருமைகளை உயர்த்த இவர்போன்ற பெண்பாற் கவிஞர்கள் தமிழ்மண்ணில் தோன்ற வேண்டும் என்பதே என் அவா. காருள்ளளவும், கடல் நீருள்ளளவும் வாழ்வாங்கு வாழ்கவென மனந்திறந்து வாழ்த்துகிறேன். வாழ்க சியாமளா ராஜசேகர் அவர்களின் தமிழ்த் தொண்டு! .
அன்புடன் வாழ்த்தும்
தமிழ்மாமணி
மத்திய அரசு விருதாளர்
புலவர் நாகி.
சிலம்பகம்
திலதை
புதுச்சேரி
நூல்: | சோலைப் பூக்கள் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | சியாமளா ராஜசேகர் |
வெளியீடு: | ஒரு துளிக்கவிதை - புதுச்சேரி |
வெளியான ஆண்டு | ஏப்ரல் 2021 |
பக்கங்கள்: | |
விலை : | ₹ 80 |