ன் சிறு வயதில் என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் என்றால் சார்லி சாப்ளின் நடித்த படங்கள் தான். முதல் முறையாக மதுரை ரீகல் திரையரங்கில் சார்லி சாப்ளின் நடித்த ஒரு படத்திற்கு உறவினர் ஒருவரின் உதவியுடன் சென்று படம் பார்த்து வந்தேன். அப்போது 1970 களில்  மதுரை ரீகல் திரையரங்கில் ஓடிய அவரின் படத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. படத்தின் பெயர் இப்போது நினைவில் இல்லை. அந்த ஒரு படம் மட்டுமே அவரை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. பிறகு எப்போதும் அது போன்ற ஒரு படத்தை திரையில் பார்க்க எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. என் குழந்தை மனதுக்கு அப்போது சிரிக்க மட்டும் தான் தெரிந்தது. வேறு ஒன்றும் தெரியவில்லை.

    தற்போது தமிழில் யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பில் வந்திருக்கக் கூடிய சார்லி சாப்ளினின் “என் கதை ” என் வாசிப்பனுபவத்துக்கு வந்த போது அந்த உலக மகா கலைஞரின் வாழ்க்கைச் சரிதம் அவரின் சாகச நகைச்சுவை நடிப்புக்கு பின்னால் எத்தனை துயரார்ந்த அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.

         சார்லியின் சிறு பிராயத்தில் வறுமைதான் அவரை வளர்த்தெடுத்திருக்கிறது. சார்லியின் அம்மா ஒரு நாடக நடிகையாக இருந்தவர். சார்லியும் சிட்னியும் சகோதரர்கள். தந்தையின் உதவியின்றியே இவர்கள் இருவரையும் தாய் மட்டுமே பல சிரமங்களை எதிர்கொண்டு  வளர்த்து வருகிறாள். விதிக்கு நீதியும் இல்லை, இரக்கமும் இல்லை என்ற அளவில் அவர்களின் சூழ்நிலை மிக மோசமாயிருந்தது.

         குடிக்கு அடிமையான தந்தையை ப்பற்றி சார்லி குறிப்பிடும்போது, “எனக்கு அப்பா இருந்ததாக உணர்வில்லை. அவர் எங்களுடன் வாழ்ந்ததாகவும் நினைவில் இல்லை”என்று கூறுகிறார். அவர் தந்தை பார்ப்பதற்கு நெப்போலியன் போல் இருப்பார் என்று சாப்ளின் தாய் கூறுவாராம்.

லண்டனில் இருந்து பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள ஹான்வேல் என்ற ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்குக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார் சாப்ளின். அதில் நிகழ்ந்த ஒரு குற்றச்சம்பவத்துக்காக, அவர் தான் செய்யாத குற்றத்தை ஒத்துக்கொண்டு, பிரம்பால் அடி வாங்கிய நிகழ்ச்சி நம்மை நெகிழவும், அதிரவும் வைக்கிறது.

     தாயின் மனநிலை காரணமாக, அப்பாவின் இன்னொரு காதலியான லூசியிடம் சிறுவர்கள் தஞ்சமடையும் சூழ்நிலையும், அப்பெண்ணின் அச்சமூட்டும் மனநிலையும் சார்லியை தனிமைப் படுத்திக்கொண்டே இருந்தன. ஒரு நாள் ஆதரவற்ற சூழ்நிலையில் பசியுடன் சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் பேராவலைத் தூண்டும்படி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளையும், கிழங்குகளையும் பசியுடன் உற்றுப் பார்த்தபடியே அலைந்த நிகழ்வுகள் யாவுமே அந்த அச்சமூட்டும் நினைவுகளுக்கும் அவரது மனக்கஷ்டத்துக்கும் மாற்றாக இருந்ததாக அறிய வரும்போது, அவரது துயரார்ந்த மனச்சித்திரம் நம் கண் முன்னே நிழலாட ஆரம்பித்து விடுகிறது.

    எட்டு வயதைக் கடந்த சார்லினுக்கு, ஒரு சின்ன நகைச்சுவை நடிகனாக ஆவதற்கு விருப்பமிருந்தது. நாடகக்குழு நடத்திக் கொண்டிருந்த திரு. ஜாக்சனின் நாடகக் குழு ஒன்றில் இணைந்து ஆறு வார பயிற்சிக்குப் பிறகே நடனமாடத் தகுதி பெறுகிறார். ஆனால் மேடை குறித்த அச்சமும் அவருக்கு இருந்தது.

    ஒரு முறை புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்சியின் சில கதா பாத்திரங்களை  வர்ணனையாளர் ஒருவர் நடித்துக்காட்டிக் கொண்டிருந்தார். இது சார்லியை மிகவும் கவர்ந்தது. அந்த நடிப்பை காப்பியடித்து அது போன்ற நிகழ்வை மற்றப் பையன்களிடம் நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார் சாப்ளின். அதைக்  கவனித்த திரு. ஜாக்சன் அன்று முதல் அவரின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்று விரும்பினார்.

      உடை விஷயத்தில் சார்லிக்கு எப்போதும் நெருக்கடி இருந்திருக்கிறது. நாடக வாழ்க்கையின் மிச்சமாக, சார்லி அணிந்திருந்த உடை அப்படியே கோமாளி வேடம் போல் இருந்ததாம். சார்லியின் உடைகள் பெரும்பாலான இடங்களில் ஒட்டுப் போட்டு தைக்கப் பட்டு இருந்த நிலையில், தன் வறுமையை வெளிக்காட்டிக் கொள்ளாத பண்புடன் தன் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார்.

 சார்லியின் அப்பா இறந்த போது, சவ அடக்கத்திற்கு கையில் ஒரு பெனி கூட இல்லாத நிலையில் குடும்பம் இருந்தது. சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத நிலையில் வீட்டிலுள்ள ஒரு பழைய எண்ணெய் அடுப்பை அரை பெனிக்கு விற்று ரொட்டி வாங்கி சாப்பிட்ட நிகழ்வுகள் யாவும் சார்லியின் வாழ்க்கையில் துன்பியல் காட்சிகளாகவே விரிகின்றன. இந்தக் காலக் கட்டத்திற்கு பிறகு சார்லி தன் வாழ்வின் தேவைகளுக்காக பல வேலைகள் செய்து வந்தார்.

சாப்ளினுக்கு ” ஜிம்” என்ற புது நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. இது அவரின் உலகத்தை திடீரென மாற்றியது போல் இருந்தது.

     சில காலம் கழித்து ‘கேசிஸ் சர்க்கஸ்’ என்ற நாடகக் கம்பெனி வேலையும், பிற்பாடு போர்ஸ்ட்டர் இசைக்கூடத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. பிறகு கார்னோ கம்பெனி மூலமாக அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பும் சார்லிக்கு விரைவில் கிடைக்கிறது.

தி வோ -வேஸ் என்ற நாடகத்தில் இவர் நடித்த பகுதிக்கு தனிப்பட்ட முறையில் கவனம் கிடைத்தது. “வெரைட்டி” என்ற பத்திரிகை “நாடகக்குழுவில் நகைச்சுவை உணர்வுள்ள ஒரு ஆங்கிலேயராவது இருந்தார். அமெரிக்காவுக்கு அவர் போதும் ” என்று எழுதியது.

 கார்னோ கம்பெனி இங்கிலாந்துக்கு திரும்பிய போது, சாப்ளினுக்கு திரைப்படத்துக்கு திரும்ப வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

சாப்ளின் முதன் முதலாக இயக்கிய “caught in the rain ” என்ற படம் வெற்றி பெற்றது. அன்றிலிருந்து எல்லா நகைச்சுவைகளையும் எழுதியதும் இயக்கியதும் சாப்ளின்தான்.

கீஸ்ட்டோன், எஸ்ஸனே போன்ற பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது நகைச்சுவை படங்களை உருவாக்கியும் நடித்தும் வந்த சாப்ளினுக்கு பணமும், புகழும் போட்டி போட்டுக்கொண்டு சாப்ளி னுக்கு மிகப் பெரிய கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சாப்ளின் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம்… !

     மியூச்சுவல் பிலிம் கார்பரேஷனுடன் வருடத்திற்கு 6, 70, 000 டாலருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சாப்ளின். முதல் படமான ” The Floor walker ” பெரிய வெற்றியை அடைந்தது. தொடர்ந்து நல் வாய்ப்புகள் கிடைத்தது. “The First National flims ” கம்பெனியுடன் 1, 20, 000 டாலர் ஒப்பந்தம் ஆகியது.

நகைச்சுவை காட்சிகளை புனையும் போதும், இயக்கும் போதும் ஆழ்ந்த கவனத்துடன் செயல்படுவது சாப்ளினின் இயல்பு. அவருடன் நேர்காணலுக்கு வருபவர்கள் அவரது படங்களுக்கான கருத்துக்கள் எப்படி அவருக்கு கிடைக்கின்றன என்று கேட்பார்களாம். அதற்கு, சாப்ளின் கருத்துக்களின் மீது தீவிரமான விருப்பம் இருக்கும் போது மனது ஒரு கண்காணிப்பு கோபுரமாகி விடுவதையும், அதுவே நகைச்சுவைக்கான கருவையும், கற்பனையையும் தூண்டுகிறது என்பதை தெளிவாகக் கூறுகிறார்.

    “The kid “போன்ற  மிகப்பெரிய வெற்றிப்படங்களுக்கு பின் லண்டன் செல்ல விரும்புகிறார். இந்த உலகத்தில் யாரும் அறியப்படாத ஒருவராக, வறியவராக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு அதே இங்கிலாந்துக்கு புகழ் பெற்ற மனிதராகவும், மிகப் பெரும் பணக்காராகவும் சாப்ளின் திரும்புகிறார். பத்திரிகைகளும் செய்தித் தாள்களும் “சாப்ளின் வெற்றியாளராக திரும்புகிறார் “என்று கருத்துக்களை அள்ளி வழங்கியிருந்தன. லண்டன் வந்த பிறகு தான் வசித்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்து தனது குழந்தைப் பருவ நினைவுகளையெல்லாம் மீட்டெடுக்கிறார். உலகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

சாப்ளின் நியூயார்க்கில் தி சர்க்கஸ் என்ற படம் தயாரித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது அம்மாவின் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் இறக்கிறார்.

1926ஆம் ஆண்டு சாப்ளினுக்கு ஐன்ஸ்டீனை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. பிறகு வின்ஸ்டன் சர்ச்சில், காந்தி, நேரு போன்ற உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளும் உரையாடலும் சாப்ளினின் வாழ்க்கையை மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாற்றுகின்றன.

பேசும் படங்கள் வரத் தொடங்கியது. இனி மௌனப் படங்கள் வெற்றியை அடையாது என்று பலர் பேசிக் கொண்டிருந்த நிலையில் இவர் இயக்கி நடித்த “சிட்டி லைட்ஸ் ” என்ற படம் தொடர்ந்து நன்றாக ஓடி வெற்றியை அடைந்தது. தொடர்ந்து “மாடர்ன் டைம்ஸ்” என்ற படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

      1937-இல் “தி கிரேட் டிக்டேட்டர் ” படத்துக்காக திரைக்கதை எழுத ஆரம்பித்தார். அது ஹிட்லர் விரோதப் படம் என்பதால் அவருக்குப் பல அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனால் படம் முடிவடைந்து நியூயார்க்கில் வெற்றிகரமாக ஓடியது. சாப்ளினின் மற்ற படங்களை விடவும் இந்தப் படமே மிகவும் நல்ல வசூலை பெற்றுத் தந்தது.

      தி கிரேட் டிக்டேட்டரில் வரும் சாப்ளினின் இறுதி உரை மிகவும் புகழ் வாய்ந்தது. “என் கால கட்டத்தின் மிக எழுச்சியூட்டும் உரை “என்று ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவர்  கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டையில் வெளியிட்டு சிறப்பித்தார். இதனிடையே அமெரிக்க பத்திரிகைகள் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்த சிரமப்பட்டார்கள். அவர்களின் கேள்விகளுக்கு சாப்ளின் சரியான பதிலடி கொடுத்த படியே இருந்தார்.

அரசியல் வெறுப்பு காரணமாக இவர் நடித்த லைம் லைட் என்ற படம் அமெரிக்காவில் புறக்கணிக்கப் பட்டது. அதற்கான காரணத்தை அவர் நண்பர்களிடம் விளக்கும் போது, அவர் நண்பர்கள் பலமுறை, நீங்கள் எப்படி அமெரிக்காவின் எதிர்ப்புக்கு ஆளானீர்கள்? என்று கேட்கும் போது “நான் செய்த பெருங்குற்றம் நான் ஒரு சுதந்திர வாதியாக இருந்தேன் என்பதுதான் ” என்று கூறியிருக்கிறார்.

   சாப்ளின் அமெரிக்காவை விட்டு வந்த பிறகு வாழ்க்கை வேறொரு தளத்துக்கு மாறியது. பாரிஸிலும், ரோமிலும் மக்கள் அவரை வெற்றி நாயகராக வரவேற்றார்கள். பிரான்சில் உள்ள புகழ் பெற்ற நாடகக் குழுவின் தலைவரிடமிருந்து வந்த கடிதத்தில் ஒரு குறிப்பு இருந்தது.”சாப்ளின் உலகத்தின் மிகப்பெரிய மனிதர்களில் ஒருவர். மிக மேதமை பொருந்தியவர்களின் வரிசையில் வைக்கப்படுபவர்களுக்குச் சமமானதுதான் பாராட்டுக்கான உங்கள் தகுதி ” என்று அந்தக் குறிப்பில் இருந்தது.

    சார்லி சாப்ளின் தனது கடைசி கால வாழ்க்கையை ஸ்விட்சர்லாந்தில் உள்ள கோர்சியர் என்ற கிராமத்தில் மிக அழகிய சூழ்நிலையில் உள்ள ஒரு வீட்டில் தனது இறுதிக்காலத்தை அமைதியாகக்  கழித்தார். அந்த அமைதியான சூழ்நிலையிலும் சாப்ளின் படைப்புத்திறன் குன்றாதவராக, மகிழ்ச்சியும் ஆற்றலும் நிறைந்தவராகவே விளங்கினார். ஆம் சார்லி சாப்ளின் என்ற ஒப்பற்ற அந்த உலக மகா கலைஞனின் உள் நிரம்பியிருப்பது இந்த உலகம் எப்போதும் எதிர்பார்க்கும் அர்த்தம் பொதிந்த வார்த்தையான “மகிழ்ச்சி”யைத்தான்!

 யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பில் வெளிவந்த சார்லி சாப்ளினின் ” என் கதை ” என்ற நூல் என் வாசிப்பனுபவத்தில் எனக்கு அவரின் வாழ்வனுபவம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒரு கலைஞனின் வாழ்வின் வழியாக அவரை நேசித்த மக்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் புரிந்து கொள்ள நம் போன்ற தமிழ் வாசகர்களுக்கு பேருதவியாக இந்த நூல் அமைந்துள்ளது.


மஞ்சுளா 

நூலிலிருந்து:

படைப்பின் தேவதை

பெருங் கலைஞர்கள் இந்தப் புவியில் அதிசயங்களை ஸ்தாபிப்பவர்கள் என்பதற்கான காலாதீத உதாரணங்களில் ஒருவர் சார்லி சாப்ளின். உலக முழுதுமுள்ள எண்ணற்ற ரசிகர்களைத் தன் கலா வல்லமையால் ஈர்த்ததொரு பேராளுமை. அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999-ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு, உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சாப்ளினும் ஒருவர் என்று கூறுகிறது. ஒரு முறை பெர்னாட்ஷா, “திரைப்படத் துறையில் தோன்றிய ஓர் உண்மையான மேதை சாப்ளின்” என்று சொன்னார். கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம், பிற கலைஞர் எவருக்கும் சித்திக் காத ஒன்று. தமது அழுத்தத்தால் நமது அனுபவங்களை விரித்த ளிக்கும் இவரது படங்கள், திரை ரசனையின் கலங்கரை விளக்கங் களாகியிருக்கின்றன. சாப்ளின், ஓர் எளிய மனிதனும் படைப்பின் தேவதையுமாவார். மனங்கொள்ளாத் துயரமும் களங்கமற்ற மகிழ்ச்சியும் இவர்தான். தற்குறி வேடமும் தத்துவ தரிசனமும்…..

சாதாரணங்களின் ஊடாக சாத்தியங்களின் உச்சங்கள் தொட்ட வரைச் சொல்லி மாளாது. படங்களின் வாயிலாகச் சந்தித்தறிவது தான் உள்ள ஒரு வழி. இளம் பருவ வாழ்க்கையின் சம்மட்டி சுகளாக வந்து வந்து மோதி நெஞ்சுடைத்த துன்பங்கள் – ‘அளப்பரிய நிராதாவு- திசையற்ற கதிக்கேடு அனைத்தையும்
காண்ட இவரது சாரம் காலத்தே, படைப்பின் பெருமனதாய்ப் மித்தது. சிரிப்பும் கண்ணீருமான இந்தப் பேரன்பை உங்கள் இதயத்தோடு இணைக்கும் எளிய முயற்சியே இந்தப் பதிப்பு.

– பதிப்பகத்தார்.

 

நூல் தகவல்:
நூல்:  என் கதை
பிரிவு : சுயசரிதை
ஆசிரியர்: சார்லி சாப்ளின்
தமிழில் யூமா வாசுகி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ்
வெளியான ஆண்டு  முதல் பதிப்பு : நவம்பர் 2013
விலை: ₹ 190
 பக்கங்கள் 228

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *