நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜிகணேசன் நடித்த படத்தில் c.s. ஜெயராமன் “ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே” பாடியிருப்பார். அந்த பாடலை நாகசுரத்தில் கேக்கும்போது இன்னம்புரியாத பிரேமை ஏற்படும் அதை சொல்லலால் விவரிக்க முடியாது.
தமிழ் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றியதே சஞ்சாரம் நாவல் , கரிசல் நிலத்தின் வாழ்க்கையை , தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாடிச் செல்கிறது சஞ்சாரம் .
நாகசுரம் என்பது நம் தலைமுறைக்கு அது ஒரு இசைக்கருவி எனும் நிலைக்கு வந்துவிட்டது அதைப்பற்றி ஒன்றும் தெரியாது போல,தேவை இல்லாத இரைச்சல் என்று ஆகிவிட்டது.
திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியம் பிள்ளை ஆகியோர் நாதஸ்வர மும்மூர்த்திகள் ஒருவரான டி. என். ராஜாரத்தினம் பிள்ளை பற்றி ஜெயமோகன் தேனீ சிறுகதையில் இப்படி எழுதிருப்பார்.
நான் அப்பாவுக்க மோவாயை பிடிச்சு “அப்பா, மயிலு பாடுது!”ன்னு சொன்னேன்.
அப்பா அப்டியே என்னை கெட்டிபிடிச்சார். மார்போட அணைச்சுகிட்டார். “இல்ல மக்கா, அது நாதஸ்வரம்… திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்காரு”ன்னு சொன்னார்.
அப்பாவோட உடம்பு காய்ச்சல் வந்தது மாதிரி நடுங்கிட்டிருந்தது. அப்டி ஒரு சூடு. என் தோளில தண்ணி விழுந்தது. நான் நிமுந்து அப்பாவை பாத்தேன். அப்பா அழுதிட்டிருந்தார்.
“அப்பா”ன்னு கூப்பிட்டேன். “ஏன் அழுவுதீக?”
“பாட்டு கேட்டேம்லா மக்கா”
“அது கெட்ட பாட்டா?”
“அய்யோ இல்ல மக்கா… அது அமிர்தமாட்டு இனிக்குத பாட்டு. தெய்வங்கள்லாம் வந்து எறங்கி கேட்டுட்டு இருக்குத பாட்டு. பேயும் மனம்கனிஞ்சு கேக்குத பாட்டு.”
தேனீயில் நாகசுரம் பற்றி இப்படி கூறுவார் பிரேமை! என்ன அருமையான வார்த்தை, ஏன் சார்? பிரேமை. அதான். கிருஷ்ணன் மேலே ராதைக்கு இருந்தது அது. பரமாத்மா மேலே ஜீவாத்மாவுக்கு இருக்கப்பட்டது. தேன்மேலே தேனீக்கு இருக்கப்பட்டது.
நாகசுரத்தின் மேல் அப்படி ஒரு பிரேமை.
ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகள் சொல்லிக்கொடுத்தது கலைஞர்.மு. கருணாநிதி அவர்களின் தந்தை முத்துவேலர் ஆவர். ஏழு ஸ்வரங்கள் 72 ராகங்கள், அவற்றுள் சில ராகங்கள் சாந்தமுலேகா, மல்லாரி, சண்முகப்பிரியா, சிந்துபைரவி, சைந்தவி, நீலாம்பரி, மோகனம், முகாரி, கரகப்பிரியா, கீரவாணி, ஆபேரி, ஆரோகணம், தோடி.
சஞ்சாரம் கதை சுருக்கம்
ரத்தினமும் பக்கிரியும் கரிசல் பூமியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள். ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றவர்கள் ஜாதி பெயர் சொல்லி அசிங்க படுகிறார்கள். பக்கிரி கையை ஓங்கவே அது ஒரு சண்டையாகி ஊர் மக்களால் கட்டி வைத்து உதைக்க படுகிறார்கள். அதற்கிடையே இரண்டு சாதிகளுக்குள் கூட சண்டை வருகிறது; கோவில் மரியாதையை சொல்லி. எல்லோரும் தூங்கிய பிறகு கோவில் பூசாரி அவர்களை விடுவிக்கிறார். பக்கிறியோ அங்கு தீ வைத்து விட்டு செல்கிறான். அவர்கள் போலீஸிடம் சிக்காமலிருக்க அங்கிருந்து தப்பித்து செல்லும் இடங்களில் நாமும் அவர்களுடன் பயணிப்பதே இந்த சஞ்சாரம். அவர்கள் கூட மட்டும் இன்றி அவர் நினைவலைகளில் கூட சஞ்சரிக்கிறோம். பக்கிரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஊடே நாம் செல்கிறோம். அவன் நாதஸ்வரம் கற்ற விதம், சென்ற கச்சேரிகள், படும் கஷ்டங்கள் – இதெல்லாம் சொல்வதன் வழி எழுத்தாளர் நம்மை அவர்களின் வாழ்க்கைக்கே எடுத்து சென்று விடுகிறார்.
பக்கிரி ஈரோட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்வது அங்கு நடக்கும் சம்பவங்கள், கரகாட்டம் ஆடும் பெண்ணிற்கு பக்கிரிக்கும் நடக்கும் சம்பவம் என சொல்லி கொண்டே போகலாம்.
நாதஸ்வரம் தமிழ் சமூகத்தின் உயிர் நாடியில் உட்புகுந்து உணர்வுகளால் கட்டி போட்ட கதையை காட்சிகளால் மனதில் படம் ஓட்டி நாவலோடு நம்மையும் சஞ்சரிக்க வைக்கிறார். தஞ்சாவூர் இசைக்கலைஞர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் கரிசல்மண்காரர்களுக்கு கிடைக்கவில்லை என கூறுகிறார்.
சாமிநாத பிள்ளையின் இசை அதிர்ஷ்டம் இருந்தால்தான் கேட்க முடியும். பொன்னும் மணியும் கொட்டிக் கொடுத்தாலும் அந்த வாய்ப்பு கிடைக்காது.
கி.பி 1311மாலிக் கபூர் என்பவர் படை எடுத்து வருகிறார். கோவிலுக்கு கொள்ளை அடிக்க வருகிறார். அப்பொழுது கோவிலில் நாதஸ்வர ஓசை அவரை சுண்டி இழுக்கிறது. அந்த ஓசையை கேட்டுக்கொண்டே வாசிக்கும் நாதஸ்வர வித்வான் லச்சய்யா என்பவரை நோக்கி நகர்கிறார். அப்பொழுது ஒரு சவால்கல் யானைக்கும் காது கேட்குமா இந்த இசையை வாசித்தால். லச்சையா அந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார். உறுதியான கல்லால் செய்யப்பட்ட அந்த யானையின் காது இவரது வாசிப்பைக் கேட்டு அசைகிறது. கல்லைத் தொட்டு பார்க்கிறான் உறுதியாக உள்ளது. லச்சையாவை கடத்திக் கொண்டு மன்னன் கில்ஜியிடம் இடம் ஒப்படைக்கிறான்.
நாதஸ்வர கலைஞரை தினமும் உட்கார வைத்து இசை கேட்பதே அவனது பொழுதுபோக்கு ஆகிவிடுகிறது. இதை படிக்கும்பொழுது, தி . ஜானகிராமனின் -செய்தி சிறுகதையில் பிலிப் போல்ஸ்கா நாதஸ்வர கலைஞரின் விரலை பிடித்து உதட்டில் வைத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.
ஹாக்கின்ஸ் என்ற வெள்ளையன் நாதஸ்வரம் இசையில் மயங்கி கிறங்கி ராகவையாவிடம் கற்று கரைதேர்ந்து பிரமாதமாக வாசித்து படிக்கும் நம்மையும் பொறாமை அடைய வைத்தார். பிறகு நம் கலாச்சாரத்தால் ஈர்க்கப் பட்டு தமிழ் பெண்ணை மணந்து கொள்வார்.
ஊரோடி பறவை ராகம் நாதஸ்வரத்தின் ராகத்தோடு ஒட்டி இருப்பதாக அறிந்து அந்த பறவையை கரிசல் நிலத்தில் வரும்பொழுது மண்ணுக்கு வா மண்ணுக்கு வா என அழைக்கயில், அவை வந்து சிறுதானியத்தை உண்டு விட்டு சென்றால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும். ஒரு சமயத்தில் பொன் வேண்டும் என்று சொன்னதும் அந்த இடமே தரிசாக மாறிப்போனது.
நாதஸ்வரம் இங்கிலாந்தில் வாசிக்க வாய்ப்பு வருகிறது. அப்பொழுது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. அவர்களின் உணர்வுகள் அங்கு வாசிக்க அவர்கள் போடும் திட்டங்கள் எல்லாம் மனதில் இதமாய் சென்றாலும், போகிற இடத்தில் அந்த இசைக்கான அங்கீகாரம் கிடைக்காத பொழுது அவர்கள் மனது எப்படி வலிக்கும் என்பதை படிக்கும்போது பக்கத்தை நகர்த்த முடியவில்லை.
ஒரு ராகத்தை பாடும் பொழுது நாதஸ்வர கலைஞர்கள் கால் பூமியின் தரை மீது இல்லை. அவர்கள் இந்த பிரபஞ்சத்தோடு இணைந்து விடுகிறார்கள். அப்பொழுதுதான் மூன்று நான்கு மணி நேரங்கள் தொடர்ந்து வாசிக்கும் மனோதிடமும் உடல் திடமும் கிடைக்கிறது. ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே விநாயகமுருகன் நாகஸ்வர மற்றும் கரகாட்ட காரர்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்திருப்பார். இக்கதையில் மேடையில் ஒருவர் “ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே” நாயனக்காரர் வாசிக்க அவருடன் சேர்ந்து மனதுக்குள் பாடினார் ராவ். நாயனே இசை நிற்க கண்களை திறந்து பார்த்தார். எந்த நாயிடா நேரங்கெட்ட நேரத்துல வாசிக்கச் சொன்னது என ரத்தினம் எச்சரித்து விட்டு வீட்டுக்குள் போனான். இதில் ராவின் கவலை ” அருமையான ஒரு பாட்டு பாதியில் நின்றுவிட்டதே ” என்பதுதான்.இதுதான் கலைஞர்களின் மனநிலை இக்கதை படிக்கும்போது கண்ணீரை அடக்கமுடியவில்லை.
தன்னாசி, ராகவை அய்யா போன்ற மேதைகள் கடந்து வந்த பாதையும், அவர்கள் நாதஸ்வர வித்வான் ஆக உருவான விதம் அருமை.
ஆ.மாதவன் -நாயணம் சிறுகதையில் கலைகள் அருகி கொண்டு வருவதை கூறியிருப்பார். இசை எப்படியெல்லாம் மதிக்கப்படுகிறது எங்கெல்லாம் அவமானப் படுத்தப்படுகிறது எப்படி எல்லாம் அசிங்கப்படுத்த படுகிறது என்பதை வலியுடனே எஸ். ரா. நகர்த்துகிறார். ஷெனாய் இசை இந்தியா முழுவதும் பரவியுள்ளதையும், நாகசுரம் பரவாத அரசியலையும் கூறுகிறார்.
கோவில்களில் இயந்திர கருவியே மங்கள இசை முழக்குகிறது . கலைஞன் வாசிப்பில் இருந்து நாம் அடையும் சந்தோஷமும் பக்தியும் பரவச நிலையும் என்றும் அந்த கருவி தர இயலாது. பத்தும்பத்தாத்துக்கு கேரள செண்டா மேளம், மேற்கத்திய இசைக்கருவிகள் வருகையால் கலைஞர்களின் வாழ்க்கை நசுக்கபடுகிறது. எஸ்.ராவின் எழுத்துக்கள் எப்போதும் நம் மனதை சஞ்சரிக்க வைக்கும் இந்நாவல் சஞ்சாரம் சொல்லவா வேண்டும் !
நாகசுரம் பற்றி :
இந்திய இசையின் அழகான நுட்பங்களை தெளிவாக வாசித்து காட்ட கூடிய இசைக் கருவிகளில் நாகசுரம் ஒன்று. சிறப்பான இசை கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத ரத்னாகரம் எனும் நூலில் இந்த கருவி பற்றி குறிப்பிடவில்லை. தமிழக பழமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்த கருவி காணப்படவில்லை. ஆகவே இந்த கருவியை 13ம் நூற்றாண்டிற்கு பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது. நாகசுரம் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. நாகசுரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது.சீவாளி, நாணல் என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது.